Wednesday, January 7, 2015

பொருந்துவன போவென்றாலும் போகா ! - விதி பற்றிய எனது புரிதல்





நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவராக பிறந்தாலும்,சகல ‌சுக போகங்களுடனும் வளர்ந்தாலும் ,உங்களைச்சுற்றி பல நல்லவர்கள் உங்களில் அக்கறையுடன் இருந்தாலும், தொழில் துறையில் பல சாதனைகளைப்புரிந்து மற்றோர் கணிப்பில் வெற்றியாளனாகத் திகழ்ந்தாலும். ... இன்னும் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு வேதனை அல்லது தேடல் அல்லது திருப்தியின்மை இருக்கிறதென்றால் (அதை நிறைவே்ற்றும் வழி தெரிந்திருந்தும்)  நீங்கள் நிச்சயமாய் விதியின் அதிக அக்கறைக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களிற்கு சில பூட்டுக்களின் சாவிகள் கிடைக்க காத்திருக்கின்றன என்று பொருள்.

படித்தால் நல்லது ,வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பது ஒரு இளைஞனுக்கு தெரிந்த விடையம்தான். ஆனால் அவன் நண்பர்களுடன் கிறிக்கெட் விளையாடும் பொழுது தந்தை திடீரென காதைப்பிடித்து இழுத்து வந்து படிக்கும் மேசையில் விட்டு கவனமாய் படி என்றால்...அவனது மனம் அந்த விளையாட்டு பூர்த்தியடையாமை குறித்து எவ்வளவு வருந்தும் . அவனது நரம்பு நாடிகளில் அவை புடைக்கிற அளவிற்கு கூட அந்த இழப்பின் வலி தோன்றலாம்.

இந்த படிப்பிற்காய்தான் என் விளையாட்டு கலைக்கப்பட்டது என்பது   தெரிந்தும் படி்ப்பை வெறுக்க முடியாமலும் விளையாட்டைத் தொடர முடியாமலும் - விளையாடி முடித்து வந்திருக்கலாமே என்று அங்கலாய்க்கும் மன நிலை உங்களுக்கு தொன்றியிருக்கிறது என்றால்...அது விதி. முற்கூட்டிய ஏற்பாடு.

உங்கள் ஆசைகள் எவ்வளவு நியாயபபூர்வமாக இருந்த போதிலும் அந்த அனுபவத்திற்கு உரிய காலமோ ,விதியோ இல்லாவிடின் அது கிடைப்பதில்லை. வெறும் புத்திக்கும் ,திட்டமிடலுக்கும் மட்டுமே வெற்றிகள் கிடைப்பதாகக்கொண்டால், படிப்பிலும், வாழ்திறன்களிலும் மிகுந்த புத்திசாலிகள் மட்டுமே வாழ்வில் பொருளாதார , குடும்ப நிலை அடிப்படைகளில் பெரும் உயர்வில் இருக்க வேண்டும் . . ஆனால் முப்பதிற்கு மேல் வாழ்ந்த நம்மில் பலருக்கு எப்போதும் கெட்டிக்காரர்களே வெல்வதில்லை என்பது அனுபவ ரீதியாகத்தெரியும்.

வியாபாரம் செய்யத்தெரியாத பலர் அந்த துறைகளில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். மிகத்திட்டமிட்டு வியாபாரம் செய்தும் கவிழ்ந்து போகிறார்கள் சிலர். உப்பு விற்பதை நீங்கள் திட்டமிடலாம்.ஆனால் அந்த இடத்தில் மழைகொட்டி நாசமாக்குவதையோ வெயிலடித்து தொந்தரவற்று இருப்பதையோ  உங்களால் தீர்மானிக்க முடியுமா ? . கடற்கரையில் கோடிக்கணக்கான முதலீட்டில் காற்றாலைகளை ஒரு நிறுவனம் நிறுவி அடுத்த வாரமே சுனாமியில் அந்த இடமே அடையாளம் தெரியமால் அழியும் போது வென்றது அவர்களது திட்டமிடலா அல்லது விதியா ?.எதுவென்பது ?

எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருக்கிறார் ,அவரது தந்தை விட்டுச்சென்ற வர்த்தகத்தொழிலை அவர் செய்கிறார். பெரும் கோடீஸ்வரன்.  அவரிடம் வேலை செய்யும் பெரும்பாலான உதவியாளர்கள் அவ்வப்போது 50 லட்சம் 10 லட்சம் என்று காசை சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டுவதுண்டு. அந்தளவிற்கு இலகுவில் மற்றவர்களை நம்பும் குணமும் ,இறுக்கமான நிர்வாகக்கட்டமைப்பு இல்லாமையும் உள்ளவர் அவர். ஆனாலும் அவர் வீழ்நது போய்விடவில்லை வளர்ந்து கொண்டே இருக்கிறார். பல தமிழ் விழாக்களிலும் அவரைக்காணலாம். எப்போதும் சிரித்த முகம். வியாபரம் எப்படிச்செய்வது என்று தெரியாமலே கோடிகளைக்   குவிக்கிறார்.   இத்தனைக்கும் இவர் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்காதவர். எனது நண்பர்கள் பலர் நன்றாகப்படித்து ,சந்தை ஆய்வு,கள ஆய்வு செய்து,திட்டமிட்டு செய்த பல வியாபார நடவடிக்கைகள்  அவர்களை பெரும் கடனாளிகளாய் மட்டுமே ஆக்கியுள்ளது.  

முயற்சி மட்டுமே நம்முடையதாகிறது. கூலியின் அளவைத்தீர்மானிப்பதும் வழங்குவதும் வழங்காது விடுவதும் வேறு யாருடையதோ கைவசம் இருப்பதாய் படுகிறது.

இந்த அனுபவம் நம்மில் அனைவருக்கும் உண்டு. சிலர் அதனை கவனிக்காது விடுகிறார்கள் .அவ்வளவே.

"கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே" என்ற பகவத் கீதையின்  வரிகள் இவ்வாறான சில அனுபவங்களின் பின்னரே புரிய ஆரம்பிக்கிறது. ஒரு மாணவனின் கடமை படிப்பது. பரீட்சைக்காலத்தில் அதற்குரிய பாடத்திட்டத்திற்கமையப் படிப்பது. விழங்கிய அளவில் படிப்பது. விழங்காததை விழங்க முயற்சிப்பது . பரீட்சை எழுதுவது. அவ்வளவே.  பெறுபேறு 10 புள்ளிகள் என்றாலும் 90 புள்ளிகள் என்றாலும் அதைப்பற்றி கலங்க ஒன்றுமில்லை. அவன் எல்லா முயற்சியும் செய்தும் இந்தப்புள்ளிதான் வந்ததென்றால் அவ்வளவு தான். 

ஒவ்வொரு தொழிலுக்கும் , முயற்சிக்கும் என்றிருக்கும்  கடமைகளை செய்வோம் . தலைகீழாய் முயற்சி செய்கிறேன் என்ற அளவிற்கு சென்று முயற்சிப்பதும் சரியே ஆனால் பெறுபேற்றில் உங்கள் மனம் முழுவதையும் விட்டு விடாதீர்கள்.

இதனை காதலை வைத்துக்கூட அருமையாக வி‌ழங்க முடியும். நான் பதினாறுகளில் ஆரம்பித்து 19 வரை  ஒரு தலைப்பட்சமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். பல்கலைக்கழக அனுமதி பெற்றதும் கொஞ்சம் தைரியம் வந்து இன்னொரு நபர் மூலம் துாது விட்டேன் ” அவன் அவளிடம் சென்று கேட்டான் ” ” நீங்கள் மணிமாறனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”  ,அவள் சொனனாள் ”ஒன்றும் நினைக்கவில்லை”  . முடிந்தது என் மூன்று வருடக் காதல். நேரில் கேட்க தைரியமில்லை ஏனென்றால் முடிவு என்னாகுமோ எனற பயம். முடிவு பற்றியே கவலை. காதலை முறைப்படி சொல்வதைப்பற்றி சிந்திக்கவில்லை.

மாணவர்களிற்கு ஆங்கிலம் கற்பிக்கும்போது ஓர் கதை வரும். அதில் ஒரு நண்பன்  ஒரு இரவு விடுதியில் வைத்து பெண்கள் என்றாலே அணுகப்பயப்படும் தன் நண்பனிடம் சொல்லுவான். ”அதோ அந்தப்பெண்ணிடம் போய் அவள் உண்ணும் கோழி இறைச்சி துண்டில் ஒன்றை எடுத்து உண்ணு...அவள் உன்னை ஆச்சரியமாகப்பார்ப்பாள் உடனே .”நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் அதுதான் இந்த கோழி இறைச்சி நீங்கள் உண்ணும் அளவு பாதுகாப்பானதுதானா என்று  ‌சோதித்துப்பார்த்தேன்  ” எனச்சொல்லு..உன் நகைச்சுவை அவளிற்கு பிடிக்கும் அவள் உன்னுடன் உரையாட ஆரம்பிப்பாள். மாறாக அப்படி நடக்கவில்லை அவள் கோபமடைந்துவிட்டாள் என்றால் ” ஆம் இந்த செயற்பாடு தவறுதான் என்று சொல்லிவிட்டு வந்து விடு . இதை விட வேறு என்ன மோசமாக நடந்துவிடக்கூடும்.  நம் விதி என்ன என்று தெரியாதபோது கடமையை         ஆற்ற மட்டும்தானே எமக்கு அதிகாரம் இருக்கிறது ? முடிவில் இல்லை அல்லவா ? எனவே வருந்த எதுவுமே இல்ல‌ை‌.

இதை முதன் முதல் படிப்பிக்கும்‌போதுதான் என் மூளையில் பளிச்சிட்டது ” அட, காதலிப்பதை தயங்காமல் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கலாம்  பிடித்திருந்தால ஆம் என்கிறாள் இல்‌லை    என்றால்  மறுக்கப்போகிறாள் வேறு என்னதான் நடந்து விடும். இது ரொம்ப இலகுவான அணுகுமுறை. காதல் வந்தால் அதைச்சொல்லுவது கடமை பலன் என்னவாகவும் இருக்கலாம்.  எனக்கு   இது காலம் பிந்திய ஞானம் . ஆனால் இதை வாசிக்கும் பலருக்கு பயனளிக்கலாம்.

ஆக, கன்மவிதி என்பது எமது செயல்களால் (இந்தப்பிறவி மற்றும் போன பிறவிகள்)எமக்கு ஏற்றப்படும் சுமை. ஏற்கனவே ஏற்றிய சுமையுடன் இன்னும் இன்னும் ஏற்றிக்கொண்டே செல்கிறோம். பொன்னாக இருந்தாலென்ன குப்பையாக இருந்தாலேன்ன தோளில் ஏற்றப்பட ஏற்றப்பட சுமைதானே அதிகரிக்கும் . நல்வினை தீவினை இரண்டுமே பாரங்கள்தான். பாரம் குறைக்க பெரியவர்கள் கூறும் வழி  எதைச்செய்தாலும் விருப்பு வெறுப்பின்றி செய்க அவ்வாறு செய்யின் அதனால் வரும் கர்ம வினை வராது(கீதை) இதை பூரணமாக முடியாவிட்டாலும் படிப்படியாகவேனும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாம்.

சுக போகங்களை அனுபவிக்கத்துடிக்கும் மனசுடைய நாம் அனைத்துக்கருமங்களையும் எதிர்பார்ப்பற்று செய்வது மிகச்சிரமம்.  முடியுமான தருணங்களில் பற்றற்று காரியமாற்றிப் பழகுவோம். காலம் செல்லச்செல்ல அதுவே ஒரு வழிபாடாகிவிடும்.

விதியை மதியால் வெல்லலாமா ?.வித‌ியை தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சிதான் சோதிடக்கலை. பரிகாரங்களும் சில முற்கூட்டிய ஏற்பாடுகளும் நம் விதியை மாற்றப்பயன்படுமா ?  கிரியைகள் உண்மையா ? மந்திரங்கள் ஏன் ? கோவில் ஏன் ,விக்கிரகங்களால் பயன் உண்டா ?  

இவை பற்றிய சிந்தனைகளும் சில பற்றிய ஓரளவு தெளிவும்தான் எனது தற்போதைய மனநிலை , விதி ஏவின் விரைவில் எழுதுவேன்.

விதியில் கூட எமக்கு தெரிவு செய்யும் வசதி இருக்கிறது என்று ஓஷோ சொன்னதைப்படித்தபோது மிக வியப்பாய் இருந்தது , அந்த உதாரண அழகு.(அடுத்த பகுதியில்)





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை