சாய்ந்தமருதில் இலியாஸ் என்பவர் நடாத்திய(DTP) ரைப் செற்றிங் செய்யும் ஒரு நிறுவனத்திற்குத் தான் எனது முதலாவது வர்த்தக ரீதியான அப்பிளிகேசன் ஒன்றை விற்றேன். கணினி மூலம் அவர் செய்யும் பக்க வடிவமைப்புக்களில் பெருந்தொகையான படங்களைப் பயன்படுத்துவதால் - அவற்றை ஒழுங்கமைத்துப் பார்வையிடவும் - மீண்டும் அதை பேஜ்மேக்கரில் உடனடியாகப் பயன்படுத்தவும் (ACD See போன்ற பிக்சர் எக்ஸ்புளோரர்) அவரிற்கு ஒரு அப்பிளிக்கேசன் தேவைப்படுவதை நான் உணர்ந்தேன். அவர் எனது கம்பியூட்டர் கஸ்டமர். (இன்று விண்டோஸ் இயங்குதளமே அதைச் சிறப்பாகச் செய்யும் எனினும் அந்தநேரத்தின் விண்டோஸ் 95 சரியாகச் செயற்படாது. )
எனது ஆலோசனைக்கு ஏற்ப படங்களைப் பார்வையிடும் ஒரு இமேஜ் வியூவர் ஒன்றை நான் செய்து தர சம்மதித்தார். எனது முதலாவது மென்பொருள் தயாரிப்பு அதுதான். விசுவல் பேசிக் 4.0/5.0 என்று நினைக்கிறேன். அதில் இருந்த picture box மற்றும் dir list etc ஜ பயன்படுத்தி பார்க்கும் படத்தை ஓரு கிளிக்கில் கொப்பி பண்ண ஒரு பட்டனையும் சேர்த்து அழகிய இன்ரர்பேசில் ஒரு பிக்சர் வியூவரை அவரிற்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றேன்.
அந்த நேரத்தில் அது பெரும்தொகை. விண்டோசையே கிட்டத்தட்ட இலங்கைத்திருநாடு முழுவதுமே 100 ரூபாய் பைறேற்றட் சி.டி யில் இருந்து போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அது பெரும்தொகை. எனினும் அவரது வேலை இலகுவானதால் அவரது பின்னூட்டம்(Feedback) மிக நன்றாகவே இருந்தது. நான் கல்முனையில் இருந்து கொழும்பிற்குப் பார்சல் ஆகும்வரை அவர் எனது நல்ல வாடிக்கையாளராகவே இருந்தார்.
அதன் பின்னர் நிந்தவூரில் இயங்கி வந்த பெரிய குளிர்பானக் கம்பனியின் ஏஜண்டிற்கு அவர்களது போத்தல்களை கையாளும்(வெற்றுப்போத்தல்கள் வருதல் போதல்) ஒரு மென்பொருள் தயாரிக்கும் ஓடரைப் பெற்றேன். – அது பெரிய வேலை என்பதால் கொழும்பிலிருந்து அனுபவமுள்ள சொப்ற்வெயார் என்ஜினியர் ஒருவரை தற்காலிக ஒப்பந்தம் பேசி கல்முனைக்கு என்செலவில் இறக்குமதி செய்து – உதவியைக் கேட்டேன்.






