பள்ளியில் படித்த அதே பாடங்களை மீண்டும் கற்க ஓடி – மேலதிக திறன்களையோ, நற்பழக்க வழக்கங்களையோ, விளையாட்டுக்கள், போட்டிகளில் பங்குபெறல், உறவினர் வீடு செல்லல்(உறவு பேணல்),பெற்றோருடன் பயணம் செய்தல் ,வாழ்வின் ஏனைய கூறுகளை அறிதல் ஆகியவற்றை செய்யவோ அனுமதிக்காத ஓய்வொழிச்சல் இன்றி மாணவர்களை வரவழைத்து தன் கட்டில் வைத்திருக்கும் அருவருக்கத்தக்க ரியூசன் கலாச்சாரத்தை அதிகம் வெறுப்பவன் நான்.
பாடசாலையில் குறிப்பிட்ட பாடம் நடாத்தும் ஆசிரியர் சரியில்லை என்றாலோ அல்லது குறிப்பிட்ட சில பாடங்கள் மண்டையில் ஏறுவது குறைவாக இருந்தாலோ அதைத் தேடி வெளியில் கற்றுக்கொள்வது தவறில்லை. ஆனால் சமய பாடம் உட்பட,பாடசாலையில் படிப்பிக்கப்படும் அத்தனை பாடங்களுக்கும் - பாடசாலை விட்டு வந்ததும் சாப்பாட்டை அனுபவித்துச் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அள்ளி எறிந்து விட்டு இடைவேளையே இல்லாது ரியூசன் எனப்படும் பெரும்பாலும் போதிய கழிவறை வசதிகள் கூ;ட இல்லாத சுகாதாரமற்ற வெறும் வாங்கு மேசையில் உட்கார்ந்து ஆசிரியர்கள் சொல்வதை லயிப்பின்றி கேட்க மாணவர்களை கட்டாயப்படுத்தும் அமைப்பு மிகவும் மோசமானது.
(2 மணி வரை பாடசாலை 3 மணி முதல் 6 வரை ரியூசன் - பின்னர் ஆறிலிருந்து படுக்கும் வரை பாடசாலை மற்றும் ரியூசன் வீட்டுப்பாடங்கள்)
இவற்றில் பெரும்பாலானவை இன்றும் எமது பிரதேசத்தில் கொட்டில்கசளாக இருந்தாலும் - பாடசாலைக்குச் சமனாக கட்டட வசதிகளோடு -பிறான்டட் ரீ சேர்ட் மாணவர்களுக்கு கட்டாயமாக அணிவித்து – ரியூசன் வந்து செல்ல சொந்தமாக பஸ் சேர்வீசே நடாத்தும் ரியூசன்களும் உண்டு. அதைப் பார்த்து நான் அதிர்ந்திருக்கிறேன். தேவையே இல்லாது சகல பாடங்களையும் மீளவும் கற்க வைத்துக் காசு பார்க்க நவீன முறையில் மேற்கொள்ளும் மார்க்கெட்டிங் உத்தி.
நேர்சறி வகுப்பிலிருந்து மழலை மாறாத குழந்தைகள் பெரும் மூட்டைகளைச் சுமந்து ரியூசன் செல்வதும். அவர்களை ஏற்றி இறக்கும் பணிக்காகவே அவர்களது தாய்மார்கள் (பெரும்பான்மை தாய்மார் - சிறுபான்மை தந்தைமார்)ஆளுக்கொரு ஸ்கூட்டியுடன் காலை மாலை தெருவிலேயே வாழ்க்கை நடத்தும் அசிங்கங்களும். பார்க்க முடியவில்லை. முக்கிய சோதனைகளில் தோற்றும் மாணவர்களது வீடுகளில் ஒரு நேரச் சமையலே செய்யப்படுவதில்லை. ரியூசன் ஏற்றி இறக்குவதால் அம்மாக்கள் களைத்து விடுகிறார்களாம்.
பாடசாலை வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் படிக்கும் இடமல்ல. மாணவனது உடல்,உள வளத்தினைப் பல்வகையிலும் அபிவிருத்தி செய்யும் இடம். அந்த வயதை விட்டால் குறிப்பிட்ட வளர்ச்சிகளை அவன் பின்னாளில் பெறவியலாது.
விளையாட்டு,மேலதிக பாடவிதானச் செயற்பாடு – சாரணியம், சங்கங்கள், சேவை அமைப்புக்கள்,கலைத்திறன் சார் போட்டிகள்,ஒன்று கூடல்கள் என்று எவ்வளவோ பாடசாலை நேரத்தின் பின்னர் நடைபெறும்.இப்படி பல அமைப்புக்களில் இணைந்து இயங்கினால்தான் மாணவரது ஆளுமை , தலமைத்துவம் என்பன வளரும் (அதைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படுவது - சோதனை பாஸ் பண்ணினால் சரி- மிகுதி அப்புறம்) ஆனால் இந்தக் கேவலமான ரியூசனுக்கு ஓடுவதற்காக பிறவியிலேயே அவ்வவ் திறன்களோடு பிறந்த மாணவர்கள் கூட அவற்றை மேம்படுத்தும் செயற்பாடுகளில் கலந்து கொள்ளாமல் ஓடி விடுவார்கள். இது ஒரு வகை அழுத்தம்( Peer pressure).
நான் படித்த யாழ் இந்துக் கல்லூரியில் - ஓரு கல்வியாண்டிற்கு ஆறு பிரிவுகள் (A,B,C...F.)தர வரிசையில் அமைக்கப்பட்டடிருக்கும்.
ஆறு பிரிவுகளிலுமே – புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பெரும்பான்மை மாணவர்களும் - பாடசாலை அனுமதிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் சிறுபான்மையுமாக இருப்பார்கள்(பின்வாசல் வழி வந்த ஒரு சிலரும்..)
முதலாவது தர வரிசைப் பிரிவாகிய (A)டிவிசனில் அந்த நினைவாற்றல் மிக்க மாணவர் கூட்டத்தில் முதலாவதாக எப்போதும் வரும் ஒரு மாணவன் இருந்தான் - அவனுக்கு எதற்கு ரியூசன் ? ஆனால் அவனும் பாடசாலை முடிந்ததும் ரியூசனுக்குத்தான் ஓடினான். அந்தக் கெட்டிக்காரன் போகும் ரியூசன் எது என்று பார்த்து அதே ரியூசனுக்கு ஓடியவர்கள் பலர்.நான் அறிந்து அவன் படிப்பிற்கு வெளியே வேறு எந்த மேலதிக செயற்பாடுகளிலும் பாடசாலைக் காலத்தில் ஈடுபட்டிருக்கவில்லை.(ஏதோ ஒரு சமய சபையில் சும்மா இருந்ததாக நினைவு – அவனும் நெற்றியில் 3 பட்டையும் அடித்துத்தான் தினசரி திவ்யமாக காட்சியளிப்பான் - கடவுள் பெயிலாக்கி விடாதிருக்க அந்த சமயச் சங்கம் சென்று வந்திருக்கலாம் என்று என் கோணங்கிப் புத்தி சொல்கிறது :) )
அந்த முதலாவது மாணவன் இன்று வைத்திய நிபுணன் ஆக இருக்கிறான். படிப்பை மட்டும் கட்டிப்பிடிக்காத இன்னும் பலரும் விசேட வைத்திய நிபுணர்களாக இருக்கிறார்கள். ஆனால் எனது பார்வையில், அவன் படித்தகாலத்தில் செய்திருக்க வேண்டிய குறும்புகள், கற்றிருக்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் ,வளர்த்திருக்கவேண்டிய மேலதிக திறன்கள் போன்றவற்ற இழந்திருக்கிறான்.
வளர்ந்து வைத்தியராகிய பின்னரும் - நான் அறிந்து அவன் தன் வட்டத்தைப் பெருப்பித்திருக்கவில்லை- (ஐந்தில் வளையாதது....!)
அப்போதே(பாடசாலையில் படித்த நாட்களில்) என் மனதில் அடிக்கடி தோன்றிய கேள்வி இதுதான் "அடேய் ஆறு டிவிசனிலும் முதலாவதா வாறவனுக்கு ஏன்டா சைவ சயமத்துக்கும் ரியூசன் வகுப்பு ? "
இப்படிப் பாடமாக்கிகளை – மேலதிக பெறுமதிகள் தெரியாது வளர்த்துவிட – அவற்றில் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிற்கு சென்று – வேறு ஊர் – வேறு இடம் என்று போனவர்கள் - குறைந்தது புதிய சூழ்நிலையில் வாழ்க்கைக் கல்வியையாவது பெறுகிறார்கள்.
ஆனால் உயர்தரம் அல்லது ஓ.எல் பரிட்சையில் தோல்வியைத் தழுவி அதன் பிறகு சமூக வாழ்வை எதிர்கொள்ள விளைபவர்கள்.ஆரம்பத்தில்; எந்த சமூகத்திறனும் இன்றி மிகத் துன்பப்படுகிறார்கள்.
வாழ்வை எதிர்கொள்ளத்தெரியாமையால் இலகுவில் ஏமாற்றப்படுகிறார்கள், விரக்திக்கு உள்ளாகிறார்கள், தற்கொலை வரை செல்பவர்கள் பெரும்பாலும் இந்த சமூகமயப்படுத்தல் திறன்கள் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.
உலகிற்கு கருத்தச் சொல்லும் நான் - சொல்கிற கருத்தில் முன்னுதாரணமாக இருப்பதை மட்டுமே செய்ய முடியும். மற்றவர்களை இப்படிச் செய் என்றால் நான் ஏதோ பொறாமையில் இப்படிச் சொல்கிறேன் என்று எண்ணுவார்கள்.
எனது இரண்டு பிள்ளைகளும் இதுவரை ரியூசன் என்று ஒன்றை வெளியிலோ வீட்டிலோ கண்டதில்லை. விளையாடியதும் என்னோடு ஊர் சுற்றியதும்போக மிகுதி நேரத்தில் கற்கிறார்கள். இருவரும் புலமைப்பரியிச் பரீட்சையில் சித்தி பெற்றார்கள். அது கட்டாயமில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லியே வளர்த்தேன். யாழ்ப்பாணத்தில் பாடசாலை அனுமதி பெற அது உதவியது. அவ்வளவுதான். அவர்கள் சித்தி பெறாவிட்டால் கூட அது ஒரு சம்பவமே அல்ல எனது வீட்டில்.
கல்வியில் சாராசரி மாணவர்கள். அவர்களுக்கு அவர்கள் என்னவாக வரவேண்டும் என்ற ஐடியாவே இல்லை. நாங்களும் எப்போதும் சொன்னதும் இல்லை. அதற்குரிய வயதும் (10,13) இது இல்லை.
ரியூசன் என்ற கேடு கெட்ட கலாச்சரத்தை என்னோடு சேர்ந்து எதிர்க்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். காலை ஐந்து மணிக்கே தம் பிள்ளைகளகை; காரில் கொண்டுபோய் விட்டுக் காத்திருந்து ஏற்றி வரும் வைத்தியர்கள் மற்றும் வங்கித்துறை நண்பர்களும் அவர்கள் அதற்காக எதிர்நோக்கும் தினசரிச் சிக்கல்களும் நினைவில் வருகிறது.
பொழிப்பு : பிள்ளைக்குப் புரியாத பாடம் அல்லது நல்ல ஆசிரியர் வாய்க்காத பாடத்திற்கு ரியூசன் போகத்தான் வேண்டும். பிள்ளையை சுயமாகச் சிந்திக்கவோ விளையாடவோ புறக்கிருத்தியங்களில் ஈடுபட வாய்ப்போ கொடுக்காத வகையில் 7 நாளும் ரியூசனிற்கு விடுவதே எனது கவலை. போட்டிப்பரீட்சைகளாகிய உயர்தரப் பரீட்சை போன்றவற்றிற்கு ரியூசன் போவது தவிர்க்க முடியாதது.
குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவோம். மீளவும் பெறமுடியாத அந்தக் குழந்தைப் பருவ அனுபவங்களைப் பெற முழு உரிமையும் அவர்களிற்கு உண்டு. அவர்களது குழந்தைப் பராயத்தை அவர்களிடமிருந்து பிடுங்கி – ஓடவேண்டிய கால்களிற்குச் சங்கிலிபூட்டி நாற்றம் பிடித்த ரியூசன் கொட்டில்களில் - பட்டி விலங்குகள் போல் தயவு செய்து அடைக்க வேண்டாம் .
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .