Saturday, September 9, 2017

வைக்கோல் பட்டடை யுத்தம்

நான் ஒன்றும்  மாடல்லத்தான்..
என்றாலும்,
தினசரி
போராட வேண்டியிருப்பது என்னவோ
வைக்கோல் பட்டடை நாய்களுடன்தான்.

நொடியின் பெறுமதி
துளியும் வீணாக்காது வாழ்பவன்
இன்று,
வருடத்தைக்கூட
வருத்தப்படாது ‌தொலைக்கும்
மனிதப்பூச்சிகள்
மத்தியில்  ,
இன்னும் மோசமாய்

பயன்படுத்தாத நாட்கள்
எல்லாம்
செல்லாத (500) ரூபாய் நோட்டாக
வயதெனும் பீரோவில்
இறுக வைத்துப்  பூட்டப்படுகிறது.

ஆண்டில் அரைவாசிக்கு மேல்
அதி
கசப்பு நாட்களையே
என்
காலண்டர்
எப்போதும் காட்டுகிறது.
”அதி” போனால்
மீதிகூட
கசப்பு நாட்கள்தான்
உலக சமுத்திரங்களின் மொத்த
உப்பையும்
என் வாழ்வில்
யாரோ வாரிப்போட்டதுபோல்..  




குழந்தைப்பராயத்தை
வீட்டின்    யுத்தம் தின்றது
குமரப் பருவதை நாட்டின் யுத்தம் நசித்தது.
நடுவயதில் வந்த
அந்த
நாலைந்து
நந்தவன நாட்களையும்
என் மனப்பிரளயம்
மரணிக்க வைத்தது.

அதி மானமும்
அந்த
இரக்க குணமும்
இணைந்து கொன்ற
சவலைப்பிள்ளை
நான்.

அறிவு-
அனுபவத்தால்
இன்னும் கூரானது.
இருபக்கமும்.

நண்பனின்
சிரிப்பிலும் நரித்தனம் உண்டோ ? என்று
தேடும்

மழலை  மகளை   முத்தமிடுகையிலும்
நாளை இதுவும்
ஓரு காதலுக்காய்
நம்மைக் கைவிடுமே
என்று எண்ணும்.

மனதை
உடைத்தார்கள்.
உடைக்க உடைக்க
உள்ளே...
புத்தி.

இப்போது
கண்களால்
அல்ல
மூளையால்தான்
அடுத்தவன் முகம்
காண்கிறேன்

”அறிவு ”
அனுபவத்தால்
இன்னும் கூரானது
இருபக்கமும்

அடுத்த நாள் இருக்காது
என்று தெரியாமல்
ஈசலைப் பார்த்து
மகிழ்ச்சி கொள்ளும்
சிறு குழந்தையாக

பொய்மை மிக
மயக்கம் கவ்வி
ஒரு பொழுதேனும்
என் மனப்பைய‌ை‌
மகிழ்வென்னும் மது நிரப்ப
ஆண்டவா    நல்காய் எனக்கு

 ”அறியாமை ” என்னும் அரு மருந்தை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை