யாழ் இந்துவின் பொக்கிஷத்தில் ஒரு முத்து - சிறீ விசாகராஜா ஆசிரியர். வாழும் முறையை இவரிடமும் கற்கவேண்டும். |
நெஞ்சில் வஞ்சமில்லாத சிரிப்புடனும் எப்போதும் தேனி போன்ற சுறுசுறுப்புடனும் காணப்படக்கூடிய ஆசிரியர் 'விசாகர்' என அறியப்பட்ட சிறீவிசாகராஜா அவர்கள். இந்த நல்ல மனிதர் அண்மையில் மீளாத் துயில் கொண்டார்.
நான் அவரிடம் படித்திருக்கிறேன். அவரிடம் கற்ற அனுபவத்தைவிட அவரது அணுக்கம் தரக்கூடிய மகிழ்ச்சி, நிம்மதி என்பனவே எனக்கு அவரை எண்ணியதும் நெஞ்சில் நிறைகிறது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் முதல் தகுதி என்று எண்ணுகிறேன்.
தன்னுடைய இரத்த அழுத்த நோயால் வரும் அவதியை பச்சிளம் பாலகர்களது கையைத் திருகியும் கண்டபாட்டிற்கு அடித்தும் காட்டும் சண்முகலிங்கம் சேர், பிள்ளைகளின் பிஞ்சு விரல்களை நெரித்து மகிழும் செட்டியார் சோமசுந்தரம் சேர், கண்ட இடத்தில் சிறு தவறைக் கண்ட மாத்திரத்தில் கன்னம் கன்னமாக கைகளாலையே மேனியா போல் பின்னியெடுக்கும் தவமணிதாசன் சேர் முதலியவர்களால் தினசரி பாடசாலை செல்வதே இராணுவ முகாமிற்கு பயிற்ச்சிக்குப்போவதுபோல் மன அழுத்தம் தரக்கூடியதாக என்போன்ற குறும்பு செய்யும் மாணவர்களிற்கு இருந்தது .