Saturday, September 4, 2021

ஆளில்லாத கடையும் ஆயிரம் கப் ரீயும்!



மதமென்னும் பெயரால் சுரண்டல்களும் - தேவையே இல்லாத ஆணி பிடுங்ககல்களும் -   "சாமி கண்ணைக்குத்தலாம்.." என்ற சந்தேகத்தில் வழங்கப்படும், கோயில், கட்டடம் சுண்ணாம்புக்கான கோடிக்கணக்கான  நன்கொடைகளும் - 'கொழுத்த முதலைகள்' அன்றி, சாதாரண மனித உயிர்கள் பயன்பெறாத செலவுகளும் இந்த ஒரு வீடியோ போதும் உணர. 

Tuesday, August 10, 2021

சிரித்து வாழ வேண்டும். ! - சிறீ விசாகராஜா ஆசிரியர்

 யாழ் இந்துவின் பொக்கிஷத்தில் ஒரு முத்து - சிறீ விசாகராஜா ஆசிரியர். வாழும் முறையை இவரிடமும் கற்கவேண்டும். 


 நெஞ்சில் வஞ்சமில்லாத சிரிப்புடனும் எப்போதும் தேனி போன்ற சுறுசுறுப்புடனும் காணப்படக்கூடிய  ஆசிரியர் 'விசாகர்' என அறியப்பட்ட சிறீவிசாகராஜா அவர்கள். இந்த நல்ல மனிதர் அண்மையில் மீளாத் துயில் கொண்டார். 

நான் அவரிடம் படித்திருக்கிறேன். அவரிடம் கற்ற அனுபவத்தைவிட  அவரது அணுக்கம் தரக்கூடிய மகிழ்ச்சி,  நிம்மதி என்பனவே எனக்கு அவரை எண்ணியதும் நெஞ்சில் நிறைகிறது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் முதல் தகுதி என்று எண்ணுகிறேன்.

தன்னுடைய இரத்த அழுத்த நோயால் வரும் அவதியை பச்சிளம் பாலகர்களது கையைத் திருகியும் கண்டபாட்டிற்கு அடித்தும் காட்டும் சண்முகலிங்கம் சேர், பிள்ளைகளின் பிஞ்சு விரல்களை நெரித்து மகிழும் செட்டியார் சோமசுந்தரம் சேர், கண்ட இடத்தில் சிறு தவறைக் கண்ட மாத்திரத்தில் கன்னம் கன்னமாக கைகளாலையே மேனியா போல் பின்னியெடுக்கும் தவமணிதாசன் சேர் முதலியவர்களால் தினசரி பாடசாலை செல்வதே இராணுவ முகாமிற்கு பயிற்ச்சிக்குப்போவதுபோல் மன அழுத்தம் தரக்கூடியதாக என்போன்ற குறும்பு செய்யும் மாணவர்களிற்கு  இருந்தது .

Thursday, May 20, 2021

சின்ன வீடு - பெரிய வீடு





"ரைல்ஸ்சுக்கும் பாத்ரூம்வெயாருக்கும் மட்டும் நாலு மில்லியன் முடிஞ்சுது மச்சான்" என்று தொலை பேசியில் பேசும்போது அடுத்த இரண்டு தெரு தள்ளியிருக்கும் வங்கி அதிகாரியான நண்பன் சொன்னான்.

இன்னொரு நண்பனின் மாளிகை வீட்டின் படங்களை அதைக்கட்டிய நிறுவனம் ஃபேஸ்புக்கில் போட்டு நாம்தான் கட்டினோம் என விளம்பரப்படுத்திய போது அதன் அழகை நானும் படங்களில் இரசித்தேன்.

"கலம்பு (Colombo)-7" ஏரியா மினிஸ்டர் மார் வீட்டு Gate போலவே செய்து போட்டிருக்கிறேன் என்று ஒரு மகாவைத்திய நண்பன் ஹொட்டேல் பட்ஜ்மேட் சந்திப்பு ஒன்றில் சொன்னான்.

இப்படி பல பல மாளிகைகள் நம் நண்பர்கள் பலருக்கு.

என் வீட்டில் இவர்களில் பலர் பல விருந்துகளில் கலந்து சிறப்பித்திருந்தார்கள் (விருந்து மறந்து சில நாட்களில் கோல் வரும் : "அடுத்த பார்ட்டி எப்ப மச்சான்?"- no outgoing, only incoming :) )

Thursday, November 19, 2020

Tamil Psychology Youtube Channel - Learn psychology in Tamil .தமிழில் உளவியல் வீடியோக்கள் !


Tamil Psychology Tamil Youtube Channel (Click here)


அனைத்து மனிதர்களுமே தம்வாழ்நிலைக்கு ஏற்ற அளவிற்கான உளவியலை இயற்கையாகவே அறிந்தவர்கள்தான்.

மனம் மற்றும் நடத்தை பற்றிய விஞ்ஞான ரீதியான கல்வியே உளவியல் ஆகும்.

சைக்('psyche') என்ற சொல் கிரேக்கத்தில்- உயிரைக் குறிக்கும், லொகோஸ் என்பது கற்றல்('discourse or to study')எனப்பொருள் படும், எனவே Psychology என்பது உயிரைப்பற்றிக் கற்றல் என்று பொருள்படும். 

மனம் பற்றிய சிந்தனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்பட்டது. எனினும்  உளவியல் துறை என்று ஒன்று முறைப்படுத்தப்பட்டு சுமார் 150 (1879) வருடங்கள்தான் ஆகின்றன. இரசாயனவியல்,பௌதிகம் போன்ற பல துறைகளுடன் ஒப்பிடும்போது உளவியல் துறை தவழ்ந்து வரும் ஒரு குழந்தை என்று சொல்லலாம். (1879 - ஜேர்மானிய ஆய்வாளர் வுண்ட் என்பவரால் உளவியல் ஆய்விற்கான ஆய்வுகூடம் அமைக்கப்ட்ட ஆண்டு இது )



ஆனால் பொதுமக்கள் மத்தியில் உளவியல் துறை பற்றிய பல தவறான புரிதல்களும் , தேவைக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பும் உள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக "உளவியல் படித்தவர் அடுத்தவர் மனதைப் புட்டுப் புட்டு வைப்பாராம்.." போன்ற கூற்றுக்களும் ,'உளவியலாளர்கள் எல்லோருமே ஆழ்மனதில் புகுந்து பல அதிசயங்களை நிகழ்த்துவோர்' என்ற நம்பிக்கைகளும்(முற்பிறப்பை அறிதல் etc..) மக்கள்  மக்கள் மத்தியில் நிலவுகின்றன. 

Thursday, July 9, 2020

"முஹம்மது பின் லேடன் இராவணூஸ்" ஆகிய நான்...!




ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னை பள்ளியிலிருந்து வந்த பாங்கு ஓசை விளிக்க வைத்தது. நம்ம ஏரியாவில் பள்ளியே கிடையாதே அப்புறம் எப்படி இப்படி பாங்கு பறிகிறது? என்று எண்ணியபடியே எழுந்து உட்கார்ந்திருந்தேன். 

சோம்பல் முறித்தபடியே எதேச்சையாக எனது உடுப்பைக் கவனித்ததும் நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன்.வெள்ளைக்கலர் ஜிப்பா போட்டிருந்தேன், உள்ளே சாரம்(கைலி) கட்டியிருந்தேன். அதிர்ச்சி மாறாமலே முகத்தைத் தடவிப்பார்த்தால் மீசையைக் காணோம் ஆனால் தாடி பஞ்சமில்லாமல் காடாகக் கிடந்தது. நான் இப்போது இருப்பது எனது அறையும் அல்ல எனது வீடுமல்ல என்பதும் புரிந்தது. அலறியடித்து எழுந்தவுடன் எதிரே இருந்த இராட்சசக் கண்ணாடியொன்றில் எனது உருவம் (அதே மொட்டைமண்டை) ஜிப்பா அணிந்து தாடியுடன் அரேபிய ஷேக் போலவே தோன்றியது.

இது கனவா ? நனவா? என்ன நடக்கிறது நமக்கு ? என்று புரிய முயற்சித்தபடியே சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த அறை படு அன்னியமானது. அங்கு நான் படுத்திருநத கட்டில் பல வேலைப்பாடுகள் நிறைந்த வாழ்நாழில் கண்டிராத மரக்கட்டில் ஐந்து பேர் படுக்கலாம். அந்த அறை முழுவதும் பெரிய பித்தளைப் பாத்திரங்கள், அன்னம்போலவும் , சிங்கம் போலவும் செய்யப்பட்ட நாற்காலிகள் கிடந்தன, என் கட்டிலுக்குக் கீழே நிலத்தில் ஓலைச் சுவடிகள் கிடந்தன.இஸ்லாமியர்கள் அணியக்கூடிய ஒரு தொப்பியும் அருகில் கிடந்தது.

Sunday, May 24, 2020

ரியூசன் எனும் அருவருப்பு !



பள்ளியில் படித்த அதே பாடங்களை மீண்டும் கற்க ஓடி – மேலதிக திறன்களையோ, நற்பழக்க வழக்கங்களையோ, விளையாட்டுக்கள், போட்டிகளில் பங்குபெறல், உறவினர் வீடு செல்லல்(உறவு பேணல்),பெற்றோருடன் பயணம் செய்தல் ,வாழ்வின் ஏனைய கூறுகளை அறிதல் ஆகியவற்றை செய்யவோ அனுமதிக்காத ஓய்வொழிச்சல் இன்றி மாணவர்களை வரவழைத்து தன் கட்டில் வைத்திருக்கும் அருவருக்கத்தக்க ரியூசன் கலாச்சாரத்தை அதிகம் வெறுப்பவன் நான்.

பாடசாலையில் குறிப்பிட்ட பாடம் நடாத்தும் ஆசிரியர் சரியில்லை என்றாலோ அல்லது குறிப்பிட்ட சில பாடங்கள் மண்டையில் ஏறுவது குறைவாக இருந்தாலோ அதைத் தேடி வெளியில் கற்றுக்கொள்வது தவறில்லை. ஆனால் சமய பாடம் உட்பட,பாடசாலையில் படிப்பிக்கப்படும் அத்தனை பாடங்களுக்கும் - பாடசாலை விட்டு வந்ததும் சாப்பாட்டை அனுபவித்துச் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அள்ளி எறிந்து விட்டு இடைவேளையே இல்லாது ரியூசன் எனப்படும் பெரும்பாலும் போதிய கழிவறை வசதிகள் கூ;ட இல்லாத சுகாதாரமற்ற வெறும் வாங்கு மேசையில் உட்கார்ந்து ஆசிரியர்கள் சொல்வதை லயிப்பின்றி கேட்க மாணவர்களை கட்டாயப்படுத்தும் அமைப்பு மிகவும் மோசமானது. 

(2 மணி வரை பாடசாலை 3 மணி முதல் 6 வரை ரியூசன் - பின்னர் ஆறிலிருந்து படுக்கும் வரை பாடசாலை மற்றும் ரியூசன் வீட்டுப்பாடங்கள்) 

இவற்றில் பெரும்பாலானவை இன்றும் எமது பிரதேசத்தில் கொட்டில்கசளாக இருந்தாலும் - பாடசாலைக்குச் சமனாக கட்டட வசதிகளோடு -பிறான்டட் ரீ சேர்ட் மாணவர்களுக்கு கட்டாயமாக அணிவித்து – ரியூசன் வந்து செல்ல சொந்தமாக பஸ் சேர்வீசே நடாத்தும் ரியூசன்களும் உண்டு. அதைப் பார்த்து நான் அதிர்ந்திருக்கிறேன்.  தேவையே இல்லாது சகல பாடங்களையும் மீளவும் கற்க வைத்துக் காசு பார்க்க நவீன முறையில் மேற்கொள்ளும் மார்க்கெட்டிங் உத்தி.

Thursday, May 21, 2020

சொஃப்ற்வெயாரில் சொருகிய ஆப்பு !


Any software developer out there - you guys suck !

சாய்ந்தமருதில் இலியாஸ் என்பவர் நடாத்திய(DTP) ரைப் செற்றிங் செய்யும் ஒரு நிறுவனத்திற்குத் தான் எனது முதலாவது வர்த்தக ரீதியான அப்பிளிகேசன் ஒன்றை விற்றேன்.  கணினி மூலம் அவர் செய்யும் பக்க வடிவமைப்புக்களில் பெருந்தொகையான படங்களைப் பயன்படுத்துவதால் - அவற்றை ஒழுங்கமைத்துப் பார்வையிடவும் - மீண்டும் அதை பேஜ்மேக்கரில் உடனடியாகப் பயன்படுத்தவும் (ACD See போன்ற பிக்சர் எக்ஸ்புளோரர்) அவரிற்கு ஒரு அப்பிளிக்கேசன் தேவைப்படுவதை நான் உணர்ந்தேன். அவர் எனது கம்பியூட்டர் கஸ்டமர். (இன்று விண்டோஸ் இயங்குதளமே அதைச் சிறப்பாகச் செய்யும் எனினும் அந்தநேரத்தின் விண்டோஸ் 95 சரியாகச் செயற்படாது. )

எனது ஆலோசனைக்கு ஏற்ப படங்களைப் பார்வையிடும் ஒரு இமேஜ் வியூவர் ஒன்றை நான் செய்து தர சம்மதித்தார். எனது முதலாவது மென்பொருள் தயாரிப்பு அதுதான். விசுவல் பேசிக் 4.0/5.0 என்று நினைக்கிறேன். அதில் இருந்த picture box மற்றும் dir list etc ஜ பயன்படுத்தி பார்க்கும் படத்தை ஓரு கிளிக்கில் கொப்பி பண்ண ஒரு பட்டனையும் சேர்த்து அழகிய இன்ரர்பேசில் ஒரு பிக்சர் வியூவரை அவரிற்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றேன். 

அந்த நேரத்தில் அது பெரும்தொகை. விண்டோசையே கிட்டத்தட்ட  இலங்கைத்திருநாடு முழுவதுமே 100 ரூபாய் பைறேற்றட் சி.டி யில் இருந்து போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அது பெரும்தொகை. எனினும் அவரது வேலை இலகுவானதால் அவரது பின்னூட்டம்(Feedback) மிக நன்றாகவே இருந்தது. நான் கல்முனையில் இருந்து கொழும்பிற்குப் பார்சல் ஆகும்வரை அவர் எனது நல்ல வாடிக்கையாளராகவே இருந்தார்.

அதன் பின்னர் நிந்தவூரில் இயங்கி வந்த பெரிய குளிர்பானக் கம்பனியின் ஏஜண்டிற்கு அவர்களது போத்தல்களை கையாளும்(வெற்றுப்போத்தல்கள் வருதல் போதல்) ஒரு மென்பொருள் தயாரிக்கும் ஓடரைப் பெற்றேன். – அது பெரிய வேலை என்பதால் கொழும்பிலிருந்து அனுபவமுள்ள சொப்ற்வெயார் என்ஜினியர் ஒருவரை தற்காலிக ஒப்பந்தம் பேசி கல்முனைக்கு என்செலவில் இறக்குமதி செய்து – உதவியைக் கேட்டேன். 

Tuesday, May 19, 2020

மை நைஜீரியன் பிரதர் அன்ட் மில்லியன் டாலர்ஸ்




2004 ஆம் ஆண்டில் எனக்கொரு ஈமெயில் வந்திருநதது. கொழும்பில் நமது கணினி வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாட்டின்  

கொடிய யுத்த சூழ்நிலைகளால் - வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கபட்டுக்கொண்டிருந்த சமயம். இரவு வெகுநேரமாகத் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்துவிட்டு - அருகிலிருந்த லப்ரொப்பில் ஈமெயிலைச் செக் பண்ணிக்கொண்டிருந்தேன். Financial Proposal என்ற தலைப்பில் ஒரு ஈமெயில் வந்திருந்தது.

நாமும் பைனான்ஸ் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது யாரோ பைனானஸ்சியல் புரபோசால் எழுதுகிறானே என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டே அதைத் திறந்து பார்த்தேன்.

பழம் நழுவிப்பாலில் விழுந்து அப்புறம் குலாப் ஜாமூன்,நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்புபாதாம்,பிஸ்த்தா எல்லாம் சேர்ந்து தானாகலே வாயில் வந்து ஊட்டியது போல ஒரு செய்தி ஈமெயிலில் இருந்தது.

அந்த ஈமெயிலின் சுருக்கம் இதுதான்:

Tuesday, May 12, 2020

ஸ்டீவ் ஜோப்சும் - சில புள்ளிகளும்

Connecting  the dots - Steve Jobs in Tamil

மறைந்த அப்பிள் நிறுவன அதிபர் - இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில் முயற்சியாளர்களில் ஒருவர் - இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத புத்திசாலிகளில் ஒருவர் 'ஸ்டீவ் ஜோப்ஸ்'. உலகின் ரொப் ரென் செல்வந்தர்கள் லிஸ்டில் அடிக்கடி இடம்பிடித்தவர்.



ஆனால் அவர் பிறப்பே பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஸ்டீவ் ஜோப்ஸ் எதிர்பாராத விதமாகக் கருவில் தங்கிய குழந்தை. அப்போது அவரது தாயாருக்குத் திருமணமாகியிருக்கவில்லை. அவர் ஒரு பல்கலைக்கழக மாணவி. அவர் தனது மகனை தத்துக்கொடுக்க விரும்பினார். முதலில் ஒரு சட்டத்தரணி தம்பதியினர் தத்தெடுக்க விரும்பினர்,கடைசித் தருணத்தில் அவர்கள் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பது என முடிவெடுத்தனர்.

தத்தெடுக்கப் பிள்ளையைக் கோரி இருப்போரின் வெயிட்டிங் லிஸ்டில் இரண்டாவதாக இருந்த ஸ்டீவின் வளர்ப்புப் பெற்போருக்கு அடுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இருவரும் பட்டம் படித்தவர்கள் அல்ல. தாய் கல்லுரியை முடிக்கவில்லை, தந்தையோ பாடசாலையைத் தாண்டவில்லை. பட்டதாரிகளிற்கே தனது பிள்ளையைத் தத்துக்கொடுப்பேன் என்று முதலில் முரண்டு பிடித்த ஸ்டீவின் பெற்றதாய்,கடைசியில் தனது மகனை ஒரு பட்டதாரியாக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தத்துக்கொடுத்தார்.

ஸ்டீப் ஜோப்ஸின் வாழ்க்கை இலத்திரனியல் பொருட்களைத் திருத்தும் ஒரு நபரின் வீட்டில் ஆரம்பித்தது. தனது வளர்ப்புத்தந்தையுடன் சேர்ந்து இலத்திரனியல் சம்பந்தமான அறிவை அவர்களது கராஜில் தந்தைக்கு உதவியபடியே  கற்றுக்கொண்டார்.

அவர் 17 ஆண்டுகளின் பின் செல்வந்தர்கள் படிக்கும் றீட் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். பல புத்திசாலிகளையும் சிந்தனையாளர்களையும் போலத்தான், ஸ்டீவிற்கு பல்கலைக்கழகப் படிப்பு தனக்குப் பயன்படாது என்பது சில மாதங்களிலேயே புரிந்து விட்டது. ஆறாவது மாதத்தில் கல்வியை தொடருவதை நிறுத்திக்கொண்டார். 


பல்கலைக்கழத்தைக் கைவிட்ட நிலையில், தொழிலும் இல்லாமல் தங்க இடமும் இல்லாமல் மிகவும் துன்பப்பட்டார்.18 மாதங்கள் அந்தச்சூழலிலேயே சுற்றித்திரிந்தார். கொக்கோ- கோலா ரின்களைப் சேகரித்து விற்றால் சில டாலர்கள் கிடைக்கும். அவற்றைச் சிறு செலவுகளிற்குப் பயன்படுத்தினார். கல்லூரியில் நண்பர்களின் ஹாஸ்டல் அறைகளில் தரையில் தூங்குவார். ஒவ்வொரு ஒவ்வொரு ஞாயிறு இரவுகளிலும் சுமார் 14 கிலோ மீட்டர்கள்(7 mi) நடந்து சென்று – (அமெரிக்காவில்) ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி உண்டார். அவர் அதைப்பற்றிச் சொல்லும்போது 'அந்த உணவை மிகவும் விரும்பினேன்'("I loved it" )  என்று சொல்வார். 

Thursday, May 7, 2020

படிக்காமல் படிப்பித்த கம்பியூட்டர் கோர்ஸ்

Stories for young entrepreneurs 02 (Learning is everything)  

நஸீபா எனது முதல் மாணவி



எனது முதலாவது மாணவி நஸீபாவும் அவரது குழந்தையும்-2019


1996 காலப்பகுதியில் என்கையில் ஒரு பழைய 386 கம்பியூட்டர் சிக்கியது. அதன் கட்டமைப்பைக்கேட்டால் இன்று பலருக்குச் 'சிப்புச் சிப்பாக' வரலாம். 33 Mhz வேகம்,40 MB ஹார்ட் டிஸ்க்,128 KB(As per my memory) மெமறி. ஆதனை ஆன் செய்து குளித்துமுடித்து வந்த பின்னர்தான் அது ஸ்ராட் ஆகி முடித்திருக்கும் அப்படி செத்த சிலோ.

ஆனாலும் அது எனக்குக் கனவுக்கன்னி, முதல் ஆசான் ,வழிகாட்டி ,வெற்றிக்கான ஏணிப்படி. என் இலட்சியக்கனவுகள் எல்லாவற்றிற்கும் 'அப்படியே ஆகட்டும் ' சொன்ன தேவதை.


எனது ஒன்றுவிட்ட அண்ணன் அதனை எனது மச்சாளுக்கு அனுப்பி-அவர் வீட்டிற்குச் அது செல்ல காத்திருந்த சமயத்தில் - அவனது  பெற்றறோருக்கும் மச்சாள் வீட்டுக்காறரிற்கும் ஏதோ கருத்துவேறுபாடு ஏற்பட்ட ஒரு  உறவுச் சுனாமிச்சூழ்நிலையில் எந்த அலையோ அடித்தொதுக்கி இறுதியாக என் கைசேர்ந்த கம்பியூட்டர் இது.

அந்த நேரத்திலேயே அது பழைய மொடல். ஆனாலும் இலங்கையே கம்பியூட்ர் பற்றி வியந்து பார்த்துக் கற்றுக்கொண்டிருந்த அந்தக்காலத்தில்(1996/..) சாதாரணர்களிற்கு அதன் வகை தொகை எல்லாம் இன்றிருப்பதுபோல் புரியாது. கம்பியூட்டர் என்றால் கம்பியூட்டர்தான்.

கொழும்பு மனிங்பிளேஸ் அடுக்குமாடியில் எனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தேன். கம்பியூட்டர் கைவரப்பெற்றாலும் கற்பதற்குப் பணமிருக்கவில்லை. இந்தக் கம்பியூட்டர் எனக்கு என்று முடிவாக முன்னர் 4-5 மாதங்கள் நான் தங்கியிருந்த அறையில்தான் இருந்தது. நடுச்சாமத்தில் பெரியம்மா பெரியப்பா உறங்கிய பின்னர், கம்பியூட்டரை ஆரம்பித்து அதில் வரும் டொஸ் புறம்ற்றில்(DOS prompt) என்ன செய்வதென்று தெரியாது விழித்துக்கொண்டிருப்பேன்.

MS DOS prompt - இருட்டு ரூமில கறுப்புப் பூனையக் கண்டுபிடி :)

அந்தக்கம்பியூட்டர் பல இலட்சங்கள் இருக்கும் என்று எண்ணி முதலில் அதை விற்பதற்கு முயன்றார் பெரியப்பா. அதனைப் பார்க்க வருபவர்கள் அதனது கறுப்புத்திரையில் Dir என்று அடிப்பதையும் Win என்று அடிப்பதையும் அதை அடித்ததும் அது கலர் திரையுடன் பல அற்புதங்கள் புரிவதையும் கண்டேன்.

வந்தவர்கள் 15 ஆயிரத்திற்கு மேல் கேட்கவில்லை  எனவே அது விற்பனையாகாமல் தப்பிவிட்டது.


அன்று இரவு கம்பியூட்டரை ஆரமபித்தேன் Win என்று அடித்தேன் ஆஹா வின்டோஸ்(வேர்க் குறூப்)என்ற அற்புதம் (Version 3.1) கண்ணில் பட்டது. ஆங்கில அறிவும் எதையும் உய்த்துணரும் தன்மையும ஏற்கனவே இலத்திரனியல் துறையிலும் தொழில்நுட்பக்கருவிகளிலும் கொண்ட பேராவலும் அது பற்றி நான் வாசித்திருந்த புத்தகங்களும் சேர்ந்து எனக்கு சொல்லிக் கொடுக்கத்தொடங்கின.

Tuesday, May 5, 2020

கொழும்புக்கு வந்த சோதனை !


பாத்ரூமுக்குள் நண்பனின் பகீர் அனுவபம் !

கடும் யுத்த சூழலில் கொழும்புக்கு வந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபின்னர் நடைபெறும் ஆங்கில வகுப்பிற்காக(GELT) காத்திருந்த காலங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்தன.

தினசரி சந்தித்துக்கொள்ளும் எம் நட்புவட்டத்தில் சுமார் – 5-6 நபர்கள் இருப்பார்கள். என்னைத்தவிர அதில் பெரும்பான்மை, மெரிட்டில் கொழும்பு மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர்கள்.  


நாங்கள் தினசரி  வெள்ளவத்தைப் போலீஸ் ஸ்டேசன் அருகில்,ஹாமேர்ஸ் அவெனியூவில் உள்ள  நண்பன் நாகரூபன் வீட்டில் ஒன்று கூடுவோம்.வந்து நாலு மாதங்களின் பின், ஒரு நாள் வழமைபோல் நாகரூபன் வீட்டில் நண்பர்களது அலட்டல் கச்சேரி போய்க்கொண்டிருந்தது. என்னருகே அமர்ந்திருந்த நண்பன் முருகன்,(சத்தியமாய்ப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) முகத்தை படு சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னான்:

Sunday, May 3, 2020

கம்பசுக்குப்போய் கம்பியூட்டர் விற்ற கதை

Stories for young entrepreneurs 

தினசரி வெயிலில் கடும் ஓட்டம்-எரிந்த தோற்றம்
My Kalmunai office - See the plants ,which was my passion

அப்போது நான் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவன் - உழைத்தே என் பிழைப்பை பார்க்கவேண்டிய யுத்தகாலச் சூழ்நிலை.முட்டிமோதி கம்பியூட்டர் ஒன்றை வைத்து வகுப்புக்கள் எடுக்க ஆரம்பித்திருந்தேன்.(அந்தக் கம்பியூட்டர் கிடைத்தது பெரும் கதை - பின்னர் வரும்)

அதற்கிடையில் பல்கலைக்கழக மட்டத்திலேயே பேர்சனல் கம்பியூட்டர் ஒன்றை சொந்தமாக வைத்திருந்த மாணவன் என்ற அடிப்படையிலும் நான் மிகப்பிரபலமடைந்திருந்தேன். (1997)

"நீ என்ன புலியா? உளவுபாக்கவா யாழ்ப்பாணம் விட்டு இந்தக் கம்பசுக்கு வந்தனீ,இது பிரபாகரன் தந்த கம்பியூட்டரா ? "என்று அன்பான விசாரிப்புக்களும் அடிக்கடி நடக்கும்.

கொழும்பில் எனது நண்பனொருவன் கம்பியூட்டர்களை உதிரிப்பாகங்களாக வாங்கி ஒன்றாகப்பூட்டி விற்பனை செய்துவந்தான். கம்பியூட்டர் அசெம்பிளிங் என்பது ஏதோ என்ஜினியரிங் லெவலில் பார்க்கப்பட்ட நேரம் அது.

எனது பல்கலைக்கழக கணினி விரிவுரையாளர் திரு.மகேந்திரன் என்பவர் ஒரு அற்புதமான மனிதர். அப்போது அம்பாறை மின்சார சபையின் பிரதம பொறியியலாளராகவும் எமக்கு வருகைதரு விரிவுரையாளராகவும் இருந்தவர். மனித நேயர்.

வாழ்க்கையில் தொழில்ரீதியாகவும் முன்னேற நான் போராடிக்கொண்டிருந்த நேரம் அது. என் முயற்சிகள் அவரிற்குத்தெரியும். அவரிற்குப் பிடித்தமான மாணவன் நான். அவர் என்னை ஒருநாள் அழைத்து "டேய் நீ கொம்பியூட்டர் எடுத்துக்கு டுக்கிறனியோடா ?' (கொழும்பிலிருந்து) எனக்கேட்டார், தயங்காமல்  "ஓம் சேர்". என்ற முதலாவது வெற்றிக்கான பொய்யைச் சொன்னேன்.(எனது கொழும்பு நண்பனை நினைவில் வைத்து)

Friday, May 1, 2020

உங்க பேஸ்டில் உப்பு இருக்கா ?



நீங்கள் ரோஸ் கலர் பற்பொடியில் பல் தீட்டிய தலைமுறையா ? நாங்கள் எல்லாம் குழந்தைகளாக இருந்தபோது பற்பொடியால்தான் பல் தீட்டுவோம். எங்களது பாட்டி உப்புக்கலந்த கரியால் பல் தீட்டுவார். மாமா , சித்தப்பா போன்றோர் வேப்பங் குச்சியாலும் பற்பொடியாலும் கலந்து காலையில் பல் தீட்டுவதை நேரம் எடுத்து ஏதோ ஜிம்னாஸ்டிக் சாகசம் போலச் செய்வதைக் கண்டிருக்கிறேன்.

அப்போது கோபால் பற்பொடியும் பின்னர் உள்ளுர் தயாரிப்பான அண்ணா பற்பொடியும் மிகப்பிரபலம். ஒரு வகையான ரோஸ் நிறத்துக்கும் சிவப்பிற்கும் இடையிலான நிறத்திலிருந்கும் பற்பொடியும் அது தரும் இனிப்புச் சுவையும் இன்னும் மனதில் நிற்கிறது.நமக்குப் பல நாட்கள் பிரேக் பாஸ்ட்டே பற்பொடிதான் (தின்னுடுவேன் சார்).

Thursday, April 30, 2020

கண்ணீர்த்தேசம் - காதல் கவிதையும் கதையும்.


முன்னுரை: இது ஒரு சின்னப்பயலின் காதல் கதை அந்தச் சின்னப்பயலால் 17 வயதில் எழுதப்பட்டது எனவே குறைபாடுகளை பாலமை கண்டு ஒதுக்கவும்.

உயர்தரம் இரண்டாம் வருடம் படிக்கும்போது,ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்ட கவிதைக் காதல் வரலாறு இது. எனது நண்பன் சுவர்ணன் இதை வைத்திருந்து சில மாதங்களின் முன் பிரான்சிலிருந்து வருகை தந்தபோது எதிர்பாராத பரிசாக   வழங்கியிருந்தான்.


நண்பன் நாகரூபன் வீட்டு மேல்மாடியில் வைத்து நான் வாசித்துக்காட்டியபோது எங்களுடன் நட்புடன் பழகும் அவனது அம்மாவின் கண்கள் கலங்கியிருந்தது இன்னும் நினைவிருக்கிறது.


அந்தக்காலத்தில் வைரமுத்து எழுதிய கவிதைப்புத்தகங்களை ஒன்றுவிடாது படித்து(சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் முதல் கண்ணீர் தேசம் வரை .. ) – அவரது நீண்ட பாவடிவங்களில் கதை சொல்லும் தன்மையை ஒத்து உருவாக்கப்பட்டது இது. எனவே இவை எல்லாம் 100 வீதம் கவிகைள் அல்ல எனினும் இவற்றில் 100 வீதம் கவிதைகளும் உள்ளன. இதை 'உரையிடையிட்ட செய்யுள்' எனலாம். கதை சொல்வதற்காக சில இடங்களில் வசனங்கள் வந்து உட்கார அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

முன்னைக்கு கவிதையும் தமிழும் என்னுள் வளர்ந்துவிட்ட இந்த வயதில் திருத்தங்கள்  தெரிகின்றன எனினும்  மாற்றங்களில்லாமல் கையெழுத்துப்பிரதியை  தட்டச்சு செய்துள்ளேன். அந்தக் காலத்தை மீளுருவாக்கம் செய்யும் ஒரு முயற்சி. இந்த உண்மைக்கதையின் பல பேசப்படாத பாததிரங்கள் எனது பேஸ்புக்கில் உள்ளனர். அவர்களது கருத்தூட்டல் பற்றிக் கணிக்க முடியவில்லை இப்போது.(Finger crossed and waiting :) ) . கிட்டத்தட்ட நான் காதலித்ததே அந்தப் பெண்ணிற்குத்தெரியாது. பப்பி லவ்.

இதில் சுவைக்காகப் பொய்கள் உலாவருகின்றன. கவிதைக்குப் பொய் அழகாம். !

காதல் ? - இதெல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை என்பது  தெளிவாக புரிவதற்குப்  பத்துப் பதினைந்து வருடங்களாகிவிட்டன.

XXX

கண்ணீர்த்தேசம்  - ச.மணிமாறன்.

செவ்வரி படர்ந்த கன்னங்கள்
கயல் மீனிற்கே கவலை கொடுக்கும் கண்கள்
சிரிப்பிலே சில்லறையை அல்ல,
காந்த அலைகளைக் கவர விடும்
குறும்புக்காறி.
என் கவிதைக்குக் கரு – அவள் கருங்குழல்.
நடமாடும் நந்தவனம்
பூக்குவியலால் புனைந்த கவிதை
அவள்.
பஞ்சுப்பொதிகளைப் பாதங்களாக்கியவள்.
அவள் ,
செவ்விதழ் - இளமையின் சீதனம்,
வெட்கம் - பிறருக்கு வேதனை கொடுக்கும்.

மேகத்தைப் பிடித்து
சற்று மென்மையாக்கி,
இவள் கேசம் எனப் பெயர்வைத்தான் பிரமன்.
அவள் - என் கவிதைக்குக் கருக்கொடுப்பவள்.

பால்மணம் மாறும் பதினாறில்
என்னில்
பனிப்புயல் செய்த பாவை.

Sunday, April 26, 2020

தயவு செய்து தொலைபேசியை வைக்கவும் :)


நாங்கள் யுத்தகாலக் குழந்தைகள். மூன்று வயதிலிருந்து சுமார் முப்பது வயது வரை துப்பாக்கிகள் வெடிக்கும் ஓசையும்,எறிகணைச் சத்தமும்,விண்ணிலிருந்து இராணுவம் பொம்மர்களில் வந்து போடும் குண்டு பறந்து வரும் ஓசையிலிருந்து பொளேர் என வீழ்ந்து அப்பாவி மக்கள் உயிர் குடிக்கும் ஓசையும் கேட்டு வளர்நதவர்கள்.

யுத்தகாலத்தின்  பெரும்பான்மையும் வடக்குப்பகுதி,  நாட்டின் தலைநகரம் கொழும்பு உட்பட்ட தெற்குடன் முற்றாகத் தரைவழித் தொடர்பில்லாதிருந்தது. மின்சாரம் நான் ஆறாம் வகுப்புத்தொடங்கிய காலத்திலிருந்து 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை வீடுகளிற்கு மின்சாரமும் இல்லை. தோலைபேசி என்ற  ஒன்றை வீட்டுப் பரணில் இருந்து எடுத்து விளையாடிய அனுபவம் உண்டு. தொலைத்தொடர்பை அனுபவித்ததே கிடையாது.

பல்கலைக்கழக அனுமதி கிடைப்பது இந்த வசதிகளற்ற இடத்திலிருந்து தப்பி தலை நகரத்திற்குச் செல்லும் ஓரளவு பாதுகாப்பான வழியாக இருந்தது.  

எனக்கும் அப்படி கொழும்பிற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. 

இதற்கு முதலும், யாரும் வடக்கிலிருந்து இலகுவில் கொழும்பு செல்ல முடியாதிருந்த நிலையிலும் இலக்கியத்தொடர்புகள் காரணமாக கொழும்பு சென்று சில நாட்களில் ஏக்கத்துடன் திரும்பியிருந்தேன்.

இந்த முறை அதிக காலம் கொழும்பை அனுபவிக்கலாம் என்ற ஆனந்தம்.

போன தடவை ஒரு இலக்கியக் குழுவோடு வந்தபோது "ரொட்டறிக்" சங்கத்தைச் சேர்ந்த ஜானகப் பெரேரா எனும் சிங்களத் தனவந்தர் ஒருவரோடு நல்ல அறிமுகம். எனது வட்டத்தில் ஆங்கிலம் ஓரளவு பேசக்கூடியவன் நான்.அதனால் அவரோடு உரையாடி நல்ல பழக்கம் இருந்தது. கொழும்பு வந்தால் தன்னைத்தொடர்பு கொள்ளச் சொல்லி அவரது தொலைபேசி இலக்கத்தைத் தந்திருந்தார்.

அங்கு சென்றதும் முதல் வேலையாக வெள்ளவத்தையில் தெருவில் உள்ள ஒரு தொலைபேசி பூத்தில் சில்லறைகளைப் போட்டு டயல் செய்தேன்.
தொலைபேசி ஒலித்தது, 

Friday, April 24, 2020

காதல் - காமம் என்ன வேறுபாடு ? கேள்வி பதில் By சிறுவன் !



விடுதலைப்புலிகள் தனியாட்சி செய்திருந்த யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றி , அரசாங்கத்தின் ஆட்சி இரண்டு வருடங்களைக் கடந்து கொண்டிருந்த நேரத்தில் கொழும்பில் பாதுகாப்பாக இருந்த நான் , திருகோணமலையிலிருந்து  சரக்குக் கப்பலின் அடித்தட்டில் படுத்து (அப்போதிருந்த ஒரே போக்குவரத்து வழி) 21 வயதில், தமிழ் மேல் தீராத காதலும்,வாசிப்பு வெறியும், பொங்கும் கவிதையும் - இவையெல்லாம் கலந்த கொப்புளிக்கும் கனலாய்  யாழ்ப்பாணம் வந்து சேர்ந்திருந்தேன். 

1996 – ஆனந்த விகடன் ,குமுதம் என்ற பத்திரிகைகள் எல்லாம் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் , உதயன் செய்திப்பத்திரிகை தவிர வாசிக்க  வேறு எதுவுமற்ற நிலையில் , நான் ஆரம்பித்த பல்சுவை வார இதழ் 'திசை முகம்'

அதனாலே நான் பட்ட பாடு உரல் படுமோ உளிபடுமோ நான் அறியேன்.
அப்போது பிரபலமாயிருந்த மறைந்த குமுதம் ஆசிரியர் 'அரசு' போல யாருக்கும் நான் யார் என்று தெரியத்தேவை இல்லை , என் எழுத்துக்களே தெரியவேண்டும் என(பயத்தால அல்ல- பயமா? அது என்ன விலை?) எழுத்தாளர் சுஜாத்தா என்கிற ரங்கராஜன் போல ,'தமயந்தி' எனும் புனை பெயரில் எழுதி வந்தேன்.

Monday, April 20, 2020

இராணுவச் சோதனை – மக்கள் மகிழ்ச்சி :எனக்குத் தமிழ் படிப்பித்த என்சினீயர்

என்ஜினீயர் கற்றுத் தந்த தமிழ் 

அண்மையில் பாடசாலைக் காலங்களில் அறிமுகமாகிப் பின்னா பேஸ் புக்கில் கொழுவிக்கொண்ட நபர் ஒருவரை(நண்பர் என்று குறிப்பிடும் அளவு உறவு இல்லை)எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது.அவர் இந்தியாவில் கணிப்பொறியியல் பட்டம் படித்தவர், அவர் சொன்னார் ,
"மச்சான் நீ எழுதும் புளக் போஸ்ட்டுகள் யாருக்கும் விளங்காது - அவ்வளவு கடும் தமிழ் பாவிக்கிறாய், வாசிப்பவர்களுக்கு விளங்கும்படி எல்லோ எழுதோணும்,(கொஞ்சம் கோவமான தொனி) அவன் (இருவருக்கும் நண்பன்)  (ஆஸ்த்திரேலியாவிலிருக்கும் பொறியியலாளனாகிய) சிந்தூரனும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).என்னோட கதைக்கேக்க 'மணி ஏதோ எழுதுது,ஒண்டும் விளங்கிறேல்ல' என்று நீ எழுதிய 'கண்டியில் பற்றிய தீ' என்ற (நாட்டு நிலை சார்ந்த) கட்டுரை பற்றிக் கதைக்கேக்க சொன்னான்" என்றும் இவர் எனக்குச் சொன்னார்.

Wednesday, April 8, 2020

மயிர்கொட்டி ஞானம் -ச.முகுந்தன் கவிதையும் உரையும்.



எனது நண்பனும் நாடறிந்த நல்ல கவிஞருமாகிய ச.முகுந்தன்(விரிவுரையாளர்,யாழ் பல்கலைக்கழகம்)பல வருடங்களிற்கு முன்னர் தான் எழுதிய கவிதை ஒன்றை அண்மையில் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதன் பொருள் புரியவில்லை என்று இன்னும் சில பள்ளித் தோழர்கள் புரிந்து கொள்ளும் உண்மையான அக்கறையில் கேட்டுக்கொண்டதால் இந்தக் கொரோனா விடுமுறையைக் கொஞ்சம் தமிழ்ப்பணிக்கும் ஒதுக்கலாமே என்ற ஒரு சின்ன நல்லெண்ணத்தில் என் நண்பர்களுக்காக எழுதிய பொருள் விழக்கம் இது :)

உண்மையில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  ஆழமான கவிதைகள் புரிவதில்லை என்கிற மற்றும் நீலப்படம்போல தேடித் தெரிந்துகொள்ள எதுவுமில்லாத கவிதைகளை எழுதுகிற இளம் கவி ஆர்வலர்களிற்கு ஒரு வழிகாட்டியாக இது அமையலாம் என்ற  நோக்கிலேயே  எழுதப்பட்டுள்ளது.  

மயிர்கொட்டி ஞானம் -  ச.முகுந்தன்

கவிதையை உணர்ந்துகொள்ள முதலில் அது பிறந்த கால நேரத்தையும் இடத்தையும் பின்னணியையும் அறிந்துகொள்ளல் நலம். அது கவிஞர் கருதியதை நாமும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவி செய்யும்.
இந்தக் கவிதை இராணுவக் காவலரண்கள் முழத்துக்கு முழம் நிறைந்திருந்த கொடிய உள்நாட்டு யுத்தக் காலப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சின்ன ஊரடங்கிற்கே பல இளையவர்கள் சலித்துக்கொள்கிறார்கள் நாங்களெல்லாம் மாதக்கணக்கான ஊரடங்குகளையும், வருடக்கணக்கான பயணத்தடைகளையும் கண்டவர்கள். 

1 கிலோ மீட்டர் பாதையில் 3 தடவை  வாகனத்திலிருந்து இறங்கி ஆளடையாளம் மற்றும் குண்டு இருக்கிறதா எனப்பார்க்கும் உடல் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். (கவிஞர் சொன்ன 'தடவல்' இதுதான்) அதுவும் நீங்கள் இப்போது பார்க்கும் இளகிய முகமுடைய இராணுவம் அல்ல அது. கொலைவெறி பிடித்த அல்லது மரணபயம் நிறைந்த கோர முகங்கள். அவர்களைக் காணும் ஒவ்வொரு சமயமும் உயிர்போய் உயிர் வரும்.

இந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த இளையவரான கவிஞர் – யுத்த சூழ்நிலையால் தனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை ஒரு மயிர்கொட்டி(மசுக்குட்டி)உடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.(அந்த அற்பப் புழுவின் உரிமைகூட நமக்கு இல்லையே என்ற ஏக்கம் கவிதை எங்கும் விரவியிருக்கும்)

கடுமையான பத்திரிக்கைத் தணிக்கை அமுலில் உள்ள(மீறின் சுடப்படக்கூடிய சூழ்நிலையும் இருந்தது) சூழலில் தான் விரும்பும் கருத்தை புரியக்கூடியவர்களிற்கு மட்டும் புரியும்படி சொல்லவும், சம்பந்தப்பட்டவர்கள்(அதிகார வர்க்கம்) பிரச்சினைக்கு வந்தால் "அதன் அர்த்தம் இது கிடையாது சாமி" என்று இன்னொரு அர்த்தத்தைக் கோர்த்து விட்டு எஸ்கேப் ஆகவும் கவிதைதான் சிறந்த வழி.அதுதான் உலக வரலாற்றில் பல நல்ல கவிஞர்கள் யுத்த காலங்களில் தோன்றியிருக்கிறார்கள் போலும். இப்போதெல்லாம் அந்த இடத்தை கார்ட்டூன்கள் எடுத்துவிட்டன

இந்தப் பின்புலத்துடன் அவர் கவிதையைப் பார்க்கலாம்.


பச்சைகளைக் கண்டஞ்சும்
பரிதாபி ஜீவன்யான்

Friday, February 7, 2020

வளர்மதி வயசுக்கு வந்துட்டா !



யதார்த்தம் புரியப் புரிய வாழும் ஒவ்வொரு நாளுமே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது. தமிழர் கலாச்சாரத்தின் ஓரு பகுதியாகிய – சடங்குகளில் -இன்று, எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல் நடாத்தப்படும் ஒரு சடங்குதான் பூப்புனித நீராட்டு விழா.

சின்னத்தம்பியில் குஷ்பூ வயதுக்கு வந்தபோது


தொடர்பாடல் வசதிகள் இல்லாதிருந்த – மருத்துவ  விஞ்ஞான அறிவு விருத்தியடையாத அந்த காலத்தில்,அன்றைய வாழ்ககை முறையில், பெண்களிற்கு மேற்படிப்பு என்று ஒன்றே இல்லாத நிலையில் பெண்பிள்ளையின் வாழ்வில் பருவமடைந்ததும் அடுத்த படி திருமணம் என்றுதான் இருந்தது. 

அந்தக்காலத்தில் தங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஆயத்தமாக ஒரு பெண் இருப்பதை ஊருக்கு அறிவிக்கும் செயற்பாடாவே இந்தச் சடங்கு உருவாகியிருக்க வேண்டும். அவளது தோற்றப்பொலிவு   பெண் வீட்டாரின் வசதி, செல்வாக்கு என்பவை எவ்வாறானது, என்பதை ஆண் பிள்ளைகள் வைத்திருப்போருக்கு பறைசாற்றும் ஒரு சந்தைப்படுத்தல்(மார்க்கட்டிங் )நுட்பமாக இதை வைத்திருந்தார்கள்.

அதனால்தான் தாய் மாமனைத் திருமணம் செய்யும் வழக்கமுள்ள தமிழ்நாட்டின் பெரும் பகுதிக் கிராமங்களிலும் இன்றுவரை தாய்மாமன் ஓலை கட்டுதல் என்றெல்லாம் சடங்குகளை வைத்திருந்தார்கள். (கைப்புள்ள உனக்குரிய பெண் ரெடியாயிட்டாடா !)

Thursday, December 5, 2019

Letter to The Hon. President of Sri Lanka




Dear president,

Good to know that you are inviting investors to Srilanka. To have investors in a country that requires some minimum standards without compromising anything of them. Like,

1) Good governance to assure the freedom and the safety of the foreigners who invest and live in the country.
2)High quality and prompt service from the government sector(which is famous for it's speedy actions in Sri Lanka) which related to business, like income tax office, business registrar, Llabour department,divisional secretariats and other licensing authorities  etc
3)Good transportation system,(which we have been improvising ),And high quality data and communication services with reasonable rates.
4)Media freedom and freedom of speech which removes the underlying fear about us from the investors.
5)Law and order , reliable law enforcement system (Police department)
6)Good education system and health care.(We have fairly good system now but should be modernized )

Wednesday, May 8, 2019

TABS for A/L students - have they planned enough to make use of it ?


"it is a common pattern among countries like India, Pakistan,SriLanka that they follow the western style in education, skills development, industry development in terms of buying the same expensive equipment, putting same names for the projects and courses, but not implementing the projects in the same way those leading countries operate, " We dont worry about the process, we just worry about the physicaly available tools " " 



I have seen, in many schools a computer lab with hundreds of computers but no teachers to teach IT, even at my son's school, ( One of the - Jaffna's leading school). No priority given to computer subjects even by principals as most of them are IT illiterate. I know, How hard to buy a computer for a student of a lower middle-class family? having free computers at their schools is a great gift, but countries which are run by mostly unskilled - visionless political leaders like Sri Lanka would not only be benefited from the physical resources available, Proper plan[The Project], that makes the physical resource usable to knowledge gaining is the key.
In Sri Lanka there are numerous schools with unused computers, Given to schools for the benefits of gifting authority (Tenders )
Now again, TABs are announced at the cost of 5Billion for every A/L student, Minister says student would search the internet to clear their doubts and do self-study! oops! again your plan is giving uncontrolled access to the internet so that students can search good and bad both?

Thursday, May 2, 2019

இரத்தம் கேட்பது சாமியா ? சாத்தானா ? - மதம் பிடித்தவர்க்கு ஒரு மடல்



இறைவன் கேட்டானாம்,

 "பூலோகத்திலிருக்கிற பெருமைமிகு மனிதர்களே உங்களுக்கு வணக்கம், நீங்கள் தகவல்தொழில்நுட்பத்திலும் ,விண்வெளியை அலசும் விஞ்ஞானத்திலும் இன்னும் ஏகப்பட்ட துறைகளிலும் பெரியவர்கள் , தயவு செய்து உங்கள் மதக் கடவுளாகிய என்னை அடுத்த மதத்தவர் இழிவு செய்துவிடாது நீங்கள் பர்ர்த்துக்கொள்ளுங்கள் அதே நேரத்தில் , என்னை வழிபடும் இடத்தில் எவனும் குண்டு போடாதவண்ணம் சி.சி.ரி.வி கமெராக்களையும் ஆட்களையும் போட்டு என்னைப் பாதுகாப்பீர்களாக , அப்படி பாதுகாப்பின் நீங்கள் இறந்த பின்னர் உங்களை சொர்க்கத்திற்கு எடுத்து நீங்கள் எனக்குச் செய்த உதவிக்கு வட்டியும் முதலுமாக நீங்கள் இந்த உலகில் விரும்பிய பலான பலான இன்பங்கள் எல்லாவாற்றையும் உங்களிற்கு நான் தருவேன். டீலா ? , நோ டீ லா ? "

பாவம்!, இந்த அற்பப் பூவுலகில் தன் ஆலயத்தையோ, சிலையையோ, தன்னைப்பற்றிய புத்தகத்தையோ அல்லது தன் பக்தனையோ கூடக் காப்பாற்ற முடியாத அந்த வக்கற்ற  சாமி , சுவர்க்கத்தில் உனக்குத் துணி போட்டு சீட் பிடித்து வைத்திருக்கிறது என்று நம்பி, நீ வாழும்போது சக மனிதனை மனிதனாக மதிக்காது - ஏன் தன்னைக்கூட மதிக்காது முட்டாள் நம்பிக்கைகளை மட்டும் வைத்து அடுத்தவன் இருப்பைக் கேள்விக்குறி ஆக்குகிறாய் !  

எல்லாம் அவன் நாட்டம் ! எல்லாம் அவன் செயல் ! எல்லாம் அவன் முன்கூட்டியே முடிவு செய்தது! என்று அடிக்கடி சொல்லும் ஆத்திகனே அதை நீ  உண்மையில்   நம்பினால் - உனக்கு அடி விழுவதும் அவன் விருப்பம் என்று மூடிக்கொண்டு இருக்கலாம்தானே ? - இருக்க மாட்டாய் - உன்னால் எதுவும் செய்ய இயலாத சூழலில் ஆண்டவன் நாட்டம் அதுதான் என்று பம்முவாய் -உனக்கு சக்தி இருக்கும் இடத்தில் ஆண்டவனுக்காக நீ சண்டை புரிவாய்.

நீ ஆங்காரம் பிடித்த முழு முட்டாள் - அதி சுயநலவாதி.

உனக்கு செலக்டிவ் அம்னீசியா - தேவையான இடத்தில் ஆண்டவன் நாடியது என்பாய் ,தேவையான இடத்தில் ஆண்டவனைக் காப்பாற்றப் போர் செய்ய வேண்டும் என்பாய் - முட்டாள்களின் அடி முட்டாள் நீ. தன்னைத்தான் காப்பாற்ற முடியாத அந்த ஆண்டவன்தான் உன்னையும் இந்த அண்ட சராசரங்கள் உள்ளிட்ட  சர்வத்தையும் படைத்துக் காக்கிறானா ? ஈனப்பிறவியாகிய நீ உனது சக மனிதன்மேல் வெறிக்கூத்தாடித்தான் உன் ஆண்டவன் மனம் குளிர்விக்க வேண்டுமா ?

எல்லா மதப்புத்தகத்திலும் போரைப் பற்றிப்பேசியிருக்கிறார்களோ என்னவோ   தெரியாது - ஆனால் நிச்சயம் அன்பைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள் - அன்பைப் போதிக்காத மார்க்கம் என்ன  மார்க்கமடா ?

கொலையைப் போதிப்பது  யுத்த சாத்திரமாக மட்டும்தான் இருக்க முடியும்.
உன் மார்க்கத்திலும் அன்பைப் பற்றி எவ்வளவு பேசுகிறார்கள் - அது எல்லாம் உன் ஈனக் கண்ணிற்கு எப்படித்தெரியாமல் போயிற்று.

Thursday, April 25, 2019

வி.பி.என் பாவிப்பவரா நீங்கள் ? அதன் பயங்கரங்கள் தெரியுமா ?



This article summarizes the dark side of using VPN(Virtual Private Network)services for free. How your privacy could be on risk? and, why they offer free services like this? What sort of other security issues you can have bye using VPN are briefly discussed in this article in Tamil.

வி.பி.என். என்ற சேவை உங்களிற்கு ஏன் இலவசமாகக்கிடைக்கிறது என்று ஒரு நிமிடம் சிந்தித்திருப்பீர்களா ?

'இந்த உலகத்தில் எதுவும் இலவசம் இல்லை ' என்பது பிரபலமான ஒரு கூற்றாகும். மனசாட்சியுடன் பதிலளியுங்கள , எந்த இலாபமும் இல்லாமல் ஒரு பொருளைத்தயாரித்து நிறைய பராமரிப்புச் செலவையும் பொறுப்பெடுத்து அதை சமூகத்திற்கு இலவசமாக நீங்கள் வழங்குவீர்களா ? அதுவும் அரசாங்கங்களின் சட்டங்களை மீறுவதற்காக ?

ஒரு நாட்டின் சட்டத்தை மீறி அந்த நாடு தடை செய்தவற்றை பார்க்கும் நீங்கள் ஒரு குற்றவாளி  அல்லவா ? அவ்வாறு  இருக்கும் சந்தர்ப்பத்தில் அதைப்பார்க்க  உதவி உங்கள் சட்ட மீறலிற்கு உதவும் அடுத்த குற்றவாளி வி.பி.என் சேர்வர்களாகும். கள்ளனுக்கு கள்ளன் துணை என்றாலும். இரண்டு கிறிமினல்களும் ஒருத்தரோடு ஒருத்தர் நேர்மையாக எப்போதும் இருக்க வாய்ப்பில்லைத்தானே ? 

எங்கள் சமயப்படி நான்பொய்கூடச்சொல்லமாட்டேன் என்று முழங்கும் எனது நண்பர்கள் பலர்தான் (அதென்னவவோ தெரியவில்லை அதிகம் சமயத்தைப் பற்றிப்பேசுபவன்கள்தான் அதிகம் கள்ளன்களாக இருக்கிறான்கள் ) முதன் முதல் வி.பி.என். போட்டு சோசல் மீடியா எல்லாவற்றையும் துழாவ அரம்பித்தது. களவுக்குக் கூட (ஏன் கொலைக்கும்) கடவுளைத்துணைக்களைக்கும் மிலேச்சர்கள் வாழும் உலகுதானே இது.
பலருக்கு நேர்மையும் தர்மமும் சோசால் மீடியாப் பதிவுகளிற்கும் சோசல் மீடியா ஸ்ரேட்டசுக்கும்தானே. சரி வி.பி.என்னைப் பற்றிப் பார்ப்போம்.

 இந்தத் தடைசெய்யப்பட்ட இணையப்பக்கங்களை அரசாங்கங்களிற்குத்தெரியாமல்(தெரியாதென நினைத்துக்கொண்டு) திருட்டுத்தனமாக பார்க்கும் திருடர்களிடமிருந்து இந்த வி.பி.என் எதைத்திருடுகிறது ? பார்க்கலாம்.

இலங்கையில் இடம்பெற்றுள்ள(21-04-2019) பயங்கரவாதிகளின் மிலேச்சத் தனமான தாக்குதலைத்தொடர்ந்து - சமூக வன்முறைகள் வதந்திகளைத் தடுக்கும்பொருட்டு இலங்கை அரசாங்கம் பிரபலமான சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளது (தற்காலிகமாக)ஆனாலும் பெருமளவான இலங்கையர்கள் வி.பி.என். எனப்படும் கள்ளச்சாவி போட்டு அவற்றைப் பார்வையிட்டுத்தான் வருகிறார்கள். அவர்களிற்காகவே இந்தக் கட்டுரை

1) உங்கள் பிறவுசிங் ஹிஸ்ட்றி எனப்படும் நீங்கள் எந்த எந்த இணையத்தளங்களிற்குச் சென்றீர்கள் எவ்வளவு நேரம் செலவளித்தீர்கள் அங்கு என்ன என்வெல்லாம் செய்தீர்கள்(கிளிக்,செயார் ..)என்ற விபரங்களை உங்கள் கணினிகளில் அல்லது மொபைல் கருவியில் அது(VPN) உங்களிற்குத்தெரியாமல்  இறக்கி வைக்கும் 'குக்கீஸ்' எனப்படும் சிறு கோப்பில் சேகரித்து வைத்து அவ்வவ் வி.பி.என் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும்.

Saturday, April 13, 2019

யசிகாவும் நானும் - என் காதல் கதைகளில் ஒன்று


இப்போது கூட என் வாழ்வில் சில மாதங்களே வந்துபோன - நான் நிரந்தரமாக அடையாது விட்ட அந்த  யசிக்காவுடனான காதல் அனுபவங்களை நினைத்தால்; நெஞ்சிலே ஒரு இனம்புரியாத சோகம் கௌவும்.


என் வயதோடொத்தவர்களில் குறைந்தது 7-10 வருடங்கள் முத்தியதன்மை என்னில் வெளிப்படுவதை எனது நண்பர்கள் அறிவார்கள். அந்த அந்த வயதுக்குரியதைச் செய்யாமால் அதற்கு மிஞ்சியவற்றிலேயே என் நாட்டம் எப்Nபுhதும் செல்லும். நான்காம் வகுப்பிலேயே புஸ்பா தங்கத்துரை உட்பட்ட வப்புக்களின் கதைகளையும் புரிந்து வாசித்துவந்தவன் நான் - இது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கதைக்கு வருவோம்.

Wednesday, January 16, 2019

”மரணம்” எனும் மந்திர விசை !

Sketch by M.Kesharan


மரணத்தை ஓரு எதிர்மறையான விடயமாகவே பார்த்துப்பழகிவிட்டது நமக்கு. அது ஒரு அமங்கலச் சொல்லாகிப்போனது. உச்சரிக்கும்போதே ஒரு வித பயம் தெரியும் பலரது கண்களில்.  சிரமம் பாராது சில கணங்கள் சிந்தித்தால் அதுதான் வெற்றியின் செலுத்துவிசை என்பது புரியும்.

ஒரு பன்னிரண்டு வயதிலிருந்தே இறப்பின் இருப்பு ஒவ்வொரு நொடியும் அடுப்பில் ஏதோ கருகும்  நெடிபோல அடித்துக்கொண்டே இருக்கிறது ,எனக்கு.

அதனல்தான் நான்  ஹார்மோன்கள் முறு‌க்கேற்றும் பதினேழாம் வயதில்கூட எழுதிய ”மரணம்” என்ற கவிதையில்

”ஆழ்கடலுள் சுழியோடி
அண்டங்கள் கடந்து,
அமைதிக்குள் நான் அடங்க,
ஓ மரணம் !
நீவந்தெனக்கு நிம்மதியைத்தரவேண்டும் "

என்று எழுதியிருந்தேன். 

மரணம் என்பது எப்போதுமே எனக்கு ஒரு பிரச்சினையாகப்பட்டதில்லை. மரண பயம் இல்லாமைதான் தவறு செய்வோர் என்று கண்டோர் முன் பயப்படாமல் சீறி நிற்க வைக்கிறது. சாவை விடப் பெரிதாக வேறு என்னத்தைதான் அவர்களால்  வழங்கிவிட முடியும் ?. 

மறைந்த அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸ் சொன்னதுபோல ”மரணத்தின் முன்னர் எந்த அவமானங்களும் தோல்விகளும்   ஒரு பொருட்டல்ல....” 

வாழ்வில் வென்றவனுக்கும் இறுதியில் மரணம்தான் தோற்றவனுக்கும் மரணம்தான் . கோடி ஆசைகளை வைத்துக்கொண்டு  இடையில் தோற்றால் என்னாகிடுமோ என்று  முயற்சியே எடுக்காமல் மரணத்தை நுகருபவன் எவ்வளது கையாலாகாத அப்பாவியாக இருக்க வேண்டும். ? 

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை