Friday, March 9, 2018

கண்டியில் பற்றிய தீ - Burning Kandy - Crisis in the small island !

Kandy problems in Tamil ,Sri Lanka ,Kandy crisis Tamil article


”அப்பா இண்டைக்கு முஸ்லிம் ஆக்கள் எல்லாருக்கும் அடி விழுதாம்....”
”ஏனாம் ?”
”அவை சாப்பாட்டுக்க நஞ்சு போட்டவயாம் அதுதான்....”

எனது 8 வயது மகள் பாடசாலையிலிருந்து வந்ததும் என்னுடன் மேற்கொண்ட உரையாடல் இது.

பிஞ்சு மனங்களில்கூட நஞ்சு விதைக்கப்பட்டாயிற்று. மனங்கள் வளராத  மனிதர்களின் தேசம்  இது.

  ஓரு இனம் பற்றிய மோசமான மனப்பதிவுகள் இன்னொரு இனத்திடம் இப்படித்தான்  அடிப்படையே இல்லாத சொல்லாடல்களால் பரவி வளர்கிறது  .


வரலாறு ஒரு வட்டம்தான் - தமிழர்களாய்ப்பிறந்து இவ்வளவு வேதனைகளையும் அனுபவித்தாயிற்று . இப்போது முஸ்லிம்களின் முறைபோலும்.  


இன-மத-பிரதேச-இன்ன பிற வாதங்கள் என்பன மனிதனுடன் பிறந்தது. எத்தனையோ கெட்ட பழக்கங்களை அடையாளம் கண்டு நம்மிலிருந்து விலக்கிக்கொள்வது போல - அறிவு விருத்திக்கேற்ப மனிதர்கள் இந்த வாதங்களையும் துாக்கிப்போட்டு வாழப்பழகுவர். 

நான் சொல்லும் அறிவு - மெய்யறிவு.

அறிவு என்பது  பள்ளிப் படிப்போ பட்டப்படிப்போ
 அல்ல ”நெஞ்சத்து: நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்: ” என்று நாலடியார் சொன்ன அறிவு.ஒரு பக்கம்  சாயாது நடுவு நிலையாகச் சிந்திக்கத் தெரிந்த கல்வி அறிவு. 

அறிவு நிலை விருத்தி குறைந்தவர்கள்தானே எந்த சமூகத்திலும் பெரும்பான்மை. 

குறை அறிவுள்ள - வெறி முத்திய முட்டாள்கள் சிலர் - ஒரு அப்பாவியைத் தாக்கி கொன்றுவிட - அந்த முட்டாள்களின் செயலை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி அந்த சமூகத்தைக் கருவறுக்க வேண்டும் என்று மிக நீண்டகாலமாகக் காத்திருந்த இனவாத சக்திகள் தம் ஆட்டத்தைத் தொடங்கி விட்டன.

பாவிகளின் கூத்தில் எப்போதும் பலியாவது அப்பாவிகளே !.

இதுவரை 5 இற்கு மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

முதலாம் நாள் மாலையில் கலவர ஆரம்பத்தின் பின் ஊரடங்கு போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ,உட‌னேயே எங்களுக்கு விளங்கிவிட்டது. 

ஊரடங்கு ? ........ பொலீஸ் பாதுகாப்பில் 1983 இல் எங்களுக்கு என்ன நடந்தது என்பது   நமக்குத்  தெரியும்தானே ,எனவே ஊரடங்கு உண்மையில் ஒரு இனத்துக்கு மட்டுமே  என்பதும்  - அவர்களை வெளிக்கிட விடாது ”வச்சு செய்வதற்கான” ஏற்பாடே அது என்பதும் பல நுாறு கிலோமீற்றர் தாண்டி யாழப்பாணத்திலிருந்தாலும் - எங்களுக்குப் புரியக்கூடியதாக இருந்தது.

நினைத்த படியே ஒரு இரவில் 160க் மேற்பட்ட கடைகள் - 25 ற்கு மேற்பட்ட பள்ளி வாயல்கள் சிதைக்கப்பட்டன. 6ம் திகதி காலையில் ஒரு முஸ்லிம் இளைுஞனுடைய உயிர் பறிக்கபட்டது தெரியவந்தது. அந்த விசேட தேவையுடைய இளைஞன் எரிந்த கட்டடத்துள் சிக்கி மரணம் அடைந்திருந்தான். 

நாட்டின் தலைவர் - வழமைபோலவே ”அமைதி காக்க வேண்டினார்” கோடிகளை வெற்றிகரமாகச் சேர்த்து செட்டில் ஆகிவிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் சிலர்  அறிக்கைகளை விட்டு வெறும்வாய் மென்று கொண்டிருந்தார்கள். 

ஐயகோ நேரம் செல்லச் செல்ல..இன்னும் பல உயிர்கள் காவு கொள்ளப்படப்போகின்றனவே ஏதாவது செய்யுங்கள் என்று - இங்கிருந்து இரத்த சம்பந்தமில்லாத   மனம் பதறியது. அரசியல் தலைவர்கள்     கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

7 ஆம் 8 ஆம் திகதிகளில் - அந்த வலிவுள்ள  விடுதலைப்போராளிகள் இயக்கத்தையே அழித்த பலமிக்க - தற்போது வேலை வெட்டி இல்லாதிருக்கும் இராணுவம் சென்றும் நிலையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது,   மேலும்   முஸ்லிம்களின்  நுாற்றுக்கணக்கான கடைகள் ‌கட்டடங்கள் எரித்து அழிக்கப்பட்டன. 


தமிழர்களைக்காக்கத்தான் - சுயபுத்தியும் - ஆளுமையும் - தியாகமும் உள்ள தலைவர்கள் இல்லை என்றிருந்தோம். முஸ்லிம்களின் நிலை தமிழர் நிலையை விட மோசம்.

 பல வருடத் திட்டம் தந்த வெற்றி 


புலிகளின் அழிவின் பின், தமிழர்களின் கொட்டத்தை அடக்கி ஆகி விட்டது ,அடுத்தது முஸ்லிம்களைத்தான் அடக்க வேண்டும் என்று  பேசப்பட்டது.

இது சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னரே நன்கு திட்டமிடப்பட்டு வளர்த்து வரப்பட்ட நச்சு மரம். 2013 அளவில் (சரியான ஆண்டு நினைவில் இல்லை) முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்காது விடவேண்டும் என்ற பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது (பல்வேறு ஊர்களைச் சேர்ந்த) கண்டியில் சந்தித்துக்கொள்ளும் எனது சிங்கள நண்பர்களில் சரிபாதி அந்தக் கொள்கைக்கு ஆதரவளித்து வந்தனர்.  அவர்கள் அனைவருமே கல்வியிலும் சமூக நிலையிலுடம் மிக உயரிடத்தில் உள்ளவர்கள் . உயர் கல்வி அறிவுள்ள மக்களிடம் இவ்வளவு சின்னத்தனமான இனவாத விஷம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது(எல்லா இனத்திலும் இப்படியானவர்கள் இருக்கிறார்கள்.)

என்னிடமும் ”மச்சான் நீங்களும் பொருட்களை முஸ்லிம் கடைகளில் வாங்க வேண்டாம்” என்றார்கள்.

நானும் எனது நண்பனாகிய டினுஷ கப்புகொட்டுவ வும் நாங்கள் எங்கு  பொருள் தரமாகவும் மலிவாகவும் இருக்கிறதோ அங்குதான் வாங்குவோம் என்று, அன்று வாதிட்டது நினைவிருக்கிறது.

ஒரு பொறியியலாளரின் தலைமையில் இந்த முஸ்லிம் கடை எதிர்ப்புக் குழு   கலந்துரையாடல் செய்வது எனக்கு நன்கு தெரியும்.அதில் மிக கடுமையாக இருந்தது 24 வயதே ஆன  பெண்மணியொருவர் .

தங்கள் புனித நகராகிய கண்டியை முஸ்லிம்கள் கைப்பற்றி விட்டார்கள் என்றும் அவர்களை விரட்ட வேண்டும் என்றும் உறுதியாகத்தெரிவித்து வந்தார்கள்.

ஒரு நிகழ்வில் கலந்து ‌  கொள்ள நண்பர்கள்   ஆகிய எங்களுக்கு சில ஆடைகள் ஒரே மாதிரியானதாக வாங்க வேண்டி வந்தபோது - கண்‌டி ”நோலிமிட்” முஸ்லிம்களின் கடை என்பதால்  அதைத்தவிர்த்து  மிக மலிவாக அங்கு வாங்கியிருக்க கூடிய அந்த ஆடைகளை ஏறக்குறைய 20-30 வீதம் அதிக விலை செலுத்திச் சிங்களக் கடையில் வாங்கினார்கள் .  

பேஸ் புக் ஊடாகவும் -வேறு வழிகளில் இப்படியான சிந்தனைகள் விதைக்கப்பட்டு - உயிருடன் பேணப்பட்டு வந்தன. விளவைு  பொருத்தமான காலத்தில் நினைத்தபடி அறுவடை செய்து விட்டார்கள்.

பாதிக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் அழிக்கப்பட்டு விட்டன.(இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்)

பள்ளிவாசல்களும் மிக அதிக அளவில் அழிக்கப்ட்டாயிற்று(அது பொதுச் சொத்து என்பதால் மீளமைத்தல் பெரும் சிக்கல் அல்ல)

ஆனால்  தனி மனிதர்களின் சொத்திழப்பை - உயிரிழப்பை எப்படி ஈடு செய்வது. ?

இந்த பொருளாதார வீழ்ச்சி ஒட்டு மொத்த தேசத்தைத்தானே மேலும் பாதிக்கும்.?

அது மட்டுமின்றி இந்தப் பொருளாதாரச் சரிவால் வளர்ந்து வந்த எத்தனை சிறு நிறுவனங்களின் கனவுகள் சிதைந்திருக்கும் - கடன் சுமை , வங்கி நிதி நிலை என்று பல பிரச்சினைகளால் எத்தரன மனக்கொலைகள் - தற்கொலைகள் இன்னும் நிகழுமோ தெரியாது.

 எப்படிக் காப்பது ?

இதிலிருந்து மீளவும் - இதை எதிர்காலத்தில் நடக்காது தடுக்கவும்

நல்லிதயம் படைத்த புத்திசாலி அரசியல்வாதிகள் - இனத்திற்கு பத்துப்பேராவது தேவை.

ஒன்றிரண்டு பேரால் சாதிக்க முடியாது - எங்கள் சிஸ்டத்தில் முட்டாள்களும் வெறும் சுயநலவாதிகளும் - வாக்கைப்பற்றியும் தங்கள் சீட்டைக் காப்பாற்றக் கவலைப்படுபவர்களும்தான் அதிகம்.

எனவே நல்லவர்கள் நால்வர் போதாது.

அந்த‌ மொத்தம் முப்பது பேரை - நல்லவர்கள் மட்டுமல்ல -வல்லவர்களாகிய நல்லவர்களை எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் எங்கள் கண்களில் காட்டுவானாக.


ஆமியோடு கூட நிண்டவர்கள் (அப்ப தலையாட்டிகள் எல்லாம் முஸ்லிம்களா ?)


நாங்கள் எரிந்தபோது சிரித்தவர்கள்தானே இந்த முஸ்லிம்கள் ? காட்டிக்கொடுத்தவர்கள் அவர்கள் - நன்றாக வேண்டும் அவர்களுக்கு. ” -என்ற சில குரல்களும்  சமூக வலைத்தளங்களில் வருகின்றன.

எத்தனை தமிழர்கள் ,யுத்தகாலத்தில் எத்தனை சாதாரண முஸ்லிம்களாலும் ,சக்திவாய்ந்த முஸ்லிம்களாலும் காப்பாற்றப்பட்டனர் தெரியுமா ? எனக்கு பல நுாறு சம்பவங்கள் தெரியும்.

அதே நேரம் ”தமிழர்களின் போராட்டத்தை முற்று முழுதாகக் காட்டிக்கொடுத்த அம்மான் என்ன முஸ்லிமுக்குப் பிறந்தவரா ?

புலிகளால் சந்திக்குச் சந்தி போஸ்டில் கட்டிப்போடப்பட்ட காட்டிக்கொடுத்த துரோகிகள் லிஸ்டில் எத்தனை பேர் முஸ்லிம்கள்.?( அன்று யாழ்ப்பாணத்தில் புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்படாத காலத்திலலேயே)

தமிழர்களைத் தமிழர்கள் காட்டிக்கொடுத்ததும் - ஆறேழு போராட்டக் குழுக்களாகி சகோதரப்படுகொலைகள் புரிந்ததும் 90 களிற்குப்  பிறகு பிறந்தவர்க்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம் தொண்ணுாறுகளில்  வயது வந்தவர்களாகியிருந்தவர்க்கோ வயது போனவராக இருந்தவர்க்கோ தெரியாமலிராது.(கந்தன் கருணைப் படுகொலைகள்)

விட்டால் வித்தியாவைக் கற்பழித்தவர்கள் கூட முஸ்லிம்கள்தான் என்று சொல்வார்கள் போல.

மற்றவரைக் குற்றம் சாட்டப்புறப்படுகையில் வசதியாக நம் குற்றங்களை மறந்து விடுகிறோம்.(இதே போல் அவசரப்பட்டுக் குற்றம்சாட்டுவதை மற்றைய சமூகத்திலுள்ள முட்டாள்களும் செய்கிறார்கள்தான் -  நாமும் அதே போன்ற முட்டாள்களாவதா ? )

அதற்காக முஸ்லிம்கள் அனைவரும் தேவதுாதர்கள் என்று ஒருபோதும் சொல்ல வரவில்லை.. எல்லா இனத்திலும் துரோகிகளும் கெட்டவர்களும், நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்  என்பதை பகுத்தறிவைப்பாவித்துணரவேண்டும். கண்ணுக்கு கண் ,பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் பண்பாடு நம்மது அல்ல

ஒரு பேச்சுக்கு முஸ்லிம்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகளாகவோ இனவாதிகளாகவோ இருக்கட்டுமே - நாங்கள் எங்கள் பெருந்தன்மையை காட்டுவோம்.

”இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் ” என்ற வள்ளுவர் தமிழர்தானே ? அவர் சொன்ன தமிழ்  மறையைப் பின்பற்ற வேண்டாமா தமிழர்களே.

இலங்கை முழுவதும் பயணம் செய்து எல்லா இனங்களுடனும் பழகிய அனுபவம் வேண்டும் - யார் நல்லவர்கள் என்று தீர்ப்புக்கூற . அனைத்து இனங்களிலும் அதிக மனிதாபிமானமிக்கவர்கள் உள்ள இனம் சிங்களவர்களே என்பதை பரந்த மனதும்  உலக அனுபவமுள்ள எவரும் ஒத்துக்கொள்வர்.(பதினாறு வயதில் லண்டனுக்கோ கனடாவுக்கோ ஓடிப்போய் அங்கே தம்மைப்போல யுத்த வெறுப்பில் வந்த சிங்களவர்களை மட்டுமே கண்டு வளர்ந்த நம்மவர்க்கு இது புரியாது.)பிறந்தது முதல் ஊரை விட்டு வெளியூர் செல்லாத குப்பனுக்கும் சுப்பனுக்கும் இது புரியாது. பல்கலைக்கழத்திலோ வேலை செய்யுமிடத்திலோ -பழகிய இரண்டு மூன்று உதாரணங்களை வைத்தும் ஒரு முடிவுக்கு வர முடியாது நண்பர்களே )

இனவாத வெறிகொண்டலையும் குறுகிய எண்ணிக்கையிலான கயவர்களிற்காக நாம் எந்த இனத்தையும் வெறுத்துவிட முடியாது. மனிதர்களைத்தேடுவோம். 


அவர்களின் எண்ணிக்கையில் நாம் இருந்திருந்தால் அவர்களை எப்போதோ கடலுக்குள் போட்டிருப்போம்.

1 comment:

  1. மிகவும் சரியான நடுநிலையான கருத்து.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை