ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னை பள்ளியிலிருந்து வந்த பாங்கு ஓசை விளிக்க வைத்தது. நம்ம ஏரியாவில் பள்ளியே கிடையாதே அப்புறம் எப்படி இப்படி பாங்கு பறிகிறது? என்று எண்ணியபடியே எழுந்து உட்கார்ந்திருந்தேன்.
சோம்பல் முறித்தபடியே எதேச்சையாக எனது உடுப்பைக் கவனித்ததும் நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன்.வெள்ளைக்கலர் ஜிப்பா போட்டிருந்தேன், உள்ளே சாரம்(கைலி) கட்டியிருந்தேன். அதிர்ச்சி மாறாமலே முகத்தைத் தடவிப்பார்த்தால் மீசையைக் காணோம் ஆனால் தாடி பஞ்சமில்லாமல் காடாகக் கிடந்தது. நான் இப்போது இருப்பது எனது அறையும் அல்ல எனது வீடுமல்ல என்பதும் புரிந்தது. அலறியடித்து எழுந்தவுடன் எதிரே இருந்த இராட்சசக் கண்ணாடியொன்றில் எனது உருவம் (அதே மொட்டைமண்டை) ஜிப்பா அணிந்து தாடியுடன் அரேபிய ஷேக் போலவே தோன்றியது.
இது கனவா ? நனவா? என்ன நடக்கிறது நமக்கு ? என்று புரிய முயற்சித்தபடியே சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த அறை படு அன்னியமானது. அங்கு நான் படுத்திருநத கட்டில் பல வேலைப்பாடுகள் நிறைந்த வாழ்நாழில் கண்டிராத மரக்கட்டில் ஐந்து பேர் படுக்கலாம். அந்த அறை முழுவதும் பெரிய பித்தளைப் பாத்திரங்கள், அன்னம்போலவும் , சிங்கம் போலவும் செய்யப்பட்ட நாற்காலிகள் கிடந்தன, என் கட்டிலுக்குக் கீழே நிலத்தில் ஓலைச் சுவடிகள் கிடந்தன.இஸ்லாமியர்கள் அணியக்கூடிய ஒரு தொப்பியும் அருகில் கிடந்தது.