யாழ் இந்துவின் பொக்கிஷத்தில் ஒரு முத்து - சிறீ விசாகராஜா ஆசிரியர். வாழும் முறையை இவரிடமும் கற்கவேண்டும். |
நெஞ்சில் வஞ்சமில்லாத சிரிப்புடனும் எப்போதும் தேனி போன்ற சுறுசுறுப்புடனும் காணப்படக்கூடிய ஆசிரியர் 'விசாகர்' என அறியப்பட்ட சிறீவிசாகராஜா அவர்கள். இந்த நல்ல மனிதர் அண்மையில் மீளாத் துயில் கொண்டார்.
நான் அவரிடம் படித்திருக்கிறேன். அவரிடம் கற்ற அனுபவத்தைவிட அவரது அணுக்கம் தரக்கூடிய மகிழ்ச்சி, நிம்மதி என்பனவே எனக்கு அவரை எண்ணியதும் நெஞ்சில் நிறைகிறது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் முதல் தகுதி என்று எண்ணுகிறேன்.
தன்னுடைய இரத்த அழுத்த நோயால் வரும் அவதியை பச்சிளம் பாலகர்களது கையைத் திருகியும் கண்டபாட்டிற்கு அடித்தும் காட்டும் சண்முகலிங்கம் சேர், பிள்ளைகளின் பிஞ்சு விரல்களை நெரித்து மகிழும் செட்டியார் சோமசுந்தரம் சேர், கண்ட இடத்தில் சிறு தவறைக் கண்ட மாத்திரத்தில் கன்னம் கன்னமாக கைகளாலையே மேனியா போல் பின்னியெடுக்கும் தவமணிதாசன் சேர் முதலியவர்களால் தினசரி பாடசாலை செல்வதே இராணுவ முகாமிற்கு பயிற்ச்சிக்குப்போவதுபோல் மன அழுத்தம் தரக்கூடியதாக என்போன்ற குறும்பு செய்யும் மாணவர்களிற்கு இருந்தது .
அப்படியான வதை முகாமில் (என் போல் குறும்பு செய்வோர்க்கு மட்டுமே) வீசிய ஒரு தென்றல்தான் விசாகராஜா சேர். மாணவர்களுடன் நகைச்சுவையாக உரையாடிக் கூடிய, வகுப்பையே மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மன நல மருந்தாக ஆசிரியர் விசாகராஜா இருந்தார்.
அவரது டைமிங் பிசகாத சிரிப்பு வெடிகள் உலகப்பிரசித்தம்.
ஆண்டு 7,8,9,10 E பிரிவுகளில் அவரது மகன் அன்புச் செல்வனும் நானும் தொடர்ந்து கற்றுவந்தோம்இ சில வருடங்களில் இவர் ஆங்கில ஆசிரியராக நம்க்கு இருந்த நினைவு இருக்கிறது. (அன்புச் செல்வனும் நானும்தான் குழப்படிக்கூட்டு.)
அன்புச்செல்வன் வீட்டிற்கு செல்லும் சமயங்களிலெல்லாம் விசாகராஜா சேரும் அவரது மகனாகிய அன்புவும் நண்பர்களாக ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வதைக் கண்டு வியந்திருக்கிறேன் (இப்போது அது சாதாரணம் அப்போது அப்பா என்றாலே பெரும்பாலும் ஹிட்லரின் மறு உருவம்தான் பல வீடுகளில் )
தற்பெருமை, கர்வம் என்பது என்னவென்றே தெரியாத ஆனால் மிகச்சிறந்த ஆங்கில மொழிப் புலமை உள்ளிட்ட பல திறன்களை தன்னகத்தே கொண்டவர் சேர்.
நான் பாடசாலைவிட்டு விலகிய தருணத்தில் இவரால் எழுதப்பட்டு(Dictated)உப அதிபர் கப்டன் சோமசுந்தரம் அவர்களால் ஒப்பமிடப்பட்டு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் பத்திரத்தில் 'இந்த இந்த திறமைகள் உள்ளவர் இவர்.... இவரை எமது .மாணவர் என்று சொல்வதில் எமது பாடசாலை பெருமை கொள்கிறது ' என்ற எழுதப்ப்ட்ட வசனங்கள்( இப்படி ஒரு கடிதம் வேறு எந்த மாணவருக்காவது வழங்கப்பட்டிருக்குமோ தெரியாது) அவர் என்மேல் வைத்திருந்த நம்பிக்கை,அன்பு என்பதை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் அதை முன்பில்லாத வகையில் தைரியமாக பொறுப்பெடுத்துச் சொன்ன விதம், அவரது தைரியத்தையும் திறமைகளை இனம்கண்டு பாராட்டும் மிக நல்ல மனதையும் பெருந்தன்மையையும் காட்டியது.
இவர் தடகள விளையாட்டுக்களில் நிபுணர் என்று அறிகிறேன். ஆனால் விளையாட்டு மைதானப் பக்கமே போகாத எனக்கு இவரது அந்தப்பக்கம் பற்றிச் சரியாகத் தெரியாது.
சேர் சொன்ன ஜோக்குகள் அனேகமாக பல தலைமுறை மாணவர்கள் மத்தியிலும் இன்றுவரை பிரபலம். அவரது ஒட்டுமொத்த குடும்பமே அப்படித்தான்.
வாழும் ஒவ்வொரு நொடியையும் சிரித்தபடியே மிகவும் சிம்பிளாக அனுபவித்து வாழ்ந்தவர் சேர். அனைவருக்கும் ஒரு முடிவு இருக்கத்தான் செய்கிறது. வாழ்வு முடியும்போது இன்னும் வாழாத ஏக்கத்தோடு போகாதவர்களே புண்ணியவான்கள். சேர் இயமனையே எருமையிலிருந்து விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பார். அவர் அந்தக் கலாச்சாரத்தை இ எதையும் சிரிப்பால் கடந்து போகும் வித்தையை மொத்தக்குடும்பத்திற்கே சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இன்று நண்பன் அன்புச்செல்வனுடன் துயர் பகிர்ந்து பேசும்போது சொன்னான் ' அம்மாவுக்கு சரியான கவலை, அவ சொல்றா:
'(ஆஸ்பத்திரிக்கு) முழுசாக்குடுத்த மனுசனை முட்டியில கொணந்து தந்திருக்கிறாங்கள்'
இந்த டைமிங்இறைமிங், நகைச்சுவையை நான் எதிர்பார்க்கவே இல்லை.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் இ வானுறையட்டும் !. 'சேர் !இ இன்னும் பல பகிடிகளை யோசித்து வையுங்கோ, ஒரு நாள் நாங்களும் வருவோம் ...அப்ப..கேட்டுச்சிரிக்கலாம்.'
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .