ஓ.எல் பரீட்சை முடிந்ததும் கூவிக் கூவிப் பிள்ளை பிடிக்கப்போகும் ரியூசன் மார்பியாக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்.
Please see the update at the end of this article .
டிசம்பர் 12 உடன் நாட்டில் ஓஎல்(G.C.E O/L) பரீட்சைகள் முடிவிற்கு வந்து விடும். கொழும்பில் உள்ள காமினியும் மொஹமட் நளீமும் அடுத்து வரும் 3 மாதங்களையும் எப்படியெல்லாம் சந்தோசமாகக் கழிக்கலாம் என்று திட்டமிடுவார்கள். திருகோணமலையிலிருந்து ஓ.எல் எழுதியதும் சிவகுமார் தான் நெடு நாளாக ஆசைப்பட்ட மட்டக்களப்பு பாசிக்குடாக் கடற்பகுதிக்கு குடும்பத்துடன் சென்று விடுவான். தை மாதத்தில் மலேசியாவுக்கும் தந்தையுடன் செல்ல இருக்கிறான். அம்பாந்தோட்ட திசாநாயக்கா அடுத்த மூன்று மாதங்களுக்குள் தனக்குப்பிடித்த இந்திப்படங்களை எல்லாம் பார்த்து விடுவது என்று கிளம்பி விடுவான். அவனவன் இத்தனை வருடமும் கல்விக்காகச் செய்த தியாகங்களை ஒதுக்கி வைத்து விட்டு தனது இந்த இளம் வயதில் மட்டுமே உணர்ந்தனுபவிக்கவேண்டிய மற்றும் கற்க வேண்டியவற்றைத் தேடிப்புறப்பட்டு விடுவான்.
ஆனால்...யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில், தம்பி சிவகுமார் , யாழ்ப்பேப்பர்கள் எல்லாம் " உடனே வந்து சேருங்கள் -சிலபஸ் மிஸ் ஆகிவிடும்" என்று வெருட்டியதால் , ஓ.எல் முடிந்த அடுத்த கிழமையே திருகோணமலையிலிருக்கும் அம்மம்மா வீட்டிற்குப்போய் ஒரு கிழமை நிற்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தியாகம் செய்து விட்டு , தனது ஓ.எல் பரீட்சைக்கு என்ன பெறுபேறு வரும் என்றே தெரியாமல் ,ஏன் இந்தப்பாடத்தை தெரிவு செய்கிறோம் என்பதைக்கூட அறியாமல் பயோ சயன்ஸ் ரியூசனுக்குப்போகத்தொடங்கிவிடுவான்.
வெளி உலக அறிவு இல்லாத - இன்னொரு மருத்துவ பீட மாணவன் தயார்.
"பாசிக்குடா ஈரானுக்குப்பக்கத்திலா இருக்கிறது ?" - "என்னது,தாடி வைத்த சாமிகள் எல்லாம் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளா ? " "காலிச் சிங்களவர்கள் நம்மைக் கண்டால் வெட்டிப்போட்டு விடுவார்களாமே ?" என்று கேட்கும் பாடத்திட்டத்துக்கு வெளியே ஏதும் அறியாப் புத்தகப்பூச்சி ஒன்று தயாராகிவிடும்.
”முஸ்லிம்கள் எல்லாம் கட்டாயம் நாலு கல்யாணம் கட்ட வேண்டுமாமே என்று என்னிடம் கேட்ட ஒரு நண்பனையும் , மச்சான் ”ரொயிலட் ரிசூ(Toilet tissue)” என்றால் என்ன என்று போன் பண்ணிக்கேட்ட மருத்துவ நண்பனையும் வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கிறது. அதுவும் மிக அண்மையில் . (அம்மா சத்தியமாக இந்த சம்பவங்கள் இரண்டும் உண்மை ) எனது நண்பர்கள்(மட்டும்) என்னைத் தொடர்பு கொண்டால் அந்த இரண்டு புண்ணியவான்களும் யாரென்று சொல்கிறேன். ) -ரியூசன் பரிதாபங்கள்
"கல்வியின் நோக்கம் வெறும் பாடமாக்கும் இயந்திரங்களை உருவாக்குவதல்ல. புதியன புனைதல் - கண்டுபிடிப்பு - உள்ளவற்றை மேம்படுத்தல் என்ற சில திறன்களாவது உள்ள நற்பிரஜைகளை நல்ல சமூகச் சிந்தனையோடு உருவாக்குவதே," என்பதே எனது கருத்து.
தனிமனித மேம்பாடு , அதிலிருந்து பிறந்த சமூக மேம்பாடு என்பவற்றை நோக்கி அமைய வேண்டிய கல்வியை வெறும் பணம் பண்ணும் யுத்தியாக மட்டும் பார்க்கும் நிலையில் இன்று நாம். அதிலும் அரசாங்க வேலை தரக்கூடிய வகையில் எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதையெல்லாம் படிப்போம்-(பாடமாக்குவோம்). இந்த மனப்பாங்கினால் சுய புத்தியும் ஆளுமையும் வளரப்பெறாத ஒரு குறை வளர்ச்சித்தாவரங்களாகவே எங்கள் இளம் சமுதாயம் தொடர்ந்தும் மங்கி வருகிறது.