என் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை விஞ்ஞானப் புத்தகங்களை வாசித்து அவற்றிலிருந்த பரிசோதனைகளைச் செய்து வருவதாலும்...பழைய ட்றங்குப் பெட்டி ஒன்று நிறைய அப்பாவின் ரேப் ரெக்கோடரிலிருந்து களவாய்க்கழட்டிய சிறிய மோட்டார் முதல் கொண்டு ,மின் குமிழ்கள் , வயர்கள் ,பற்றிகள் ஆணிகள் என்று பல்வேறு இலத்திரனியல் ,பொறியியல் சார்ந்த பொருட்களைச் சேர்த்து வைத்திருந்ததாலும் ஏரியாப்பசங்களால் ”விஞ்ஞானி” என்று சிறிது காலம் அழைக்கபட்டிருந்தேன். நல்லகாலமாக அந்தப்பட்டம் நிலைக்கவில்லை.
படிப்பு எனக்கு வேப்பங்காயாக கசத்தது ,நல்லுார் ஒஸ்லோ ரியூசன் சென்ரறில் படித்த எல்லாக் குழப்படிக்காறர்களும் எனது நண்பர்களாக இருந்தார்கள். கண்ட கண்ட சாத்திரிமாரிடமெல்லாம் என் சாதகத்தைக் காட்டிப் ”பெடிக்கு எப்ப புத்தி வரும் ? ”என்று வீட்டில் விசாரித்துக்கொண்டிருந்தனர். ஓ.எல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.
படிப்பு எனக்கு வேப்பங்காயாக கசத்தது ,நல்லுார் ஒஸ்லோ ரியூசன் சென்ரறில் படித்த எல்லாக் குழப்படிக்காறர்களும் எனது நண்பர்களாக இருந்தார்கள். கண்ட கண்ட சாத்திரிமாரிடமெல்லாம் என் சாதகத்தைக் காட்டிப் ”பெடிக்கு எப்ப புத்தி வரும் ? ”என்று வீட்டில் விசாரித்துக்கொண்டிருந்தனர். ஓ.எல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.
பரீட்சை நெருங்கிய போதுதான் படிப்பின் சுமையை கொஞ்சம் பொறுப்போடு ஏற்றுக்கொண்டேன். உயர்தரம் போவது என்னவோ கம்பஸ் போவது போல் சக நண்பர்களால் பார்க்கப்பட்டது. எனவே விஞ்ஞானப்பிரிவை உயர்தரத்தில் எடுத்தால் பல ஆய்வுகளைச் செய்யலாம் என்றும் , சுயமாக கண்டு பிடிப்புக்கள் போன்றவற்றை நிகழ்த்தவும் வாய்ப்புண்டு என்றும்..என் ஆய்வுப் பசிக்கு உயர்தர விஞ்ஞானம் இன்னும் தீனிபோடும் என்றும் நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.
ஒருவாறாக ஓ.எல் என்ற தடையை தாண்டி உயர்தரம் புகுந்தாயிற்று. நுாலகத்தில் புகுந்து உள்ளதிலேயே பெரிய இரசாயனவியல் ஆங்கிலப் புத்தகத்தை கைப்பற்றினேன். சைக்கிள் கரியரில் அதை வைத்து வீடு நோக்கி மிதிக்கையில் அடுத்த தொமஸ் அல்லா எடிசன் நானாகத்தான் இருப்பேன் என்று எண்ணிக் கொண்டேன்.
பொதுவாக உயர்தரம் வந்த புதிதில் ஆர்வக்கோளாறிலும் நான் ”டாக்கடராயிடுவேன்” போன்ற பல உன்னத செய்திகளைச் சமூகத்திற்கு சொல்லும் விருப்போடும் பல மாணவர்கள் பெரிய புத்தகங்களைச் சைக்கிள் கரியரில் மற்றவர் பார்வையில் படவேண்டும் என்ற நோக்கில் சுமப்பர்(அப்படியான பல நண்பர்கள் எனக்கிருந்தனர்). ஆனால் நான் அப்போது அந்த வகையில் இருக்கவில்லை.
ரியூசன் என்ற ஒன்றிற்கு போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயக் கலாச்சாரம்(சமூக அவலம்) காரணமாக நானும் மிகப் பிரபல ஆசிரியர்களின் கொட்டில்களிற்கு(ஆம் கோடிக்கணக்கில் உழைக்கும் இந்த இடங்கள் கிடுகால் வேயப்பட்ட கொட்டில்களாகவும் மாணவர்க்கு ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்க போதிய மலசலகூட வசதிகள் கூட இல்லாமலும் இருக்கும்)செல்ல வேண்டி வந்தது.
”யாழ் இந்துக்கல்லுாரி போன்ற பிரபல கல்லுாரிக்கு வந்ததே படிப்பும் உயர்வானது என்பதால் தானே அப்புறம் எதற்கு ரியூசன் ? ”என்ற என் வாதம் என் வீட்டில் எடுபடவில்லை. இரண்டு மூன்று மாதங்களில்தான் பல அதிர்ச்சியான உண்மைகள் உயர்தரக் கல்வி பற்றித் தெரிய வந்தது.
ஆய்வுகூடப் பாடம் என்பது வெறும் கண் துடைப்புக்குத்தான். பரிசோதனைக்குழாய் ஒன்றைக்ககூட வாழ்நாளில் காணாதவன் கூட இலங்கை மட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் முதலாவதாக வரலாம்.
விஞ்ஞானம் என்றாலே பரிசோதனையும் அதன் வழி உண்மையை உணர்ந்து அறிந்து உறுதிப்படுத்துவதும்தான் என்ற என் அபிப்பிராயம் எல்லாம் தவிடு பொடியானது.
- தாவரவியலும் விலங்கியலும்(தற்போது இரண்டும் சேர்ந்து உயிரியல் என்ற ஒரு பாடம்) பாடமாக்கினாலே சரி. எந்த விலங்கையும் தொட்டுக் கூட பார்க்கத்தேவையில்லை.
- தாவரங்களைப் பார்க்க எந்தக் காட்டுக்கோ அல்லது தோட்டங்களிற்கோ கூடப் போகத்தேவையில்லை. அவற்றை குறிப்பேடுகளில் மட்டும் வரைந்தும் உறுப்புக்களையும் உள்ளுடற் கூறுகளையும் பாடமாக்கிக் கொண்டால் போதுமானது.
- மற்றப்பாடங்களும் கொப்பியில் எழுதிப்போடும் கணக்குகளையும் பாடமாக்கும் கோட்பாடுகளையும் மட்டும் கொண்டதாகவே இருந்தது.
- எந்த முன்னணிப் பாடசாலையில் படித்தாலும் - முன்னணி ரியூசன் வாத்தியாரின் நோட்சையும் அவரின் முன் மாதிரி வினாத்தாள்களையும் படித்தலே(பாடமாக்கலே) பல்கலைக்கழகம் செல்ல ஒரே வழி.
- உயர்தரம் என்பது அறிவுப்பசிக்காகப் படிப்பதல்ல - பல்கலைக் கழக அனுமதிக்காகப் படிக்கப்படுவது.
நீச்சல் ஒரு பாடமாக வைக்கப்பட்டால் , அதைக்கூட புத்தகத்தில் படித்து பாடமாக்கி பரீட்சையில் முதலாவதாக வரக்கூடியவர்களை உருவாக்கும் பாடத்திட்டம் எம்முடையது.
இதயத்தை கவராத விஞ்ஞானப் படிப்பை மூன்று மாதங்களிலேயே வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி விடுத்து , இதயம் கவர்ந்த தமிழ்க் காதலால் கலைத்துறை புகுந்தேன்.
பதினாறு வயதிலேயே சிலப்பதிகாரம் முழுவதும் மனப்பாடமாகியிருந்த எனக்கு ..மூவாயிரத்திற்கு மேல் காணப்படும் சங்கப்பாடல்களில் இருந்து ”யாயும் யாயும் யாராகியரோ” என்ற வரிகளை மட்டுமே உதாரணமாக் கொடுக்கும் ,மற்றும் புதிய பாடல்கள் பற்றிக் கலா ரசனையோடு பேச விளையாத ஆசிரியர்களைக் கொண்ட அந்தக் கல்வித்திட்டமும் என் அறிவுப் பசியைப் போக்குவதாகவும் இல்லை புத்தியைத் தீட்டுவதாயும் இல்லை . (காலம் காலமாய் சொந்தப்புத்தியில்லா ஆசிரியர்கள் ”கந்தன் மாட்டை அடித்தான்” என்பதையே இரண்டாம் வே்ற்றுமை படிப்பிக்கும் போது கொடுத்து வருதல் போல - ”சுரேஸ் ரமேசை அடித்தான்” என்பது கூட இரண்டாம் வேற்றுமைதான்...)
இங்கும் நினைவாற்றல் மட்டும் இருந்தால் போதும் எந்த சிந்தனை வளம் இல்லாத நபரும் கரையேறலாம். மற்றும் சிந்தித்து சுய புத்தி காட்டினால் உருப்படவே முடியாது என்பது புரிந்தது. வெறுத்துப்போனாலும் ..பல்கலைக்கழகத்தில் புகுந்து ஆய்வு செய்யலாம் என்ற நம்பிக்கையில் அதற்குத் தயாரானேன்.
”கொடுமை கொடுமை என்று சுடலைக்குச் சென்றால் அங்காெரு கொடுமை குதித்து குதித்து ஆடிக்கொண்டிருந்ததாம்”
24 years back
ReplyDeleteyour memories still alive
வாழ்க்கை வாழ்வதற்கே