Tuesday, April 24, 2018

ஞான விளக்கு - என் பிறந்தநாட் பாடல்




கைப்பேசி
கணினி வலை
குறுஞ்செய்தி
என்றொவ்வோர் ஊடகத்தின்
உட்புகுந்தும்
என்
வழித்தடங்கள்
தேடி

உங்கள் தோட்டத்தில்
நோகாது
கொய்து நெய்த
பூங்கொத்தால் என்மேல்
வாழ்த்துமழை
வற்றாமல் தூவும்
குளிர்
மேகத்தோழர்களே..

கவனியுங்கள்..

ங் ஙா..என்ற
மெல்லியல் அகரமோ ,உகரமோ
வகை தெரியாது வாய்மலர
அம்மா முகத்தில்
நிலா பார்த்துச் சிரித்த
அந்தச் சின்ன வயதல்ல
இப்போது
எனக்கு

முப்பதுகளின் மேல்
புதிதாய்ப்பிறக்கும்
ஓவ்வொரு ஆண்டுமே
உயிர்ப்படகில் விழும்
ஒவ்வொரு புதிய
ஓட்டைகள்தானே.

உணரின்..

மூழ்கும் திகதி
முற்கூட்டி அறியாத
பாவி மனிதப்பிறப்பு இது.

காலம் வரைந்த
இந்த ஓவியத்தின்
வர்ணங்களில்தான்
எத்தனை வளர் சிதை மாற்றங்கள்.
பளிச்சிட்ட பல இப்போது
கண்களுக்கே தெரிவதில்லை.

நிலையாமை எனும்
உண்மையின் கரங்கள்
நெஞ்சில் அறையும்
ஒவ்வொரு
நொடியும் .
;
நினைப்புகளை வழி
மறித்து
சித்தனாகச் சில கவிதைக்
கோடுகிழித்தாலும்
பஞ்சு முகில்கள் எனப்
பாரம் இல்லாமல் பறந்து
ஒரு
மோன மொழி தெரிந்த
புத்தனாகும் வழி
இன்னும் புரியாமல்
நிற்க்கும்-என்
பித்த மனசு.



கடந்த கணத்தின்
தசையல்ல ,எலும்பல்ல
கடந்து போனதன் தொடர்ச்சி ***
மாற்றமே
நிலை என்று…
இன்னும் பலவாய்,
தத்துவ விசாரங்கள்
தலைப்படும்போதெல்லாம்
அதன்மேல்
ஓங்கி
அறையும்
உலகியல் தர்மம்.



வரையறைக்குள் என்றும்
சிறைப்படாத,
தத்துவ லாம்பெல்லாம்
தடவியும் காணாத,
அந்த
வித்தகன்- கடவுள்;,
முடிவுத்; திகதிதை
முகத்தில் அல்ல
முதுகில் கூட அச்சிட்டு எவரையும்
இங்கே அனுப்புவதில்லை.

அதனால்தான் சொல்கிறேன்.
இருக்கும் வரையில்
இறவாப்புகழ் தரும்
மரங்கள் சில நடுவோம்.



சுயநலக்கழிம்பு கரையக் கரைய
புகழ் எனும் மினுக்கம்
துலங்கிடும்
இன்னோர் உயிரின்
வலியகற்றும் வாழ்விற்கு
என்னே நிகர் ?

மனிதம் வளர ஒரு துரும்பு.
என் சக மனிதனின் சுவாசத்தில்
தீயள்ளிக்கொட்டாத
தென்றல்.
மற்றவன் விழுந்தால்
தூக்கித்துயர் களையும்
கைகள் சில

என்று கொஞ்சம்
புதிதாய் சமைப்பதற்காய்
ஒரு உற்பத்தி திகதியாக
என் பிறந்த நாளை
இன்று பிரேரிக்கின்றேன்.

வழிமொழிந்து ஒரு
வாக்கருள்வீர் தோழர்களே.

ச.மணிமாறன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை