Connecting the dots - Steve Jobs in Tamil
மறைந்த அப்பிள் நிறுவன அதிபர் - இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில் முயற்சியாளர்களில் ஒருவர் - இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத புத்திசாலிகளில் ஒருவர் 'ஸ்டீவ் ஜோப்ஸ்'. உலகின் ரொப் ரென் செல்வந்தர்கள் லிஸ்டில் அடிக்கடி இடம்பிடித்தவர்.
ஆனால் அவர் பிறப்பே பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஸ்டீவ் ஜோப்ஸ் எதிர்பாராத விதமாகக் கருவில் தங்கிய குழந்தை. அப்போது அவரது தாயாருக்குத் திருமணமாகியிருக்கவில்லை. அவர் ஒரு பல்கலைக்கழக மாணவி. அவர் தனது மகனை தத்துக்கொடுக்க விரும்பினார். முதலில் ஒரு சட்டத்தரணி தம்பதியினர் தத்தெடுக்க விரும்பினர்,கடைசித் தருணத்தில் அவர்கள் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பது என முடிவெடுத்தனர்.
தத்தெடுக்கப் பிள்ளையைக் கோரி இருப்போரின் வெயிட்டிங் லிஸ்டில் இரண்டாவதாக இருந்த ஸ்டீவின் வளர்ப்புப் பெற்போருக்கு அடுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இருவரும் பட்டம் படித்தவர்கள் அல்ல. தாய் கல்லுரியை முடிக்கவில்லை, தந்தையோ பாடசாலையைத் தாண்டவில்லை. பட்டதாரிகளிற்கே தனது பிள்ளையைத் தத்துக்கொடுப்பேன் என்று முதலில் முரண்டு பிடித்த ஸ்டீவின் பெற்றதாய்,கடைசியில் தனது மகனை ஒரு பட்டதாரியாக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தத்துக்கொடுத்தார்.
ஸ்டீப் ஜோப்ஸின் வாழ்க்கை இலத்திரனியல் பொருட்களைத் திருத்தும் ஒரு நபரின் வீட்டில் ஆரம்பித்தது. தனது வளர்ப்புத்தந்தையுடன் சேர்ந்து இலத்திரனியல் சம்பந்தமான அறிவை அவர்களது கராஜில் தந்தைக்கு உதவியபடியே கற்றுக்கொண்டார்.
அவர் 17 ஆண்டுகளின் பின் செல்வந்தர்கள் படிக்கும் றீட் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். பல புத்திசாலிகளையும் சிந்தனையாளர்களையும் போலத்தான், ஸ்டீவிற்கு பல்கலைக்கழகப் படிப்பு தனக்குப் பயன்படாது என்பது சில மாதங்களிலேயே புரிந்து விட்டது. ஆறாவது மாதத்தில் கல்வியை தொடருவதை நிறுத்திக்கொண்டார்.
பல்கலைக்கழத்தைக் கைவிட்ட நிலையில், தொழிலும் இல்லாமல் தங்க இடமும் இல்லாமல் மிகவும் துன்பப்பட்டார்.18 மாதங்கள் அந்தச்சூழலிலேயே சுற்றித்திரிந்தார். கொக்கோ- கோலா ரின்களைப் சேகரித்து விற்றால் சில டாலர்கள் கிடைக்கும். அவற்றைச் சிறு செலவுகளிற்குப் பயன்படுத்தினார். கல்லூரியில் நண்பர்களின் ஹாஸ்டல் அறைகளில் தரையில் தூங்குவார். ஒவ்வொரு ஒவ்வொரு ஞாயிறு இரவுகளிலும் சுமார் 14 கிலோ மீட்டர்கள்(7 mi) நடந்து சென்று – (அமெரிக்காவில்) ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி உண்டார். அவர் அதைப்பற்றிச் சொல்லும்போது 'அந்த உணவை மிகவும் விரும்பினேன்'("I loved it" ) என்று சொல்வார்.
