”பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வைப்பாட்டி. நமது தினசரி வாழ்வில் பல விதமாக பிச்சை எடுக்கும் கற்றவர்களைக் காண்கிறோம்.
நேற்றைய தினம் (07/01/2017)பிரபல தேசியக் கல்லுாரி ஒன்றினது ஆறாம் வகுப்பிற்கு புதிய மாணவர்களைச்சேர்த்துக்கொள்ளல் சம்பந்தமான ஒன்றுகூடல் அதிபரினால் நடாத்தப்பட்டது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து 160 எனப்படும் குறித்த பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியைத் தாண்டி புள்ளி பெற்று கல்வியமைச்சினால் நேரடியாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அனுப்பபட்டிருந்தனர்.
கலந்துரையாடலே காசு வாங்குவதற்குத்தான். அரசு எத்தனை சட்டங்களைப்போட்டாலும் பெயரை மாத்தி மாத்தி லஞ்சம் வாங்குவதில் அரச பதவியில் உள்ள பெரும்பான்மையோர் நிபுணர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பில் (அதாவது அதிபர் நேரடியாக வாய் திறக்காது) ஒருத்தர் காசு கேட்டுப் பேசினார். பாடசாலை செலவினமாக வருடாந்தம் ஒரு கோடிக்கு மேல் ஆவதாகவும் , (கல்வி அமைச்சில் இருக்கும் நேர்மையான முதுகெலும்புள்ள ஒரு அதிகாரியாவது இதைப்பார்க்க மாட்டார்களா என்று ஏங்கி எழுதுகிறேன்.)அச்செலவினத்தில் 50 இலட்சம் மட்டுமே கல்வி அமைச்சினால் வழங்கப்படுவதாகவும் மிகுதிச் செலவு ஆறாம் வகுப்பு அனுமதியிலிருந்தே பெறப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே தாங்கள் பாடசாலைக்காக சேகரிக்கும் இந்நிதி ”மீண்டெழும் நிதி ”எனப் பயெரிடப்பட்டிருப்பதாகவும் (மண் மீட்பு நிதி ஸ்ரைல் ) கடைசி ஆளுக்கு 30 ஆயிரம் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உச்ச கட்டமாக , அப்படி முப்பது கூட தரமுடியாதவர்கள் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள் எனவும் அவர்களின் கல்விச் செலவிற்காக தங்களிடம் பிறிதொரு நிதி இருப்பதாகவும் அந்த மாணவர்களை விடுதியில் அனுமதிக்கும் பட்சத்தில் தாங்கள் அவர்கள் செலவுகளைப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகா ஒரு திட்டத்தை வகுத்து பாடசாலையையோ நாட்டையோ முன்னேற்றத் த்தெரியாத சொந்த புத்தியற்ற நபர்களெல்லாம் காசு பிடுங்கல் என்று வருகிறபோது நயமாகவும் பயமாகவும் எப்படி அவரவர் சுயமரியாதையை புத்தி சாதுரியமாக கிளறி பிச்சை எடுக்கிறார்கள் ?
கொடுமை என்வென்றால் இந்த கூட்டத்தில் ஒரு நீதிபதி கலந்து கொண்டு தன் மகனுக்கு இப்பாடசாலை கிடைத்தது முன்னைத்தவம் என்பது போல புன்முறுவல் பூத்திருக்கிறார். தினசரி குறைந்தது 1 இலட்சம் உழைக்கும் பரியோவான் கல்லுாரி பழைய மாணவர் ஆகிய சத்திர சிகிச்சை நிபுணர் தன் மகனை இங்கு சேர்ப்பதற்காக உடனே ஒரு இலட்சம் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சுமார் 120 பெற்றோர்(பெரும்பான்மை பெண்கள்) இருந்த கூட்டத்தில் நிச்சயமாக கட்டணம் கட்ட முடியாதவர்கள் 40 வீதமாவது இருப்பர் அவர்களெல்லாம் மரியாதைக்காக கடன் உடன் பட்டு வயிறு எரிந்து இந்தக்கட்டணத்தை வழங்கப்போகிறார்கள்.
கொழும்பில் கூட எவ்வித கட்டணமுமின்றி அரச பாடசாலைகளில் சேர முடிகிறது.(அரச சட்டத்தால்) ஆனால் இந்த யாழ்ப்பாணத்தவர் அரசைக் கூட மிரட்டத்தெரிந்தவர்கள் போல . கூச்ச நாச்சம் வெக்கம் ரோசம் இல்லாது பப்ளிக்கில் பிச்சை எடுக்கிறார்கள்.
1) இலவசக் கல்வி வழங்கப்படும் நாட்டில் நாம் இருக்கிறோம்
2)அரச உத்தரவின்படி எவ்வகையான நன்கொடையும் பெற்றோரிடமிருந்து வசூலிக்க முடியாது.
3) சிட்னி ,லண்டன்,யாழப்பாணம்,கொழும்பு, என்று பலப்பல பழைய மாணவர் சங்கத்தைக் கொண்டு ஆண்டுக்கு வகை வகையான நன்கொடைகளைப் பெறும் பாடசாலை இது. அந்தப்பழைய மாணவர் சங்கங்களிற்கு இது வெல்லாம் ஒரு தொகையே அல்ல.
4) அந்த சங்கங்கள் அனுப்புவதாய் சொல்லப்படும் நிதி எங்கே செல்கிறது ?
5)பாடசாலை இப்படிக் கேவலம் கெட்டுப் பிச்சை எடுக்கும்போது பழைய மாணவர் சங்ககம் கோடிக்கணக்கில் செலவழித்து அலங்கார மதில் கட்டி அதிலும் அடிபிடிப்படுகிறார்கள்.
6)அந்தப் பாடசாலைக்கு பண நிர்வாகம் செய்யத்தெரியவில்லை எனில் அந்தப் பணியை எனது நிறுவனத்தின் ஊடாக பட்டயக் கணக்காளர் மற்றும் தகுதிபெற்ற ஆலோசகர்கள் மூலம் செய்து வழங்கலாம் (வாக்குறுதி)
7)நிச்சயமாக கள்ளர்கள் இந்த ஒப்பந்தந்திற்கு வரமாட்டார்கள். நல்லவர்கள் வருவார்கள் மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம். இவர்கள் கள்ளர்களா அல்லவா என்பதை நான் விரைவில் சொல்கிறேன்.
8)இன்னும் கேள்விகள் பலப் பல
Special Notes(Updated) :
1)பாடசாலை வளர்ச்சிக்கு நிதி கேட்பது தவறில்லைத்தானே என்று சொல்பவர்களுக்கு : பாடசாலை வளர்ச்சிக்கு "நிதி தேவை நீங்கள விரும்பிய தொகையை வழங்குங்கள்" . என்று குறிப்பிட்டிருந்தால் நான் இந்தக்கட்டுரையை எழுதவேண்டியே வந்திருக்காது. இந்த இந்தத் தொகையை கட்டாயம் வழங்குங்கள் என்று தொகைகள் குறிப்பிட்டு கடைசித்தொகை இவ்வளவு என்று இவர்களாக முடிவெடுத்து அறிவித்ததும் ,அதற்குக் குறையப் போட வேண்டாம் என்றும் அப்படிப்போடுபவர்கள் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்ட விடயங்களே இக்கட்டுரையை வரையத்துாண்டிய காரணிகள்..
2) இந்தப்பதிவு - எந்தக்கருத்துக்கும் பல்வேறு பார்வைகள் இருக்கும் என்பதையும் - பலர் வாய்ப்பட நேரிடும் என்பதையும் நன்கறிந்தே இடப்பட்டிருக்கிறது. ”துரோகி” நம்மினத்தவன் என்பதற்காய் மற்றைய இனங்களின் முன்னே அதைப்பற்றிப்பேசக்கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
” பட்டது தன்கையென்றால் என்ன அந்நியனதென்றால் என்ன ,கண்பட்ட காயம் காயம்தானே ! ”
நேரடியாக நீதிகேட்டுப்போராடிய வரலாறு நிறைய உண்டு. சாத்வீகப்போராட்டங்கள் தோற்ற பொழுதே ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டியிருக்கிறது. தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு மட்டுமே உண்மை விழங்கும். பதிவின் தலைப்பை மட்டும் தமது பாடசாலையுடன் பொருத்திப் பார்த்து உணர்ச்சி வசப்படும் இளையவர்கள் பலர் இங்குண்டு. பாலகர்கள் வாழ்வில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
வீதி விபத்தில் அடிபட்டு விழுந்தவனின் சாதி சொல்லி அடித்தவன் திட்டியதால் ஏற்பட்ட சண்டையில் அடிபட்டவன் இரத்தம் போய் செத்ததனை கவனியாத பாமர ஊர்மக்கள் போல அரசு தடை செய்த சட்டத்துக்குப் புறம்பான நிதி சேகரிப்பில் ஈடுபடுபவர்கள் பற்றியும் அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் அப்பாவி வருமானம் குறைந்த பெற்றோர் நிலை பற்றியும் கிஞ்சித்தும் எண்ணாது ,பாடசாலையை அவமதித்து விட்டாய் என்று வெறும் குறுகிய எண்ணத்தில் குதிப்போர் பலர். நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத்தண்ணிதான் . கொள்ளவு குறைந்தவர்களை நம்பியே இவ்வாறான வியாபாரங்கள் நடக்கின்றன.
அடிபிடி சண்டையில் கள்ளனைத் தப்பிக்க விடுவதே எங்கள் இனப் பண்பாகப்போய்விட்டது.
கருத்துக்களை மக்கள் தங்களது கல்வியறிவு,அனுபவ அறிவு,குடும்ப சமுதாய சூழல் என்பற்றைப் பொறுத்தே புரிந்து கொள்ளவும் வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். எனவே பார்வைகள் வேறுபடலாம். ”அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் ” என்கிறான் பாரதி. வெறும் கல்வியறிவு எதையும் சரியாகப்புரிந்து கொள்ள ஒரு தகுதியல்ல. ”ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணத்தலைப்பட்டவர்களுக்கே இந்தக்கட்டுரை.
எவ்வகையிலும் பாடசாலைகள் நிதி சேகரிக்க முடியாது என்பதற்கான கல்வியமைச்சின் சுற்றறிக்கை கீழே வழங்கப்பட்டுள்ளது. எந்த நிதி சேகரிப்புக்கும் அதிபரே பொறுப்பாளியாவார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .