Tuesday, November 7, 2017

விதி எனும் எல்லை- உங்கள் எல்லை எது ?

உங்களுக்கு என்று ஒரு வட்டம் கீறப்பட்டிருக்கிறது. எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த எல்லை எது என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்சக்காலம் தேவைப்படும். அந்தக்காலம் உங்கள் புத்தி ஆன்ம பக்குவம் என்பதைப்பொறுத்து வேறுபடும் .

முயற்சி செய்யாமல் எங்கள் எல்லை தெரியாது. ஓடிக்கொண்டிருக்கும் எங்கள் ஒவ்வொருவரின் முன்னரும் ஒவ்வொரு துார எல்லைகளில் கண்ணுக்குத்தெரியாத கயிறு கட்டப்பட்டிருக்கிறது. ஓடிப்போய் முட்டி நிற்கும் போது மட்டுமே அவரவர்க்கு அவரவர் எல்லை புலப்படும். நாம் விடுவதில்லை மீண்டும் தடைப்பட்ட  இடத்திலிருந்து வேறு திசை நோக்கி ஓடுவோம். மீண்டும் குறித்த துாரத்தில் கயிறு தடைப்படுத்தும். மூச்சு முட்டி களைக்கும் மட்டும் ஓடுவோர் சிலர். உயிர் போகுமட்டும் எல்லை உடைக்கலாம் என்று ஓடுவோர்தான் பலர்.

குறைந்தது பத்துவருட முயற்சியிலாவது எமது எல்லை எவ்வளவு என்று கண்டு கொள்பவர்கள் அதி புத்திசாலிகள்.

வைத்தியராக வேண்டும் என்ற தன் கனவால் - நன்றாகப்படிக்கக் கூடிய - இலங்கையில் அரச பல்கலைக்கழத்தில் மருத்துவ அனுமதிய‌ை‌      சில புள்ளிகளால் தவற விட்ட எனது நண்பன் . தலைகீழாக நின்று வெளிநாட்டில் மருத்துவம் படித்தான் - இலங்கை வந்தான் - இங்குள்ள பரீட்சைகளில் தேற முடியாது போனது,  இங்கு பணியாற்ற முடியாது இங்கிலாந்து சென்றான். அங்கும் பணியாற்றத்தேவையான பரீட்சைகளில் தேற முடியவில்லை - அவன் விடுவதாயில்லை -மேற்படிப்பு - மேற்படிப்பு என்று மருத்துவத்தில் முனைவர் தகுதி வரை குறித்த துறையில் கற்றான் - அதன் பிறகும் வைத்தியராக வேலை செய்ய முடியவில்லை ,ஏதேதோ தடைகள். 20 வயதில் தொடங்கிய கல்விப்பயணம் - இருபதுகள்,முப்பதுகள் தாண்டி நாற்பதிலும் தொடர்கிறது- இன்று ஏதோ ஒரு சிறு தீவில் - மருத்துவம் சார் பணியில் இருக்கிறான் - இன்னும் ஊரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முழு வைத்தியனாக  வரவில்லை.

அவனது வட்டம் அவனுக்கு முப்பதுகளில் புரிந்திருந்தால் - நிம்மதியாகப் பல விடையங்களைச் செய்திருக்கலாம் - இன்றும் என்றோ ஒரு நாள் எப்படியோ இலங்கையில் வைத்தியனாகப்பணி புரியலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறான். இநத நம்பிக்கை - இனிமேல் வென்றுதான் என்ன ? (இது எனது பார்வை)


வட்டத்தின் அளவு புரிந்து விட்டால் அதற்குள்ளேயே அடங்கி விட வேண்டும். அது மனப்பக்குவம். அனைவருக்கும் வராது.

*******

நீங்கள் எவ்வளவு புத்திசாலியாகவும்-திறன்கள் நிறைந்த பெட்டகமாகவும் இருந்தாலும் உங்களால் பல சமயங்களில் மிகச்சாதாரணர்கள் அடைந்த வெற்றிகளைக்கூட  ஆசைப்பட்டு அடைய முடியாதிருந்திருக்கலாம்.

இளமையில் வறுமையால் நல்ல சாப்பாட்டைச் சாப்பிட முடியவில்லை என்று கடின உழைப்புச் சிந்தி உழைத்து உண்ணலாம் என்று புறப்படும்போது சக்கரை வியாதியால் கட்டுப்பாட்டு உணவு மட்டும் உண்க என்று கூறிய டாக்டர் - நீங்கள் இப்படி ஓய்வின்றி உழைத்ததுதான் சக்கரை வியாதிக்குக் காரணம் என்றும் சொல்லும்போது எமது உணவு உண்ணக்கிடைத்த பாக்கியம் என்ன என்பது புலப்படும். அந்த நபரது எல்லை இவ்வளவுதான். எவ்வளவு உழைத்தாலும் உணவின் மூலம் கிடைக்க வேண்டிய சுகத்தின் அளவு அவ்வளவுதான். மீறி உண்டாலும் பயந்து பயந்து சாப்பிடும் நிலைதான். நிம்மதியிராது.

பொருள் தேடல்,புலன் அனுபவங்கள்- உலக சுகங்களை நுகரல் என்று எதையும் அவரவர் அவரவர் எல்லைக்குட்பட்டே செய்ய முடியும்.

பில்கேட்ஸ் தேடிய பணத்தை அதே உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் போட்டு - முயன்ற அனைவராலும் பெற இயலவே இயலாது. வென்ற அந்த ஒரு சிலரை மட்டும் அறியும் நாம் தோற்ற இலட்சக்கணக்கான இயல்பான கெட்டிக்காரர்களைக் காண்பதில்லை.

நடைமுறை உதாரணம் - ஒரு காலத்தில் உலகை மூக்கில் விரல்வைக்க வைத்த நோக்கியா நிறுவனம். 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட அந்த நிறுவனத்தின் வரலாற்றில் அதன் புதிய கண்டு பிடிப்புக்களும் சாதனைகளும் பெரும் பட்டியலில்    இடம்பெறுகிறது   . வரலாற்றில் பல தடவைகள் பர பரப்பாக பேசப்பட்ட தொழில் நுட்பங்களை வழங்கி - சாதாரண மக்களால்  வெற்றிகரமான நிறுவனமாகப்பார்க்கப்பட்ட நிறுவனம் அது. ஆனால் அது பொருளாதார ரீதியா சந்தித்தது எல்லாம் தொடர் தோல்விகளே. அப்பிளை விடவும் - சாம்சுங்கை விடவும் முதல் தோன்றியதும் - கண்டு பிடிப்புக்களுக்கான அதிக உரிமங்களை வைத்திருப்பதுமான நோக்கியாவால் ஒரு அப்பிள்போல் பொருளாதார ரீதியான வெற்றிகரமான நிறுவனமாக வர முடியவி்ல்லை.

நோக்கியாவின் வரலாற்றில் தற்கொலை செய்து கொண்ட சீ்.இ.ஓக்கள் பலர்.

நொக்கியாவிற்கும் வட்டம்  -- அதனை நிர்வகிப்பவர்க்கும் எல்லைகள். வெற்றி உங்களிற்கு இவ்வளவுதான். அப்படியான  விதி எ்ல்லைகள் உள்ளவர்களே தொடர்ந்து நொக்கியாவில் பணிபுரிவதும்-நிர்வகிப்பதும்...விதி பற்றிய  படிப்பினை.

விதி என்ற வட்டத்தின் எல்லை புரியத்தொடங்கினால் -  துன்பம் மனதை விட்டு விலகிவிடும்.  நமக்கு அளந்தது இவ்வளவுதான் என்பது அறிந்து அதற்குள் நலம் காணப் பழகலாம். முயலாமல்  எல்லை காண முடியாது

1 comment:

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை