”அப்பா இண்டைக்கு முஸ்லிம் ஆக்கள் எல்லாருக்கும் அடி விழுதாம்....”
”ஏனாம் ?”
”அவை சாப்பாட்டுக்க நஞ்சு போட்டவயாம் அதுதான்....”
எனது 8 வயது மகள் பாடசாலையிலிருந்து வந்ததும் என்னுடன் மேற்கொண்ட உரையாடல் இது.
பிஞ்சு மனங்களில்கூட நஞ்சு விதைக்கப்பட்டாயிற்று. மனங்கள் வளராத மனிதர்களின் தேசம் இது.
ஓரு இனம் பற்றிய மோசமான மனப்பதிவுகள் இன்னொரு இனத்திடம் இப்படித்தான் அடிப்படையே இல்லாத சொல்லாடல்களால் பரவி வளர்கிறது .
வரலாறு ஒரு வட்டம்தான் - தமிழர்களாய்ப்பிறந்து இவ்வளவு வேதனைகளையும் அனுபவித்தாயிற்று . இப்போது முஸ்லிம்களின் முறைபோலும்.
இன-மத-பிரதேச-இன்ன பிற வாதங்கள் என்பன மனிதனுடன் பிறந்தது. எத்தனையோ கெட்ட பழக்கங்களை அடையாளம் கண்டு நம்மிலிருந்து விலக்கிக்கொள்வது போல - அறிவு விருத்திக்கேற்ப மனிதர்கள் இந்த வாதங்களையும் துாக்கிப்போட்டு வாழப்பழகுவர்.
நான் சொல்லும் அறிவு - மெய்யறிவு.
அறிவு என்பது பள்ளிப் படிப்போ பட்டப்படிப்போ
அல்ல ”நெஞ்சத்து: நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்: ” என்று நாலடியார் சொன்ன அறிவு.ஒரு பக்கம் சாயாது நடுவு நிலையாகச் சிந்திக்கத் தெரிந்த கல்வி அறிவு.
அறிவு நிலை விருத்தி குறைந்தவர்கள்தானே எந்த சமூகத்திலும் பெரும்பான்மை.
குறை அறிவுள்ள - வெறி முத்திய முட்டாள்கள் சிலர் - ஒரு அப்பாவியைத் தாக்கி கொன்றுவிட - அந்த முட்டாள்களின் செயலை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி அந்த சமூகத்தைக் கருவறுக்க வேண்டும் என்று மிக நீண்டகாலமாகக் காத்திருந்த இனவாத சக்திகள் தம் ஆட்டத்தைத் தொடங்கி விட்டன.
பாவிகளின் கூத்தில் எப்போதும் பலியாவது அப்பாவிகளே !.
இதுவரை 5 இற்கு மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.
முதலாம் நாள் மாலையில் கலவர ஆரம்பத்தின் பின் ஊரடங்கு போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ,உடனேயே எங்களுக்கு விளங்கிவிட்டது.
ஊரடங்கு ? ........ பொலீஸ் பாதுகாப்பில் 1983 இல் எங்களுக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும்தானே ,எனவே ஊரடங்கு உண்மையில் ஒரு இனத்துக்கு மட்டுமே என்பதும் - அவர்களை வெளிக்கிட விடாது ”வச்சு செய்வதற்கான” ஏற்பாடே அது என்பதும் பல நுாறு கிலோமீற்றர் தாண்டி யாழப்பாணத்திலிருந்தாலும் - எங்களுக்குப் புரியக்கூடியதாக இருந்தது.
நினைத்த படியே ஒரு இரவில் 160க் மேற்பட்ட கடைகள் - 25 ற்கு மேற்பட்ட பள்ளி வாயல்கள் சிதைக்கப்பட்டன. 6ம் திகதி காலையில் ஒரு முஸ்லிம் இளைுஞனுடைய உயிர் பறிக்கபட்டது தெரியவந்தது. அந்த விசேட தேவையுடைய இளைஞன் எரிந்த கட்டடத்துள் சிக்கி மரணம் அடைந்திருந்தான்.
நாட்டின் தலைவர் - வழமைபோலவே ”அமைதி காக்க வேண்டினார்” கோடிகளை வெற்றிகரமாகச் சேர்த்து செட்டில் ஆகிவிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் அறிக்கைகளை விட்டு வெறும்வாய் மென்று கொண்டிருந்தார்கள்.
ஐயகோ நேரம் செல்லச் செல்ல..இன்னும் பல உயிர்கள் காவு கொள்ளப்படப்போகின்றனவே ஏதாவது செய்யுங்கள் என்று - இங்கிருந்து இரத்த சம்பந்தமில்லாத மனம் பதறியது. அரசியல் தலைவர்கள் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
7 ஆம் 8 ஆம் திகதிகளில் - அந்த வலிவுள்ள விடுதலைப்போராளிகள் இயக்கத்தையே அழித்த பலமிக்க - தற்போது வேலை வெட்டி இல்லாதிருக்கும் இராணுவம் சென்றும் நிலையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது, மேலும் முஸ்லிம்களின் நுாற்றுக்கணக்கான கடைகள் கட்டடங்கள் எரித்து அழிக்கப்பட்டன.