ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னை பள்ளியிலிருந்து வந்த பாங்கு ஓசை விளிக்க வைத்தது. நம்ம ஏரியாவில் பள்ளியே கிடையாதே அப்புறம் எப்படி இப்படி பாங்கு பறிகிறது? என்று எண்ணியபடியே எழுந்து உட்கார்ந்திருந்தேன்.
சோம்பல் முறித்தபடியே எதேச்சையாக எனது உடுப்பைக் கவனித்ததும் நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன்.வெள்ளைக்கலர் ஜிப்பா போட்டிருந்தேன், உள்ளே சாரம்(கைலி) கட்டியிருந்தேன். அதிர்ச்சி மாறாமலே முகத்தைத் தடவிப்பார்த்தால் மீசையைக் காணோம் ஆனால் தாடி பஞ்சமில்லாமல் காடாகக் கிடந்தது. நான் இப்போது இருப்பது எனது அறையும் அல்ல எனது வீடுமல்ல என்பதும் புரிந்தது. அலறியடித்து எழுந்தவுடன் எதிரே இருந்த இராட்சசக் கண்ணாடியொன்றில் எனது உருவம் (அதே மொட்டைமண்டை) ஜிப்பா அணிந்து தாடியுடன் அரேபிய ஷேக் போலவே தோன்றியது.
இது கனவா ? நனவா? என்ன நடக்கிறது நமக்கு ? என்று புரிய முயற்சித்தபடியே சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த அறை படு அன்னியமானது. அங்கு நான் படுத்திருநத கட்டில் பல வேலைப்பாடுகள் நிறைந்த வாழ்நாழில் கண்டிராத மரக்கட்டில் ஐந்து பேர் படுக்கலாம். அந்த அறை முழுவதும் பெரிய பித்தளைப் பாத்திரங்கள், அன்னம்போலவும் , சிங்கம் போலவும் செய்யப்பட்ட நாற்காலிகள் கிடந்தன, என் கட்டிலுக்குக் கீழே நிலத்தில் ஓலைச் சுவடிகள் கிடந்தன.இஸ்லாமியர்கள் அணியக்கூடிய ஒரு தொப்பியும் அருகில் கிடந்தது.
திகிலுட அறையை மேலும் ஆராயாது வெளியே பாய்ந்தேன், வெளியே வரும்போது கவனித்தேன் கட்டில்,ஜன்னல்கள்,கதவுகள் ஒன்றுமே நான் வசிக்கும் இந்தக் காலத்திற்குரியவை அல்ல. சரித்திரப் படங்களிலும் சாண்டில்யனின் கடல்புறா,ஜவன ராணி; கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற அரச கதைகளின் அட்டைப் படங்களில் பார்த்த மற்றும் கதையுள் வாசித்திருந்த பழங்காலப் பொருட்கள் அவை.
நான் "ரைம் ரவல்"(Time tracvel) பண்ணியோ என்னவோ மிகப் பழங்காலத்திற்கு வந்துவிட்டது மட்டும் புரிந்தது. அதுவும் ஏதோ அரேபிய நாட்டிற்கு வந்திருக்கிறேன் என்று எண்ணினேன்.எனக்கு அதிக அளவில் முஸ்லிம் நண்பர்கள் இருப்பதால் நான் அரேபியாவைத்தெரிசெய்து வந்திருக்கிறேன் போலும் எனவும் நினைப்பு வந்தது .
வீட்டில் யாரும் இல்லை. மாபெரும் அரண்டமனை போன்ற வீடு . உள்ளே சென்று ஆய விரும்பவில்லை. வெளியே சென்று எங்கிருக்கிறேன் என்று பார்க்க விரும்பினேன்.
வாசலுக்கு வரும்போதே தெருவில் குதிரைகள் பயணிப்பதை அவற்றின் குழம்பொலியை வைத்து. அனுமானிக்க முடிந்தது. (பாகு பலி பார்த்தது இப்போது உதவியது.) வெளியில் வந்தேன். தெருவில் என்னைப்போன்றே அரேபிய உடையில் ஆண்களும் பெண்களும் நின்றார்கள்.
"இன்னும் சொற்ப வேளையில் இலங்கைத்திருநாட்டின் மன்னன் பின் அப்துல் பின் முஹம்மது பின் லேடன் இராவணூஸ் வரப்போகிறார் பராக் பராக்" என்று கட்டியம் கூறும் சத்தம் கேட்டது.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. "அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" ஆஹா ! நிச்சயமாக நமக்குத்தான் தலையில் ஏதோ ஆகிவிட்டது. நாம் இப்ப மென்டல் ஆஸ்ப்பத்திரியில் கிடக்கிறோம், மயக்கத்தில் இப்படியான சத்தங்கள் கேட்கும் என்று (பைத்தியங்களுக்கு) எனது நண்பன் டாக்டர் மதன் பல தடவைகள் கூறியிருக்கிறான் , அதுக்கு மெடிக்கல் ரேமில் அலுசேஷனோ ஹலுஸ்சேசனோ ஏதோ சொல்லுவான். இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்து ஊசி போட்டதும் நான் விழித்துக்கொள்வேன் என்று நினைத்தேன்.
ஆனால் நிலைமை அப்படியில்லை. நான் என்னைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன் 'சுரீர்' என்று வலித்தது.அப்ப இது நிஜம். அந்தத் தெருவில் எதிர் வீட்டு வாசலில் நின்றிருந்த பர்தா அணிந்திருந்த பெண்கள் சிலர் முகத்திரை விலத்தி என்னைப் பார்த்து அறிமுகச் சிரிப்புச் சிரித்தனர்.
அதில் ஒரு குட்டிப்பெண் 'இம்ரான் நானாக்கு நல்லாத் தூக்கம் பேய்த்துப்போல, அசருக்கு தொழ வெளியே வரலையே?' என்று கேட்டாள் நான் இன்னும் குழப்பத்துடன் மழுப்பலாகச் சிரித்துச் சமாளித்தேன்.
திடீரென தெருவே பரபரப்பாகிறது. அந்த நீண்ட தெருவில் இரண்டு வரிசைகளில் குதிரைகள் அணிவகுத்து வர அவற்றின் மேல் வாள் ஏந்திய (மொகலாய ?) வீரர்கள் தென்பட்டார்கள். நீண்ட தாடி வைத்த தொப்பியும் பச்சைக்கலர் ஜிப்பாவுமாகக் காணப்பட்ட இரண்டு மனிதர்கள் எல்லோருக்கும் முன்னதாக சாம்பிராணிப்புகையை வீதியெங்கணும் காட்டியபடி வந்தார்கள்.
நான் வீட்டு வாசல் கதவோரமாக கொஞ்சம் ஏறி நின்று கொண்டேன். குதிரை வீரர்களின் அணி முடியும் இடத்தில் பெரிய தேர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் மனித உருவங்களோ சிலைகளோ காணப்படவில்லை. மாறாக வட்டம் சதுரம் என பல செதுக்கப்பட்ட டிசைன்கள் மற்றும் சிறு சிறு வர்ணக் கண்ணாடிகள் இருந்தன.
தேர் இப்போது நான் தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையில் திரும்பியது. அதன் மையத்தில் - பத்துத் தலைகளுடன் பத்துத் தலைகளுக்கும் தலைக்கொரு நிறத் தொப்பியணிந்து – பத்துத் தலையிலும் நல்ல நீளமாகத் தாடி வளர்த்து, நடுவிலிருந்த ஒற்றை உடலுக்கு வெள்ளை ஜிப்பா போட்டபடி முன்னாலிருந்த கூசாவில் ஏதோ கண்ணாடிக் குழாய் சொருகி அதிலிருந்து வரும் புகையை அனுபவதித்து இரசித்தபடி ஒரு (ஒன்றா? பத்தா? ) உருவம் இருந்தது.
எனக்கு மிக அருகில் தேர் நின்றது. 'நாரைய தக்பீர் அல்லாஹ் அக்பர்' என்ற கோசங்கள் வானைப்பிழந்தது – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டங்களிலும் இதே சத்தம் கேட்டது நினைவுக்கு வந்தது.
முகம்மது இராவணூஸ் மன்னன் பேச ஆரம்பித்தார் – அவருக்கு அருகில் அமர்ந்திருந்த முகத்தை மூடிய வகையில் கறுப்புப் பர்தாவில் காணப்பட்ட தன் நான்கு மனைவிகளையும் ஓரு பார்வை பார்த்துவிட்டு(எல்லாம் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப்பார்த்தார் போல) பேச ஆரம்பித்தார்.
'அஸ்ஸலாமு அலைக்கும் !, அன்பான இலங்கைத்தீவின் மக்களே, நான் சாய்தா பேகத்தை (சீதா என்று பின்னர் ஊகித்தேன்) உங்கள் நன்மைக்காக ஹலாலான முறையில் நிக்காஹ் செய்ய எண்ணி இந்தியாவிலிருந்து தூக்கி வந்தது உங்களுக்குத் தெரியும். அது இப்போது அவரது புருசனாகிய அப்துல் ரஃமானுக்கும் தெரிந்து (அட நம்ம ராமன்?)விட்டது அதனால் போர் தொடுப்பதற்காக இங்கு வந்துள்ளார்கள் தற்போது மன்னார் பேசாலையில் அசர் தொழுகை நடத்துவதாகத் தெரிகிறது, அசர் தொழுகை முடிந்ததும் மகரிப்பிற்கு(சூரியன் மறைவின் பின்) பின்னராக இங்கு வந்து சேர உள்ளார்கள். நமது ரப்பின் (படைத்தவன்) பாதையில் ரஃமானை எதிர்த்து நடைபெற உள்ள ஜிகாத்தில் வயதிற்கு வந்த ஆண்கள் அனைவரும் இணைய வேண்டும். ' என்று முழங்கி முடித்தான். 'நாரைய தக்பீர் அல்லாஹ் அக்பர் ' என்ற கோஷங்கள் தொடர்ந்து முடிய சில நிமிடங்களாயிற்று .
நான் மேலும் குழம்பிக்கொண்டிருக்கையிலேயே இரதம் சென்று மறைந்து விட்டது. பின்னாலிருந்து காலடிச்சத்தம் வரவே திரும்பிப்பார்த்தேன் ஒரு அழகிய பெண்,பர்தாவில் மாசில்லாச் சந்திரன் போன்ற முகத்தைக்காட்டி ஆனாலும் என்ன காரணமோ சற்றுக் கோவத்தை அந்தப் பெருய கருவிழிகளில் ஏற்றி அருகில் வந்து சொன்னாள் "நம்ம மவன் அன்சாருக்கு வாற கிழமை சுன்னத்துச் சடங்கு செய்ய இருக்கு, அதுக்கு நாலு ஒட்டகம் அறுக்கோணும் என்று வாப்பா ஆசைப்படுறார், ஆனா நீங்க "வீண் செலவு, ஒரு ஒட்டகம் போதும்" என்று சொல்லி இருக்கீங்க.. நான் உங்களுக்கு முதலாவது பொஞ்சாதியா வாழ்க்கைப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன், நாலாவதா வந்த சபீனா பேகத்துக்கும் அவ புள்ளைகளுக்கும் செய்யிறதுல பாதி கூட நீங்க எனக்குச் செய்யுறதில்ல.." என்று மூக்கைச் சிந்த ஆரம்பித்தாள்.
திக்குத்திசை தெரியாமல் நின்ற அந்த நேரத்திலும் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. முதலாவதே இப்படி பாய் கடை புரியாணி மாதிரி இருக்கே ........அவசர அவசரமாக அந்த மிகுதி மனைவிகளையும் பார்த்துவிட வேண்டும் என்று வேகமாக வீட்டினுள் ஓடலானேன்.
சடாரென்று கால் பெருவிரலில் ஒரு அடி. உயிர்போய் உயிர் வந்தது. வலிதாங்க முடியவில்லை , 'ஐயோ அம்மா' என்று அலறினேன்.."என்னப்பா என்ன நடந்தது?" ஒரு கரகரத்த பெண் குரல் ..ஆம் ,அது நம்ம மனைவிதான் . அவள் எனது காலில் இருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துக்கொண்டிருந்தாள் அடுத்த அறையிலிருந்து மகனும் மகளும் வேறு வந்து கூடிவிட்டார்கள். நித்திரையில் எழுந்து நடக்க முயற்சித்து வேகமாக வழியிலிருந்த மகன் விளையாடிவிட்டுப் போட்டிருந்த ஆணியொன்றை மிதித்திருந்தேன்.
கட்டிலில் வந்து உட்காரும்போதுதான் போனில் உலமாக் கட்சி மௌலவியின் செய்தி படித்துவிட்டுத் தூங்கியது நினைவுக்கு வந்தது.
அரும்பதவுரை:
* பாங்கு பறிதல் : தொழுகைக்கான அழைப்போசை கேட்டல்
* அசர் : மதியத்திற்குப் பின்னரான மாலைக்கு முந்திய தொழுகை நேரம்.
* மகரிப்: மாலையில் உள்ள தொழுகை நேரம் ஒன்றின் பெயர்.
* நிக்காஹ் - திருமணம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .