மணிவாசகர் நரிகளைப் பரிகளாக்கிய கதையினை நானும் அரங்கேற்றினேன் அப்போது எனக்கு வயது 13.
ஏழாம் வகுப்பு படிக்கும் போது மீன் வளர்ப்பில் எக்ஸ்பேர்ட் ஆக இருந்தேன் விதம் விதமான மீன்களை வளர்த்து வந்தேன். சில மீன்கள் பெருகும் போது அவற்றை நண்பர்களுடன் பண்டமாற்றுச்செய்து வேறு வகை மீன்களைப் பெறுவேன். ஒன்றுக்கும் உதவாத ”கப்பீஸ்” இன மீன்கள் கேட்பாரின்றி பெருகும்.
அவற்றின் குஞ்சுகளை எனது அழகிய ஸ்பைடர் மீன்களிற்கு அவ்வப்போது உணவாக வழங்கவேண்டியிருக்கும். ரெட்மோறீஸ் ,பிளக் மோறீஸ்,வைட் மோறீஸ் என்ற மீன்களும் எனது வளர்ப்பில் குடும்பம் நடத்தி குஞ்சுகளைப்போடும்.
அவற்றில் வால்கள் ஆங்கில ”சீ” எழுத்துப்போல் இருக்கும் மீன்களும் உண்டு . அவை அதிக விலைக்கு விற்கப்படும். எனது சக மீன் வளர்க்கும் நண்பர்களிற்கு சீ வால் மீன் என்றால் பைத்தியம்.
என் உள்ளங்கையளவு தங்க மீன் ஒன்றை என் நண்பன் வைத்திருந்தான். பெரிய மீன்கள் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம். எனவே அவனிடம் பண்டமாற்று பற்றிப்பேசினேன். அவன் அதற்கு ஈடாக நான்கைந்து சீ வால் பிளக்மோறீஸ் மீன்களாவது வேண்டும். என்றான்.
நான் தருவதாக வாக்குறுதியளித்தேன்.
யாழ் இந்துவில் கணிதபாடம் இரண்டு தொடர் வகுப்புக்கள் அல்லது வில்வராசா ஆசிரியரின் வர்த்தக வகுப்பு இரட்டையாக இருக்கும் நாட்களில் புத்தகப்பைக்குள் கலர் உடுப்பு எடுத்துச்சென்று வீட்டைவிட்டு நெடுங்குளம் சென்று உடுப்பு மாத்தி , அங்கே குளித்தல் பின்னர் என்னுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தை கட் பண்ணி வரும் சாயி ஐீவானந்தன் ஐயருடன் வயல் வெளிகளில் திரிவது, கடைகளில் சென்று எதையாவது தின்பது என்று பொழுது போக்கி பாடசாலை விடும் நேரத்தில் மீண்டும் வெள்ளையுடுத்து வீடு செல்லும் உத்தம பிள்ளையாகிய எனக்கு சீவால் மீனை எங்கு பிடிப்பது என்ற திட்டம் நெடுங்குளத்தில் குளித்துக்காெண்டிருந்த ஒரு சுப நேரத்தில் உதயமாகியது.
ஒரு நாள் மாலை நெடுங்குளத்திற்கு சென்று அங்கு கரையோரம் நீந்திய கறுப்பு மீன்களைப் பிடித்து வந்தேன. வீட்டில் அமைதியாக ஒரு ஒப்பரேசன் செய்யும் டாக்டரின் பக்குவத்தோடு கத்திரிக்கோலால் அவற்றின் வாலை நடுவில் வெட்டி சில ”சீ” வால்களையும் அந்த முயற்சியில் எதிர்பாராத பக்க விளவைாக சில ”வீ” வால்களையும் உருவாக்கினேன்.
அடுத்த நாள் நண்பர்களிற்கு கொழுத்த சீ வால் மீன்களை வழங்கி எனது கனவாகிய அந்த கொழுத்த தங்க மீனை அடைந்தேன். (பண்டமாற்றிற்கு கொஞ்சம் ,காசிற்கு கொஞ்சம் ) :)
கொஞ்சம் பெரியவனாகியதும் நான் செய்தது தவறு எனப்புரிந்தது. அந்த குளத்து மீன்கள் எத்தனை வளர்ப்பு மீன்களை விழுங்கி ஏப்பம் விட்டனவோ அல்லது அந்த ஊத்தை மீன்கள் என்னவென்ன நோய்களை மீன் தொட்டி மீன்களுக்கு கொடுத்தனவோ..அல்லது இரண்டு மூன்று வாரங்களில் வால் வளர்ந்து தாம் யார் என்பதை ”ஈ” எனக்காட்டி இளித்து நண்பர்களை வெருட்டினவோ தெரியாது.
இவற்றையெல்லாம் நான் அறியாமால் செய்திருந்தது அந்தக்காலத்தில் அடிக்கடி வரும் செல்லடிகளும் இடப்பெ.யர்வுகளும்.
மேற்படி சம்பவம் நடந்து சில தினங்களில் பல நண்பர்களை தற்காலிக இடப்பெயர்வு முகாம்களில் சந்தித்தேன். ஆமி அடித்த செல்லில் உயிர் பிழைத்த கதைகளை அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். மீன்களைப்பற்றி யார் கவலைப்டுவது அங்கே.
நல்லகாலம் அந்த காலங்களில் ஆமி செல்லடித்திருக்காவிட்டால் என்னிடம் குளத்து மீன்களை வாங்கி ஏமாந்த பொது ஐனங்கள் என்னை செல்லில் வைத்து ஏவியிருப்பார்கள். !: )
**************************************************
சில குறிப்புக்கள் - மற்றும் கருத்துக்கள்(கடுப்பாக வேண்டாம் பிளீஸ்)
குழந்தை வளர வளர அது உலகை தானாகவோ அல்லது மற்றவர் துணைகொண்டோ அறிய ஒவ்வொரு நொடியும் முயன்று கொண்டே இருக்கும் ,முயல வேண்டும் அதுதான் இயற்கை.
இந்த கற்கும் முனைவு மற்றவர்கள் தடுத்தாலும்் தடைப்படாது செல்லும். அதைத்தான் நாம் பெரும்பாலும் குழப்படி என்று தவறாக அர்த்தம் செய்து கொள்கிறோம்.
பொய் சொல்வது, செய்ய வே்ண்டாம் என்று மற்றவர்கள் அல்லது சமூகம் தடுப்பதை செய்து பார்க்க வேண்டும் என்று முயல்வது எல்லாம் புத்திசாலிக்குழந்தைகளின் இயல்பு. வாழ்வில் சாதித்து உலக வரலாற்றில் பெயர் பதித்த மேதைகள் பலருமே இந்த வகையினர்தான்.
எனவேதான் மற்றவர்க்கு தொல்லைதராத பிள்ளைகளின் ஆய்வு ரீதியான குழப்படிகளை ஆதரிக்காவிடினும், அதை முன்னிட்டு அவர்களை கடுமையாக தண்டிக்காது விடுவது நலம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .