சாய்ந்தமருதில் இலியாஸ் என்பவர் நடாத்திய(DTP) ரைப் செற்றிங் செய்யும் ஒரு நிறுவனத்திற்குத் தான் எனது முதலாவது வர்த்தக ரீதியான அப்பிளிகேசன் ஒன்றை விற்றேன். கணினி மூலம் அவர் செய்யும் பக்க வடிவமைப்புக்களில் பெருந்தொகையான படங்களைப் பயன்படுத்துவதால் - அவற்றை ஒழுங்கமைத்துப் பார்வையிடவும் - மீண்டும் அதை பேஜ்மேக்கரில் உடனடியாகப் பயன்படுத்தவும் (ACD See போன்ற பிக்சர் எக்ஸ்புளோரர்) அவரிற்கு ஒரு அப்பிளிக்கேசன் தேவைப்படுவதை நான் உணர்ந்தேன். அவர் எனது கம்பியூட்டர் கஸ்டமர். (இன்று விண்டோஸ் இயங்குதளமே அதைச் சிறப்பாகச் செய்யும் எனினும் அந்தநேரத்தின் விண்டோஸ் 95 சரியாகச் செயற்படாது. )
எனது ஆலோசனைக்கு ஏற்ப படங்களைப் பார்வையிடும் ஒரு இமேஜ் வியூவர் ஒன்றை நான் செய்து தர சம்மதித்தார். எனது முதலாவது மென்பொருள் தயாரிப்பு அதுதான். விசுவல் பேசிக் 4.0/5.0 என்று நினைக்கிறேன். அதில் இருந்த picture box மற்றும் dir list etc ஜ பயன்படுத்தி பார்க்கும் படத்தை ஓரு கிளிக்கில் கொப்பி பண்ண ஒரு பட்டனையும் சேர்த்து அழகிய இன்ரர்பேசில் ஒரு பிக்சர் வியூவரை அவரிற்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றேன்.
அந்த நேரத்தில் அது பெரும்தொகை. விண்டோசையே கிட்டத்தட்ட இலங்கைத்திருநாடு முழுவதுமே 100 ரூபாய் பைறேற்றட் சி.டி யில் இருந்து போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அது பெரும்தொகை. எனினும் அவரது வேலை இலகுவானதால் அவரது பின்னூட்டம்(Feedback) மிக நன்றாகவே இருந்தது. நான் கல்முனையில் இருந்து கொழும்பிற்குப் பார்சல் ஆகும்வரை அவர் எனது நல்ல வாடிக்கையாளராகவே இருந்தார்.
அதன் பின்னர் நிந்தவூரில் இயங்கி வந்த பெரிய குளிர்பானக் கம்பனியின் ஏஜண்டிற்கு அவர்களது போத்தல்களை கையாளும்(வெற்றுப்போத்தல்கள் வருதல் போதல்) ஒரு மென்பொருள் தயாரிக்கும் ஓடரைப் பெற்றேன். – அது பெரிய வேலை என்பதால் கொழும்பிலிருந்து அனுபவமுள்ள சொப்ற்வெயார் என்ஜினியர் ஒருவரை தற்காலிக ஒப்பந்தம் பேசி கல்முனைக்கு என்செலவில் இறக்குமதி செய்து – உதவியைக் கேட்டேன்.
அவர் ஐந்து வசனங்கள் பேசி முடித்துவிட்டு ஒரு சிகரட் ஊதுவார் சோக்கிரட்டீஸ்,பிளேற்றோ போன்ற சிந்தனையாளர்கள் இப்போது இருந்தால் அவர் விட்டத்தைப்பார்த்து சிக்கிரட் புகை விட்டபடியே சிந்திப்பதுபோலத்தான் சிந்திப்பார்கள் என்று தோன்றும். அப்படி ஒரு ஜீனியஸ் லுக்.– என்னைவிட 5 வருடங்கள் மூத்தவர். வேறு வழி இல்லாததால் அவர் செய்த பல பில்டப் அட்டாதுட்டிகளைச் சகித்துக்கொண்டேன். அவர் கொழும்பில் வேலை செய்யும் கம்பனியில் தற்காலிக விடுமுறையில் வந்திருந்தார்.
நாம் நிந்தவூர் ஏஜென்ரிடம் ஆர்டரையும் வாங்கி அட்வான்சும் வாங்கி விட்டோம். இரவு பகலாக எங்கள் இரண்டுநாட்கள் வேலை செய்து பல தடவைகள் நிந்தவூர்போய் வந்தும் அவரால் அதைச் சரியாகச் செய்யமுடியவில்லை.வேலை நகரவே இல்லை. மூன்றாவது நாள் எங்கள் அலுவலக மாடியில் நின்றபடி "வேலை நீணடுகொண்டே போகிறது – மாசச் சம்பளம் தருபவனுக்கு உண்மையாக இருக்க வேணுமல்லோ" என்று ஏதோ தத்துவம் போல சொன்னார்.
அவர் வந்திறங்கிய நாளே நான் அவரிடம் நான் பெற்ற அட்வான்ஸ் முழுவதையும் கொடுத்துவிட்டேன் (அறியாமை-பாலமை)அதைவிட அவருக்கு தங்கவும் உண்ணவும் ஊதவும் என எக்ஸ்ட்ராச் செலவு வேறு. எனக்கு இந்தப் புரஜாக்ட்டில் நட்டம் வருவதைப் பற்றிக் கவலையில்லை.கைவிட்டு வாடிக்கையாளர் நம்பிககையை இழந்துவிடக்கூடாது என்பதுதான் முக்கிய கவலை.
நான் வெளியே சென்று ஒரு தேநீர் அருந்தி விட்டு மீண்டும் அலுவலகம் நுழையும்போத "அந்த அண்ணா கொழும்புக்குப்போறன் எண்டு சொல்லீட்டுப் போயிட்டார்" என்று அலுவலகத்தில் நின்ற எனது ஊழியர் ஒருவர் சொன்னார்.
கலைத்துப் பிடிக்கும் அளவிற்கு ஆத்திரம் வந்தாலும் அந்த மூஞ்சியில் இனி விழிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். அத்துடன் அவர் வேலை தெரியாத அரைகுறை என்பதையும் உணர்ந்துகொண்டேன்.
காலை முதல் மாலை வரை கம்பியூட்டர் கற்பிக்கவேண்டும். இடையிடையே புதிய கம்பியூட்டர்கள் வாங்சக வருபவர்களைக் கையாள வேண்டும். திருத்த வேண்டிய கம்பியூட்டர்களை எனது ஊழியர்கள் பொறுப்பொடுத்து வைப்பார்கள் , அவற்றை இரவிரிரவாகத் திருத்த வேண்டும். படுக்க எப்படியும் 1-2 மணியதகிவிடம். இவ்வளவற்றுடன் பல்கலைக்கழகத்திற்கும் சென்று வரவேண்டும்.
இதனால்தான் ஒரு புறோகிறாமரைத் தேட வேண்டி வந்தது. அத்துடன் உண்மையில் அந்த நேரத்தில் மிகச்சிக்கலான அந்த சாப்ற்வெயாரைத் தனியே செய்யுமளவு எனக்கு நிபுணத்துவமம் இருக்கவில்லை.
அது கைவிடப்பட புறாஜெக்ட் ஆச்சு. வாங்கிய தொகையைவிட பெரிய அளவில் செலவு. கூட்டிக் கழிக்காமலே படு நட்டம் என்று தெரியும் புறாஜக்ட் அது.
அந்த நிறுவனத்தினரும் பெருந்த தன்மையாக அதை அத்துடன் விட்டு விட்டார்கள்.
ஆனால் எனக்கு அது அது வடு.
XXX
எனது கணினியுலக வாழ்வின் இரண்டாம் பாகமாகிய கொழும்பு வாழ்க்கையில் தனியே ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தேன்.(ஹார்ட்வேர் நிறுவனம் வேறு சொஃப்ற்வேர் நிறுவனம் வேறு.) நோர்வேயிலிருந்து ஒரு அருமையான ஆர்டர் கிடைத்தது. பீட்சா நிறுவனம் ஒன்றின் ஒன்லைன் ஓடரிங் சிஸ்டம் அது.
எனது உள்ளக மென்பொருள் வடிவமைப்பாளருக்கு வெப் புறோகிறாமிங்கில் அவ்வளபு பரிச்சயமில்லை. எனவே அவுட்சோர்சிங் செய்யவேண்டி வந்தது. எனது நண்பன் ஒருவனின் பரிந்துரையின் பேரில் வேறு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த(எமது பள்ளியில் ஜூனியராக இருந்த) ஒருவரை அழைத்து அந்தப் பணியைக் கொடுத்தேன்.
அவர் ஊதுவத்தி போல ஒரு கோடாகக் காட்சியளிப்பார். குடித்துக் குடித்து காய்ச்சல் வந்த மதுப் போத்தல் மாதிரியே ஆகிவிட்டவர். (அது என்ன புரோகிறாமர்கள் எல்லாம் அப்படித்தானோ – என்று அப்போது எணணிக்கொள்வேன்.)
வேதாளம் மறுபடியும் மரத்தில் ஏறியது. இவரும் குறித்த நேரத்திற்குத் தரவில்லை அரைவாசியுடன் அட்ரசே இல்லாமல் ஆகி விட்டார். எனது ஆர்டர் கான்சல் ஆகியது. வெறுத்துப்போன நான் என்னிடம் சொந்தமாக இல்லாத அல்லது மாற்றீடு இல்லாத ஒரு விடயத்தை அடிப்படையாக வைத்து எந்த அடுத்தவரை நம்பி வர்த்தக முயற்சியையும் செய்வதில்லை என்ற முடிவை எடுத்தேன். (No small scale out sourcing )
பின்னர் சில மாதங்களின் பின்னர் சந்தையில் இலகுவாக எடுக்க முடியாத ஒரு கம்பியூட்டர் பிறின்டர் ஒன்றை அவர் இயங்கிய ஒரு மென்பொருள் நிறுவன்திற்காக வாங்க வந்து – எனது கோபக் கனலில் முதலில் காய்ந்து எழுந்து பின்னர் வாங்கிப் போனார். (எங்களிடம் மட்டுமே அப்போது அது ஸ்டாக் இருந்தது) பின்னர் தொடர்பில்லை. பல வருடங்கள் உருண்டோடி விட்டன.
அவர் காலவோட்டத்தில் பல அடிகள் பட்டு - வானொலி நிறுவன அறிவிப்பாளர் பணி வரை மேற்கொண்டு (அங்கே பாடலை ஓடவிட்டுவிட்டு தூங்கியதால் - பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு அதனால் வேலையை விட்டுத்தூக்கப் பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்-உண்மை தெரியாது)அவரது ஒழுக்கக்குறைபாடு காரணமாக எந்த நிறுவனத்திலும் தொடர்ந்து இயங்காமல் மாறிக்கொண்டே இருப்பார். (இருவருக்கும் பொது நண்பர்கள் உண்டு)
கடந்த ஆண்டு பேஸ் புக்கில் றிக்குவஸ்ட் கொடுத்து இணைந்தார். 6 மாதங்களிற்கு முதல் எனக்க அழைப்பெடுத்து தான் ஒரு ஹார்டவெயார் கம்பனி ஒன்றில் முகாமையாளராக இருப்பதாகவும், எனது நிறுவனம் மற்றும் நண்பர்களது நிறுவனங்களிற்கு கம்பியூட்டர்கள் உதிரிப்பாகங்கள் தேவைப்பட்டால் தன்னிடம் வாங்கி உதவும் படியும் கேட்டார்.
அவர் பேசப் பேச பன்னிரண்டு வருடங்களிற்கு முன்ன அவர் எனக்கு வைத்துவிட்டு இன்னும் எடுக்காமல் விட்ட ஆப்பு எங்கேயோ உறுத்திக்கொண்டே இருந்தது. யாருக்குமே முகத்துக்காகக் கூட நான் பொய் நம்பிக்கை கொடுப்பதில்லை இவருக்கு ..? இல்லைத் தம்பி , எனக்கு பல சப்பிளையர்கள் இருக்கிறார்கள். தேவைப்படாது என்று நேரடியாகச் சொல்லி போனை வைத்து விட்டேன். நேர்மையற்றவர்களையும் துரோகம் செய்பவர்களையும் நான் இங்கிதத்தோடு நடத்துவதில்லை.
வாழ்க்கை ஒரு வட்டம் அது நீங்கள் சொருகிற ஆப்பை உங்களிடமே கொணர்ந்து சேர்க்கும். காலநேரம் வேண்டுமானால் முன்னப்பின்னே ஆகலாம். ஆனால் ஆப்பு நிச்சயம்.
Good experience sir :)
ReplyDelete