Stories for young entrepreneurs
தினசரி வெயிலில் கடும் ஓட்டம்-எரிந்த தோற்றம் My Kalmunai office - See the plants ,which was my passion |
அப்போது நான் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவன் - உழைத்தே என் பிழைப்பை பார்க்கவேண்டிய யுத்தகாலச் சூழ்நிலை.முட்டிமோதி கம்பியூட்டர் ஒன்றை வைத்து வகுப்புக்கள் எடுக்க ஆரம்பித்திருந்தேன்.(அந்தக் கம்பியூட்டர் கிடைத்தது பெரும் கதை - பின்னர் வரும்)
அதற்கிடையில் பல்கலைக்கழக மட்டத்திலேயே பேர்சனல் கம்பியூட்டர் ஒன்றை சொந்தமாக வைத்திருந்த மாணவன் என்ற அடிப்படையிலும் நான் மிகப்பிரபலமடைந்திருந்தேன். (1997)
"நீ என்ன புலியா? உளவுபாக்கவா யாழ்ப்பாணம் விட்டு இந்தக் கம்பசுக்கு வந்தனீ,இது பிரபாகரன் தந்த கம்பியூட்டரா ? "என்று அன்பான விசாரிப்புக்களும் அடிக்கடி நடக்கும்.
கொழும்பில் எனது நண்பனொருவன் கம்பியூட்டர்களை உதிரிப்பாகங்களாக வாங்கி ஒன்றாகப்பூட்டி விற்பனை செய்துவந்தான். கம்பியூட்டர் அசெம்பிளிங் என்பது ஏதோ என்ஜினியரிங் லெவலில் பார்க்கப்பட்ட நேரம் அது.
எனது பல்கலைக்கழக கணினி விரிவுரையாளர் திரு.மகேந்திரன் என்பவர் ஒரு அற்புதமான மனிதர். அப்போது அம்பாறை மின்சார சபையின் பிரதம பொறியியலாளராகவும் எமக்கு வருகைதரு விரிவுரையாளராகவும் இருந்தவர். மனித நேயர்.
வாழ்க்கையில் தொழில்ரீதியாகவும் முன்னேற நான் போராடிக்கொண்டிருந்த நேரம் அது. என் முயற்சிகள் அவரிற்குத்தெரியும். அவரிற்குப் பிடித்தமான மாணவன் நான். அவர் என்னை ஒருநாள் அழைத்து "டேய் நீ கொம்பியூட்டர் எடுத்துக்கு டுக்கிறனியோடா ?' (கொழும்பிலிருந்து) எனக்கேட்டார், தயங்காமல் "ஓம் சேர்". என்ற முதலாவது வெற்றிக்கான பொய்யைச் சொன்னேன்.(எனது கொழும்பு நண்பனை நினைவில் வைத்து)
"அப்பிடியென்றால் அக்கரைப்பற்றில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் கம்பியூட்டர் வேணும் என்று கேட்கிறார், நான் சொன்னேன் என்று அவரைச் சென்று சந்தியும் "என்றார்.
எதைச் செய்தாலும் சட்டபூர்வமாக அங்கிகாரங்களுடன் செய்யவேண்டும் என்ற குணத்தினால் அப்போதே எனது நிறுவனத்தை முறைப்படி பதிவு செய்து வைத்திருந்தேன்.
அந்தப் பெயரில் அக்கரைப்பற்றிலேயே நண்பன் அனஸ்டீனுடைய ரைப் செற்றிங் நிறுவனத்தில் பத்து விசிட்டிங் கார்ட்டை அடித்து – கொழும்பு மாமியின் அட்ரசையும் அதில் போட்டேன். (கொழும்பு என்றால்தான் மதிப்பாக இருக்கும்-நம்புவார்கள்)
அடுத்தநாள் கம்பசைக் கட் அடித்துவிட்டு அக்கரைப்பற்றிற்கு ஆஜரானேன். சுவார்ட் எனும் அரச சார்பற்ற அமைப்பின் தலைவரான திரு.செந்தூர்ராஜா என்பவரைச் சந்திக்கிறேன். எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை இந்தச் சந்திப்பு என் வாழ்வை மாற்றும் சந்திப்பு என்றும் இன்றுவரை என் வாழ்வில் பயணிக்கப்போகும் ஒரு அற்புதமான குடும்பத்தை உறவாகப் பெறப்போகிறேன் என்றும்.
அவர் மிகக் கச்சிதாமன ஆடையில் எப்போதும் பார்த்தாலே மரியாதை வரும் தோற்றத்துடன் இருப்பார். அவரது தியானம்-மூச்சுப்பயிற்சி உட்பட்ட வாழ்வியல் ஒழுக்கம் அவரைப் பார்க்கும்போதே புலப்படும்.
அவர் என்னிடம் கேட்டார், "நீங்கள் இதுக்கு முன்னரும் கம்பியூட்டர்கள் விற்றிருக்கிறீர்களா?"
யோசிக்காமல் சொன்னேன்; "ஓம் சேர்!, கொழும்பில் இரண்டு வருடங்களாக இயங்கிவருகிறோம்- நான் ஏ.எல் முடித்தகாலத்திலிருந்து இந்த துறையில் இருக்கிறேன் - இங்கே கம்பஸ் கிடைத்ததால் இங்கு வந்து ஒரு கிளையை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்திருக்கிறேன்( நான் வாடகை;கு இருந்த குட்டி அறை)
அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. என்னை அனுப்பிய பொறியியலாளர் மகேந்திரன் அவர்கள் இவரது மரியாதைக்குரியவர்,அத்துடன் அவர் என்னைப் பற்றி கடுமையான சிபாரிசுவேறு கொடுத்திருந்தார்.
அவர் : "இது நாங்கள் வாங்கப்போகும் முதல் கம்பியூட்டர் ,பழுது வந்தால் பார்த்தல்,பராமரித்தல் போன்ற விடயங்ளை உம்மால் செய்ய முடியுமா?"
நான் : "ஆம்"
நான் : "ஆம்"
அவர் : "சரி, எனக்கு ஒரு கோட்டேசன் தாரும் நாங்கள் முடிவெடுத்துச் சொல்கிறோம்."
அவசர அவசரமாக எனது அறைக்குத்திரும்பி – கொழும்பு நண்பனைத்தொலைபேசியில் பிடித்து ஒரு கோட்டேசன் தயாரித்து அனஸ்டீனின் அச்சகத்தில் அச்சிட்டு – அடுத்த நாள் அவருக்கு வழங்கிய நேர்த்தியில் - அவர் அசந்துபோனார். அந்த ஆர்டன் எனக்குக் கிடைத்தது.
அவசர அவசரமாக எனது அறைக்குத்திரும்பி – கொழும்பு நண்பனைத்தொலைபேசியில் பிடித்து ஒரு கோட்டேசன் தயாரித்து அனஸ்டீனின் அச்சகத்தில் அச்சிட்டு – அடுத்த நாள் அவருக்கு வழங்கிய நேர்த்தியில் - அவர் அசந்துபோனார். அந்த ஆர்டன் எனக்குக் கிடைத்தது.
என் வாழ்வில் அதன் பிறகு தினத்துக்கு நூறு கம்பியூட்டர்களை விற்று பல அரச திணைக்களங்கள்,அமைச்சுக்கள்,தனியார் நிறுவனங்கள்,என்று பல இடங்களில் எங்கள் கம்பியூட்டர்களை நிரப்பியிருந்தாலும் அந்த முதலாவது விற்பனை தந்த கிக் இருக்கிறதே எதற்கும் நிகர் கிடையாது.
கம்பியூட்டர் விற்ற என்னிடமே அவர்களது அலுவலக ஊழியர்கள் உட்பட அவரும் கம்பியூட்ர் படிப்பதென ஏற்பாடாகியது.
(இன்று செந்தூர்ராஜா சேரினுடைய அமைப்பு வடக்கு கிழக்கில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது செந்தூர்ராஜா சேரும் அவரது நிறுவனமும் கணினிக் கட்டமைப்பில்லாமல் இன்று இயங்கவே மாட்டார்கள். அவரது முதல் கம்பியூட்டர் ஆசான் என்பதில் இன்றும் பெருமையே.)
விற்ற கம்பியூட்டரில் எனக்கு நிகர இலாபம் ஐந்தாயிரம் என்று நிiனைவு, ஆனால் சனி ஞாயிறுகளில் இரண்டு மணிநேரம் இரவில் வந்து அவர்களிற்கு நான் படிப்பிக்கப்போகும் எம்.எஸ்.ஓபீசுக்கு நான் குறித்த கட்டணம் மாதம் 15 ஆயிரம்.
மூன்றுமாத ஒப்பந்தம் அது. நான் கல்முனைக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தேன். கல்முனையிலிருந்து அக்கறைப்பற்று சுமார் 20 கிலோ மீட்டர் வரும். சனி ஞதயிறுகளில் இரவு 7 மணிக்கு வகுப்பு. 9க்கு முடியும் முடந்ததும் இரவு உணவும் - சகல வசதிகளுடனும் கூடிய தங்குமிடமும் தருவார்கள். அந்த ஊழியர்களது கவனிப்பு இராஜ கவனிப்பு. எனக்கே வயது இருபத்தி இரண்டுதான் எனது மாணவர் குழுவில் 60 வயதான இராஜாமணி என்பவரும் இருந்தார். ஆனால் மிக்க ஆர்வமாகக் கற்பவர்.
நான் கல்முனையில் புதிதாக ஆரம்பித்திருந்த கணினி விற்பனை மற்றும் கல்வியகத்திற்கு பொருட்கள் வாங்கவும் எனது ஏனைய தேவைகளிற்கும் இந்தப் பணம் பெரிதும் உதவியது.
My Office - Computer Sales and Training Centre (Kalmunai) |
பின்னாளில் பல புதுப்போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் எனது நிறுவனம் கிழக்கு மாகாணத்தின் முன்னணி முழு கணினித் தீர்வுகளையும் வழங்கும் நிறுவனமாக வளர்ந்தது. யுத்தகாலத்தில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பணியாற்றிய காலத்தில் அவர்கள் கல்குலேட்டர் வாங்குகிறார்களோ இல்லையோ கம்பியூட்டர் வாங்குவார்கள். அது எனக்கும் வாசியாகப்போய்விட்டது.
செந்தூர்ராஜா சேர் நேர்மையின் மறு வடிவம். எனது சேவைத்தரம், சொன்ன சொல் காப்பாற்றும் குணங்களால் அவருக்கு என்னிடம் வாங்கத்தான் விருப்பம் எனினும் கொழும்பில் உள்ள வேறு நிறுவனங்களிடமும் கோட்டேசன் எடுத்து எங்களுடன் பேரம் பேசி – அடிமாட்டு விலைகுக்குத்தான் கம்பியூட்ர்களை அவரது நிறுவன விரிவாக்கங்களின்போது பெற்றுக்கொள்வார். பொதுமக்களின் பணம் வீணாகிவிடக்கூடாதென்பதில் அப்படி ஒரு இறுக்கம்.
நூற்றுக்கணங்கான கம்பியூட்டர்ககளை அவரது நிறுவனத்திற்கும் - அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருந்த ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களிற்கும் நாம் வழங்க இவரிடம் பெற்ற நற்பெயரே காரணமாக இருந்தது.
XXX
தொழில் முனைவோராக வர இருக்கும் இளைய தலைமுறையினரிற்கு பல பால பாடங்கள் இந்தக் கட்டுரையில் உள்ளது. (இது எனது நண்பர்களுக்காக எழுதப்பட்டதன்று. )
நான் சில பொய்களை த்துணிந்து சொல்லியிருக்கிறேன்.
"பொய்மையும் வாய்மையிடத்த – புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்" -வள்ளுவர்.
அந்தப்பொய்களிற்கு ஆதாரமாக எனது தன்னம்பிக்கையும் - அதைப் பாதுகாக்கும் உறுதியான திட்டங்களும் இருந்தன.
1)உண்மையில் எனது நண்பன் கொழும்பில் கம்பியூட்டர் விற்பனை செய்து வந்தான் - எனவே அவனது நிறுவனமாக என்னைக் கற்பனை செய்து கொண்டேன். ஏனெனில் என்ன பதில் வேண்டுமானாலும் இவர் அழைத்துக் கேட்டால் சொல்லியிருப்பான். எனவே அந்த திட்டம் சொதப்பாது.(Contacts,contacts-networking )
2)என்னால் முடியும் என்பது எனக்கு படு நிச்சயமாகத்தெரியும். கம்பியூட்டர் ஒன்றைச் சொந்தமாகவே வைத்திருந்தேன். அது மேலதிக தகமை(நீங்கள் அந்தக்காகலத்திற்குப் பயணம் செய்ய வேண்டும்.- கம்பியூட்டர் உரிமையாளர் என்றாலே பாதி பில்கேட்ஸ்தான் அப்போது) அந்த மாவட்டத்திலேயே கம்பியூட்டர் விற்பனை நிறுவனங்கள் இல்லாத காலம் அது. முதல் முயல்பவனுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்(First mover advantage)
3)கொழும்பில் கொம்பியூட்டர் வாங்குவது ஒன்றும் ரொக்கட் சயன்ஸ் அல்லவே. அவர்கள் என்னை நாடுவது பின்னால் வரும் பராமரிப்புக்காத்தான். எனவே எங்கு எனது தேவை அதிகம் உள்ளது என்பதைப் புரிந்து அதற்கேற்றவாறு இந்த பேரம்பேசலை அணுகியிருந்தேன்.(Negotiation Skills)
3)கொழும்பில் கொம்பியூட்டர் வாங்குவது ஒன்றும் ரொக்கட் சயன்ஸ் அல்லவே. அவர்கள் என்னை நாடுவது பின்னால் வரும் பராமரிப்புக்காத்தான். எனவே எங்கு எனது தேவை அதிகம் உள்ளது என்பதைப் புரிந்து அதற்கேற்றவாறு இந்த பேரம்பேசலை அணுகியிருந்தேன்.(Negotiation Skills)
அவர் ஏற்கனவே கம்பியூட்டர் விற்றிருக்கிறாயா? என்று கேட்டபோது இல்லை என்றிருந்தால்.. என்னில் நம்பிக்கை வ்நதிருக்காது. இந்தச் சந்தர்ப்பத்தை இழந்திருப்பேன் பல திருப்புமுனைகளையும் கண்டிருக்க மாட்டேன். இதில் தவறான றிஸ்க் ஒன்றும் இல்லை.
தன்னம்பிக்கைக்கும் - புழுகுவதற்கும் பாரிய வேறுபாடு உண்டு – அந்தத் தனனப்பிக்கைதான் ஒரு அன்னிய ஊரில் ஒரு 22 வயதப் பல்கலைக்கழக மாணவனை , தமிழர்கள் எல்லாம் புலிகள் என்று சொல்லிக் கைது செய்யப்படுகிற கொடும் யுத்த சூழலில், இரண்டு வருடங்களிலேயே சிறு தொழிலதிபராக்கியது.
வெற்றிகளை அடைய அனைவரும் முழுத்திட்டத்துடன் முன் கூட்டியே அமைக்கப்பட்ட பட்டுப்பாதையில் பயணிப்பதில்லை. போகிற வழியில் முள் கிடந்தால் எடுத்துப்போட வேண்டும், ஆறு குறுக்கிட்டால் நீந்தவேண்டும் அல்லது காய்ந்த மரத்தைப் பிடித்தாவது கரைசேரலாம் என்ற யுக்தி கைவரவேண்டும்.
சாதாரண சூழலில் வாங்கி விற்று இடையில் இலாபத்தை எடுத்துப் பாக்கெட்டில் போடுபவன் வியாபாரி- ஒரு பிரச்சினையை எதிர்நோக்கும்போது தீர்வுகண்டு அதில் சம்பாதிப்பையும் மேற்கொள்பவன் தொழில் முயற்சியாளன்.
இப்போது நாட்டில் யுத்தம் இல்லை,ஆயிரம் அரச உதவிகள்,கல்வி நெறிகள்,பயிற்சிகள் என்று இலவசமாகத் தருகிறார்கள். ஆனால் இதைப் பயன்படுத்தி உயரும் இளையவர்களைக் காணவில்லை. அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நிறைய செலவழித்து நட்சத்திர ஹோட்ல்களில் இலவசமாக வழங்கும் தொழில் முயற்சியாளர் பயிற்சி நெறிகளிற்கு வந்து பிஸ்கட்டைக் கடித்து ரீயும் குடித்துவிட்டு நாலாம் நாள் சேர்ட்டிபிகேட் ஒன்றைப் பெற்று வாழ்வின் பேறெல்லாம் பெற்றதுபோல் வீடு சென்று அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு அரச தொழிலுக்காக அடிபடுபவர்களைத்தான் நானும் காண்கிறேன்.
Certification ceremony for my IT students 1998 -Kalmunai Town Council Hall |
யுத்தம் என்ற கொடுமை என் வாழ்வின் ஒவ்வொரு முயற்சியையும் சீரழித்தே வந்திருக்கிறது. நானும் கைவிட்டதே இல்லை. கல்முனையில் யுத்த நிறுத்தகாலத்தில் கருணா எனும் பாம்பு வரி கேட்டு எங்களை அழுத்தியபோது ஒரு இராத்திரியிலேயே யாரிடமும் சொல்லாமல் இரவோடிரவாக பாய் ட்ரான்ஸ்போட் லொறியில் எல்லாச் சாமான்களையும் போட்டுவிட்டு கொழும்பு நோக்கி அடுத்த அத்தியாயத்தை எழுத ஒட வேண்டி வந்தது.
ஒரு பெயரை உருவாக்கி – நிலைநாட்டி – நம்பிக்கை பெற்று வளர்த்து வருவது எவ்வளவு கடினம் ? எவ்வளவு காலம் தேவைப்படும் செயல்? அத்தனையையும் ஒரு இரவில் தொலைத்தோம்.
வளர்ந்த இடத்தை விட்டு தலை நகரில் போய் மீண்டும் புதிதாய்ப் பிறந்தோம். அந்தக் கதை இனி ஒரு சந்தர்ப்பத்தில்.
சுயதொழில் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை இலவசமாக வழங்க நாங்கள் பலர் இருக்கிறோம். வர்த்தகம் கற்றுத்தான் செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமையும் - கல்லாமை உள்ளோர் பெரும்பான்மையும் இந்தத்துறை புகுவதாலும் - படிக்கவேண்டும் என்ற சிந்தனையை புகுத்;த முடியுதில்லை. (பலவாறாக முயன்று விட்டேன்.)
தேடல் தொடரும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .