Wednesday, January 16, 2019

”மரணம்” எனும் மந்திர விசை !

Sketch by M.Kesharan


மரணத்தை ஓரு எதிர்மறையான விடயமாகவே பார்த்துப்பழகிவிட்டது நமக்கு. அது ஒரு அமங்கலச் சொல்லாகிப்போனது. உச்சரிக்கும்போதே ஒரு வித பயம் தெரியும் பலரது கண்களில்.  சிரமம் பாராது சில கணங்கள் சிந்தித்தால் அதுதான் வெற்றியின் செலுத்துவிசை என்பது புரியும்.

ஒரு பன்னிரண்டு வயதிலிருந்தே இறப்பின் இருப்பு ஒவ்வொரு நொடியும் அடுப்பில் ஏதோ கருகும்  நெடிபோல அடித்துக்கொண்டே இருக்கிறது ,எனக்கு.

அதனல்தான் நான்  ஹார்மோன்கள் முறு‌க்கேற்றும் பதினேழாம் வயதில்கூட எழுதிய ”மரணம்” என்ற கவிதையில்

”ஆழ்கடலுள் சுழியோடி
அண்டங்கள் கடந்து,
அமைதிக்குள் நான் அடங்க,
ஓ மரணம் !
நீவந்தெனக்கு நிம்மதியைத்தரவேண்டும் "

என்று எழுதியிருந்தேன். 

மரணம் என்பது எப்போதுமே எனக்கு ஒரு பிரச்சினையாகப்பட்டதில்லை. மரண பயம் இல்லாமைதான் தவறு செய்வோர் என்று கண்டோர் முன் பயப்படாமல் சீறி நிற்க வைக்கிறது. சாவை விடப் பெரிதாக வேறு என்னத்தைதான் அவர்களால்  வழங்கிவிட முடியும் ?. 

மறைந்த அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸ் சொன்னதுபோல ”மரணத்தின் முன்னர் எந்த அவமானங்களும் தோல்விகளும்   ஒரு பொருட்டல்ல....” 

வாழ்வில் வென்றவனுக்கும் இறுதியில் மரணம்தான் தோற்றவனுக்கும் மரணம்தான் . கோடி ஆசைகளை வைத்துக்கொண்டு  இடையில் தோற்றால் என்னாகிடுமோ என்று  முயற்சியே எடுக்காமல் மரணத்தை நுகருபவன் எவ்வளது கையாலாகாத அப்பாவியாக இருக்க வேண்டும். ? 


மந்தைகளைப் பின்தொடரும் மந்தையாக இல்லாமல் புதிதாக எதையாவது முயல விருப்பமா ?  தோல்வி - அவமானம் என்று எதையும்பற்றியும் கவலைப்படவேண்டாம் ! மரணத்தின் முகத்தின் முன்னர் அவை   வெறும் செல்லாக்காசு. எது நடந்தாலும் இறுதியில் ஆறடிக்குள் அல்லது கைப்பிடி சாம்பலுக்குள் அடங்கி விடும்.

ஏலவே போடப்பட்ட  மரணம் என்ற முற்றுப் புள்ளியை நோக்கித்தான் நம் கதை எழுதப்பட்டுச் செல்கிறது , அந்தப்புள்ளி எத்தனையாம் பக்கத்தில் போடப்பட்டுள்ளது என்பதுதான் வாழ்வெனும் கதையின் ”மரண சஸ்பென்ஸ்” :) 

 முயற்சி செய்துபார்ப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது ? ஒரே ஒரு முயற்சி அல்லது ஒரே ஒரு  வெற்றி / தோல்விக்கான ஒற்றைச் சந்தர்ப்பம்தானா   வாழ்க்கை ?

இல்லையே, ஆயிரம் முயற்சிகள், அதன் விளைவாக பல்லாயிரம்    வாய்ப்புக்கள்,  நிகழ்தகவாகவேனும் குவிந்து கிடக்கின்றன . வெற்றி  எவ்வளவு மகிழ்வையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் ? ஒருவேளை தோற்று விட்டால் ? ஒரு தடவை அல்ல, இரு தடவை அல்ல பல தடவைகள் தொடர்ந்து போராடியும் தோற்று விட்டால் ?...இங்கேதான் உங்களுக்கு துணைக்கிருக்கிறது மரணம் . எனும் ஜீவ நம்பிக்கை (முரண் உவமை ?) 

அப்படி என்னதான் நடந்து விடலாம் ? முயன்று பார் ! வென்றவனுக்கும் மரணம்தான் தோற்றவனுக்கும் மரணம்தான் முடிவு.

மரணத்தை எண்ணினால்  முயற்சி செய்து பார்க்க எவனும் பின்னிற்க மாட்டான். முயன்று பார் வென்றவனுக்கும் மரணம்தான் தோற்றவனுக்கும் மரணம்தான்.

தன் வாழ்வில் “முயன்று தோற்றால் என்னாகி விடுமோ?“ என்று முயலாதே விட்டவனுக்குத்தான் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மரண நாளாம்.

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை