Stories for young entrepreneurs 02 (Learning is everything)
நஸீபா எனது முதல் மாணவி
எனது முதலாவது மாணவி நஸீபாவும் அவரது குழந்தையும்-2019 |
1996 காலப்பகுதியில் என்கையில் ஒரு பழைய 386 கம்பியூட்டர் சிக்கியது. அதன் கட்டமைப்பைக்கேட்டால் இன்று பலருக்குச் 'சிப்புச் சிப்பாக' வரலாம். 33 Mhz வேகம்,40 MB ஹார்ட் டிஸ்க்,128 KB(As per my memory) மெமறி. ஆதனை ஆன் செய்து குளித்துமுடித்து வந்த பின்னர்தான் அது ஸ்ராட் ஆகி முடித்திருக்கும் அப்படி செத்த சிலோ.
ஆனாலும் அது எனக்குக் கனவுக்கன்னி, முதல் ஆசான் ,வழிகாட்டி ,வெற்றிக்கான ஏணிப்படி. என் இலட்சியக்கனவுகள் எல்லாவற்றிற்கும் 'அப்படியே ஆகட்டும் ' சொன்ன தேவதை.
எனது ஒன்றுவிட்ட அண்ணன் அதனை எனது மச்சாளுக்கு அனுப்பி-அவர் வீட்டிற்குச் அது செல்ல காத்திருந்த சமயத்தில் - அவனது பெற்றறோருக்கும் மச்சாள் வீட்டுக்காறரிற்கும் ஏதோ கருத்துவேறுபாடு ஏற்பட்ட ஒரு உறவுச் சுனாமிச்சூழ்நிலையில் எந்த அலையோ அடித்தொதுக்கி இறுதியாக என் கைசேர்ந்த கம்பியூட்டர் இது.
அந்த நேரத்திலேயே அது பழைய மொடல். ஆனாலும் இலங்கையே கம்பியூட்ர் பற்றி வியந்து பார்த்துக் கற்றுக்கொண்டிருந்த அந்தக்காலத்தில்(1996/..) சாதாரணர்களிற்கு அதன் வகை தொகை எல்லாம் இன்றிருப்பதுபோல் புரியாது. கம்பியூட்டர் என்றால் கம்பியூட்டர்தான்.
கொழும்பு மனிங்பிளேஸ் அடுக்குமாடியில் எனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தேன். கம்பியூட்டர் கைவரப்பெற்றாலும் கற்பதற்குப் பணமிருக்கவில்லை. இந்தக் கம்பியூட்டர் எனக்கு என்று முடிவாக முன்னர் 4-5 மாதங்கள் நான் தங்கியிருந்த அறையில்தான் இருந்தது. நடுச்சாமத்தில் பெரியம்மா பெரியப்பா உறங்கிய பின்னர், கம்பியூட்டரை ஆரம்பித்து அதில் வரும் டொஸ் புறம்ற்றில்(DOS prompt) என்ன செய்வதென்று தெரியாது விழித்துக்கொண்டிருப்பேன்.
MS DOS prompt - இருட்டு ரூமில கறுப்புப் பூனையக் கண்டுபிடி :) |
அந்தக்கம்பியூட்டர் பல இலட்சங்கள் இருக்கும் என்று எண்ணி முதலில் அதை விற்பதற்கு முயன்றார் பெரியப்பா. அதனைப் பார்க்க வருபவர்கள் அதனது கறுப்புத்திரையில் Dir என்று அடிப்பதையும் Win என்று அடிப்பதையும் அதை அடித்ததும் அது கலர் திரையுடன் பல அற்புதங்கள் புரிவதையும் கண்டேன்.
வந்தவர்கள் 15 ஆயிரத்திற்கு மேல் கேட்கவில்லை எனவே அது விற்பனையாகாமல் தப்பிவிட்டது.
அன்று இரவு கம்பியூட்டரை ஆரமபித்தேன் Win என்று அடித்தேன் ஆஹா வின்டோஸ்(வேர்க் குறூப்)என்ற அற்புதம் (Version 3.1) கண்ணில் பட்டது. ஆங்கில அறிவும் எதையும் உய்த்துணரும் தன்மையும ஏற்கனவே இலத்திரனியல் துறையிலும் தொழில்நுட்பக்கருவிகளிலும் கொண்ட பேராவலும் அது பற்றி நான் வாசித்திருந்த புத்தகங்களும் சேர்ந்து எனக்கு சொல்லிக் கொடுக்கத்தொடங்கின.
Ms.DOS என்று சொல்லப்படும் இயங்கு தளத்தின் கொமான்ட்ஸ் பல நூறை அதன் உதவிக் குறிப்பைக் கண்டு பிடித்து(Help file-i/?) அதன் மூலம் கற்றுக்கொண்டு நிபுணனாகியிருந்தேன். தினசரி 11-12 மணி நடுச்சாமத்தில் ஆரம்பிக்கும் என் கம்பியூட்டர் சுய கல்வி விடிய 4 மணி வரை நீடிக்கும்.
அதற்கிடையில் அப்போது என்னுடன் பல்கலைக்கழகம் தெரிவாகியிருந்த நண்பர்கள் மற்றும் உயர்தரம் முடித்த அனைவருமே பம்பலப்பிட்டி ஐடிஎம்(IDM) இல் டிப்ளோமா இன் கம்பியூட்டர் ஸ்டடீஸ் என்ற கோர்ஸிற்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கும் முதலாவது பாடமே எம்.எஸ.டொஸ் தான். அவர்களது நோட்ஸ் ஐ வாங்கிப் பார்ப்பேன் நான் இது வரை தெரிந்துகொள்ளாத டொஸ் கட்டளை இருக்குமென்றால் நினைவில் வைத்துக்கொள்வேன் எனது நடுச்சாம வகுப்பிற்காக.
நூற்றுக்கணக்கான டொஸ் கட்டளைகள், அதன் உப கட்டளைகள் போன்றவை(Switches eg dir/a) எனக்கு மனப்பாடம். டிப்ளோமா வகுப்பிற்குப்போகும் நண்பர்களிற்குத்; தெரிந்தது 10 – 15 தான் இருக்கும்.
விசுவல் பேசிக் 3 என்பதை எனது கம்பியூட்டர் புறோகிறாம்ஸ் வின்டோவில் கண்டு அது என்ன என்று ஆராய்ச்சி செய்தேன். முடியவில்லை. தமிழில் புத்தகங்கள் கிடைத்தன. அரையும் குறையுமாகக் கற்றுக்கொண்டேன்.
ஆக மொத்தத்தில் சொல்லித்தர ஆளில்லாமல் சொந்தமாகக் கற்றுக்கொண்டேன். விழுந்து எழுந்தவை மிக அதிகம். வேர்ட் புறசசிங் மென்பொருள் எதுவும் அதில் இல்லை. DOS இல் இயங்கும் Edit எனும் ரைப் செய்யக்கூடிய ஒரு அடிப்படை மென்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து அதில் ரைப் செய்யவும் சேமித்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.
ஒரு தடவை புளப்பி(Floppy Disk) டிஸ்கிற்குள் தரவுகளைப் பதிவதற்கு Copy என்ற கட்டளைக்குப்பதிலாக நான் புதிதாகக் கற்றுக்கொண்ட Xcopy என்ற கட்டளையைப் பாவிக்கப்போய் ஏற்கனவே புளப்பியில் சேமித்துவைத்திருந்த முக்கிமான கோப்புக்களை இழந்தேன். அதன்பிறகுதான் ஒஉழில இலக்கிலிருக்கும் கோப்புக்களை அழித்துவிட்டே தரவுகளைப் பதியும் என்பதைக் மிக்க வேதனையுடன் புரிந்துகொண்டேன்.
இப்படி அடிப்பட்டுக் கற்றுக்கொண்டவை பல. நான் இப்போது MS DOS,Windows 3.1, ஆகியவற்றில் எக்ஸ்போட்,Visual Basic 3.0 கொஞ்சம் தெரியும், இதைத்தவிர பெரும்பாலும் வேறு எதுவும் தெரியாது.
அப்போது பிரபலமாக இருந்த வேர்ட் பேர்பக்ட் என்ன கலர் என்பதும் தெரியாது. லோட்டஸ் 123 என்பார்கள் அது எப்படி என்று தெரியாது ஆனால் இவைதான் அப்போது அதிகம் கல்வி நிறுவனங்களில் படிப்பிக்கப்படும்.
XXX
இந்த அறிவோடு , நானாகத்தெரிவு செய்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படிக்க அட்டாளைச்சேனை நோக்கி கம்பியூட்டருடன் அக்கறைப்பற்று சில்மியாஸ் ரவல்ஸ் பஸஸில் பயணித்தேன்.
யுத்தகாலத்தில் அம்மா அப்பாவைப் பிரிந்து, கிடைத்த யாழ்ப்பல்கலைக்கழகத்தில் (வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர்) படிப்பது பரமேஸ்வராப் பள்ளிக்கூடத்தில் படிப்பதுபோல்தான் இருக்கும் என்று கூறி வெளியுலகைப் பார்க்கவேண்டும் என்று வீட்டில் சண்டைபிடித்து தென்கிழக்கிற்குப் பயணித்தேன்.
இந்த இடத்தில் எப்போதும் போல கூட்டம் செல்லும் திசையை நோக்கி ஓடுவது ஒரு புதுமை விரும்பியின்-தொழில் முயற்சியாளனின் தன்மையாக இருக்காது என்பதை இளைஞர்களிற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வழமையான றிஸ்க் எதுவுமே இல்லாத சூழலை விட்டு நானாகவே றிஸ்க்கையும் புதுமையான அனுபவத்தையும் தேடி நான் மேற்கொண்ட பயணம் இது. புதுமையில் றிஸ்க் எப்போதும் இருக்கும்.
அட்டாளைச்சேனையில் அறையில் தங்க ஆரம்பித்து, புலி என்ற சந்தேகத்தின்பால் குடி விரட்டப்பட்ட நான் நிந்தவூரில் அடைக்கலமாகி நண்பன் நளீமுடன் சேக்கார் வீட்டில் வாழந்த காலம். இவை அனைத்தும் கலப்பில்லாத தனி முஸ்லீம் ஊர்கள். நான ஒற்றைத் தமிழன். சந்தேசம் சகஜம்தானே என்று எடுத்துக்கொண்டேன்.(ஒருபோதும் பயப்படவில்லை. திரும்பி ஊருக்கு ஓடிவரவும் இல்லை.)
நிந்தவூரில் ஒரு குட்டி அறையில் பல்கலைக்கழக சகபாடி நளீமும் நானும். இருவரது வீட்டிலிருந்தும் வீட்டிலிருந்தும் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கொருக்கால் மிகுந்த போக்குவரத்துச் சிரமத்தின் மத்தியில் வரும் பணத்தில் இருவரும் குடித்தனம் செய்துகொண்டிருந்தோம். மஹாப்பொல எனப்படும் அரச புலமைப்பரிசிலும் 1200 ரூபாய்கள்தான் அதுவும் சரியான சமயத்திற்கு வராது. கஸ்ட ஜீவனம்.
நாம் குடியிருந்த வீட்டிற்கு அருகில் இருந்த குடும்பம் எங்களுடன் நல்ல பழக்கம். குறிப்பாக நளீம் மிக அன்னியோன்னியமாகப் பழகுவான். அந்த வீட்டில் ஓ.எல் எடுத்துவிட்டு இருந்த நஸீபா எங்களுக்குத் தங்கை மாதிரி.. 'நானா' நானா' (அவர்கள் பாஷையில் அண்ணா) என்று அன்புடன் பேசுவாள்.
கம்பியூட்டர் வைத்திருந்ததால் அந்த ஊரிலும் நாம் பிரசித்தம். ஒரு நாள் நஸீபா கேட்டாள் , நானா நீங்க எனக்கு கம்பியூட்டர் படிச்சுக்குடுப்பிங்களா ?
நான் என்ன சொல்லியிருப்பேன் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள்.
'ஆம்' என்றேன்.. எம் எஸ் வேர்ட் எல்லாம் வரும்தானே என்றாள் ,
(அப்படியென்றாலற் என்ன? கண்ணால் பார்த்தது கிடையாது, என் கம்பியூட்டரிலும் கிடையாது) ஆனால்...
'ஆம்' என்றேன். "பீஸ் எவ்வளது?" என்றாள், கொழும்பில் டிப்ளோமா 6500 என்ற நினைவில் 6500 என்றேன். அட்வான்ஸ் 1500 என்றேன். எதிர்பார்க்கவில்லை. அடுத்த நாள் 1500 ரூபாய் தந்தாள்.
தெரியாத பாடத்தை தெரியாது என்பது தெரிந்தே எனது முதலாவது மாணவி நஸீபாவுக்கு எடுத்த முதலாவது வகுப்பு எதிர்பார்ப்பும் சுவாரசியமும் நிறைந்தது. சவால்களை விரும்பி ஏற்பதில்தான் வாழ்க்கைக்கான உந்து சக்தியே எனக்குக் கிடைக்கிறது.
பல நாட்களாக பட்ஜெட் சாப்பாட்டில் காய்ந்து போயிருந்த நானும் நளீமும் ஓடிப்போய் அந்தப் பணத்தில் ஊர் முட்டை வாங்கி வந்து அவித்துச் சாப்பிட்டோம். இரவு தடல் புடலான கொத்து ரொட்டி. விடிந்ததும் ஒரு கரும்பலகை மற்றும் சோக் வாங்கி வந்து மாலை 4 மணி வகுப்பிற்கு ஆயத்தம் செய்யத்தொடங்கினேன்.
உடுப்புக்கள் எல்லாவற்றையும் கார்போர்ட் பெட்டியில் போட்டு பக் பண்ணி கரும்பலகையை ஒரு கதிரையில வைத்து, கம்பியூட்டரை துடைத்து வைத்து.அப்பப்பா ரென்சனோ ரென்சன்.
முன்ன பின்ன செத்திருந்தாத்தானே சுடுகாடு எப்படியென்று தெரியும்"". முதலாவது வகுப்பில் கம்பியூட்டர் என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது என்று படம்கீறிக் குறித்துக் கற்பித்தேன்.
அடுத்த வகுப்பில் விண்டோஸ் , ஓப்பன் டயலொக் பொக்ஸ்,குளோஸ் டயலொக் பொக்ஸ் ஒவ்வொன்றும் ஒரு நாள் வகுப்பு. படம் கீறி-குறித்து அவரும் கீற நேரம் வழங்கவே 1 மணிநேரம் பறக்கும். அவள் இதைப் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் - அடுத்து அவளது மைத்துனி சியானா படிக்க வந்தாள்,அடுத்து நியாஸ்..2 மாதங்களில் நான் எம் எஸ வேர்ட் இன்ஸ்ரோல் பண்ணி கற்க ஆரம்பிப்பதற்குள்ளேயே 15 மாணவர்களாயிற்று.
அடுத்த ஆறு மாதங்களில் நஸீபாவும் நானும் மிகச்சிறப்பாகவே கம்பியூட்டர் படித்திருந்தோம். ஆம் அவள் புண்ணியத்தில் அவளுக்கு பிரபலமான பாடங்கள் எல்லாவற்றையும் படிப்பிக்கவேண்டுமே என்ற பயத்தில் நான் எம்.எஸ் வேர்ட்,டிபேஸ் ,எக்சல் எல்லாம் படித்திருந்தேன். நஸீபா முதல் அனைத்து மாணவர்களுக்கும் படிப்பித்துக்கொண்டிருந்தேன். இப்போது என்னிடம் ஒரு 486 - 90 Mhz கம்பியூட்டரும் இருந்தது.
மீண்டும் இடப்பெயர்வு. இப்போது தமிழர் பிரதேசமாகிய கல்முனை வட்ட விதானையார் வீதியில் - சுலோ அக்கா வீட்டில் குடியிருந்தோம் நளீமும் நானும். நஸீபா உட்டபட்ட பெருந்தொகையான நிந்தவூர் மாணவர்கள் இங்கும் என்னைத்தேடி வந்து கற்றுக்கொண்டிருந்தார்கள். குறுகிய காலத்தில் வளர்ந்து இரண்டு தட்டுக்கள் கொண்ட மாடிவீட்டிலும் - பின்னர் கல்முனை,அம்மன்கோவில் வீதியில் கடைத்தெருவில் சகல வசதிகளுடனும் பல கம்பியூட்டர்கள் உழியர்கள் என்று எமது கல்வி நிறுவனம் உயர்ந்தது. இது எல்லாம் ஒரு இரண்டு வருட காலங்களுக்குள் நடந்த மஜிக்.
அரச அங்கிகாரம் பெற்ற - அப்போதிருந்த தகவல் தொழில் நுட்பத்திற்கான அமையம் - அமைப்பின்(Council for Information Technology- Later it became TVEC ) அங்கிகாரம் பெற்ற நிறுவனமாக குறுகியகாலத்தில் வந்துவிட்டோம். நான் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற முன்னரே பல நூறு மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி விட்டேன். உள்நாட்டு வெளிநாடுகளில் எமது மாணவர்கள் பணிபுரிகிறார்கள். (நான் பட்டதாரி ஆகும் முன்னரே என்னைவிட வயது முதிர்ந்தோருக்குக் கூட கம்பியூட்டர் தகுதிச் சான்றிதழ்கள் கொடுத்த அனுபவம்- சிறப்பானது.)
Kalmunai. With my students Kethees,Joy,Kanthan,and Ziard 1999 |
இதுவரை ஆயிரக்கணக்கானவர்களிற்கு மலேசியா,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் இலங்கையிலுமாகக் கற்பித்தாயிற்று. எனினும். எனது முதல் மாணவி நஸீபாவை என்னால் மறக்க முடியாது.
My institution's Certification Ceremony - I was 23 and a student at South Eastern University |
அவளது நல்ல மனதிற்கு பட்டதாரியான அவள் ஒரு பெரும் தொழிலதிபரை மணமுடித்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள். 2019 இல் பல வருடங்களின் பின் அவளையும் குடும்பத்தையும் சந்தித்து பழைய கதைகளில் மகிழ்ந்திருந்தேன்.
முன்னேற வயது ஒரு தடையில்லை - விதிகளை உடைத்தே தீரவேண்டும்.
Stories for entrepreneurs 02
சொன்னதை செய்யும் சுப்பனுக்களில் .....உலக்கை மடயனுகளுள் ஒருவன் நான் ...வணக்கம் (பி.எஸ்.பி ) யின் "கதையல்ல நிஜம் "அருமையான தொடராகவுள்ளது காரணம் கதையின் பாகங்களும் நிறுவன (பவர் சிஸ்டம் ப்ரோபிஸியோனல்ஸ்) பரிணாம வளர்ச்சியையும் பார்த்தவன்.உண்மையில் தங்களிடம் கல்வி பயின்றவர்களில் அதிகமானோர் இன்று பெரும் பதவிகளில் உள்ளார்கள். அதன் காரணமாக தங்களை தற்போது உள்ளவர்களுக்கு தெரியாவிடினும் தங்களிடம் கல்வி பயின்றவர்கள் மற்றும் அவர்களது பெற்றோராலும் தங்களது நிறுவன பெயரும் தங்கள் பெயரும் இன்றும் மறக்கப்படாமல் எமது பகுதியில் உள்ளது.24 வருடங்களுக்கு முன்னதான புகைப்படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி நிறுவனம் 1996 இல் அமைந்திருந்த இடத்தின் இன்றய புகைப்படங்கள் தேவையேனின் கிடைக்க செய்யலாம்.96 காலங்களில் ஆசான்களுக்கு மாணவர்களிடையே பயமும் மரியாதையும் இருந்தது இன்றய மாணவர்களிடம் கண்டிப்பாக அது இல்லவே இல்லை என்பது வருத்தம்.....தங்களது அன்றய மாணவர்களுள் நானும்; ஒருவனாக இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி ......அதன் சார்பாகவே எனது இன்றய தொழிலும் அமையப்பெற்றுள்ளது ............
ReplyDeleteகருத்திடலுக்கு மிக்க நன்றி. உங்களது பெயர் என்ன என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். எனது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். (0777302882)
ReplyDeleteஉங்கள் தளத்தில் பாலோவர் இணைப்பை இணையுங்கள் அப்போதுதான் பலரும் உங்கள் பதிவுகளை படிக்க முடியும்
ReplyDeleteமிக்க நன்றி. தங்கள் வலைமனையையும் தரிசிக்க நேர்ந்தது. மிகச் சிறப்பு.தங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஆவன செய்கிறேன்.
Delete