பாத்ரூமுக்குள் நண்பனின் பகீர் அனுவபம் !
கடும் யுத்த சூழலில் கொழும்புக்கு வந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபின்னர் நடைபெறும் ஆங்கில வகுப்பிற்காக(GELT) காத்திருந்த காலங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்தன.
தினசரி சந்தித்துக்கொள்ளும் எம் நட்புவட்டத்தில் சுமார் – 5-6 நபர்கள் இருப்பார்கள். என்னைத்தவிர அதில் பெரும்பான்மை, மெரிட்டில் கொழும்பு மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர்கள்.
நாங்கள் தினசரி வெள்ளவத்தைப் போலீஸ் ஸ்டேசன் அருகில்,ஹாமேர்ஸ் அவெனியூவில் உள்ள நண்பன் நாகரூபன் வீட்டில் ஒன்று கூடுவோம்.வந்து நாலு மாதங்களின் பின், ஒரு நாள் வழமைபோல் நாகரூபன் வீட்டில் நண்பர்களது அலட்டல் கச்சேரி போய்க்கொண்டிருந்தது. என்னருகே அமர்ந்திருந்த நண்பன் முருகன்,(சத்தியமாய்ப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) முகத்தை படு சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னான்:
"மச்சான், கொழும்பில் கக்கூஸ் இருக்கிறதும் பெரிய கரைச்சல் எடாப்பா! ஆளுயரக் கக்கூசில் கஸ்டப்பட்டு மேலே ஏறிக் குந்தி இருக்கேக்க எப்ப கீழே விழுந்திடுவமோ எண்டு பயந்தபடியே இருக்கவேண்டி இருக்குது"
(கொமேர்ட்டில் - ஸ்கொட்டிங் பான்போலவே ஏறிக் குந்தியிருந்திருக்கிறான்)
வேறு கதையில் கண்சன்றேற் பண்ணிப்போய்க் கொண்டிருந்த மற்றவர்களது கவனமும் ,சடாரென இங்கு திரும்பியது.ஒரு நொடி மௌனம்..தொடர்ந்து வெடிச்சிரிப்புக் கிளம்பியது. சிரித்துச் சிரித்து எனக்கு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.
அவனது அப்பா ஒரு விவசாயி. கிராமத்திலிருந்து வந்தவன். பல அக்காமாருக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை. செல்லமோ செல்லம். வீடு-பாடசாலை-ரியூசன் வகுப்புத்தவிர வேறெங்கும் போக்கஸ் இல்லாத வாழ்க்கை. பாவம் அவனது குற்றம் எதுவுமில்லை. ஆனாலும் அந்தக் கக்கூஸ் ஏன் அவ்வளவு உயரமாக இருக்கிறது என்பதை அவன் நாலுமாதங்களாய் கண்டுபிடித்திருக்கவில்லை என்பதுதான் இதிலுள்ள சோகம் கலந்த நகைச்சுவை.
அவன் இன்று ஒரு விசேட வைத்திய நிபுணன். பல உயிர்களைக் காக்கிறான்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .