Connecting the dots - Steve Jobs in Tamil
மறைந்த அப்பிள் நிறுவன அதிபர் - இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில் முயற்சியாளர்களில் ஒருவர் - இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத புத்திசாலிகளில் ஒருவர் 'ஸ்டீவ் ஜோப்ஸ்'. உலகின் ரொப் ரென் செல்வந்தர்கள் லிஸ்டில் அடிக்கடி இடம்பிடித்தவர்.
ஆனால் அவர் பிறப்பே பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஸ்டீவ் ஜோப்ஸ் எதிர்பாராத விதமாகக் கருவில் தங்கிய குழந்தை. அப்போது அவரது தாயாருக்குத் திருமணமாகியிருக்கவில்லை. அவர் ஒரு பல்கலைக்கழக மாணவி. அவர் தனது மகனை தத்துக்கொடுக்க விரும்பினார். முதலில் ஒரு சட்டத்தரணி தம்பதியினர் தத்தெடுக்க விரும்பினர்,கடைசித் தருணத்தில் அவர்கள் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பது என முடிவெடுத்தனர்.
தத்தெடுக்கப் பிள்ளையைக் கோரி இருப்போரின் வெயிட்டிங் லிஸ்டில் இரண்டாவதாக இருந்த ஸ்டீவின் வளர்ப்புப் பெற்போருக்கு அடுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இருவரும் பட்டம் படித்தவர்கள் அல்ல. தாய் கல்லுரியை முடிக்கவில்லை, தந்தையோ பாடசாலையைத் தாண்டவில்லை. பட்டதாரிகளிற்கே தனது பிள்ளையைத் தத்துக்கொடுப்பேன் என்று முதலில் முரண்டு பிடித்த ஸ்டீவின் பெற்றதாய்,கடைசியில் தனது மகனை ஒரு பட்டதாரியாக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தத்துக்கொடுத்தார்.
ஸ்டீப் ஜோப்ஸின் வாழ்க்கை இலத்திரனியல் பொருட்களைத் திருத்தும் ஒரு நபரின் வீட்டில் ஆரம்பித்தது. தனது வளர்ப்புத்தந்தையுடன் சேர்ந்து இலத்திரனியல் சம்பந்தமான அறிவை அவர்களது கராஜில் தந்தைக்கு உதவியபடியே கற்றுக்கொண்டார்.
அவர் 17 ஆண்டுகளின் பின் செல்வந்தர்கள் படிக்கும் றீட் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். பல புத்திசாலிகளையும் சிந்தனையாளர்களையும் போலத்தான், ஸ்டீவிற்கு பல்கலைக்கழகப் படிப்பு தனக்குப் பயன்படாது என்பது சில மாதங்களிலேயே புரிந்து விட்டது. ஆறாவது மாதத்தில் கல்வியை தொடருவதை நிறுத்திக்கொண்டார்.
பல்கலைக்கழத்தைக் கைவிட்ட நிலையில், தொழிலும் இல்லாமல் தங்க இடமும் இல்லாமல் மிகவும் துன்பப்பட்டார்.18 மாதங்கள் அந்தச்சூழலிலேயே சுற்றித்திரிந்தார். கொக்கோ- கோலா ரின்களைப் சேகரித்து விற்றால் சில டாலர்கள் கிடைக்கும். அவற்றைச் சிறு செலவுகளிற்குப் பயன்படுத்தினார். கல்லூரியில் நண்பர்களின் ஹாஸ்டல் அறைகளில் தரையில் தூங்குவார். ஒவ்வொரு ஒவ்வொரு ஞாயிறு இரவுகளிலும் சுமார் 14 கிலோ மீட்டர்கள்(7 mi) நடந்து சென்று – (அமெரிக்காவில்) ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி உண்டார். அவர் அதைப்பற்றிச் சொல்லும்போது 'அந்த உணவை மிகவும் விரும்பினேன்'("I loved it" ) என்று சொல்வார்.
2005 ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக வந்தபோது ஸ்டீவ் ஜோப்ஸ் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இங்கு எடுத்தாளப்படுகிறது.
அப்படிப் படிப்பைக் கைவிட்டுத்திரிந்த நாட்களில் கலிகிராபி(Calligraphy) எனப்படும் எழுத்துருக்களை(Fonts,Font Faces :Times new roman,sans serif ) கையால் வரையும் பயிற்சி நெறிக்குச் சென்றிருக்கிறார். அந்த கல்வி அவரை மிகவும் கவர்ந்தது எனச்சொல்கிறார்.
இப்போது இந்தப் புள்ளிகைள இணைத்துக் காட்டுகிறார்:
"பலவகையான எழுத்துருக்களை வரைவதை நான் கற்கும்போது பிரயோக ரீதியில் அவற்றால் வாழ்க்கைக்கு ஏதும் பயனிருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் பத்து வருடங்களின் பின்னர் நாங்கள் அப்பிள் கம்பியூட்டரை வடிவமைக்கும்போது இவை எல்லாம் திரும்பி வந்தன. நாங்கள் அந்த அழகிய எழுத்துருக்களை மக்கின்டோஸ்(Apple-Mac O/S) இயங்குதளத்தில் பயன்படுத்தினோம். உலகின் முதலாவது அழகிய எழுத்துருக்கொண்ட பேர்சனல் கம்பியூட்டர் உருவானது. .............. நான் பல்கலைக்கழகப் (பிரதான) படிப்பைக் கைவிட்டிருக்காவிடில் (அதே பல்கலைக்கழகத்தின்) சிறு பயிற்சி நெறியாகிய கலிக்கிறாபி பயிற்சியைப் பெற்றிருக்க மாட்டேன், அப்படி அந்தப் பயிற்சிக்குப் போயிருக்காவிடில் பத்து வருடங்களின் பின் அப்பிள் கம்பியூட்டரை வடிவமைக்கும்போது இந்த அழகிய எழுத்துருக்களை அதில் பயன்படுத்தியிருக்க மாட்டேன், அப்படி அழகிய எழுத்துருக்களை நான் அப்பிள் பேர்சனல் கம்பியூட்டரில் பயன்படுத்தியிருக்காவிட்டால் ,அதை (போட்டியாளராகிய பில்கேட்ஸ்)விண்டோஸ் அதை காப்பியடித்து அவர்களது இயங்கு தளத்தில் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள், ஒட்டு மொத்தத்தில் பேர்சனல் கம்பியூட்டர்கள் அழகான எழுத்துருக்களை இழந்திருக்கும்.
பத்து வருடங்களின் முன் கல்லூரியில் இருக்கும்போது இந்த சம்பவங்களிற்கு இடையில் உள்ள தொடர்பை நினைத்துப்பார்த்திருக்க முடியாது. இனி நடக்கப்போகும் சம்பவங்களின் தொடர்பை நம்மால் இப்போது யூகிக்க முடியாது , ஆனால் பின்னோக்கிப் பார்க்கும்போது (இதற்காகத்தான் அது நடந்தது) ஒவ்வொரு புள்ளிகளிற்கும் ( சம்பவங்களிற்கும்) இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்ளமுடியும்." - Steve Jobs.
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பின்னால் ஒரு காரணமிருக்கும் அதை நாம் பின்னரே உணர்கிறோம் என்பது அவர் சொல்ல முயன்ற தத்துவங்களில் ஒன்று. தன் வாழ்வில் நடந்த மூன்று சம்பவங்களைச் சொல்லி வெற்றி பெறத்தூண்டும் இவரது பேச்சில் மேலே சொன்னது ஒரு கதை. இன்னும் சுவையான இரண்டு கதைகள் சொல்கிறார்.
பேச்சின் முடிவில் அவர் சொன்ன தத்துவம்தான் மனதில் இன்னும் ஒலிப்பது. தான் மாணவனாயிருந்த காலத்தில் வெளிவந்த ஒரு பத்திரிகையின் கடைசிப் பதிப்பில் வெளிவந்த பின் அட்டை வாசகத்தையே மாணவர் சமூகத்திற்கான தனது செய்தியாகச் சொல்கிறார் ஸ்டீவ்.
"பசியோடு இருங்கள்-முட்டாளாக இருங்கள்" . கற்பதற்கான பசியோடு தொடர்ந்து இருப்பதும் நமக்கு எல்லாம தெரிந்து விட்டது என்று எண்ணாது தெரியாத விடயங்கள் ஆயிரம் என்ற வகையில் முட்டாள் போல எம்மை நாமே உணர்வதுமே -வெற்றிக்கான சாவி என்கிறார் ஸ்டீவ்.
அவரது (Biological)தந்தை சிரியாவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர்(இஸ்லாமியர்) - தாய் அமெரிக்கன். ஸ்டீவின் தந்தைக்கு தற்போது 85 வயதாகிறது. அமெரிக்காவில் வசிக்கிறார். ஸ்டீவ் ஜோப்ஸ் கணையத்தில் ஏற்பட்ட அரியவகைப் புற்று நோயினால் 2011 இல் அவரது 56 வயதில் மறைந்துவிட்டார்.
ஸ்டீவ் ஜோப்ஸ் (2005) ஸ்டான் போர்ட்(Stanford) பல்கலைக்கழகத்தில் ஆற்றிய இந்த உலகப்புகழ்பெற்ற பேச்சு – என்னையும் மிகவும் கவர்ந்தது. அந்த தொழில் நுட்ப ஜாம்பவானுக்குள் இருந்த வாழ்க்கை பற்றிய மென்மையான பார்வை, ஆத்மீக ரீதியான சிந்தனை இன்னும் அதிசயப்பட வைத்தது. எனது மாணவர்களிற்கு எல்லாம் இதைப் பார்க்கும்படி சொல்லுவேன், எங்களது ஒன்லைன் நூலகத்திலும் இந்த வீடியோ மற்றும் அதன் முழு எழுத்துவடிவத்தை இட்டுள்ளேன். ஆளுமை விருத்திச் செயலமர்வுகளின்போதும் நான் இந்த வீடியோவைப் பார்க்கச் சொல்லுவேன். ஆனால் விளைவு என்னவோ மிகக் குறைவுதான். மொழிப் பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். எனவே அந்தப் புகழ்பெற்ற பேச்சை அறிமுகப்படுத்தி மிகுதியை மாணவர்கள் தேடிப் பார்க்கச் செய்வதற்காக இந்தப் பகுதியை எழுதியுள்ளேன்.
இலங்கையில் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல் ஊக்கப்படுத்தல் என்ற எனது வாழ்நாள் மிசனில் இது முக்கிய பகுதி.
You are the next stev
ReplyDeletenow i realize, This is the best motivation speech ever <3
ReplyDelete