ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துவிற்கு நுழைந்த மாணவர்களை மட்டும் கொண்டதாக இருந்தது ஆறாம் வகுப்பு - ஈ பிரிவு. அங்கேதான் நாம் சந்தித்துக்கொண்டோம்.
சற்று மிதந்த பற்களுடன் கண்களில் ஒளியுடன் மென்மையாகப் பேசக்கூடியவன் மதன். நான் கச்சேரி நல்லுார் வீதியில் எனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலை சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு சிறிய மீன்தொட்டியையும் அதில் கொஞ்சம் மீன்களையும் வைத்திருந்தேன்.
மதனுக்கு அந்த மீன்களில் ஆர்வம். அடிக்கடி அவற்றை வந்து பார்வையிடுவான். மதனுக்கும் எனக்கும் நட்பு ஆரம்பித்து சில வாரங்கள்தான் இருக்கும். ”நீர்” என்று யாழ்ப்பாணத்துக்கே உரிய மரியாதைப்பன்மையில் பேசிக்கொள்ளுமளவுக்கு மட்டும்தான் நாம் நெருங்கியிருந்தோம் .
திடீரென்று ஒருநாள் வீட்டு வாசலில் வந்து மணியடித்தான் மதன் . கையில் ஒரு நீர் நிரப்பிய பிளாஸ்டிக் பை . அதனுள் ஒரு சோடி அழகிய ஏஞ்சல் மீன்கள். ஏஞ்சல் மீன்கள் என் மனதை மயக்கும் ரம்மியம் மிக்கவை ஆனால் வாங்கக் காசில்லாமல் அம்மா வட்டக்கச்சியிலிருந்து லீவுக்கு வரும்போது கேட்போம் என்று இருந்தேன்.
இவன் கையில் மீன்களுடன் நிற்கிறான். எனக்குப் புரியவில்லை. கதவைத்திறந்து ”என்ன ஐசே ?” (என்ன) என்றேன். ”இது உமக்குத்தான் தொட்டியில விடுவம் வாரும் ”என்று உள்ளே வந்தான். மீன்களைத்தொட்டியில் விட்டு அவை நீந்தும் அழகை இரசித்து விட்டுச் சென்றான். மதன் அவற்றை அப்போது கந்தர்மடம் சந்தியிலிருந்த அம்பிகை அக்கூறியம் என்ற கடையிலிருந்து வாங்கி வந்திருந்தான்.