Friday, September 30, 2016

சிந்தாமணியிடம் சிக்கிய சின்ன மணி ! - எனது வாசிப்பும் யோசிப்பும்.

புத்தகங்கள்  எப்படி நம்மை வளப்படுத்தும் என்பதை புரிகிற வகையில் சொன்னாலாவது அடுத்த தலைமுறைகள் புரிந்த கொள்ளாதா என்ற ஒரு நப்பாசைதான் இது.


இரண்டாம் வகுப்பில் எனது வாசிப்புப்பழக்கம் ஆரம்பித்தது. அப்போது ஆசிரியப்பணியிலிருந்த எனது தாயாருடன் புத்தளத்தில் வசித்துக்கொண்டிருந்தேன்.  எனது தாயார் ஒரு சிறந்த வாசகி. வீடு முழுவதும் கதைப்புத்தகங்களும் ஆனந்த விகடன் குமுதம்  போன்ற சஞ்சிகைகளும் குவிந்து கிடக்கும்.

அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த சிந்தாமணி எனும் பத்திரிகையில் வரும் சிறுவர் பகுதியை எனக்கு அறிமுகப்படுத்தி எழுத்துக்கூட்டி வாசிக்க வைத்தார் எனது அன்னை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அந்த வித்தியாரம்பம் நடைபெற்றது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான். ஏனெனில் அம்மா சற்று ஓய்வாக இருப்பதும் சிறுவர் பகுதி வெளிவரும் ஞாயிறு சிறப்புப் பதிப்பினை சிந்தாமணி வெளியிடுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.

அ்ன்று ஆரம்பித்த வாசிப்பு அப்படியே தீப்பற்றியதுபோல வளரத்தொடங்கியது. அடுத்த ஞாயிறு எப்போது வரும் ,என்று தொடர் கதைகளை படிக்கும் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தேன்.

இரண்டாம் வகுப்பின் மீதியும்  3ஆம் வகுப்பும்  யாழ்ப்பாணத்தில்  (அம்மா வின் தொழில் ரீதியான இடமாற்றல்களினால் நாங்களும் அடிக்கடி பாடசாலை மாறவேண்டி வரும்.) மூன்றாம் வகுப்பில் வாசிப்பிற்கு சற்று ஓய்வு. அப்பா ஐேர்மனிலிருந்து வந்து வீடியோ ஒளிபரப்பு அது இது என பலவகையான தொழில்களை முயன்று கொண்டிருந்த கால கட்டம்.

எனது கிராமத்திலே முதன் முதல்   எங்கள் வீட்டில்தான் ரீ.வி வந்தது. அதுவும் அப்பா ஐேர்மனியிலிருந்து அனுப்பிய 28” குருண்டிக் ரி.வி .   கிராமமே கச்சான் ,இதர தின்பண்டங்களுடன் வாரத்தில் ஒரு நாள் ரூபவாகினி போடும் படம் பார்க்க எங்கள் வீட்டு ஹாலில் குழுமி விடும். இது போன்ற கவனக்கலைப்பான்களால் எனது வாசிப்பு சுருங்கிப்போயிருந்த காலகட்டம் இது மட்டும்தான்.

மீண்டும் அம்மாவின்  பணியின் நிமித்தம் நாங்கள் வட்டக்கச்சி நோக்கி நகர்ந்தோம். 

நாலாம் வகுப்பில் லேனா.தமிழ்வாணன் நடாத்திய கல்கண்டு எனும் பொது அறிவுச் சஞ்சிகை எனக்கு அறிமுகமாகியது. வட்டக்கச்சி கிராமத்தில் பணியாற்றிய ஒரு பெண் வைத்தியரிடம் அம்மா அடிக்கடி வரும்  மலேரியாக் காய்ச்சலுக்காக காட்டச் செல்லுவார் எனவே அவருடன் நல்ல நட்பு உருவாகியிருந்தது. அவரிடம் நுாற்றுக்‌கணக்கில் கல்கண்டுப்புத்தகங்கள் இருக்கும். அதை  நான் இரவல் பெற்று வந்து வாசிப்பேன். போதாக்குறைக்கு அம்மாவும் கிளிநொச்சியிிலருந்து புத்தகங்களை வாங்கி வருவார்.

கல்கண்டில்   உலகில் நடைபெறும் வியப்பான விடயங்க‌ளை குட்டி குட்டித் துணுக்குகளாக எழுதியிருப்பார்கள். உலகின் பெரிய பணக்காரர், புதிய கண்டு பிடிப்புக்கள் , உலகின் உயரமானவர்,குள்ளமானவர் என பல்வகையான மிகச் சுவையான துணுக்குகள் வெளிவரும். லேனா.தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளும் அறிவு பூர்வமான கேள்வி பதில் பகுதிகளும் அதில் இருக்கும்.

ஒரு நான்காம் வகுப்பு மாணவனுக்கு  இவையெல்லாம் கண்களையும் மூளையையும் விரிவடையச்செய்யும் அதிசயச் செய்திகள். நான் வாசிப்பது மட்டுமன்றி அந்தச் சுவையான துணுக்குகளை என்னோடு தொடர்பு படுத்தி கற்பனையில் மூழ்குவதையும் செய்வேன். என்னோடு உடன் படித்தவர்களில் ஒருவர்கூட இப்படியான வாசிப்புப்பழக்கத்தை அந்த சின்ன வயதில் கொண்டிருக்கவில்லை. எனவே எனக்கு   அவ்வப்போது அடிமைகள் சிக்கும்போது வாசித்தவற்றில் பலவற்றை அளந்து விடுவேன்.

ஐந்தாம் வகுப்பிற்குள் நுழைய ஆரம்பிக்கும்போதே ,     புஷ்பா தங்கதுரை,சுஐாதா,ராஐேஸ் குமார்,பட்டுக்கோட்டைப்பிரபாகர் போன்றோர் அறிமுகமாகிவிட்டிருந்தனர். ( இவர்கள் என்ன உங்கள் உடன் படித்தவர்களா  ? எனக் கேட்கும் தற்போதைய தலைமுறைக்கு...”இவர்கள் பிரபல எழுத்தாளர்கள்.”)

சின்னப்பிள்கைள் படிக்க கூடாத லிஸ்டில் இருந்த மேற்படி புத்தகங்களையும் அதே லிஸ்டில்  வைக்கப்பட்டிருந்த(சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் வருவதால்) ஆனந்த விகடன் ,குமுதம்,குங்குமம்  போன்ற புத்தகங்களும்   எனது சூழலில் ,நான் என்றுமே காண வாய்ப்பில்லாதிருந்த உலகங்களைக் காட்டின.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முதல் நாளும் கல்கண்டு புத்கங்களை அடுக்கி வைத்துப் படித்துக்கொண்டிருந்தேன். அம்மா அப்போதுதான் முதன் முதல் என் வாசிப்பைக் கடிந்தார்.(ஆனாலும் விளிம்பில் பாஸ் பண்ணி யாழ்  இந்துக்கல்லுாரிக்கு வந்தாயிற்று) . 

ஆறாம் வகுப்பிற்கு செல்லும்போதே , காதல் ,கலியாணம்,குடும்பம் நடத்துதல், உறவுப்பிரச்சினைகள், பணத்தின் நன்மை தீமை. மனிதர்களின் வகைகள், வெளிநாடுகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரங்கள் என வாழ்வின் பல பகுதிகளை ஓரளவாவது அறிந்து வைத்திருக்க முடிந்தது.  


இவைதான் அந்தகாலப்குதியிலுருந்‌து பேச்சு மற்றும்  கட்டுரைப்போட்டிகளில் ஆயத்தப்படுத்தாமலே பங்கு பற்றி பரிசுகளைக்குவிக்க காலாகியிருந்தது.   (அந்த வயதில் கூட ”துலாக்கோல் போல் வீற்றிருக்கும் நடுவர்களே”,”நான் பேச எடுத்துக்கொண்ட விடயம் என்னவென்றால்...” போன்ற பாடமாக்கிய பாணியில் எனது பேச்சுக்கள் அமையாது இயல்பாக அமைந்திருக்கும்- நன்றி ”புத்தகங்கள்”)  

உயர்தரம் படிக்கும்போது கல்கியின் பொன்னியின் செல்வன் 5 பாகங்களையும் தினசரி ஒரு பாகம் என்ற அடிப்படையில் வாசித்து முடித்தேன்(அதை வாசித்திராத இளையவர்கள்     அந்த புத்தகத்தின் அளவை முடிந்தால் நுாலத்தில் சென்று பார்த்துக்கொள்ளவும் :) ) . வாசிப்பது எனக்கு சுவாசிப்பது போலவே அமைந்திருந்தது.

ஒரு மனிதன் அடி நிலையிலிருந்து எப்படி உயர்நிலைக்கு செல்லலாம். கதா நாயகர்கள் யார் ?.  விமானம் எப்படியானது ?,விமானி மற்றும் அதில் பணியாற்றுபவர்களின் பிரச்சினைகள் என்னென்ன ?(பாலகுமாரனின் ”பயணிகள் கவனிக்கவும் ” கதை)எதிர்காலத்தில் ரோபோக்கள் எப்டியிருக்கும் ?, தற்போது விஞ்ஞான ஆளுமைகள் என்ன..(சுஐாதாவின் ”எனது இனிய இயந்திரா” ,மீண்டும் ஐீனோ”) ஒரு வறுமைப்பட்டவனின் வாழ்வு எப்படியானது ? மனிதாபிமானத்தின் பரிமாணங்கள். துரோகம் என்றால் என்ன? மன்னிப்பின் பெருமை !,என எவ்வளவோ விடயங்களை என் மனதில் பதித்தவை இந்தப் புத்தகங்கள்தான்.

இவை காட்டிய உலகம்தான் பாடசாலைக்காலம் முதல் தற்போது வரை வாழ்வில் பல இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் ,முன்னேறிச் செல்லவும் ,கொஞ்சமாவது புதுமையாக சிந்தித்து செயற்படவும் வழிசமைக்கிறது.

விமானத்தில் பறந்தால் தான் விமானம்பற்றி அறியலாம் என்றால் ..அது எத்தனை பேருக்குச் சாத்தியம் ?, சந்திரமண்டலத்திற்கு பயணித்துத்தான் அந்தச் சூழலை உணர வேண்டுமென்றால் எப்படி ? .  பல்வேறுபட்ட அனுபவங்களுடன் வாழ்ந்த மற்றவர்களின் அனுபவங்களையும் அவர்களது எழுத்து மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம். இதன் மூலம் ஒவ்வொரு நல்ல புத்தகத்தைப் படித்து முடிக்கும் போதும் நாம் இன்னொரு புதுப்பிறப்பெடுக்கிறோம். அந்த எழுத்தாளரின் வாழ்வை வாழ்கிறாேம். 


மிக எல்லைக்குட்பட்ட இந்தச் சிறிய வாழ்வில் இயலுமான அளவு அதிக அனுபவங்களைப் பெறவேண்டுமென்றால் புத்தகங்கள்  மிகச்சிறந்த வழியல்லவா? அது அச்சுப்பதிப்பாகவும் இருக்கலாம் இலத்திரனியல் பதிப்பாகவும் இருக்கலாம். வாசித்தல் முக்கியம். அது மூளைக்கும் சிறந்த பயிற்சியைக் கொடுக்கும்....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை