Tuesday, December 23, 2014

மாறும் நம்பிக்கைகள் - மறுபிறவி,ஜோதிடம் மற்றும் ஆன்ம இரகசியம்.


சத்தியமாய் இது நானேதான்.


தலை்ப்பின் காரம் என்னவோ கொஞ்சம் கூடித்தான் போயிற்று.ஆனால் என் வாழ்வில் இருந்தே இவை பற்றிய பல அனுபவ  உதாரணங்களை அடுத்த பதிவுகளில் தரலாம். வாசிப்பவர்களின் எதிர்பார்ப்பை பொறுத்து. 

வாழ்வில் நிறைய குழப்பங்கள் நிறைந்த காலப்பகுதியாக இது இருந்து வருகிறது. நாற்பதை எட்டும்போது இப்படித்தான் தத்துவ சிந்தனைகள் வருமோ என்னவோ. ஆனால் எல்லோருக்கும் இதே வகையான குழப்பங்கள் வராது என்பது மட்டும் நிச்சயமாகத்தெரிகிறது. 

மறுபிறவி இருக்கிறதா(ஆம்)அப்படியாயின் எனது முற்பிறவி என்ன...யார் எல்லாம் பழந்தொடர்பால் இப்போதும் என்னுடன் பிறந்திருக்கிறார்கள் ?

இறைசக்தி பற்றி எனக்கு இரண்டாம் கருத்து இருந்தததில்லை ஆனால் கிரியைகளை ஏற்றதில்லை நான். இப்போது அவைபற்றிய மீள்பரிசீலனைகள் எழுகின்றன என் மனதில்.

ஜாதகம் என்பது நமது முற்பிறவிப்பாவ புண்ணியக்கணக்கு என்பது நம்பும் அளவிற்கு புரிய ஆரம்பிக்கிறது.

பச்சைத்துரோகிகளை மன்னிக் முடியாத மனம் இப்போது அவர்களது பாவ நட்டக்கணக்கை அவர்கள் விரைவில் சீர்செய்யவேண்டி வரும் என்ற நம்பிக்கை இருப்பதால். பிழைத்துப்போகட்டும் என்று மன்னிக்க முடிகிறது.

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது பற்றிய எனது தேடல்களின் முடிவுகள்(மற்றவர்களது ஆய்வுகள் மூலமாக)தற்போது வலுவாகியிருக்கும் சோதிடம் ,மறுபிறவி பற்றிய நம்பிக்கைகள் என இணைந்து மிகப்புது தினுசான மனவோட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

கன்ம வினையை அனுபவிக்கவேண்டி இருப்பதை அவ்வப்போதைய சடுதியான தோல்விகளும் எதிர்பாராத வெற்றிகளும் புரிய வைக்கின்றன. கல்வியும் ஞானமும் பிறவிகள் தோறும்  தொடர்ந்து வருவது என்பதும் அது ‌ தொடர்பிறவிகள் மூலம் மேம்பட்டுச்செல்லும் என்பதும் புரிகிறது.

மனதின் சக்தி ,நம்புவதை அடையலாம் என்பன சிறுவயது முதல் அனுபவமாக இரு்ந்து வந்த விடையங்கள்.

கோடானு கோடி அண்டங்களில் நாம் மட்டும் தனியே இல்லை. சாவைப்பற்றி வருந்த எதுவுமே இல்லை. இந்த பழைய உடம்பை விட்டு இன்னும் புதிய ஒன்றை பெறலாம். புதிய உடல்,புதிய உலகம்...கன்மத்திற்கு ஏற்ற வாழ்க்கை,அறிவு பிறவிகள் தோறும் தொடரும் பெரும் சொத்து.வருந்த எதுவும் இல்லை.

 ஆன்ம தேடலும்  சிந்தனையும் காலம் காலமாக என்னுள் இரண்டறக்கலந்திருந்த ஒன்று என்றாலும் ஒரு சம்பவத்தை வெடிவைத்ததுபோல் என் வாழ்வில் உருவாக்கி  பணத்தை மட்டும் தேடி ஓட ஆரம்பித்த என்னை வாழ்வில் இடை நடுவே நான் கைவிட்ட தேடல்களின் பாதையில் திரும்ப வைத்த அந்த ஆத்மாக்களுக்கு என் வந்தனங்கள். ”எந்தரோ மஹானு பாவுலு அந்தரிகி வந்தனமுவுலு”(எந்த திசையில் மகான்கள் இருக்கிறார்களோ அந்த திசைக்கு வந்தனம்)

Wednesday, December 3, 2014

மின்னியில் சுற்றிய மரணம்.

நாற்புறமும்
நகர இடமின்றி
நம்பிக்கையின் வெளி குறுகிய
பாதையில்
நான் பரிதவிக்கும்
இந்தப்பொழுதில்....
பருவங்கள் மாறும்போதெல்லாம்
என் பசிகளுக்கு பந்திவைத்துப்பரிமாறிய
உன்னிடம்,
சரக்கு முடிந்து,
திடீரென
வெறுங்கோப்பையான என் வாழ்வில்
இனி ஊற்ற 
மதுவின்
ஒரு துளியேனும்
இல்லையென்றால்..
வருந்தாதே......
எனக்கு பரிசளிக்க
மரணத்தை
அழகிய மின்னியில்
சுற்றி அனுப்பி வை.
ஒரு குழந்தையின்
ஆர்வத்துடன் அதைப்பிரித்து
அனுபவிக்க  காத்திருக்கிறேன்.

- ச.மணிமாறன்-



****


மின்னி- மின்னிடும் பொதியிடும் காகிதம்
 

Monday, November 17, 2014

அனுபவச்சிறகுகள். 02 - எனது வேலை.

நீங்க  என்னவா   இருக்கிறீங்கள் ? இப்படித்தான் பெரும்பாலான சந்திப்புக்களின் முதல் பகுதி ஆரம்பிக்கிறது.

( படம்- நன்றி -தினமலர்-தமிழ்நாடு)


இந்த தொழில்தான் சிறந்தது என்று ஏதாவது இருக்கிறதா ? . அப்படிச்சொல்லும் அப்பாவிகள் பலரைக்கொண்டதுதான் நாம் வாழும் சமூகம். உடம்பின் சிறந்த பாகம் எது என்று கேட்டால் ,கண் என்பீர்களா ? கால் என்பீர்களா ? காது என்பீர்களா ?. உங்கள் பதில் காது என்றால் , நான் உங்கள் கண்களை பிடுங்கியெடுக்கலாமா ? வருந்த மாட்டீர்களா ? .


சமூகம் என்பது தானாகவே ஒரு வட்டத்தை அதனது சமூக அறிவை வைத்துக்கொண்டு போட்டு அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் அந்த வட்டத்துக்குள்ளேயே வாழ வேண்டும் என்று நினைப்பது. இங்கே காலம் காலமாக மிக மெதுவாக வளர்ந்து வந்த குழு அறிவுக்கும் நம்பிக்கைகளுக்குமே முதலிடம் . தனிப்பட்ட உறுப்பினர்களின் புதிய சிநதனைகள் கேள்விகளின்றி துாக்கி வீசப்படும்.


யாழ்ப்பாணச் சமூகமும் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை கோட்பாடாக கொண்டு இருப்பது. சில வகையான விதிகளை மீறலாம் - நீங்கள் புறக்கணிக்கப்டுவீாகள். சில வகையான விதிகளை மீறினால் நீங்கள் தண்டிக்கப்டுவீர்கள்.

அவற்றில் ஒன்று அவர்கள் வகுத்துள்ள சட்டக்கோவைகளின் பிரகாரமான தொழில் துறைகளை ஒரு நபர் தேர்ந்தெடுப்பது.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ‌ தொழில் பின்வரும் விதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

1) சாகும் வரை அல்லது ஓய்வு காலம் என்று ஒன்று வரும் வரை நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.
(ஆகவே அரசாங்கவேலைதான் ஒரே ஒரு உத்தம வேலை.)

2)இடமாற்றம் இல்லாதிருப்பது நல்லது.

3)இடையிடையே வீடு வந்து மனைவிக்கு மீன் வாங்கிக்கொடுப்பது போன்ற பணிவிடைகள் செய்யுமளவு நீக்குப்போக்கான வேலை நேரம் 
இருக்கவேண்டும்.

4)வேலையில் புதிய மாற்றங்கள் எவையும் வராது சாகும் வரை ஒரே வேலையை திரும்பத் திரும்பசச் செய்யும் படி இருக்க வேண்டும்.

5)ஓய்வூதியம் வரவேண்டும்.

6)அல்லது அவர்களுக்கு தெரிந்த ஒரு லிஸ்ட்டில் இருக்கக்கூடிய வேலையாக இருக்க வேண்டும்.[Engineer,Doctor ,Teacher,Principal ,peon ,clerk ,office boy, director of education ,asst director of education ,ISA,manager (முன்பு சங்கக்கடை முகாமையாளர்கள் இப்போதெல்லாம் வங்கி முகாமையாளர்கள் etc)

7) வெளிநாட்டு வேலை-ஒரு வருடகாலத்திலேயே பலரும் மாடி வீடுகள் கட்டிய வரலாறு இருப்பதனால் வெளிநாட்டில்  வேலை  செய்ய வேண்டும் - அங்கு என்ன வேலை செய்தாலும் சரி..யாழ்ப்பாணத்தில் இவர்கள் முகம் சுழிக்கும் வேலையையைும் வெளிநாட்டில் செய்யலாம் . அதற்காக அற மீறல்களாகிய கள்ளப்பாஸபோர்ட் , தலை மாற்றுதல் ,ஏஜன்சியுடன்  பெண்களை -குறிப்பாக மணப்பெண்களை அனுப்புதல் ..பொய்க்கு வெளிநாட்டு குடியுரிமையுள்ள நபரை இங்குள்ள ஒருவருக்குத்திருமணம் செய்து வைத்து அனுப்புதல் போன்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம்.(அந்த சேவைக்கு அந்த வெளிநாட்டு நபருக்கு இருபது இலட்சம் ரூபா வரை வழங்கப்படும்)

எப்ப‌டியோ வெளிநாடு போனால் அந்த நாட்டின் பெயரையே உத்தியோகத்தின் பெயராக்கிவிடுவார்கள். திருமண ‌அழைப்பிதழ்கள் மரண அறிவித்தல்களி்ல குமாரவேல்(ஆசிரியர் ) என்று போடுவது போல் , லக்ஸ்மன்(கனடா),சீராளன் (சுவிஸ்) என்று போடுவார்கள்.

இவையெல்லாம் யாழ்ப்பாண   சமுதாயத்தில் ஒரு ஆணுக்குரிய நல்ல வேலைகள்.(2014 )

மேற்குறித்த எந்த ஒரு வேலையும் செய்யாது
சுயதொழில் செய்து வாழும் என்னை பல பெரியவர்கள்..தம்பி டிகிறி முடித்து இவ்வளவு காலமாகியும் இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை த்தானே என கேட்டதுண்டு. 

இன்று வரை ஏதாவது ஒரு பெரிய கம்பனியில் வேலைக்குப்போ அல்லது கம்பஸில் படிப்பிக்கப்போ என்று அறிவுரை ‌(கேக்காமலே) சொல்லும்  நான் பல வகையிலும் மதிக்கும் அறிஞர்களும் உண்டு..

உண்மையில் வேலை என்பது என்ன ? அது உங்களுக்கு தரவேண்டியது எதை ?  எது உங்கள் வெற்றிகரமான வேலைக்கு அளவுகோல் ? நான் பார்க்கும் வேலை என்ன ?அடுத்த பகுதியில்...

Monday, November 10, 2014

அனுபவச்சிறகுகள் ! -01

முன்னுரை

அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை எனக்கு வாழ்க்கை முடிந்தது என்று நினைக்கவும் .அனுபவங்களை பகிரவும்..  ஆனால் வாழவு என்ன வயசு பார்த்தா முடிகிறது எப்போதுமே ? .எதையுமே சாதித்து கிழித்து விடவுமில்லை மற்றவர்களை எம்பி நிமிர்த்த.ஆனாலும் ஏன் இந்த அனுபவச்சிறகுகள் ? என்கிறீர்களா?

உங்கள் தினசரி வாழ்வில் கூடப்பயணிக்கும் ஒரு சாமான்ய சக பயணி என்ற அடிப்படையில்  (உங்கள் பலரைப் போல் இப்படி குந்தியிருந்து எழுத நேரம் கிடைக்காத ஆள் அல்லவென்பதாலும்-......”வெட்டி என்பதைத்தான் இவ்வளவு நாசூக்காய் சொல்ல முயன்றேன்”)இந்த  வகையாக என் அனுபவங்களை பதிவு செய்ய முயல்கிறேன்.

 எப்போதெல்லாம் என்னை வெறுமை சூழ்கிறதோ அப்போதெல்லாம் எழுத்தென்ற பெயரில் பிதற்றுவது கொஞசம் தன்னம்பிக்கை மதுவை  என் முன்னே ஊற்றி வைக்கிறது.  யார் வாசித்தாலென்ன வாசிக்க விட்டாலென்ன என்து பேனா...மன்னிக்கவும் எனது விசைப்பலகையில் நான் விளாசிக்கொண்டே இருப்பேன். 


இந்த வலைமனை முழுதுமே நான் எப்படி வித்தியாசமான நபாராக என்னைப்பார்க்கிறேன். என் வாழ்வில் மற்றவர்களிடமிருந்து நான் எங்கெங்கு வேறுபட்டேன் அவற்றில் பெற்ற நன்மையும் தீமையும் என்ன? என்பது பற்றியே  குறிப்பிடப்படுகிறது.
இது இன்றுள்ள வழிகாட்டல் தேடும் ..அரிதாக.. வாசிப்பு பழக்கத்தை இன்னும் கடைப்பிடிக்கும் இளைஞர்களுக்கானது.(அப்படி யாராவது இருப்பின்.)   

Thursday, October 30, 2014

என் காலடியில் இடறிய சிப்பி


தலையில் கொஞ்சம் முடி இருந்த நாட்களில் எழுதிய கவிதை இது.. ஆயிரம் அர்த்தம் செய்து கொள்ளுங்கள். எனக்கு என்ன.:)  தமிழ்தானே  வாழ்கிறது..:)




நீ எந்த அலையில்
கரையாெதுங்கிய சிப்பியோ தெரியாது ..
எனக்காக உனக்குள் ஒரு முத்துப்பெட்டகத்தையே
 ஒளித்து வைத்திருந்தாய்.

அடுத்த அலைக்கு முன்னர்
உ்ன்னை
அவசரமாய் பொறுக்கிய
ஒருவன் நான்.

நீ நத்தை ஜாதி என்கிறாய்... உன்னை.
உன்
முக ஜோதியை
‌விளக்கிலே பிறந்தது என்கிறாய்.

உனக்கே தெரிவதில்லை
என் வானம் முழுவதும்
வியாபித்திருக்கும்
ஒரே
வெண்ணிலா
நீ
என்று.

ச.மணிமாறன்.
( தயவு செய்து சுடுவதானால் என் பெயரையும்  சேர்த்தேு சுடுங்கள் )

Monday, October 27, 2014

யாழ்ப்பாண-ஐஸ்


சமீப காலமாக யாழ்ப்பாணத்தில்  துரித அபிவிருத்தி நடவடிக்கைள்  பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார வைத்திய அதிகாரிகள் பலரும் சேர்ந்து ஒரு அதிரடி ஆய்வு நடவடிக்கை மூலம் ‌ஐஸ் கிறீம் கடைகள் பலவற்றிற்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்.

இலங்கையிலேயே அதிக அளவில் ‌ஐஸ் கிறீம் உண்ணும் பழக்கம் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன். எண்பது ரூபாய்கு கிடைக்கும்  ஸ்பெசல் ஐஸ் கிறீம்  நண்பர் வட்டத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு குறைந்த செலவில் அதிக மகிழ்ச்சி தரும். பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வந்து சிறப்பு நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் இந்த ஐஸ் கிறீம் கடைகளில்தான் கொண்டாடி மகிழ்வர்.

முன்புறமாக மிக அழகாகவும் சுத்தமாகவும் தெரியும் இந்த ஐஸ் கிரீம் தயாரிப்பு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அதி பயங்கர சுகாதாரக்கேடான நிலையில் இருப்பதை திடீர்  சோதனை மூலம் கண்டறிந்தது சுகாதார (
வைத்திய)அதிகாரிகள் குழு. யாழ்ப்பாணத்தின் முன்னணி நிறுவனங்கள் கூட விதி விலக்கல்ல.

சுத்தமில்லாத நீரையே பெரும்பாலான ஜஸ் கிறீம் தயாரிப்புகளில் பயன்படுத்தியிருந்தனர். இதில் மலத்தில் காணப்படும் ஈக் கோலி எனப்படும்  வயிற்றோட்டம்  முதல் பல வகையான நோய்களை உண்டு பண்ணக்கூடிய பக்டீரியாக்கள் காணப்பட்டதை ஆய்வுகூடப்பரிசோதனைகள் உறுதிப்படுத்தின.

சில சுவையான(?) சுகாதாரச் சீர்‌கேட்டு உதாரணங்கள்(பிடி பட்டவை)


1) ஐஸ் பழம் ஒரு தொகுதி அச்சுக்களில் வார்க்கப்பட்டு குளிராக்கப்படும். பின்னர் அதை அந்த அச்சை விட்டு கழற்றி எடுக்க வெறும் கரங்கள் மூலம் நேரடியாக அந்த  அச்சை எடுத்து ஒரு நீர்த்தொட்டியில் முக்குவார்கள். அதன் பின்னரே அவை கொஞ்சம் இழகும். சோதனையிடப்பட்ட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இவ்வாறு முக்குவதற்கு பய்னபடுத்தப்பட்ட நீர் சாக்கடை நிறத்தில் பல மாதங்களாக மாற்றப்படாது பாவிக்கப்படிட்டிருந்தது. சோதனைக்குச் சென்ற வைத்தியர்களுக்கே குமட்டியிருக்கிறது. (இப்பாது தெரிகிறதா ஏன் ஐஸ் பழம் இவ்வளவு சுவை என்று :) )

2)ஒரு இரண்டாம் நிலை பிரபல நிறுவனத்தில்  ‌ஐஸ் கிறீம் தயாரிப்பு பழைய இரும்புக்குவியலிற்கு அருகாமையில் உள்ள கராஜ் போன்ற ஒரு இடத்தின் வெறுந்தரையில் நடைபெற்றிருக்கிறது.(இரும்புச்சத்து..!)

3)இன்னுமொரு பிரபல நிறுவனத்தில் சிதைவடைந்த ஐஸ் சொக் டீப் பிரீசரில்(குளிரூட்டி)குவிக்கப்பட்டிருந்தது.
 சுகாதார அதிகாரி - ” அவை எல்லாம் என்ன ?”
கடைக்காரர் - ”பழுதடைந்தவை”
சுகாதார அதிகாரி” பழுதடைந்தவற்றை ஏன் வீசாது வைத்திருக்கிறீர்கள் ? கடைக்காரர்-........3#33@!......................(மனதில்-அவை றீ சைக்கிளுக்காக காத்திருக்கின்றன Sir - மறுபிறப்பு)

4)அனைத்து ஐஸ் கிறீம் தயாரிப்பு நிறுவனங்களிலுமே பணியாளர்கள்  வைத்திய சான்றிதழ் இல்லாமல்தான் பணியாற்றியிருக்கிறார்கள். (உணவு கையாளும் நிறுவனங்களில் சுகாதார பரிசோதனையின் பின்னரே பணியாற்ற முடியும்.)

5)குடிசைக் கைத்தொழிலாக ஐஸ் கிறீம்- அம்மாவும் பிள்ளையுமாக ஒரு சிறு குடில் போன்ற வீட்டில் வைத்து எந்த வர்த்தக பதிவுகளும் நாமமும் இன்றி 30 வருடங்களாக ஐஸ் கிறீம் தயாரித்து வினியோக வண்டிகளிற்கு கொடுத்து வத்திருக்கிறார்கள்(OEM - Unbranded product).தரையிலேயே அனைத்து உற்பத்திப்பொருட்களும்...சுகாதாரம் கெட்ட நீர்...அனைத்துமே நகம் கூட ஒழுங்காக வெட்டாத கைகளால் தான். வண்ணார் பண்ணையில் அமைந்துள்ள இந்த வீட்டை அதிகாரிகள் கைப்பற்றிய போது அவர்கள் கேட்ட கேள்வி” எப்பிடி சேர் இந்த இடத்தை கண்டு பிடித்தீர்கள் முப்பது வருடமாக  யாருமே  வரலையே...”  

6)இன்னுமொரு ஐஸ்கிறீம் நிறுவனம் பயன்படுத்தாத குளியலறைகயில்  இயங்கி வந்திருக்கிறது. எந்தவித சுகாதார விதியும் இன்றி.  ஆச்சரியாமான விடையம் என்னவெனில் அதை நடத்தியவர்  அரச சுகாதார சேவை சம்பந்தப்பட்டவர். 


மனதில் பட்டவை:

யாழ்ப்பாணத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும்பணக்காரர் பலர் ஐஸ கிறீம் நிறுவன உரிமையாளர்களே. உற்பத்திச்செலவாக சுமார் இரண்டு ரூபாய் முடியும் ஐஸ் பழம் ஒன்று பன்னிரண்டு ரூபாய்க்கு விற்கப்படு அதிக இலாபமீட்டும் தொழிலாக உள்ளது. நான்கைந்து ஆடம்பர சொகுசு வாகனங்கள் ,மாளிகைகள்,கல்யாண மண்டபங்கள் என சொத்துக்களின் குவியல்களே பலரிடம் இருக்கிறது. இருக்கட்டும் நன்றாக வாழுங்கள் ,அதே நேரம் மக்ககுள்ளு நல்லது செய்யாவிட்டாலும் தீயதை செய்யாதிருக்க அக்கறையெடுங்கள்.

இவர்கள் யாருமே வேண்டுமென்று இவற்றை செய்யவில்லை . பெரும்பாலும் அவர்கள் பணக்காரர்களே தவிர(இப்போது) படித்தவர்கள் அல்ல. ஒரு கால யாழ்ப்பாணத்தில் படிக்காதவனுக்குரிய துறையாகவே வியாபாரம் காணப்பட்டது. அப்போது உள் நுழைந்து ஐஸ்பழம் காவித்திரிந்து விற்று..படிப்படியாக முன்னேறி பெரும் செல்வந்தர் களாகிய பலரும் இதனுள் அடக்கம்.

பணம் செய்யத்தெரிந்த இவர்களுக்கு வர்த்தக கோட்பாடுகள் பற்றி  தெரிந்திருக்கவில்லை.  தற்போது அவர்களது நிறுவனங்கள் பல வாரங்களுக்கு கோர்ட் உத்தரவால் மூடப்பட்டு  புத்தி புகட்டப்பட்ட பின்னர் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து உயர் ரக நீர் வடிகட்டும் வசதியை உருவாக்கியுள்ளனர்.

இதிலிருந்து இவர்கள் முறையான அறிவுறுத்தல் அல்லது கல்வி இல்லாமையாலேயே இவ்வாறு நடந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.(விதிவிலக்குகள் இருக்கலாம்)

எனது வழமைாயன கருத்தாக உணவு கையாளும் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு உணவுச் சுகாதாரம் பற்றி கட்டாய குறுகிய கால பயிற்சி நெறி வழங்கி சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்பதையும் அச்சானறிதழ் இல்லாதோர் பணி புரியும் நிறுவனங்களுக்கு தண்டம் முதலிய சட்ட நடவடிக்கைள் தேவை என்றும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த பயிற்நி நெறி 2 அல்லது 3 நாட்கள் ஏன் ஒரு நாள் கொண்டதாகக் கூட அமையலாம்.

A Great Salute !


எனக்கு நிச்சயமாகத்தெரியும் ,இதில் ஈடுபட்டு சிறப்பாக செயற்பட்ட முதுகெலும்புள்ள பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு அரசியல் ரீதியாவும் பணபல ரீதியாகவும் பல அழுத்தங்கள் வந்திருக்கும்.(யாழ்ப்பாணத்தின் முப்‌பெரும் ‌ஐஸ் கிறீம் நிறுவனங்களையும் மூடுவதென்பது மிகப்பெரிய சவால்) அவர்களுக்குள்ளேயே காக்கை வன்னியன்கள் இருந்திருக்கலாம் ..எனினும் துணிந்து நின்று நிதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்பட்ட அந்த நல்ல மனிதர்களுக்கு ஒரு சலுாட்...

மணிமாறன் எனும் பாமரனின் பதிவுகள்.

இந்து சமுத்திரத்தின் ஒரு துளிக் கண்ணீர் போல் இருக்கும்  இரத்தம்  சிந்திய இலங்கைத்தீவின் யாழ்ப்பாண நகரத்தில்   பிறந்தவன் மணிமாறன் எனும் நான். தமிழில் இளநிலைப்பட்டப்படிப்பையும் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப்பட்டப்படிப்பையும்  விரும்பிப்ப படித்தவன். கணினியும்  கணினி போன்ற கைப்பேசி தொழில் நுட்பங்களும் என்னை அதிகம் கவர்பவை . கவிதை இலக்கியம் என்றும் நாட்டம் அதிகம்  .

இசை,நாடகம்,குறும்படம் என்று என் விருப்பங்களும் தேடல்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. என்னை ஒரே ஒரு துறைக்குள்  சிறைப்பிடிக்க வேண்டாம்.

அமரிக்காவின் சிலிக்கன் வலி (Silicon Valley) புதினங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.  கல்கியின் பொன்னியின் செல்வனும்தான். சிலப்பதிகாரமும்  மணிவாசகனின் திருவாசகமும் பெரும்பாலும் மனப்பாடம்.  எனது நண்பன் ஸரீபன் ஜெயசீலன் பேஸ் புக்கில் சொன்னது போல ”கற்றலும் கற்பித்தலும் தவிர வேறு என்ன இருக்கிறது வாழ்வில்”  என்பதை நடைமுறையாகக்கொள்பவன் நான். எ்ன்னுள் இருக்கும் துக்கத்தை பகிர்ந்து கொள்வதைப்போலவே என்னுள் பொங்கும் சந்தோசங்களையும் மற்றவர்க்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பகிர இந்த அரங்கில் ஏறியுள்ளேன்.

தொடர்புகளிற்கு - 0094777302882  / manimaran101(at)gmail.com

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை