ஓ.எல் பரீட்சை முடிந்ததும் கூவிக் கூவிப் பிள்ளை பிடிக்கப்போகும் ரியூசன் மார்பியாக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்.
Please see the update at the end of this article .
டிசம்பர் 12 உடன் நாட்டில் ஓஎல்(G.C.E O/L) பரீட்சைகள் முடிவிற்கு வந்து விடும். கொழும்பில் உள்ள காமினியும் மொஹமட் நளீமும் அடுத்து வரும் 3 மாதங்களையும் எப்படியெல்லாம் சந்தோசமாகக் கழிக்கலாம் என்று திட்டமிடுவார்கள். திருகோணமலையிலிருந்து ஓ.எல் எழுதியதும் சிவகுமார் தான் நெடு நாளாக ஆசைப்பட்ட மட்டக்களப்பு பாசிக்குடாக் கடற்பகுதிக்கு குடும்பத்துடன் சென்று விடுவான். தை மாதத்தில் மலேசியாவுக்கும் தந்தையுடன் செல்ல இருக்கிறான். அம்பாந்தோட்ட திசாநாயக்கா அடுத்த மூன்று மாதங்களுக்குள் தனக்குப்பிடித்த இந்திப்படங்களை எல்லாம் பார்த்து விடுவது என்று கிளம்பி விடுவான். அவனவன் இத்தனை வருடமும் கல்விக்காகச் செய்த தியாகங்களை ஒதுக்கி வைத்து விட்டு தனது இந்த இளம் வயதில் மட்டுமே உணர்ந்தனுபவிக்கவேண்டிய மற்றும் கற்க வேண்டியவற்றைத் தேடிப்புறப்பட்டு விடுவான்.
ஆனால்...யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில், தம்பி சிவகுமார் , யாழ்ப்பேப்பர்கள் எல்லாம் " உடனே வந்து சேருங்கள் -சிலபஸ் மிஸ் ஆகிவிடும்" என்று வெருட்டியதால் , ஓ.எல் முடிந்த அடுத்த கிழமையே திருகோணமலையிலிருக்கும் அம்மம்மா வீட்டிற்குப்போய் ஒரு கிழமை நிற்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தியாகம் செய்து விட்டு , தனது ஓ.எல் பரீட்சைக்கு என்ன பெறுபேறு வரும் என்றே தெரியாமல் ,ஏன் இந்தப்பாடத்தை தெரிவு செய்கிறோம் என்பதைக்கூட அறியாமல் பயோ சயன்ஸ் ரியூசனுக்குப்போகத்தொடங்கிவிடுவான்.
வெளி உலக அறிவு இல்லாத - இன்னொரு மருத்துவ பீட மாணவன் தயார்.
"பாசிக்குடா ஈரானுக்குப்பக்கத்திலா இருக்கிறது ?" - "என்னது,தாடி வைத்த சாமிகள் எல்லாம் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளா ? " "காலிச் சிங்களவர்கள் நம்மைக் கண்டால் வெட்டிப்போட்டு விடுவார்களாமே ?" என்று கேட்கும் பாடத்திட்டத்துக்கு வெளியே ஏதும் அறியாப் புத்தகப்பூச்சி ஒன்று தயாராகிவிடும்.
”முஸ்லிம்கள் எல்லாம் கட்டாயம் நாலு கல்யாணம் கட்ட வேண்டுமாமே என்று என்னிடம் கேட்ட ஒரு நண்பனையும் , மச்சான் ”ரொயிலட் ரிசூ(Toilet tissue)” என்றால் என்ன என்று போன் பண்ணிக்கேட்ட மருத்துவ நண்பனையும் வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கிறது. அதுவும் மிக அண்மையில் . (அம்மா சத்தியமாக இந்த சம்பவங்கள் இரண்டும் உண்மை ) எனது நண்பர்கள்(மட்டும்) என்னைத் தொடர்பு கொண்டால் அந்த இரண்டு புண்ணியவான்களும் யாரென்று சொல்கிறேன். ) -ரியூசன் பரிதாபங்கள்
"கல்வியின் நோக்கம் வெறும் பாடமாக்கும் இயந்திரங்களை உருவாக்குவதல்ல. புதியன புனைதல் - கண்டுபிடிப்பு - உள்ளவற்றை மேம்படுத்தல் என்ற சில திறன்களாவது உள்ள நற்பிரஜைகளை நல்ல சமூகச் சிந்தனையோடு உருவாக்குவதே," என்பதே எனது கருத்து.
தனிமனித மேம்பாடு , அதிலிருந்து பிறந்த சமூக மேம்பாடு என்பவற்றை நோக்கி அமைய வேண்டிய கல்வியை வெறும் பணம் பண்ணும் யுத்தியாக மட்டும் பார்க்கும் நிலையில் இன்று நாம். அதிலும் அரசாங்க வேலை தரக்கூடிய வகையில் எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதையெல்லாம் படிப்போம்-(பாடமாக்குவோம்). இந்த மனப்பாங்கினால் சுய புத்தியும் ஆளுமையும் வளரப்பெறாத ஒரு குறை வளர்ச்சித்தாவரங்களாகவே எங்கள் இளம் சமுதாயம் தொடர்ந்தும் மங்கி வருகிறது.
இந்த எழுத்துப் பகுதியின் நோக்கம் கல்விச்சூழலை முழுமையாக ஆராய்வதல்ல. மாணவர்களின் சிந்தனையை தொடர்ந்து மழுங்கடித்து வரும் இந்த ரியூசன் எனும் அருவருக்கத்தக்க கலாச்சரத்திலிருந்து அதிக பட்சம் 3 மாதங்களாவது ஓய்வு கொடுக்க விண்ணப்பிப்பதே.
ரியூசன் தேவையா இல்லையா ? எந்த வகுப்பிலிருந்து எந்த வகையான மாணவர்களுக்கு எந்தத் துறைகளிற்கு எந்தக்காரணங்களால் அது தேவைப்படுகிறது என்பது விவாதத்திற்குரிய விடயம். கண்ணை மூடியபடி பாடசாலை செல்லும் மாணவர்கள் எல்லாம் ரியூசனும் செல்லவேண்டும் என்ற சமூக உளவியல்தான் சுட்டுத்தகர்க்கபடவேண்டியது. இப்படிப்பட்ட எண்ணத்தை அதிக அளவில் உருவாக்கியவர்கள் இந்த ரியூசன் வியாபாரிகள்தான்.
ஓடி விளையாடினால்தான் உடல் உள வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதை நாம் அறிந்திருப்போம். ஐந்தாறு வயதிலிருந்து விளையாடாமல் அறுபது தாண்டியா விளையாடுவது ? இந்த ரீயூசன் எனும் கட்டாயச் சிறை அந்தக் குழந்தைகளை எப்பவாவது விளையாட விட்டிருக்கிறதா ?
புத்தகங்கள் வாசித்தல், பத்திரிகை அல்லது இணைய வாசிப்பு மூலம் உலக நடப்புக்களை அறிதல், உறவினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவழித்து உறவு முறையைினையும் சமூகப் பண்புகளையும் வளர்த்தல் , பயணம் செய்து வேற்றினத்தவர் மறறும் மற்றைய சமூகப்பொருளாதார அபவிருத்தி போன்றவற்றை கண்டுணரல் போன்ற எந்த செயற்பாடுகளுமின்றி வெறும் வகுப்பறையிலேயே குழந்தைப்பராயத்தையும் கட்டிளமைப் பருவத்தையும் தொலைத்து வளரும் சமூகமாகிப்போனது எமது சமூகம்.
நேர்சரி வகுப்பிலிருந்து பிள்ளைகளை பாதிநாள் பாடசாலைகளிலும் மீதிநாள் ரியூசன் வகுப்புக்களிலும் முக்கியெடுத்து அவர்களது இளமையை முழுமையாகத் தொலைத்த கோடரிக்காம்புகள் ஆகிவிடுகிறோம்.
ரியூசன் ரியூசன் என்று காலையும் மாலையும் அலையும் வடக்குமாகாணம் கடைசியில் அடைந்ததெல்லாம் கல்வியில் ஒன்பதாவது மாகாணம் எனும் பெயர்தான். நாட்டின் மற்றைய பாகத்தைவிட, விளையாடக்கூட விடாது ரியூசனில் பிள்ளைகளைப் படிப்பித்த பெரும் புத்திசாலிகள் நாம் எனில் வடக்கு முதலாவது மாகாணமாகவன்றோ வந்திருக்க வேண்டும் ?
நம்மாணவர்கள் ரியூசனுக்கு ஓடி ஓடி, கல்வியிலும் பெரிதாய் சாதிக்கவில்லை,அவர்களில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ,தொழில் முயற்சியாளர்கள் என்று நாட்டுக்கு பயனுள்ள எவரும் கூடத் தோன்றவில்லை. அப்படியாயின் அந்த ஓட்டத்தின் பயன் என்ன ? ரியூசனுக்கு அனுப்பாது இன்னும் பல திறன்களை அவனாகவே கற்றுக்கொள்ள நாம் நேரம் வழங்காது விட்டது நம் முட்டாள்தனம் என்பதை உண்மைக் கல்வி உள்ளோர் உணர்வர்.
பேஸ் புக்கையும் ,யூரியூப்பையும் நோண்டும் நம் இளையவர்கள் கடைசி ஒரு (புதுவகை) சைக்கிள் ரியூபையாவது கண்டு பிடித்தார்களா.? எம்மிடம் கற்பனை இல்லையா ? புத்திசாலித்தனம் இல்லையா ? அப்படியில்லை நமது சிந்தனைச் செயற்பாடுகள் சிறுவயதிலிருந்தே ரியூசன் எனும் செக்குமாட்டுத்தனத்தினால் நலமடிக்கப்படுகிறது.(இதைவிட வேறு வார்த்தை இல்லை என்றே தோன்றுகிறது.)
பேஸ் புக்கையும் ,யூரியூப்பையும் நோண்டும் நம் இளையவர்கள் கடைசி ஒரு (புதுவகை) சைக்கிள் ரியூபையாவது கண்டு பிடித்தார்களா.? எம்மிடம் கற்பனை இல்லையா ? புத்திசாலித்தனம் இல்லையா ? அப்படியில்லை நமது சிந்தனைச் செயற்பாடுகள் சிறுவயதிலிருந்தே ரியூசன் எனும் செக்குமாட்டுத்தனத்தினால் நலமடிக்கப்படுகிறது.(இதைவிட வேறு வார்த்தை இல்லை என்றே தோன்றுகிறது.)
அபத்தம்
பெறுபேறே வராது எப்படி மாணவர்கள் தங்கள் உயர்தர கற்கை நெறியைத்தெரிவு செய்யது ? ஒவ்வொரு வருடமும் பெறுபேறு வந்தபின்னர் எவ்வளவு ஆயிரக்கணக்காண மாணவர்கள் பாடம் மாறுகிறார்கள். ஏன் இந்த வீண் செலவும் - நேர விரையமும். ?
எனவே சொந்த புத்தியும் ஆளுமையும் உள்ள ஒரு அரசியல்வாதியால்தான் - அல்லது அரச நிர்வாக அதிகாரியால்தான் இந்த மூன்று மாதம் நடாத்தப்படும் அபத்தமான உயர்தர ரியூசன் வகுப்பைத் தடை செய்ய முடியும்.
வடமாகாண சபை அதிகாரத்தில் இருந்தபோது ஒரு ஆணியைக் கூட புடுங்கவில்லை என்பது வெளிப்படை உண்மைதான். ஆனாலும் ஒரு புதிய சிந்தனை படைத்த, சமூக நோக்கோடு செயற்படுகின்ற , வெறும் செத்தவர்களை வைத்து மட்டும் அரசியல் செய்யாத ”நெஞசில் உரமும் நேர்மைத் திறமும் மிக்க ” அரசியல்வாதிகள் (எவரேனும் இருப்பின்) இந்தக் கட்டுரையினை உளத்திலேற்றி உரிய நடவடிக்கை எடுங்கள்.
இந்த 3 மாதம் நடை பெறப்போகும் - O/L பெறுபேற்றிற்கு முந்திய அபத்தமான ரியூசன் வகுப்பைத் தடை செய்யுங்கள்.
அன்பு நண்பர்களே உங்களிற்குத் தெரிந்த ”நல்ல” அரசியல்வாதிகளிற்கு இந்த சிந்தனையை அனுப்புங்கள் , பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில்பகிருங்கள். - ஊடகங்களில் வரும் Tuition விளம்பரங்களைக் கருத்தில்கொண்டு பெரும்பாலான ஊடகங்கள் இவ்வகைக் கட்டுரைகளை அனுமதிக்காது. -(எனவே நீங்கள்தான் இதை அதிகம் பேரின் கண்களில் பட வைத்து சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த ஒரே வழி.)
[இது தனியார் வகுப்புக்களுக்கு எதிரான பதிவு அல்ல. பரீட்சைப் பெறுபேறு வர முன்னரே மாணவர்க்கு ஓய்வு கொடுக்காது ஆரம்பிக்கும் - தர்க்கரீதயாகவே தவறான இந்த தற்காலிக ஏ.எல் வகுப்புகளிற்கே எதிரானது. பெறுபேறுகள் வந்தபின்னர் - மேலதிக கற்றலுக்காக தேவைப்படும் மாணவர் தனியார் கல்வியை நாடுவதை நாம் குறை காணவில்லை.]
Updates : (தகவல் புதிப்பிப்பு) 05-12-2018
இந்தப் பதிவைத்தொடர்ந்து - கல்முனை மாநகரசபை இந்த ஓ.எல் பெறுபேறுகளிற்கு முந்திய 3 மாதகால தனியார் வகுப்பை தடைசெய்து கடுமையான அறிக்கை வெளியிட்டது. இது இந்த எழுத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. முதுகெலும்புள்ள சமூக அக்கறையுள்ள வெறும் வாய்ப்பேச்சு பேசாத தலைமைத்துவம் கண்டு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிற்கு என் சலாமும் நன்றிகளும்.
News Link : https://www.facebook.com/metromirrorsl/posts/1963216033759808?__tn__=K-R
(காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம் - எனினும் மகிழ்ச்சியே)
உண்மையயில் வடக்குமாகாணத்தை மையப்படுத்தி நான் எழுதிய இந்தக் கட்டுரை யாழ் மாநகர சபையையாவது சென்றடையவேண்டும் என்று நான் விரும்பினேன். மாநகல முதல்வருக்கு இது சென்றடைய வைக்கப்பட்டது. மாநகரசபை ஆணையாளர் என் 20 வருடகால நண்பர் - மறறும் பேஸ் புக்கில் அக்டிவாக இயங்குபவர் என் பேஸ்புக் நண்பரும் கூட அவரும் இதை பார்த்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை வழமைபோல் செவிடன் காதில் ஊதிய சங்கே.
(அரச செலவில் கல்விச் சுற்றுலாக்கள் சென்று நம் ஆளும் தரப்பு எதைக் கற்று வருகின்றனவோ தெரியாது - ரீயும் சமோசாவும் மதிய உணவுடனும் இவர்கள் அரச செலவில் போடும் திட்டமிடல் மீட்டிங்குகளின் கூத்துக்கள் எழுதின் ஆயிரம் வடிவேலுவின் காமெடி பார்த்த உணர்வைத்தரும். )
.
.
பி.கு :
ஏற்கனவே நான் பேஸ் புக்கில் எழுதிய மேற்படி விடயம் சம்பந்தமான பதிவிற்கு எனது, நல்ல கல்விச்சிந்தனை கொண்ட நண்பர்களாகிய பா.தயாளன்(கல்வியியலாளர்), வைத்தியகலாநிதி எஸ.மதன்,ச.முகுந்தன் (விரிவுரையாளர்), ப.சதீசன் (பொறியியலாளர்) ,தே.வாகீசன் (கல்வியியலாளர்) யோ.சிறிவரதராஜன் (பணிப்பாளர் - திட்டமிடல்) ஆகியோர் தந்த ஊக்குவிப்பாலும், அவர்களது கருத்துப்பங்களிப்பையும் கொண்டு இந்தக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
உண்மைக் கல்வி உள்ளவர்க்கு இது நன்றாகப் புரிந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .