Showing posts with label மாறன் கவிதைகள். Show all posts
Showing posts with label மாறன் கவிதைகள். Show all posts

Tuesday, April 24, 2018

ஞான விளக்கு - என் பிறந்தநாட் பாடல்




கைப்பேசி
கணினி வலை
குறுஞ்செய்தி
என்றொவ்வோர் ஊடகத்தின்
உட்புகுந்தும்
என்
வழித்தடங்கள்
தேடி

உங்கள் தோட்டத்தில்
நோகாது
கொய்து நெய்த
பூங்கொத்தால் என்மேல்
வாழ்த்துமழை
வற்றாமல் தூவும்
குளிர்
மேகத்தோழர்களே..

கவனியுங்கள்..

ங் ஙா..என்ற
மெல்லியல் அகரமோ ,உகரமோ
வகை தெரியாது வாய்மலர
அம்மா முகத்தில்
நிலா பார்த்துச் சிரித்த
அந்தச் சின்ன வயதல்ல
இப்போது
எனக்கு

முப்பதுகளின் மேல்
புதிதாய்ப்பிறக்கும்
ஓவ்வொரு ஆண்டுமே
உயிர்ப்படகில் விழும்
ஒவ்வொரு புதிய
ஓட்டைகள்தானே.

உணரின்..

மூழ்கும் திகதி
முற்கூட்டி அறியாத
பாவி மனிதப்பிறப்பு இது.

காலம் வரைந்த
இந்த ஓவியத்தின்
வர்ணங்களில்தான்
எத்தனை வளர் சிதை மாற்றங்கள்.
பளிச்சிட்ட பல இப்போது
கண்களுக்கே தெரிவதில்லை.

நிலையாமை எனும்
உண்மையின் கரங்கள்
நெஞ்சில் அறையும்
ஒவ்வொரு
நொடியும் .
;
நினைப்புகளை வழி
மறித்து
சித்தனாகச் சில கவிதைக்
கோடுகிழித்தாலும்
பஞ்சு முகில்கள் எனப்
பாரம் இல்லாமல் பறந்து
ஒரு
மோன மொழி தெரிந்த
புத்தனாகும் வழி
இன்னும் புரியாமல்
நிற்க்கும்-என்
பித்த மனசு.

Saturday, September 9, 2017

வைக்கோல் பட்டடை யுத்தம்

நான் ஒன்றும்  மாடல்லத்தான்..
என்றாலும்,
தினசரி
போராட வேண்டியிருப்பது என்னவோ
வைக்கோல் பட்டடை நாய்களுடன்தான்.

நொடியின் பெறுமதி
துளியும் வீணாக்காது வாழ்பவன்
இன்று,
வருடத்தைக்கூட
வருத்தப்படாது ‌தொலைக்கும்
மனிதப்பூச்சிகள்
மத்தியில்  ,
இன்னும் மோசமாய்

பயன்படுத்தாத நாட்கள்
எல்லாம்
செல்லாத (500) ரூபாய் நோட்டாக
வயதெனும் பீரோவில்
இறுக வைத்துப்  பூட்டப்படுகிறது.

ஆண்டில் அரைவாசிக்கு மேல்
அதி
கசப்பு நாட்களையே
என்
காலண்டர்
எப்போதும் காட்டுகிறது.
”அதி” போனால்
மீதிகூட
கசப்பு நாட்கள்தான்
உலக சமுத்திரங்களின் மொத்த
உப்பையும்
என் வாழ்வில்
யாரோ வாரிப்போட்டதுபோல்..  


Tuesday, May 23, 2017

சூனியக்கிழவிக்கு ஒரு மடல் !


நெடுந்துார ஊர் ஆச்சி !

வியத்துப்போய்
நீங்க எழுதிய
வெறுங் கடதாசி   கிடைச்சுது

வள காப்பு வித்து
வயல்காட்டில்  களைச்சுழைச்ச
கைக்காசப் போட்டுத்தான்
கடுதாசி போட்டீக

எனை மாத்த
ராப்பகலா
ஏதேதோ செஞ்சீக

அடியாளு வச்சீக
அரைமணிக்கு ஒரு தடவை
வேட்டைக்கு போ‌றேனா
வெறும்வாய மெல்லுறேனான்னு
வேவுகளும் பாத்தீக

சந்திர முகிப்பேய் தொடங்கி
சவுக்கார்ப்பேட்டை பேய்வரைக்கும்
ஏவி எ‌னைக்குழப்ப
ஏவல் வினை செஞ்சீக

மணிக்கொருக்கா கடுதாசி
வலைமனைக்குள்
மறைஞ்சிருந்து
மட மடன்னு வரைஞ்சீக

யார் வாழ்வில் விளக்கேத்த என்வாழ்வை எரிச்சீக
அடுப்பெரிக்க கொள்ளிக்கு
ஆள்விறகாப் போட்டீக

தர்மத்தைப் புரியாமல்
தார்மீகம் சொன்னீக
மநுநீதி காணாமல் உங்க மன
நீதி கண்டீக

மன்னனுக்கும் குடிகளுக்கும்
மாறுகிற நீதி உண்டு

பொன்னனுக்கும் சுப்பனுக்கும்
பொருந்துவன எல்லாம்
போதிமரப்புத்தனுக்குப் பொருந்திடுமா
சொல்லீக ?

மனக்கணக்கால்
மறுபடியும்   ஒரு வாழ்வை
மண்ணாக்கி போட்டீக

Friday, June 17, 2016

வேர்ச்சுவல் வீரர்கள் ! - ( பேஸ் புக்கும் நம்ம இளைஞர்களும் )



மூஞ்சிக்கு நேராக
முடியாததால்
முகப்புத்தகத்தில் மட்டும்  ”கெத்துக்” காட்டும்
இன்றைய இளைஞர்கள்.


இருட்டு நிறத்தில் உள்ளவனும்
எடிட்டிங் புண்ணியத்தில்
காலைச்சூரியனும்
நாணும்படி
சிவந்து ‌ போகிறான்.

குண்டானவன் மெலிந்தும்
எட்டு நிமிடத்தில் எயிட் பக்ஸ் எடுத்தும்
எத்தனை க‌ோலத்தில் ஏமாற்றுகிறான்.

கற்பனையிற் கயிறு திரிக்கும்
இவர்கள்
எத்தனை லைக்ஸ் எடுக்கிறோம்
என்பதில்தான்
வாழ்வின் வெற்றி இருப்பதாய்
பாவம்..
ஏமாந்து போகிறார்கள்.

கோவில் வாசல்களில்
கையேந்தும் பிச்சைக்காரர் எண்ணிக்கையை
லைக் போடு மச்சான் என்றும் செயார்
 பண்ணு மச்சான் என்றும்
கெஞ்சும்
”பேஸ் புக் பெக்கேர்ஸ் ”
எண்ணிக்கை ஓவர்ரேக் செய்துவிட்டது

பேஸ் புக்கின் ”சுட்ட” ஸ்ரேற்றஸ்களை வைத்து
சுதந்திரப்போர் வீரர்களாகவும்
வைரமுத்துவின் வாரிசுகளாகவும்
தம்மை பில்டப்
செய்துகொள்கிறார்கள்.

Wednesday, January 13, 2016

சாம்பற் குருவியின் வரிமறந்த பாடல்



எனக்கு இருந்தது ஒரு காடு..
முட்களையும் இலைகளையும் முடிந்து..எப்ப‌டியோ..
எனக்கு பிடித்தபடி  அமைத்தேன் கூட்டை.

வரிமறந்த பழைய பாடலை அடிக்கடி
அபஸ்வரத்தில் பாடுவேன்.
நான் மட்டுமே கேட்க.

காலை வி‌டியக் கூவும் கடமை எனக்கில்லை.
எழும்புவேன் எப்பொழுதாயினும்.
சுள்ளெனச்சூரியச்சட்டியின் எண்ணைத்துளி சிந்தியாயினும்.
தினசரி
ஒரு பொழுதில் எழுவேன்.

Tuesday, April 21, 2015

கனவைத் துரத்தும் நாய்கள்.



கனவிலும்
நனவிலும்
எ்னைச் சுற்றி ஊளையிட்டுத்திரியும்
ஒரு கூட்டம் நாய்கள்.

நான் ஒன்றும் மணிவாசகர் இல்லைத்தான்
எனினும..
எனைச்சுற்றி நடப்பது என்னவோ
நரிகளைப் பரிகளாக்கிய கதைதான்.

 இந்த
உயிரின் ஆழம் வரை  செல்லும் ஊளை.
நாய்களுக்குரியதல்ல.
இது நடுக்காட்டில் எங்கோ
பிணம் தின்று கொழுத்த பேய்கள் மொழி.

பேய்களைப்பிடித்து நாய்களாக்கியது யார்.


என் மனசில் இப்போதெல்லாம்  துழாவும் ஒற்றைக் கேள்வி இதுதான்.

பல வேளைகளில்..
நாய்க்கும் நரிக்கும் பிறந்த கலப்பு இனம்போலும் தெரியும்.
அவை ஒன்று, இரண்டல்ல, எண்ணிற் பல.

ஒன்று , எனது  வேகமான நடைகளின் போது காலை இடறி ஓடும்.
இன்னொன்று ,
நடக்கும்  போது கூடவே வரும்.
குறிப்பறிவது போல்   கொள்ளிக் கண்களை  விரித்து
என்மனதை வேவு பார்க்கும்.

 சில வேளை இரண்டு இணைந்து நான் உட்காரும் முன்னே என் ஆசனங்களில் சிறுநீர் கழிக்கும்.

அவற்றில் ஒன்று உடலால் உராய்ந்து என் சுற்றுப்புறங்களை
 சுத்தம் செய்வதாய் பாவ்லா  காட்டுவதும் உண்டு. 

விலகிக் கண்மூடின்
என்
கனவுகளில்
எப்போதும் வரும் அதே ஒற்றைப் பனைக் காட்டில்
ஓலமிட்டு
நான் ஓட
பின்னால்
இவற்றில் சில.

என் நன்மைக்காக இந்த சாத்தான்களை
இங்கே அனுப்பியதாய்
அசரீரி கேட்டது ஒரு நாள்.

நான் நம்பவில்லை
தேவ வசனங்களை எந்த சாத்தான்
எப்படித்தான் ஓதினாலும்
அது
திறக்கப்போவது என்னவோ
நரகத்தின் வாயிலைத்தான்.

அழையாமல் வந்த
இநத அசிங்கப் பிறவிகள்
அடிக்கடி  கடித்ததில்
கிழிந்து தொங்குகிறது

அழுக்குத்துணியாக
என்
தனிமனித வாழ்வு.


Wednesday, February 4, 2015

பிறத்திகளிற்கு என்ன கவலை !




உயிர்போனாலும்
தம்பார்வையில் தம்பிக்கு இதுதான் நல்லது
என்று
வெம்பியவன் மனக்கடலின் துளியளவின்
துளி 
கரிக்குமா ,இனிக்குமா
எனத்தெரியாமலே
சிலாகிக்கும்
ஒரு கூட்டம்.

பக்குவம் செய்வதாய்
சொல்லி
சட்டியில் கிளறி
அடுப்பில் போட்டகதை


எந்த உறவும் இடை
வெளிகளிற்குட்பட்டதே.
 தெரியாமல்
தனிமனித வாழ்வில்
தடியோடு புகுந்தது பிறத்தி.

அடித்த அடியில்
விழுந்த பிணங்கள் மூன்று
நான்கு.

அரைவேக்காடுகளின் அவசரத்திட்டம்
முள்ளில் விழுந்த சீலையை
மூர்க்கமாய்
இளுத்த அணி.

சிகிச்சை வெற்றி
சீக்காளி போய்ச்சேர்ந்தான்.

இந்த பரிசோதனை
முடிவுகளில்
வெற்றியில்லாதது
வேதனையில்லை.

அடுத்த(வன்) சோதனையில் அவை திருத்தப்படும்.

பிறத்திகளிற்கு என்ன கவலை
வீழ்ந்த
பிணங்களைப்பற்றி.

Wednesday, December 3, 2014

மின்னியில் சுற்றிய மரணம்.

நாற்புறமும்
நகர இடமின்றி
நம்பிக்கையின் வெளி குறுகிய
பாதையில்
நான் பரிதவிக்கும்
இந்தப்பொழுதில்....
பருவங்கள் மாறும்போதெல்லாம்
என் பசிகளுக்கு பந்திவைத்துப்பரிமாறிய
உன்னிடம்,
சரக்கு முடிந்து,
திடீரென
வெறுங்கோப்பையான என் வாழ்வில்
இனி ஊற்ற 
மதுவின்
ஒரு துளியேனும்
இல்லையென்றால்..
வருந்தாதே......
எனக்கு பரிசளிக்க
மரணத்தை
அழகிய மின்னியில்
சுற்றி அனுப்பி வை.
ஒரு குழந்தையின்
ஆர்வத்துடன் அதைப்பிரித்து
அனுபவிக்க  காத்திருக்கிறேன்.

- ச.மணிமாறன்-



****


மின்னி- மின்னிடும் பொதியிடும் காகிதம்
 

Thursday, October 30, 2014

என் காலடியில் இடறிய சிப்பி


தலையில் கொஞ்சம் முடி இருந்த நாட்களில் எழுதிய கவிதை இது.. ஆயிரம் அர்த்தம் செய்து கொள்ளுங்கள். எனக்கு என்ன.:)  தமிழ்தானே  வாழ்கிறது..:)




நீ எந்த அலையில்
கரையாெதுங்கிய சிப்பியோ தெரியாது ..
எனக்காக உனக்குள் ஒரு முத்துப்பெட்டகத்தையே
 ஒளித்து வைத்திருந்தாய்.

அடுத்த அலைக்கு முன்னர்
உ்ன்னை
அவசரமாய் பொறுக்கிய
ஒருவன் நான்.

நீ நத்தை ஜாதி என்கிறாய்... உன்னை.
உன்
முக ஜோதியை
‌விளக்கிலே பிறந்தது என்கிறாய்.

உனக்கே தெரிவதில்லை
என் வானம் முழுவதும்
வியாபித்திருக்கும்
ஒரே
வெண்ணிலா
நீ
என்று.

ச.மணிமாறன்.
( தயவு செய்து சுடுவதானால் என் பெயரையும்  சேர்த்தேு சுடுங்கள் )

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை