Showing posts with label தத்துவ விசாரம். Show all posts
Showing posts with label தத்துவ விசாரம். Show all posts

Friday, January 28, 2022

ஏன் இன்னும் தலை தெறிக்க ஓடுகிறோம்?


 

(நாற்பது வயதிற்கு மேற்பட்ட(அல்லது அப்படி உணர்கின்ற) வாசகர்களிற்கு மாத்திரம்)

புரிந்து விட்டால் ஓடுவதை விட்டுவிடுவோம். புரிந்தாலும் புரியாத மாதிரி இருப்பதில்தான் சலிப்பை குறைத்து வாழும் இரகசியம் இருக்கிறது!. கடைசிவரை புரியாமலே ஓடிக்கொண்டிருப்போர் பாக்கியவான்கள். அவர்கள் சலிப்பின் வெறுமையை தூக்கமின்றி விட்டத்தை வெறித்தபடி அனுபவிப்பதில்லை.
ஓடிய களைப்பில் , அடுத்தநாள் சீக்கிரம் எழுந்து இன்னும் ஓடவேண்டும் எனும் நினைப்பில், படுத்ததும் தூங்கி விடுவார்கள்.
ஓடுவதைக் குறைந்த பின்னர்தான் உலகெங்கிலுமிருந்து பல பந்தயங்களிற்கு வெற்றிலை வைத்து அழைப்பார்கள்.அழைக்கிறார்கள். இது வாழ்க்கையின் முரண்.
இந்த மைதானம் எனக்குரியதல்ல. இங்கே ஓடி முடித்தாயிற்று. அடுத்த மைதானத்தை ஆயத்தப் படுத்து. புதிய விளையாட்டு, புதிய விதிகள், புதிய பரிமாணம்.
காசுப் பெட்டியில் சில்லறை விழும் சத்தத்திற்காய் தேவைகள் தீர்ந்தபின்னரும் ஓடிக்கொண்டே இருப்போர் தம் சவப்பெட்டி அருகே பறைச் சத்தம் கேட்கும்வரையில் நிறுத்துவதில்லை. குறைத்துக் கொள்வதுமில்லை.
.
நடுவயதிற்கு கிட்டே ஆயினும் கொஞ்சம் நின்று, நிதானித்து கூட்டிக் கழித்துப் பாருங்கள். "இவ்வளவு அல்லல்பட்டு ஓடி" சேர்த்தது தந்த நிம்மதி பெரிதாய் எதுவுமில்லை என்பது புரியலாம்.

Tuesday, November 7, 2017

விதி எனும் எல்லை- உங்கள் எல்லை எது ?

உங்களுக்கு என்று ஒரு வட்டம் கீறப்பட்டிருக்கிறது. எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த எல்லை எது என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்சக்காலம் தேவைப்படும். அந்தக்காலம் உங்கள் புத்தி ஆன்ம பக்குவம் என்பதைப்பொறுத்து வேறுபடும் .

முயற்சி செய்யாமல் எங்கள் எல்லை தெரியாது. ஓடிக்கொண்டிருக்கும் எங்கள் ஒவ்வொருவரின் முன்னரும் ஒவ்வொரு துார எல்லைகளில் கண்ணுக்குத்தெரியாத கயிறு கட்டப்பட்டிருக்கிறது. ஓடிப்போய் முட்டி நிற்கும் போது மட்டுமே அவரவர்க்கு அவரவர் எல்லை புலப்படும். நாம் விடுவதில்லை மீண்டும் தடைப்பட்ட  இடத்திலிருந்து வேறு திசை நோக்கி ஓடுவோம். மீண்டும் குறித்த துாரத்தில் கயிறு தடைப்படுத்தும். மூச்சு முட்டி களைக்கும் மட்டும் ஓடுவோர் சிலர். உயிர் போகுமட்டும் எல்லை உடைக்கலாம் என்று ஓடுவோர்தான் பலர்.

குறைந்தது பத்துவருட முயற்சியிலாவது எமது எல்லை எவ்வளவு என்று கண்டு கொள்பவர்கள் அதி புத்திசாலிகள்.

Wednesday, January 7, 2015

பொருந்துவன போவென்றாலும் போகா ! - விதி பற்றிய எனது புரிதல்





நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவராக பிறந்தாலும்,சகல ‌சுக போகங்களுடனும் வளர்ந்தாலும் ,உங்களைச்சுற்றி பல நல்லவர்கள் உங்களில் அக்கறையுடன் இருந்தாலும், தொழில் துறையில் பல சாதனைகளைப்புரிந்து மற்றோர் கணிப்பில் வெற்றியாளனாகத் திகழ்ந்தாலும். ... இன்னும் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு வேதனை அல்லது தேடல் அல்லது திருப்தியின்மை இருக்கிறதென்றால் (அதை நிறைவே்ற்றும் வழி தெரிந்திருந்தும்)  நீங்கள் நிச்சயமாய் விதியின் அதிக அக்கறைக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களிற்கு சில பூட்டுக்களின் சாவிகள் கிடைக்க காத்திருக்கின்றன என்று பொருள்.

படித்தால் நல்லது ,வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பது ஒரு இளைஞனுக்கு தெரிந்த விடையம்தான். ஆனால் அவன் நண்பர்களுடன் கிறிக்கெட் விளையாடும் பொழுது தந்தை திடீரென காதைப்பிடித்து இழுத்து வந்து படிக்கும் மேசையில் விட்டு கவனமாய் படி என்றால்...அவனது மனம் அந்த விளையாட்டு பூர்த்தியடையாமை குறித்து எவ்வளவு வருந்தும் . அவனது நரம்பு நாடிகளில் அவை புடைக்கிற அளவிற்கு கூட அந்த இழப்பின் வலி தோன்றலாம்.

இந்த படிப்பிற்காய்தான் என் விளையாட்டு கலைக்கப்பட்டது என்பது   தெரிந்தும் படி்ப்பை வெறுக்க முடியாமலும் விளையாட்டைத் தொடர முடியாமலும் - விளையாடி முடித்து வந்திருக்கலாமே என்று அங்கலாய்க்கும் மன நிலை உங்களுக்கு தொன்றியிருக்கிறது என்றால்...அது விதி. முற்கூட்டிய ஏற்பாடு.

உங்கள் ஆசைகள் எவ்வளவு நியாயபபூர்வமாக இருந்த போதிலும் அந்த அனுபவத்திற்கு உரிய காலமோ ,விதியோ இல்லாவிடின் அது கிடைப்பதில்லை. வெறும் புத்திக்கும் ,திட்டமிடலுக்கும் மட்டுமே வெற்றிகள் கிடைப்பதாகக்கொண்டால், படிப்பிலும், வாழ்திறன்களிலும் மிகுந்த புத்திசாலிகள் மட்டுமே வாழ்வில் பொருளாதார , குடும்ப நிலை அடிப்படைகளில் பெரும் உயர்வில் இருக்க வேண்டும் . . ஆனால் முப்பதிற்கு மேல் வாழ்ந்த நம்மில் பலருக்கு எப்போதும் கெட்டிக்காரர்களே வெல்வதில்லை என்பது அனுபவ ரீதியாகத்தெரியும்.

வியாபாரம் செய்யத்தெரியாத பலர் அந்த துறைகளில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். மிகத்திட்டமிட்டு வியாபாரம் செய்தும் கவிழ்ந்து போகிறார்கள் சிலர். உப்பு விற்பதை நீங்கள் திட்டமிடலாம்.ஆனால் அந்த இடத்தில் மழைகொட்டி நாசமாக்குவதையோ வெயிலடித்து தொந்தரவற்று இருப்பதையோ  உங்களால் தீர்மானிக்க முடியுமா ? . கடற்கரையில் கோடிக்கணக்கான முதலீட்டில் காற்றாலைகளை ஒரு நிறுவனம் நிறுவி அடுத்த வாரமே சுனாமியில் அந்த இடமே அடையாளம் தெரியமால் அழியும் போது வென்றது அவர்களது திட்டமிடலா அல்லது விதியா ?.எதுவென்பது ?

எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருக்கிறார் ,அவரது தந்தை விட்டுச்சென்ற வர்த்தகத்தொழிலை அவர் செய்கிறார். பெரும் கோடீஸ்வரன்.  அவரிடம் வேலை செய்யும் பெரும்பாலான உதவியாளர்கள் அவ்வப்போது 50 லட்சம் 10 லட்சம் என்று காசை சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டுவதுண்டு. அந்தளவிற்கு இலகுவில் மற்றவர்களை நம்பும் குணமும் ,இறுக்கமான நிர்வாகக்கட்டமைப்பு இல்லாமையும் உள்ளவர் அவர். ஆனாலும் அவர் வீழ்நது போய்விடவில்லை வளர்ந்து கொண்டே இருக்கிறார். பல தமிழ் விழாக்களிலும் அவரைக்காணலாம். எப்போதும் சிரித்த முகம். வியாபரம் எப்படிச்செய்வது என்று தெரியாமலே கோடிகளைக்   குவிக்கிறார்.   இத்தனைக்கும் இவர் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்காதவர். எனது நண்பர்கள் பலர் நன்றாகப்படித்து ,சந்தை ஆய்வு,கள ஆய்வு செய்து,திட்டமிட்டு செய்த பல வியாபார நடவடிக்கைகள்  அவர்களை பெரும் கடனாளிகளாய் மட்டுமே ஆக்கியுள்ளது.  

முயற்சி மட்டுமே நம்முடையதாகிறது. கூலியின் அளவைத்தீர்மானிப்பதும் வழங்குவதும் வழங்காது விடுவதும் வேறு யாருடையதோ கைவசம் இருப்பதாய் படுகிறது.

இந்த அனுபவம் நம்மில் அனைவருக்கும் உண்டு. சிலர் அதனை கவனிக்காது விடுகிறார்கள் .அவ்வளவே.

"கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே" என்ற பகவத் கீதையின்  வரிகள் இவ்வாறான சில அனுபவங்களின் பின்னரே புரிய ஆரம்பிக்கிறது. ஒரு மாணவனின் கடமை படிப்பது. பரீட்சைக்காலத்தில் அதற்குரிய பாடத்திட்டத்திற்கமையப் படிப்பது. விழங்கிய அளவில் படிப்பது. விழங்காததை விழங்க முயற்சிப்பது . பரீட்சை எழுதுவது. அவ்வளவே.  பெறுபேறு 10 புள்ளிகள் என்றாலும் 90 புள்ளிகள் என்றாலும் அதைப்பற்றி கலங்க ஒன்றுமில்லை. அவன் எல்லா முயற்சியும் செய்தும் இந்தப்புள்ளிதான் வந்ததென்றால் அவ்வளவு தான். 

ஒவ்வொரு தொழிலுக்கும் , முயற்சிக்கும் என்றிருக்கும்  கடமைகளை செய்வோம் . தலைகீழாய் முயற்சி செய்கிறேன் என்ற அளவிற்கு சென்று முயற்சிப்பதும் சரியே ஆனால் பெறுபேற்றில் உங்கள் மனம் முழுவதையும் விட்டு விடாதீர்கள்.

இதனை காதலை வைத்துக்கூட அருமையாக வி‌ழங்க முடியும். நான் பதினாறுகளில் ஆரம்பித்து 19 வரை  ஒரு தலைப்பட்சமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். பல்கலைக்கழக அனுமதி பெற்றதும் கொஞ்சம் தைரியம் வந்து இன்னொரு நபர் மூலம் துாது விட்டேன் ” அவன் அவளிடம் சென்று கேட்டான் ” ” நீங்கள் மணிமாறனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”  ,அவள் சொனனாள் ”ஒன்றும் நினைக்கவில்லை”  . முடிந்தது என் மூன்று வருடக் காதல். நேரில் கேட்க தைரியமில்லை ஏனென்றால் முடிவு என்னாகுமோ எனற பயம். முடிவு பற்றியே கவலை. காதலை முறைப்படி சொல்வதைப்பற்றி சிந்திக்கவில்லை.

மாணவர்களிற்கு ஆங்கிலம் கற்பிக்கும்போது ஓர் கதை வரும். அதில் ஒரு நண்பன்  ஒரு இரவு விடுதியில் வைத்து பெண்கள் என்றாலே அணுகப்பயப்படும் தன் நண்பனிடம் சொல்லுவான். ”அதோ அந்தப்பெண்ணிடம் போய் அவள் உண்ணும் கோழி இறைச்சி துண்டில் ஒன்றை எடுத்து உண்ணு...அவள் உன்னை ஆச்சரியமாகப்பார்ப்பாள் உடனே .”நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் அதுதான் இந்த கோழி இறைச்சி நீங்கள் உண்ணும் அளவு பாதுகாப்பானதுதானா என்று  ‌சோதித்துப்பார்த்தேன்  ” எனச்சொல்லு..உன் நகைச்சுவை அவளிற்கு பிடிக்கும் அவள் உன்னுடன் உரையாட ஆரம்பிப்பாள். மாறாக அப்படி நடக்கவில்லை அவள் கோபமடைந்துவிட்டாள் என்றால் ” ஆம் இந்த செயற்பாடு தவறுதான் என்று சொல்லிவிட்டு வந்து விடு . இதை விட வேறு என்ன மோசமாக நடந்துவிடக்கூடும்.  நம் விதி என்ன என்று தெரியாதபோது கடமையை         ஆற்ற மட்டும்தானே எமக்கு அதிகாரம் இருக்கிறது ? முடிவில் இல்லை அல்லவா ? எனவே வருந்த எதுவுமே இல்ல‌ை‌.

இதை முதன் முதல் படிப்பிக்கும்‌போதுதான் என் மூளையில் பளிச்சிட்டது ” அட, காதலிப்பதை தயங்காமல் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கலாம்  பிடித்திருந்தால ஆம் என்கிறாள் இல்‌லை    என்றால்  மறுக்கப்போகிறாள் வேறு என்னதான் நடந்து விடும். இது ரொம்ப இலகுவான அணுகுமுறை. காதல் வந்தால் அதைச்சொல்லுவது கடமை பலன் என்னவாகவும் இருக்கலாம்.  எனக்கு   இது காலம் பிந்திய ஞானம் . ஆனால் இதை வாசிக்கும் பலருக்கு பயனளிக்கலாம்.

ஆக, கன்மவிதி என்பது எமது செயல்களால் (இந்தப்பிறவி மற்றும் போன பிறவிகள்)எமக்கு ஏற்றப்படும் சுமை. ஏற்கனவே ஏற்றிய சுமையுடன் இன்னும் இன்னும் ஏற்றிக்கொண்டே செல்கிறோம். பொன்னாக இருந்தாலென்ன குப்பையாக இருந்தாலேன்ன தோளில் ஏற்றப்பட ஏற்றப்பட சுமைதானே அதிகரிக்கும் . நல்வினை தீவினை இரண்டுமே பாரங்கள்தான். பாரம் குறைக்க பெரியவர்கள் கூறும் வழி  எதைச்செய்தாலும் விருப்பு வெறுப்பின்றி செய்க அவ்வாறு செய்யின் அதனால் வரும் கர்ம வினை வராது(கீதை) இதை பூரணமாக முடியாவிட்டாலும் படிப்படியாகவேனும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாம்.

சுக போகங்களை அனுபவிக்கத்துடிக்கும் மனசுடைய நாம் அனைத்துக்கருமங்களையும் எதிர்பார்ப்பற்று செய்வது மிகச்சிரமம்.  முடியுமான தருணங்களில் பற்றற்று காரியமாற்றிப் பழகுவோம். காலம் செல்லச்செல்ல அதுவே ஒரு வழிபாடாகிவிடும்.

விதியை மதியால் வெல்லலாமா ?.வித‌ியை தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சிதான் சோதிடக்கலை. பரிகாரங்களும் சில முற்கூட்டிய ஏற்பாடுகளும் நம் விதியை மாற்றப்பயன்படுமா ?  கிரியைகள் உண்மையா ? மந்திரங்கள் ஏன் ? கோவில் ஏன் ,விக்கிரகங்களால் பயன் உண்டா ?  

இவை பற்றிய சிந்தனைகளும் சில பற்றிய ஓரளவு தெளிவும்தான் எனது தற்போதைய மனநிலை , விதி ஏவின் விரைவில் எழுதுவேன்.

விதியில் கூட எமக்கு தெரிவு செய்யும் வசதி இருக்கிறது என்று ஓஷோ சொன்னதைப்படித்தபோது மிக வியப்பாய் இருந்தது , அந்த உதாரண அழகு.(அடுத்த பகுதியில்)





Tuesday, December 23, 2014

மாறும் நம்பிக்கைகள் - மறுபிறவி,ஜோதிடம் மற்றும் ஆன்ம இரகசியம்.


சத்தியமாய் இது நானேதான்.


தலை்ப்பின் காரம் என்னவோ கொஞ்சம் கூடித்தான் போயிற்று.ஆனால் என் வாழ்வில் இருந்தே இவை பற்றிய பல அனுபவ  உதாரணங்களை அடுத்த பதிவுகளில் தரலாம். வாசிப்பவர்களின் எதிர்பார்ப்பை பொறுத்து. 

வாழ்வில் நிறைய குழப்பங்கள் நிறைந்த காலப்பகுதியாக இது இருந்து வருகிறது. நாற்பதை எட்டும்போது இப்படித்தான் தத்துவ சிந்தனைகள் வருமோ என்னவோ. ஆனால் எல்லோருக்கும் இதே வகையான குழப்பங்கள் வராது என்பது மட்டும் நிச்சயமாகத்தெரிகிறது. 

மறுபிறவி இருக்கிறதா(ஆம்)அப்படியாயின் எனது முற்பிறவி என்ன...யார் எல்லாம் பழந்தொடர்பால் இப்போதும் என்னுடன் பிறந்திருக்கிறார்கள் ?

இறைசக்தி பற்றி எனக்கு இரண்டாம் கருத்து இருந்தததில்லை ஆனால் கிரியைகளை ஏற்றதில்லை நான். இப்போது அவைபற்றிய மீள்பரிசீலனைகள் எழுகின்றன என் மனதில்.

ஜாதகம் என்பது நமது முற்பிறவிப்பாவ புண்ணியக்கணக்கு என்பது நம்பும் அளவிற்கு புரிய ஆரம்பிக்கிறது.

பச்சைத்துரோகிகளை மன்னிக் முடியாத மனம் இப்போது அவர்களது பாவ நட்டக்கணக்கை அவர்கள் விரைவில் சீர்செய்யவேண்டி வரும் என்ற நம்பிக்கை இருப்பதால். பிழைத்துப்போகட்டும் என்று மன்னிக்க முடிகிறது.

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது பற்றிய எனது தேடல்களின் முடிவுகள்(மற்றவர்களது ஆய்வுகள் மூலமாக)தற்போது வலுவாகியிருக்கும் சோதிடம் ,மறுபிறவி பற்றிய நம்பிக்கைகள் என இணைந்து மிகப்புது தினுசான மனவோட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

கன்ம வினையை அனுபவிக்கவேண்டி இருப்பதை அவ்வப்போதைய சடுதியான தோல்விகளும் எதிர்பாராத வெற்றிகளும் புரிய வைக்கின்றன. கல்வியும் ஞானமும் பிறவிகள் தோறும்  தொடர்ந்து வருவது என்பதும் அது ‌ தொடர்பிறவிகள் மூலம் மேம்பட்டுச்செல்லும் என்பதும் புரிகிறது.

மனதின் சக்தி ,நம்புவதை அடையலாம் என்பன சிறுவயது முதல் அனுபவமாக இரு்ந்து வந்த விடையங்கள்.

கோடானு கோடி அண்டங்களில் நாம் மட்டும் தனியே இல்லை. சாவைப்பற்றி வருந்த எதுவுமே இல்லை. இந்த பழைய உடம்பை விட்டு இன்னும் புதிய ஒன்றை பெறலாம். புதிய உடல்,புதிய உலகம்...கன்மத்திற்கு ஏற்ற வாழ்க்கை,அறிவு பிறவிகள் தோறும் தொடரும் பெரும் சொத்து.வருந்த எதுவும் இல்லை.

 ஆன்ம தேடலும்  சிந்தனையும் காலம் காலமாக என்னுள் இரண்டறக்கலந்திருந்த ஒன்று என்றாலும் ஒரு சம்பவத்தை வெடிவைத்ததுபோல் என் வாழ்வில் உருவாக்கி  பணத்தை மட்டும் தேடி ஓட ஆரம்பித்த என்னை வாழ்வில் இடை நடுவே நான் கைவிட்ட தேடல்களின் பாதையில் திரும்ப வைத்த அந்த ஆத்மாக்களுக்கு என் வந்தனங்கள். ”எந்தரோ மஹானு பாவுலு அந்தரிகி வந்தனமுவுலு”(எந்த திசையில் மகான்கள் இருக்கிறார்களோ அந்த திசைக்கு வந்தனம்)

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை