Tuesday, May 14, 2024

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences


 

இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal behaviour), வாழ்வியல் அனுபவங்கள் என்பன இரங்கல் தெரிவித்தல், துயர் பகிர்தல் பற்றிய பல பாடங்களை கற்றுத்தருகின்றன.


நாட்டிற்கு ஒரு குடும்பம் என உறவுகள் எல்லாம் சிதறி வாழும் இன்றைய நிலையில், செத்தவீட்டுக் கவலையைப் பகிர எமது சமூகங்களில் காணப்பட்ட பல நடைமுறைகளும், பண்புகளும் இல்லாது போய்விட, சாவின் வலியைவிட அதைப் பகிர ஆளில்லாத வலி மிகப்பெரிதாகவே உள்ளதை உணர முடிகிறது.

பிறப்பு, திருமணம் போன்ற ஏனைய வாழ்வின் திருப்புமுனைகள் போலவே, முக்கிய அம்சமான இறப்பின் போது நாம் நடந்துகொள்ள வேண்டியவை பற்றியும் இன்று எமது அடுத்த தலைமுறைகளிற்கு சொல்லிக்கொடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு உறவை இழந்தவர் எதிர்கொள்ளும் வலியும் வேதனையும் அதுபற்றிய புலம்பலும் இழவிரங்கல் (Grieving) என்று அழைக்கப்படுகிறது.

அன்புக்குரிய எவரது இழப்பும் பெரிதே. அதிலும் ஒரு குழந்தைக்கு தன் முதல் ஆறு மாதங்களுக்குள் அடையாளம் கண்டு உணரும், அதன் தேவை தீர்க்கும் அம்மா அப்பா போன்ற உறவுகளோடு உருவாகிவரும் பிணைப்பு என்பது மிகவும் வலிமையானது. அத்தகைய இழப்புக்கள் ஒருவருக்கு தன்னில் ஒரு பகுதியையே இழந்தது போல உணர வைக்கலாம். இறந்தவரின் வயதோ, உடல்நிலையோ அல்லது அந்த உறவை இழந்தவரின் வயதோ இந்த இழவிரங்கல் நிலையின் தீவிரத்தை குறைக்கும் காரணிகள் அல்ல. அடுத்தவரின் துயரின் அளவை நாம் தீர்மானிக்காது இருத்தல் வேண்டும். ஒரு உறவை இழந்த ஒவ்வொரு உயிரும் அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்பை ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்தும். அழுவதும், அன்பானவர்களின் பழைய நல்ல நினைவுகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிப்புலம்புவதும் இந்த இழப்புக்களின்போது மனிதர்களில் பெரும்பாலானோர் செய்யும் காரியங்கள். இழப்பிலிருந்து மெல்ல மெல்ல வெளிவர உதவும் இயற்கையான பொறிமுறைகளில் (Bouncing Back/Resilience) இதுவும் ஒன்று.

இந்த இழவிரங்கல் எனும் செயற்பாட்டில் பின்வரும் நிலைகள் உள்ளன என அமெரிக்க உளவியலாளர் குப்லர் றோஸ் என்பவர் தனது “On Death and Dying” என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது பிரபலமான (வாதப் பிரதிவாதங்கள் உள்ள) ஒரு உளவியல் கோட்பாடாகும்.

1. Denial: இழப்பை ஏற்க மறுத்தல். திடீரென ஏற்படும் அந்த அதிர்ச்சியான இழப்பை முதலில் மூளை ஏற்க மறுக்கும்.

2. Anger: கோபம் - தாங்கமுடியாத இழப்பு தன்மீதோ அடுத்தவர் மீதோ கூட பெருங்கோபமாக மாறலாம்.

3. Bargaining: இழப்பை ஏற்க மறுக்கும் மனது ஆண்டவன் போன்ற அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற உயர் சக்தியிடம் இழப்பை பிற்போடும்படி அல்லது இல்லாது செய்து விடும்படி கெஞ்சுதல். அல்லது இது எல்லாம் பொய்யாகி விடக்கூடாதா என்று ஏங்குதல், அல்லது இறந்தவர்களே தம்முடன் ஏதாவது வடிவில் வந்து பேசி ஆற்றுப்படுத்துவார்கள் என எதிர்பார்த்தல்.

4. Depression: மனஅழுத்தநிலை. இது வழமையான மன அழுத்தத்தின் சகல அம்சங்களையும் கொண்டிருக்கும். உச்சக்கட்ட மனவருத்தம் மற்றும் அதன் விளைவுகளான தனித்திருத்தல், பிடிப்பற்று இருத்தல் உட்பட அனைத்து அறிகுறிகளும் வெளிப்படும்.

5. Acceptance: இழப்பை ஏற்றுக்கொண்டு வாழ்வின் அடுத்த நிலைக்கு நகர்ந்து செல்வது. இந்தக் கட்டத்தில் இழப்பு என்பது வாழ்வின் ஒரு அங்கம் என்பது புரிந்திருக்கும்.

எல்லா மனிதர்களும் மேற்குறிப்பிட்ட எல்லா நிலைகளையும் அனுபவிப்பார் என்று சொல்ல முடியாது. அத்துடன் மேற்குறித்த ஒழுங்கில்தான் இந்த இரங்கல் செயற்பாட்டின் படிநிலைகளை கடந்து செல்வர் என்றும் இல்லை. ஆனால் அவற்றில் சிலவற்றிற்கு உள்ளாகக்கூடும்.

Sharing Condolences துயர் பகிர்தல் எனப்படும் சமூகக் கடமை


நம்மில் பலருக்கு நமக்குத்தெரிந்த ஒருவரின் அன்புக்குரியவர் இறந்த செய்தி கேட்டதும் அதை எப்படிக்கையாள்வது!! இழந்தவரிற்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது? என்பது தெரிவதில்லை. பின்வரும் எண்ணங்கள் மனதில் ஓடலாம்;.

1. (உடனே நேரில் செல்ல முடியாத தொலைவில் இருக்கும் நபராயின்), அவரே தற்போது அதிர்ச்சியில் இருப்பார், அவருடன் தொலைபேசியில் இப்போது எவ்வாறு பேசுவது?

2. என்ன விடயத்தைப் பேசுவது? ( பலபேருக்கு இந்தச் சங்கடம் வருவதுண்டு)

3. எப்படி ஆரம்பிப்பது? எப்படி முடிப்பது?

(இந்த வகையான சங்கடங்கள் எனக்கும் பலகாலம் இருந்திருக்கிறது.) ஆனால் நமக்கு நெருக்கமானவர்களுக்கு அவர்கள் தாங்க முடியாத இழப்புடன் இருக்கும் சமயத்தில் அவர் இழப்பின் அளவை, நமது தராசை வைத்து பெரிது அல்லது சிறிது என அளவீடு செய்யாது அவருக்கு ஆறுதலாக இருத்தல் மனிதாபிமானமான கடமையாகும்.

எப்படியான தொடர்பாடலாக அது அமையாலாம்?

1. அவர்களின் இழப்பிற்கான எமது உண்மையான கவலையை வெளிப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லலாம். தொலைபேசியில் பேசும்போது மென்மையான தொனியிலும், அமைதியான முறையிலும் நமது அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்திப் பேசலாம்.

2. அவர்கள் தம் இழப்புப்பற்றியோ, இறந்தவரின் நல்ல செயற்பாடுகள், தமக்கு அவரோடிருந்த நல்ல நினைவுகளைப் பற்றியோ திரும்பத் திரும்பக் கூறினும், ஆமாம், எனக்கும் தெரியும்(தெரிந்திருந்தால்), புரிகிறது, என்பது போன்ற சொற்களுடன் நமக்கும் தெரிந்த நினைவுகளைப் பகிர்வது, அவர்களிற்கு ஆறுதலளிக்கும்.ஆர்வத்துடன் அவர்கள் மனக்குமுறலைக் கேட்பதும்;.நான் உன்னுடனிருக்கிறேன் என்பதை வார்த்தைகள் அல்லது செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்துவதும் மிக முக்கியமான ஆறுதல் வழிகள்.

3. அவர் துயரை அங்கீகரித்தலும் அவர் புலம்புவதற்கோ போதிய இடமளித்தலும்.

4. வாய் வார்த்தைகளைத்தாண்டி அவர்களிற்குத் தேவையான உதவிகள் என்னவென்று அறிந்து வழங்கலாம். இது பண உதவி முதல் சரீர உதவி வரை அமையும். அவர்களை அடிக்கடி தொலைபேசியில் அழைத்து என்ன உதவி வேண்டும் என்று கேட்டல் (அவர்களது மனநிலை, உங்கள் உறவு முறை போன்றவற்றைப் பொறுத்து அழைக்கும் எண்ணிக்கைகள் அமையலாம்)

5. ஒவ்வொரு நபருக்கும் இழப்பை எதிர்நோக்கும் முறையும், அதிலிருந்து மீளும் காலமும் மாறுபடலாம். அவரது இழப்பையிட்ட அவரது இரங்கல் செயற்பாட்டை மதியுங்கள்.

6. மரணம் நடைபெற்ற சில காலத்திற்கு இடையிடையே அவரைத் தொடர்பு கொண்டு பேசி வாருங்கள். இது அவரிற்கு தான் தனியே இல்லை என்ற தெம்பை வழங்கும். அவரது துன்பமும் பல வகையில் குறையும்.

7. மிகச் சில சந்தர்ப்பங்களில் சிலரால் ஒரு வருடகாலத்தைத் தாண்டியும் கொஞ்சம் கூட வழமையான வாழ்க்கைக்குத் திரும்ப முடியாதிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய உளவியல்-சுகாதார உதவிகளை அவர்கள் பெற உறுதுணை செய்ய வேண்டும்.

------(இந்தக்கட்டுரையை வேறு வெளியீடுகளில் பயன்படுத்த விரும்புவோர் - எழுதியவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.)--------

. மேலதிக சிகிச்சைக்காக அம்மா களுபோவில வைத்தியசாலையில் நம்பிக்கையுடன் காத்திருந்த நேரத்தில், காலை 6 மணிக்கு அம்மாவை நேரில் பார்த்து அருகிருந்து 7 மணிவரை அவரது முதுகைத்தடவிக் கொடுத்துப் பேசிவிட்டு, மேலதிக சிகிச்சைகளை செய்யும் ஏற்பாடுகள் பற்றி எனது நண்பர்களோடு ஆஸ்ப்பத்திரிக்கு வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தபோது “அம்மா சீரியஸ் உடனே உள்ளயே செல்" என எனது வைத்தியர்களான நண்பர்கள் கோல் பண்ணி நான் உள்ளே செல்லும் போது உறங்கிய நிலையில் நான் அம்மாவைக் கண்டேன்.

விபரிக்க முடியாத சூனியமான ஒரு உணர்வு. பொதுவிடுமுறை நாளான அன்று, அம்மாவின் உடலை எடுக்க பதிவாளரின் வீடு முதல் பல இடங்களுக்கு தனி ஒருவனாக வெடித்து வரும் அழுகையை அடக்க வேண்டிய சூழ்நிலையில், கொழும்பில் சிக்னலில் நிற்கும்போதும் கதறிக் கதறி மரணத்திற்குப் பின்னரான காரியங்களைச் செய்கையில் என்னோடு ஆறுதலாயிருந்தது தொலைதூரங்களில் இருந்த என் நண்பர்களும் ஒரு சில உறவினர்களும் மட்டுமே.

இரண்டு இரவுகள் கொழும்பில் அம்மாவின் வீட்டில் அவரது உடல் யாழ் செல்லும் வரையில் தனியே தங்கி இருந்தபோதும் 1 மணிநேரத்திற்கு ஒரு முறை என்னை அழைத்துப் பேசிய என் அழுகையை கண்ணீரைக் காது கொடுத்துக் கேட்ட நண்பர்களின் செயற்பாடும் அதிஉயர் பொறுப்பான பதவிகளில் இருந்த போதும் விடுப்பு எடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து தமது காரில் என்னை மீண்டும் யாழிற்கு அழைத்துச் சென்ற நண்பர்களும், இறந்த

செய்தி கேட்ட 10ஆவது நிமிடமே பக்கத்தில் வந்து நின்ற, பத்துவருடங்களுக்கு மேல் பேசாத நண்பனும், தொலைபேசியில் எனது அம்மா தமக்கு விதம் விதமாக சமைத்துக்கொடுத்தது முதல் கொண்டு பேசி துயர் பகிர்ந்த நண்பர்களும் எனது மனது கொஞ்சமாவது வலுப்படக் காரணமாயினர்.

--- "இல்ல மச்சான், எனக்கு செத்தவீட்டுக்கு கோல் பண்ணிப்பேசத் தெரியாது"
----" நீ சொக்கில இருந்திருப்பாய், எனக்கு என்ன சொல்லுறதெண்டு தெரியவில்லை"
-----" நான் வழமையா செத்தவீடு முடியத்தான் கோல் பண்ணுறனான்.."

போன்ற, பல, இறப்பின் போது எப்படி நடந்து கொள்வது என்று (என்னைப்போலவே) இன்றும் இருக்கும் என் வயது நண்பர்கள் உட்பட, என் மாணவர்கள் நடந்து கொண்ட விதம் உட்பட பலவற்றைக் கண்ட பின்னர், புலம் பெயர்ந்து பல பாரம்பரிய அடையாளங்களைத் தொலைத்துவரும் நம் சமூகத்திற்கு தேவைப்படும் என்ற காரணத்தால் மனம் தெளிவற்றிருக்கும் இன்னிலையிலும் இதை எழுதியிருக்கிறேன். இந்தப் பிரசுரத்தை இரண்டுபேர் ஆவது படித்து பயன் என்று கொண்டால் அது நன்று. மற்றும்படி அந்திரட்டி நூல் வெளியிடல், தேவையற்ற சடங்குகளில் நேர விரயம் செய்தல் என்பவற்றில் எனக்கு உடன்பாடில்லை, இது உறவுகளின் வேண்டுதலை மறுக்க முடியாமல் எழுதியது.

தாய்க்கும் சேய்க்கும் அதுவும் மூத்த சேயுடன் இருக்கக்கூடிய காதலும் பாசப்பிணைப்பும் எப்படியானது என்பது அனுபவித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். என் அம்மா என்ற கிடைத்தற்கரிய தேவதை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டார், அவர் அடுத்த உன்னத நிலைக்குச் சென்றுவிட்டர். இனி அவருக்கு துன்பங்கள் எதுவும் கிடையாது.

மகன்
ச.மணிமாறன்
********12-05-2024 அன்று வெளியிடப்பட்ட எனது அன்னையின் நினைவு மலரில் இடம்பெற்றது****

Tamil Psychology & Motivation Psychology of grieving, Sociology of Sharing condolences

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை