"ரைல்ஸ்சுக்கும் பாத்ரூம்வெயாருக்கும் மட்டும் நாலு மில்லியன் முடிஞ்சுது மச்சான்" என்று தொலை பேசியில் பேசும்போது அடுத்த இரண்டு தெரு தள்ளியிருக்கும் வங்கி அதிகாரியான நண்பன் சொன்னான்.
இன்னொரு நண்பனின் மாளிகை வீட்டின் படங்களை அதைக்கட்டிய நிறுவனம் ஃபேஸ்புக்கில் போட்டு நாம்தான் கட்டினோம் என விளம்பரப்படுத்திய போது அதன் அழகை நானும் படங்களில் இரசித்தேன்.
"கலம்பு (Colombo)-7" ஏரியா மினிஸ்டர் மார் வீட்டு Gate போலவே செய்து போட்டிருக்கிறேன் என்று ஒரு மகாவைத்திய நண்பன் ஹொட்டேல் பட்ஜ்மேட் சந்திப்பு ஒன்றில் சொன்னான்.
இப்படி பல பல மாளிகைகள் நம் நண்பர்கள் பலருக்கு.
என் வீட்டில் இவர்களில் பலர் பல விருந்துகளில் கலந்து சிறப்பித்திருந்தார்கள் (விருந்து மறந்து சில நாட்களில் கோல் வரும் : "அடுத்த பார்ட்டி எப்ப மச்சான்?"- no outgoing, only incoming :) )
அவர்களில் பலர் வீட்டின் தேநீர் கூட வாயில்படும் பாக்கியம் எனக்குக் கிட்டியதில்லை.
XXXXXX
நிந்தவூர் செல்லும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், பல்கலை நாட்களில் எங்களுக்குச் சமைத்துப் போட்ட (பல சமயங்களில் காசே வாங்காமல்)சௌதா பேகம் அன்ரியை காணச் சென்றால் தப்பவே முடியாமல் அவர் வற்புறுத்தலால் ஒருவேளையாவது சாப்பிட்டே ஆகவேண்டிவந்துவிடும். அதுவும் சும்மா சோறும் சொதியுமல்ல , நடப்பன,பறப்பன,நீந்துவன என அனைத்து ஐட்டங்களோடும் மிகச்சுவையாகவும் விருந்தை படைத்து, போதாக்குறைக்கு பார்சல் வேறு.("வழியிலே பசிக்குமே தம்பி !")
தனக்கு நெல்லுக்குற்றும் தொழிலில் ஊதியமாகக்கிடைத்த அரிசியில் அரை மூட்டையையாவது காரில் ஏற்ற சண்டை பிடிப்பார்.
இன்றுவரை சௌதா அன்ரி அட்சய பாத்திரம்தான். கட்டிமுடிக்கப்படாத இரண்டறை வீட்டில், பூசப்படாத சுவர்களிடையே வயோதிபத்திலும் உடலுழைப்பால் கௌரவமாகத் தனியே வாழ்ந்தாலும், சௌதா அன்ரியின் மனசு வாழ்வது என்னவோ யாராலும் கட்டிமுடிக்க முடியாத பிரமாண்ட அரண்மனையில்தான். மனசால் அவர் மகாராணி.
அடுத்த தெரு நண்பன் கட்டிய புதிய வீட்டை இன்னும் காணாவிட்டாலும் நானூறு கிலோமீட்டர் தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அன்ரி யின் குடிசை என் பல நண்பர்களின் வீட்டைவிட பெரியதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.
(விதிவிலக்கான பலர் உண்டு. )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .