2004 ஆம் ஆண்டில் எனக்கொரு ஈமெயில் வந்திருநதது. கொழும்பில் நமது கணினி வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாட்டின்
கொடிய யுத்த சூழ்நிலைகளால் - வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கபட்டுக்கொண்டிருந்த சமயம். இரவு வெகுநேரமாகத் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்துவிட்டு - அருகிலிருந்த லப்ரொப்பில் ஈமெயிலைச் செக் பண்ணிக்கொண்டிருந்தேன். Financial Proposal என்ற தலைப்பில் ஒரு ஈமெயில் வந்திருந்தது.
நாமும் பைனான்ஸ் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது யாரோ பைனானஸ்சியல் புரபோசால் எழுதுகிறானே என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டே அதைத் திறந்து பார்த்தேன்.
அந்த ஈமெயிலின் சுருக்கம் இதுதான்:
அது நைஜீரிய நாட்டின் முன்னாள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரால் எனக்கு எழுதப்பட்டிருந்தது. எனது பெயர் விபரங்களையும் ஈமெயில் முகவரியையும் அவர் இணையத்தில் தேடிப் பெற்றுக்கொண்டாராம். என்னைப் பற்றி அவர் புலன் விசாரணை செய்து நான் ஒரு தொழிலதிபர் என்றும்,நேர்மையான நபர் என்றும் அறிந்து கொண்டாராம் (நைஜீரியா வரையுமா நாம பேமசாயிருக்கோம்-Cool :) )தன்னிடம் பெற்றோல் வாங்கி விற்ற வகையில் வந்த தரகுப் பணத்தின் பெரும்தொகை இருப்பதாகவும் சில பல காரணங்களால் அதை தனது நாட்டில் வைத்திருக்க முடியாதெனவும் எனவே அதை எனது பெயரிற்கு -எனது நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடு ஒன்றிற்கு முதலீடு செய்வதுபோலக் காட்டி அனுப்புவதாகவும் வரும் தொகையில் 40 வீதத்தை எனக்குத் தருவதாகவும் மிகுதி 60 வீதத்தை அவரிற்கு வழங்கும் படியும் குறிப்பிட்டிருந்தார். அந்த 40 வீதம் என்பது அமெரிக்க டாலரில் பல கோடிகள் வரும். எனக்கு சம்மதமென்னறால் அவர் கேட்டுள்ள எனது முகவரி, வங்கி இலக்கம், வியாபாரப் பதிவுச் சான்றிதழ் போன்ற விபரங்களை அவரிற்கு நான் அனுப்ப வேண்டும். அவர் : டீலா ? நோ டீலா?
எனக்கு இரத்தம் காதை நோக்கி ஜிச் என்று பாயும் சப்தம் கேட்டது. கும்பிட்ட (அப்போது) கடவுள்கள் ஒருவரும் என்னைக் கைவிடவில்லை. நஷ்ட்காலத்தில் ஒரு மாபெரும் நல்லகாலம். ஆனாலும் இது இவ்வளவு ஈசி இல்லையே.. என்று நம்ப முடியாத சந்தேகமும் இருந்தது.
எப்போதுமே சட்டத்திற்குப்புறம்பாக சிந்திக்காத எனக்கு இதில் சட்ட மீறல் எதுவும் இல்லாததுபோல்தான் தோன்றியது. வரும் பணத்திற்கு வரி செலுத்தி மீதியை எடுத்துக்கொள்ளலாம் என்று எனது அப்போதைய அறிவு சொல்லியது. என்றாலும் குழப்பம் இருந்தது. தேவைகள் பிடர் பிடித்து உந்தியது.
எனது விபரங்களை அவரிற்கு ஈமெயில் செய்துவிட்டு என்ன நடக்கிறது பார்ப்போம் என்று படுத்துவிட்டேன்.
உறங்கவே இல்லை. வழமைபோல பிஸியான பல பணிகள். அடிக்கடி ஈமெயிலைச் செக் பண்ணிக்கொள்வேன். பிறகு வேலைகளில் மூழ்கிவிடுவேன் அடிமனதில் மட்டும் 'பக்' பக்'.
அன்றிரவு அலுவலகத் தொலைபேசி அலறியது. நடுச்சாமம் 2 மணி இருக்கும்.(பெரும்பாலும் கம்பியூட்டர் நிறுவனத்தின் உள்ளேயே உறங்குவேன்.) எடுத்துக் காதில் வைத்தேன். "அஸ்ஸலாமு அலைக்கும் மை முஸ்லிம் பிரதர்'" என்றது ஒரு காப்புலிக் குரல். நானும் புதிராகவே நினைத்துக்கொண்டு சலாம் சொன்னேன். "I am Abdullah Calling from Nigeria" என்றதும் எனக்குப் புரிந்து விட்டது. என்னுடைய தொடர்பு தனது அதிர்ஸ்டம் எனவும் விரைவில் நேரில் சந்திப்பார் எனவும். தனது லோயர் ஒருவரும் என்னைத் தொடர்பு கொள்வார் எனவும். மிகுதி விடயங்களை ஈமெயில் மூலமாகச் செய்வதாகவும் குறிப்பிட்டார். ஆச்சரியம். அதிசயம். நம்பமுடியாத உண்மை.. எனது சங்தேகங்கள் மறைந்தது. கடவுள் நம்பிக்கை நிறையத்தொடங்கியது. மீண்டும் நித்திரையே இல்லாத ஒரு நாள். விடிந்தது.
எனது பெயதைரப் பார்த்த பின்னர் கூட - சம்பந்தமே இல்லாமல் என்னை அடிக்கடி முஸ்லிம் பிரதர் என்று அவர் சொன்னது கொஞ்சம் நெருடலாக இருந்தது - எனினும் அந்தக் கன்பியூசன் அப்போது பெரிதாகத்தெரியவில்லை.விடிந்ததும் வீடு சென்று அலுவலகத்திற்கு மீண்டும் வந்தேன். காலை அலுவலகம் இயங்க ஆரம்பித்த அரை மணிநேரத்தில் பக்ஸ் இயந்திரம் அலறத்தொட்ங்கியது. என் அறையுள் இருந்த அதில் தொடர்ச்சியாக சான்றிதழ்கள் கடிதங்கள் என வந்து கொண்டிருந்தன ஏறக்குறைய 12 ஆவணங்கள். அதில் ஒன்று நைஜீரிய பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கும் எமது நிறுவனத்திற்கும் இடையில் மென்பொருள் தயாரிப்பிற்காக போடப்பட்ட ஒப்பந்தம் ஒன்று. இன்னொன்னு நைஜீரிய வணிகர் சங்கத்தில் எமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுப்புரிமைச் சான்றிதழ். ஆஹா எனது நைஜீரிய நண்பர் எவ்வளவு நேர்த்தியாக சட்டபூர்வமான விடயங்களைச் செய்கிறார்? இதயம் குளிர்ந்து விட்டது.
இனி வரப்போகும் பணம் அதற்கு வரி கட்டுவது அப்புறம் சட்டச்சிக்கல் ஏதும் வருமா ? என்ன செய்வது? எனவே எனக்கு அப்போது தெரிந்த ஒரு நண்பனை அழைத்தேன். அவன் ஒரு பெரும் தனியார் நிறுவனத்தின் ஐ.ரி மனேஜராக இருந்தான். (தற்போது ஆஸ்த்திரேலியாவில் உள்ளான்.)
அவனிடம் விடயத்தைச் சொன்னேன். அவனுக்கும் முதலில் அதிர்ச்சிதான் . என்றாலும் அவன் சொன்னான் பெரிய நிறுவனங்களிற்கு இப்படி பெரும் தொகை வந்து போவது வியப்பான விடயமில்லை. ஆனால் உனது சிறிய நிறுவனத்திற்கு வருவதுதான் பிரச்சனையாகலாம் அத்துடன் இன்றைய யுத்தச் சூழலில் தமிழனாகிய உனக்கு இவ்வளவு பணம் வரும்போது அரசால் ஆபத்து வரலாம் என்றான். பணம் வந்துவிடும் அதன் பின்னர்தான் ஆபத்து வரும் எனவே பணம் வந்ததும் எடுத்துக்கொண்டு நீ சிங்கப்பூர் சென்றுவிடு. பின்னர் நடப்பதைப் பார்க்கலாம். எனக்கும் அவனுக்கும் ஒரே வயது வாழ்வியல் அனுபவம் குறைந்த வயது. வாழ்க்கையில் பெரிய விடயங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்விப்பட ஆரம்பிந்திருந்த சமயம்.
பேரினவாத ஆட்சியாலும் அவர்களது சிறுபான்மையினர்மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை கொலை போன்ற செயற்பாடுகளாலும், அரசில் கோபமும் மரண பயமும் கொண்டிருந்த நேரம். எனவே பணத்தை எடுத்து நாட்டைவிட்டுப்போவது மிகச்சிறந்த ஆலோசனையாகப்பட்டது.
எனது நைஜீரய நண்பருக்கு அவரது இலங்கை எக்கவுண்ட் ஒன்றிற்கு நான் பணத்தை மாற்றிவிட்டு நாட்டைவிட்டு சென்று விடுவேன் சிங்கப்பூரில் சந்திக்கலாம் என்றேன். அவரும் ஓ.கே சொல்லிவிட்டார்.
சிங்கப்பூரில் எனது அப்பார்ட்மென்டை எங்கே வாங்குவது என்று சிந்திக்கத் தொடங்கினேன்.
3 வது நாள் எனக்கு ஒரு ஈமெயில் வந்திருந்தது. அதில் ஒரு நைஜீரிய வக்கீல் தான் எனது நைஜீரிய நண்பரின் வக்கீல் எனவும். பெரும் தொகை பணம் எனது வங்கிக்கு வைப்பிலிடப்பட உள்ளதாகவும். நூன் நைஜீரியா வந்து ஒப்பந்தத்தில் எனது கையொப்பத்தை வைக்க வேண்டும் எனவும் எப்போது வர முடியும் என்றும் கேட்டிருந்தார்.
'பழம் நழுவிப் பாலில் விழும்போது யாரிவன் குறுக்கே வடிதட்டுப்போட்டுப் பிடிப்பது ? ' நான் வராமல் இங்கிருந்தே ஏதும் செய்ய முடியாதா ? என்று கேட்டு ஈமெயில் அனுப்பினேன். முடியும் எனவும்;. எனக்குப் பதிலாக தான் சட்டரீதியான ஆவணப்பொறுப்பை எடுப்பதாகவும் தனது வங்கீல் கட்டணமாக இலங்கைப் பணத்தில் 50 ஆயிரம் தரும்படியும் குறிப்பிட்டிருந்தான்.
அவ்வளவுதான் 'கிளிங்' என்றொரு சத்தம். என் கபாலத்தின் கதவு திறந்து கொண்டது. எல்லாம் எனக்குப் புரிந்து விட்டது.
இவ்வளவு நாளாகவே, இவ்வளவு பெரும் வியாபாரக் காந்தங்கள் இருக்கும் இந்த இலங்கையில் இந்தச் சின்னப்பெடியனை இவர்கள் பிடித்தது எதற்காக? இத்தனை கோடி ரூபாய்கள் உண்மையில் உழைப்பே இன்றி எனக்கு வருமா ?, வருமா? அவ்வவு அதிசயப் பிறவியா நான்? என்று ஆயிரம் கேள்விகள் ஒவ்வொரு நிமிடமும் குடைந்து கொண்டெ இருக்கும் (3 நாட்களாக)கேள்விகளிற்கு எனது புத்தி பதில் கண்டுபிடித்துவிட்டது. ஆமாம் அந்த 50 ஆயிரம்தான் இவர்களது உழைப்பு. இந்தப்பொய்யர்கள் என்னிடம் 50 ஆயிரம் வாங்கியதும் மறைந்து விடுவார்கள் என ஊகித்து விட்டேன். புத்தி வேலை செய்ததால் பிழைத்தேன். அடுத்து உலகமஹா மோசமான வார்த்தைகளால் தி;ட்டி ஒரு ஈமெயிலைப்போட்டுவிட்டு மறுபடியும் சீரியசாக உழைக்க ஓடிவிட்டேன்.
அதன் பிறகு ஒரு பதில் கூட இல்லை அந்த நல்லவர்களிடமிருந்து.
XXX
இதுபோல வித விதமாநன பொய்களைக் கூறி ஈமெயில் அனுப்பிப் பணம் புடுங்குவது இன்றுவரை தொடர்கிறது.தொலைபேசி ஊடாக உள்ளூர் லெவலிலேயே பல ஸ்காம்கள் நடைபெறுகின்றன. எனினும் இவற்றுக்கு முன்னோடிகள் நைஜீரியர்கள்தான் என்று தெரிகிறது. அவர்களது கடிதம் எழுதும் - அதில் கதை சொல்லும் மொழித்திறன் உண்மையில் மிகச்சிறப்பானது. விதம் விதமாகச் சிந்தித்து நூதனத்திருட்டுச் வெசய்வதை ஒரு குடிசைக் கைத்தொழில்போலவே செய்து வருகிறார்கள். Nigerian scammers என்ற சொல்லை கூகுல் செய்துபாருங்கள். :)
சதுரங்க வேட்டை படம் நீங்கள் பார்க்கவில்லை என்றால் ஒரு தடவை பார்த்துவிடுங்கள். பேராசையைத் தூண்டித்தான் ஒருவனை ஏமாற்ற முடியும் என்ற கருத்திலிருந்து ஒவ்வொரு வசனமும் உண்மையானவை. வாழ்விற்குப் படிப்பினை. இன்றுவரை தொடரும் ஏமாற்றுவித்தைகள் பலவற்றை தெளிவாகச் சொல்கிறது.அதற்குரிய உளவியல் விழக்கங்களுடன்.
பணம்தேவைப்படும் ஒரு கையறு நிலையில் அதிக அழுத்தத்துடன் இருக்கும் ஒருவருக்கு சாத்தியமில்லாத வழியில் பணம் வரும் என்று சொன்னாலும் - எப்படியாவது உய்ய முடியுமா ? என இருக்கும் அவர் மனம் அதை முயன்று பார்க்கத்தான் முயலும். மனம் மிகப்பலவீனமாக சாதாரண வழிகளில் தீர்வு இல்லை என்று நம்பிக்கை இழந்து இருக்கும்போதுதான் அந்த இடைவெளியில் கள்ளச் சாமியார்களும் - மந்திரத்தால் மாறாத வியாதிகளை மாற்றுகிறோம் எனும் கள்ள வைத்தியர்களும்-போலி ஜோசியர்களும் உட்புகுந்து விடுகிறார்கள்.
ஏமாறுவதில் பெரும்பான்மை ஓவர் நைட்டில் ஒபாமாவாக வர விரும்பும் பேராசை பிடித்தவர்கள்.
இவர்களை நம்பித்தான் இன்னமும் நெட்வேர்க் மார்க்கெட்டிங்-பரமிட் பிஸ்னஸ் என்று பல ஓடிக்கொண்டே இருக்கின்றன வேறு வேறு பெயர்களுடன்.
- இது எல்லாம் நடந்து ஒரு ஆறுமாதம் இருக்கும்,
திருகோணமலை நண்பன் நிஹார்டீன் எனக்கு அழைப்பு எடுத்தான். "என்ன மச்சான் எப்படி.. என்றேன்."
"மச்சான் , எங்கட கூட்டாளி ஒருவனுக்கு ஈமெயில் லொத்தரில ஒரு 100 லட்சம் அமெரிக்க டொலர் விழுந்திருக்கு – அதை எடுக்க நாங்க ஒரு வான்(Van) பிடிச்சு பிரண்ட்ஸ் எல்லாரும் கொழும்புக்கு வந்து கொண்டிருக்கிறம். அங்க ஒரு ஹோட்டல்ல லோயர் ஒருத்தரைச் சந்திச்சிட்டு – உன்னட்ட வருவன்டா "
நான் : ......
XXX
டெயில் பீஸ்:
நல்லகாலம் இந்த நைஜீரிய பிரதர் மட்டும் சொன்னபடி காசு அனுப்பியிருந்தால் ...(சாத்தியமான இண்டு கிளைமாக்ஸ்கள்)
A) நான் இந்நேரம் ஜெயிலில் கழி தின்றுகொண்டிருந்திருப்பேன். உங்களுக்கும் இதை வாசிக்கவேண்டிய அவஸ்த்தை வந்திருக்காது.
B) நித்திக்கு முதலே ஹவாய்க்குப் பக்கத்திலே ஒரு தீவை வாங்கி தனிநாடாக்கி செட்டிலாகியிருந்திருப்பேன். நீங்களெல்லாம் என்து நாட்டின் ஆண்டு விழாக்களில் நான் கொடி ஏற்றிப் பேசுவதை ரி.வியில் பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள்.
Note : எனது நண்பர் ஒருவர் இன்று இன்னொரு ஸ்காமில் அவரது உதவும் குணத்தால் மாட்டுப்பட்டதை பேஸ்புக்கில் வாசித்ததும் வந்த எதிர்வினை இது. அனைவரும் எச்சரிக்கையாயிருங்கள்.
I also have so many mails from web scammers. :(
ReplyDelete