இப்போது கூட என் வாழ்வில் சில மாதங்களே வந்துபோன - நான் நிரந்தரமாக அடையாது விட்ட அந்த யசிக்காவுடனான காதல் அனுபவங்களை நினைத்தால்; நெஞ்சிலே ஒரு இனம்புரியாத சோகம் கௌவும்.
என் வயதோடொத்தவர்களில் குறைந்தது 7-10 வருடங்கள் முத்தியதன்மை என்னில் வெளிப்படுவதை எனது நண்பர்கள் அறிவார்கள். அந்த அந்த வயதுக்குரியதைச் செய்யாமால் அதற்கு மிஞ்சியவற்றிலேயே என் நாட்டம் எப்Nபுhதும் செல்லும். நான்காம் வகுப்பிலேயே புஸ்பா தங்கத்துரை உட்பட்ட வப்புக்களின் கதைகளையும் புரிந்து வாசித்துவந்தவன் நான் - இது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கதைக்கு வருவோம்.
எனது மச்சாள் (தாய் மாமனின் கடைசி மகள்)என்னைவிட 12 வயது மூத்தவர் வயது வேறுபாடின்றி என்னைத் தன் நண்பனாக நடத்துவார். மாமாவின் வீடு பக்கத்து வீடு. நான் அப்nபுhது ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கிறேன். மச்சாளின் வீட்டுப்பெயர் வதனி . எனவே அவரை வதனி அக்கா என்று அழைப்பேன். அவரைப் பற்றித் தனியே பல கட்டுரைகள் எழுத வேண்டும். அந்த அளவிற்கு வாழ்வை எதிர்த்துப்போரடி வென்றவர். மிகச் சுவாரசியமாகப்பேசக்கூடியவர் அதி புத்திசாலி - புது முயற்சிகளை தைரியமாக முன்னின்று முயன்று பார்க்கக்கூடிய வீரப்பெண்மணி. மஸ்குலர் டிஸ்ரொபி எனும் கொடும் தசைத் தளர்வு நோயால் 13-14 வயதிலிருந்தே பாதிக்கப்பட ஆரம்பித்து எழுந்து நடக்கவே இயலாத நிலையை அடைந்தாலும் - போராடி பட்டப்படிப்பு முதல் பல சாதனைகளைச் செய்து காட்டியவர். தற்போது லண்டன் வாசம். நிலா என்ற புனைபெயரில் பேஸ் புக்கிலும் இலண்டன் வானொலிகள், தொலைக்காட்சிகளிலும் பிரபலம். அவரைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.
அவர் கைவசம் ஒரு ஜப்பான் கமெரா சிக்கியது. அவரின் நண்பர்கள் வட்டம் பெரியது. அவர் ஈடுபாடுகொண்ட துறைகளும் பல. இந்தக் கமெராவை ஒரு சிறு தொழிலாகவும் விருத்தி செய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். அவரது சகல புதுமையான "ஸ்ராட்டப்" முயற்சிகளிலும் நானும் கண்டிப்பாக இருப்பேன். அந்தக் கமெராவி;ன் பெயர் யசிக்கா எப் எக்ஸ் 3 .-Yashica FX 3.
அவர் கைவசம் ஒரு ஜப்பான் கமெரா சிக்கியது. அவரின் நண்பர்கள் வட்டம் பெரியது. அவர் ஈடுபாடுகொண்ட துறைகளும் பல. இந்தக் கமெராவை ஒரு சிறு தொழிலாகவும் விருத்தி செய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். அவரது சகல புதுமையான "ஸ்ராட்டப்" முயற்சிகளிலும் நானும் கண்டிப்பாக இருப்பேன். அந்தக் கமெராவி;ன் பெயர் யசிக்கா எப் எக்ஸ் 3 .-Yashica FX 3.
யசிக்காவின் மெயின் ஒப்பரேட்டரே நான்தான். நான்தான் மச்சாளின் மிக நம்பிக்கைக்குரிய மற்றும் நாலு தொழில்நுட்பம் தெரிந்த நண்பன்.. மச்சாளின் உடல்நிலை காரணமாக கமெரா அவரால் என் பொறுப்பில் விடப்பட்டது. வைரவர் கோவில் திருவிழாவிலிருந்து வாசிக சாலைக் கலைவிழா வரை நான் படங்களைச் சுட்டுத்தள்ளவேண்டி வந்தது. அரைக்காற்சட்டையில் 13 வயதுக் குட்டிப்பையன் கமெராவை வைத்து போக்கஸ் பண்ணி தொழில்முறைப் புகைப்படக் கலைஞன் போல படமெடுப்பது பலரையும் ஆச்சரியத்துடன் நின்று பார்த்துச் செல்ல வைக்கும்.
ISO(அப்போது (ASA) செற்றிங் எல்லாம் அவ்வவ் பில்ம் றோலில் வரும் பெட்டியில் வழங்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்து லைட்டிங் கண்டிசனுக்கு ஏற்ப மனுவலாக செற் பண்ண வேண்டும். போக்கஸ் கூட மனுவல்தான் . அதில் போக்கஸ் பண்ணும் அனுபவமே அலாதியானது.
சும்மா சொல்லக்கூடாது நானும் மிகவும் நல்ல நல்ல படங்களை நல்ல ஒளி அமைப்புடன் எடுத்திருந்தேன். யசிக்காவின் உரிமையாளராகிய எனது மச்சாள் அதை வைத்திருந்ததை விட அதிக நேரம் நானே அதனுடன் செலவிட்டிருந்தேன் . அதனுடன் பழகப் பழக எனது கமெரா மீதான காதல் பெருகிக்கொண்டே போனது. கனவும் நினைவும் யசிக்கா எப் எக்ஸ் 3 எனும் அதன் பெயர்தான் மனதில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
'நிற்கிறேன் நடக்கிறேன்..எல்லாம் அவள் நினைவுகளில்தான்,மொத்தத்தில் நான் தொலைந்து, நாமாகிவிட்டிருநதோம்..'
(எனது பழைய கவிதை)
அப்போது எனது தாயார் வெளியூரில் ஆசிரியையாகப் பணியாற்றியமையால் நான் எனது பெரியம்மாவுடன் தங்கிப் படித்து வந்துகொண்டிருந்தேன். பெரியம்மாவின் பிள்ளைகள் ஆறுபேரில் ஐவர் வெளிநாட்டில் இருந்தார்கள். பெரியம்மா வீட்டில் வெளிநாட்டுப்பொருட்களும் வெளிநாட்டுப் பணமும் துள்ளி விளையாடும். எனக்கு வெளிநாட்டிலிருந்து எந்த விளையாட்டுச்சாமானோநான் விரும்பும் பொருட்களோ(இன்றுவரை) உறவினர்களிடமிருந்து வந்ததாக நினைவில்லை. அநத வயதில் அதுவே எனக்கொரு தனியான ஏக்கமாக இருக்கும்.
ஆனால் எனது நண்பர்கள் பலருக்கும் வெளிநாட்டிலிருந்து மாமா மச்சான் என்ற உறவுகளிடமிருந்து வகை வகையான விளையாட்டுப்பொருட்கள்-உடுப்புக்கள் என்று வரும். எனது உறவினர்கள் பெரும்பாலும் சிக்கனவாதிகள் (மரியாதையாகப் பேசவேண்டும் அல்லவா). வெளிநாட்டிலிருந்து சில இனிப்புக்களைக் கொண்டுவந்து கொடுத்து தம் கடமை முடித்துக்கொள்வார்கள்.ஒரு சிலர் சம்பந்தமே இல்லாமல் சொக்ஸ், கீச்செயின் , கைக்கடிகாரங்கள் என்று அங்கே சுப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் இலவசங்களை எங்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.
பெரியம்மா பிள்ளைகளைப் பார்க்க நோர்வேக்குச் செல்வது என்று முடிவாகியது. பெரியம்மாவிடம் கெஞ்சிக் கெஞ்சி நான் சொல்லி விட்ட ஒரே பொருள் யசிக்கா எப் எக்ஸ் 3 தான். அதை வாங்கிக்கொண்டுவரப் பெரியம்மா சம்மதித்தார். நான் கனவுலகில் மூழ்க ஆரம்பித்தேன். நினைத்த காதலியைக் கைப்பிடிக்கப்போகும் பரவசம் . பெரியம்மா நோர்வே சென்று 3 மாதங்களாகியது நான் தினசரி அவர் வருகைக்காகக் நாட்களை எண்ணியபடியே காத்திருந்தேன். யசிக்கா எப் எக்ஸ் 3 என்ற கமெரா அப்போதே பத்தாண்டுகள் பழைய மொடல். பெரியம்மாவின் பிள்ளைகள் முன்னர் இலங்கைக்கு வந்தபோது டி.எஸ்.எல் ஆர் கமெராக்களை கொண்டு வந்து காட்டிச் சென்றிருந்தார்கள். எனவே யசிக்கா அன்றேல் ஏதோ ஒரு புரபசனல் கமெரா வரும் என்று காத்திருந்தேன்.
அந்த நாளும் வந்தது. பெரியம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் நான் அவரைக் கட்டிக்கொண்டேன். நீண்ட நாட்களின் பின் பெரியம்மாவைக் கண்ட ஆனந்தம் ஒரு புறம். எனது கமெரா அவருடைய பயணப்பைகளில் ஒன்றில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். பெரியம்மா ஒவ்வொரு பையாக எடுத்துத்தேடி 'இந்தா' என்று ஒரு கமெராவை நீட்டினார் . நான் அதைப் பாயாத குறையாகச் சென்று கைப்பற்றிக்கொண்டேன்.
அதனைப் பார்த்ததும் என் இதயம் நொருங்கியது. அது எனது காதலி யசிக்கா அல்ல. பிலிம்;ரோல் வாங்கும்போது புரமோசனுக்காக இலவசமாகக் கொடுக்கப்படும் குட்டிக் கமெரா. ஏந்த செற்றிங்கும் இல்லை. அப்போது அதை பிலிம்;ரோல் விற்கும் கடைகளில் 300 ரூபாய்க்கு விற்பார்கள். உண்மையில் என் வயதை ஒத்த சிறுவர்க்கு அந்தக் கமெரா போதும்தான். ஆனால் நான்தான் பிஞ்சிலே பழுத்தவனாயிற்றே. ஒரு தொழில்ரீதியான கமெராவை அதனது அத்தனை செற்றிங்குளையும் மாற்றித்தேவைக்கேற்ப பாவிக்கத்தெரிந்த - பல நூறுபடங்களை சுட்டுத்தள்ளி அவற்றில் பணம் ஈட்டலையும் பார்த்த எனக்கு அந்த Fuji Film குட்டிக் கமெரா யானைப் பசிக்குச் சோளப்பொரிகூட அல்ல அதைவிடச் சின்னது. ஓரு மரணம் நிகழ்ந்ததற்குச் சமனான ஏமாற்றம் என்னுள் ஒரு பிரளயத்தையே உருவாக்கியது. என் வாழ்நாளில் அந்தப்பெரியம்மா குடும்பத்தில் எவரும்(வேறு உறவினர்களோ) எனக்கு எந்த அன்பளிப்புப்பொருட்களையும் - எனது தொழில்நுட்ப பொருட்கள் மீதிருந்த ஆசையைத் தெரிந்து கொண்டும் -இலங்கைக்கு வந்துபோன நூறு சந்தர்ப்பங்களிலும் தந்ததில்லை.
ஆனால் அதைவிட நவீன உபகரணங்களையெல்லாம் சுய சம்பாத்தியத்தில் வாங்கிப் பயன்படுத்தும் அளவிற்கு காலம் என்னை உருவாக்கியிருக்கிறது.
இப்போது கூட என் வாழ்வில் சில மாதங்களே வந்துபோன - நான் நிரந்தரமாக அடையாது விட்ட அந்த யசிக்காவுடனான காதல் அனுபவங்களை நினைத்தால்; நெஞ்சிலே ஒரு இனம்புரியாத சோகம் கௌவும். அந்தப்பேரழகியினுடைய வியூபைண்டர் வழியே போக்கஸ் பண்ணுவதற்காக காட்சிகளையும் நபர்களையும் பார்ப்பது அவ்வளவு பரவசமான அனுபவம். எடுத்த படங்களை கழுவும் வரை காத்திருந்து, அது எப்படி வந்திருக்கிறது என்று காணும் பரவசம் வார்த்தைகளால் வர்ணிக்கக்கூடியதொன்றல்ல. யாரிடமாவது அந்தக்கமெரா ஒன்று விற்பனைக்கிருப்பின் தெரிவிக்கவும். ஒரு காதலைச் சேர்த்துவைத்த புண்ணியம் உங்களிற்குக் கிடைக்கும்.
முப்பது வருடங்களின் பின்னரும் அதைப்பற்றி யுரியூபில் ரிவியு செய்கிறார்கள். 2017 இல் செய்யப்பட்ட ரிவியூ ஒன்றை அண்மையில் பார்த்தேன். அந்தளவிற்கு மகத்துவமான கருவி அது.
இந்தத் தொலைக்காட்சிகளெல்லாம் செய்திகளை லைவ் ரிலே பண்ணத்தொடங்கிய காலத்திற்கு முன்னரே நான் லைவான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து படமாக்கியிருக்கிறேன்.
எனது மச்சான் (வதனியக்காவின் இளைய அண்ணன்)புலிச் சந்தேகத்தின்பேரில் அநியாயமாக இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கே.கே.எஸ் முகாமில் இருந்தார். அவர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கபட்டு விடுதலை செய்யப்பட்டபோது வதனியக்காவும் மாமியும் நானும் ஒரு காரில் அவரை ஏற்றிவரச் சென்றிருந்தோம். வுதனி அக்கா அவர் வெளியே வருவதலிருந்து ஒவ்வொரு கணத்தையும் படமாக்க வேண்டும் என்று விரும்பினார்.
அவர் முகாமைவிட்டு வெளியே வந்ததிலிருந்து வதனியாக்காவையும் அவர் அம்மாவையும் கட்டித்தழுவி இணைந்து கொண்டது வரை நான் நக்கீரன் பத்திரிகை நிருபர் போல ஓடி ஓடி படம் பிடித்திருந்தேன். இப்போது ஆட்களின் முன் படம் எடுப்பதென்றாலே வெட்கப்படும் நான் அப்போது யாரைப் பற்றியும் கவலைப்படாது சுட்டுத்தள்ளிய படங்கள் மிக அற்புதமாக வந்திருந்தன.
வதனியக்காவிற்கும் எனக்கும் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் செல்லச் சண்டைகள் ,தற்காலிகப்பிரிவுகள் வரும். அப்படி பிரிந்திருந்த ஒரு காலப்பகுதியில்தான் நான் யசிக்காவை ரொம்ப மிஸ் பண்ணி - பெரியம்மாவிடம் வாங்கித்தரும்படி கேட்டிருந்தேன்.
அதுவோ பிள்ளையார் பிடிக்கக்குரங்காகிப்போனது போல ஆயிற்று.
My Photography Training Programme :
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .