Thursday, November 29, 2018

வடக்குத் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பு விண்ணப்பம். (வி.இல 001)

ஓ.எல் பரீட்சை முடிந்ததும் கூவிக் கூவிப் பிள்ளை பிடிக்கப்போகும் ரியூசன் மார்பியாக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்.




Please see the update at the end of this article .

டிசம்பர் 12 உடன் நாட்டில் ஓஎல்(G.C.E O/L) பரீட்சைகள் முடிவிற்கு வந்து விடும். கொழும்பில் உள்ள காமினியும் மொஹமட் நளீமும் அடுத்து வரும் 3 மாதங்களையும் எப்படியெல்லாம் சந்தோசமாகக் கழிக்கலாம் என்று திட்டமிடுவார்கள். திருகோணமலையிலிருந்து ஓ.எல் எழுதியதும் சிவகுமார் தான் நெடு நாளாக ஆசைப்பட்ட மட்டக்களப்பு பாசிக்குடாக் கடற்பகுதிக்கு குடும்பத்துடன் சென்று விடுவான். தை மாதத்தில் மலேசியாவுக்கும் தந்தையுடன் செல்ல இருக்கிறான். அம்பாந்தோட்ட திசாநாயக்கா அடுத்த மூன்று மாதங்களுக்குள் தனக்குப்பிடித்த இந்திப்படங்களை எல்லாம் பார்த்து விடுவது என்று கிளம்பி விடுவான். அவனவன் இத்தனை வருடமும் கல்விக்காகச் செய்த தியாகங்களை ஒதுக்கி வைத்து விட்டு தனது இந்த இளம் வயதில் மட்டுமே உணர்ந்தனுபவிக்கவேண்டிய மற்றும் கற்க வேண்டியவற்றைத் தேடிப்புறப்பட்டு விடுவான்.

ஆனால்...யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில், தம்பி சிவகுமார் ,   யாழ்ப்பேப்பர்கள் எல்லாம் " உடனே வந்து சேருங்கள் -சிலபஸ் மிஸ் ஆகிவிடும்" என்று வெருட்டியதால் ,  ஓ.எல் முடிந்த அடுத்த கிழமையே திருகோணமலையிலிருக்கும் அம்மம்மா வீட்டிற்குப்போய் ஒரு கிழமை நிற்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தியாகம் செய்து விட்டு , தனது ஓ.எல் பரீட்சைக்கு என்ன பெறுபேறு வரும் என்றே தெரியாமல் ,ஏன் இந்தப்பாடத்தை தெரிவு செய்கிறோம் என்பதைக்கூட அறியாமல் பயோ சயன்ஸ் ரியூசனுக்குப்போகத்தொடங்கிவிடுவான்.

வெளி உலக அறிவு இல்லாத - இன்னொரு மருத்துவ பீட மாணவன் தயார்.

"பாசிக்குடா ஈரானுக்குப்பக்கத்திலா இருக்கிறது ?" - "என்னது,தாடி வைத்த  சாமிகள் எல்லாம் பாக்கிஸ்தான்  பயங்கரவாதிகளா ? " "காலிச் சிங்களவர்கள் நம்மைக் கண்டால் வெட்டிப்போட்டு விடுவார்களாமே   ?"  என்று கேட்கும் பாடத்திட்டத்துக்கு வெளியே ஏதும் அறியாப் புத்தகப்பூச்சி ஒன்று தயாராகிவிடும். 

”முஸ்லிம்கள் எல்லாம் கட்டாயம் நாலு கல்யாணம் கட்ட வேண்டுமாமே என்று என்னிடம் கேட்ட ஒரு  நண்பனையும்  , மச்சான் ”ரொயிலட் ரிசூ(Toilet tissue)” என்றால் என்ன என்று போன் பண்ணிக்கேட்ட மருத்துவ நண்பனையும் வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கிறது. அதுவும் மிக அண்மையில் . (அம்மா சத்தியமாக இந்த சம்பவங்கள் இரண்டும் உண்மை ) எனது நண்பர்கள்(மட்டும்) என்னைத் தொடர்பு கொண்டால் அந்த இரண்டு புண்ணியவான்களும் யாரென்று சொல்கிறேன். ) -ரியூசன் பரிதாபங்கள்

"கல்வியின் நோக்கம் வெறும் பாடமாக்கும் இயந்திரங்களை உருவாக்குவதல்ல. புதியன புனைதல் - கண்டுபிடிப்பு - உள்ளவற்றை மேம்படுத்தல் என்ற சில திறன்களாவது உள்ள நற்பிரஜைகளை நல்ல சமூகச் சிந்தனையோடு உருவாக்குவதே," என்பதே எனது கருத்து.

தனிமனித மேம்பாடு , அதிலிருந்து பிறந்த சமூக மேம்பாடு என்பவற்றை நோக்கி அமைய வேண்டிய கல்வியை வெறும் பணம் பண்ணும் யுத்தியாக மட்டும் பார்க்கும் நிலையில் இன்று நாம். அதிலும் அரசாங்க வேலை தரக்கூடிய வகையில்  எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதையெல்லாம் படிப்போம்-(பாடமாக்குவோம்). இந்த மனப்பாங்கினால் சுய புத்தியும் ஆளுமையும் வளரப்பெறாத ஒரு குறை வளர்ச்சித்தாவரங்களாகவே எங்கள் இளம் சமுதாயம் தொடர்ந்தும் மங்கி வருகிறது.

Wednesday, November 14, 2018

அம்புலிமாமா மற்றும் பரமார்த்த குருவும் சீடர்களும் கதைகள் PDF free download - V.1.1

அம்புலிமாமா எனும் அரும்பெரும் பொக்கிஷத்தை என் சமவயதில் பயணிப்பவர்களால் பெரும்பாலும் மறந்திருக்க முடியாது.” வட்ஸ் அப்பும்”, ” வைபரும்”, ” பேஸ் புக்கும் ” வந்து இன்றைய இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்க முன்னர் இருந்த வாசிப்பால் வளம் பெற்ற பொற்காலத்தின் இளைவர்கள் நாங்கள்.



இல்லாது போய்விட்ட அம்புலிமாமா கதைகளை பல இணையத்தளங்களிலிருந்து பிரதிசெய்து - எனது பிள்ளைகளிற்காகவும் எனது நண்பர்களின் பிள்ளைகளிற்காகவும் ஒரு  மின்னியற் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

Monday, May 7, 2018

இடம்பெயர்ந்த டீ.என்.ஏ - யாழ்ப்பாணம் பிறழ்ந்த வரலாறு -01



நல்ல டீ.என்.ஏ க்களின்  இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும்  இன்னும் பெருமைமிகு மேதாவித்தனமும் - அடிப்படை மனிதப் பண்புகளுமுள்ள யாழ்ப்பாணத்தவரைக் காண முடிகிறது.

ஆனால் அனைத்து உயர் கலைகளும் கல்வியும் விளைந்து பெருகிய  கலைமாண்புகளின் சொந்த நிலமாகிய யாழ்ப்பாணத்தில் இன்று எந்த பெறுமதியும் அறியாதவர்களையே சுற்றிச் சுற்றிக் காண முடிகிறது.

இன்று காலை,  கனடா வாழ் கலைஞர்களின் ஒரு சில இசை அல்பங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன ஒரு மென்மை ? என்ன ஒரு உயர் கலை வண்ணம்  ? - என்ன ஒரு இசை - ஒளி அமைப்பு ? . அவர்கள் எல்லாம் யாழ்ப்பாண வழித்தோன்றல்கள் ஆனால் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். நல்ல தமிழில் பண்ணபான உயர் கலைப் படைப்புக்களை வெளியிட்டிருந்தார்கள்.

கொலையன்,வெறியன், திமிர் பிடித்தவன் என்று இன்றைய யாழ்ப்பாணம் வாழ் மக்களின் தரத்தை வெளிப்படுத்தும் - தாடி மீசை அதிகம் வைத்த  - படிப்பறிவை வெளிப்படுத்தாத ‌ரௌடிக் கதாநாயகர்களின் குப்பைக் கதைகளைக் கொண்ட - அல்லது மிக விலை உயர்ந்த கமெராக்களையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி - சுவையே இல்லாத - ஆயிரம் தடவை இந்திய சினிமாக்களில் கண்டு சலித்துப்போன கதைகளைக்கொண்ட குறும் திரைப்படங்களைக் கண்டு வெறுத்துப்போன எனக்கு - இந்த வீடியோக்கள் ஈழத்தவர் சினிமா பற்றிப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

கல்வி-நன்னெறி-மனிதாபிமானம் என்பவை சான்றிதழ் அளவில் மட்டுமே வளர்ந்திருக்கிறது- 1995 இற்கு பின்னர் (மா‌பெரும் இடப்பெயர்வின் பின்)உருவான இன்றைய யாழ்ப்பாணத்தில்.

Tuesday, April 24, 2018

ஞான விளக்கு - என் பிறந்தநாட் பாடல்




கைப்பேசி
கணினி வலை
குறுஞ்செய்தி
என்றொவ்வோர் ஊடகத்தின்
உட்புகுந்தும்
என்
வழித்தடங்கள்
தேடி

உங்கள் தோட்டத்தில்
நோகாது
கொய்து நெய்த
பூங்கொத்தால் என்மேல்
வாழ்த்துமழை
வற்றாமல் தூவும்
குளிர்
மேகத்தோழர்களே..

கவனியுங்கள்..

ங் ஙா..என்ற
மெல்லியல் அகரமோ ,உகரமோ
வகை தெரியாது வாய்மலர
அம்மா முகத்தில்
நிலா பார்த்துச் சிரித்த
அந்தச் சின்ன வயதல்ல
இப்போது
எனக்கு

முப்பதுகளின் மேல்
புதிதாய்ப்பிறக்கும்
ஓவ்வொரு ஆண்டுமே
உயிர்ப்படகில் விழும்
ஒவ்வொரு புதிய
ஓட்டைகள்தானே.

உணரின்..

மூழ்கும் திகதி
முற்கூட்டி அறியாத
பாவி மனிதப்பிறப்பு இது.

காலம் வரைந்த
இந்த ஓவியத்தின்
வர்ணங்களில்தான்
எத்தனை வளர் சிதை மாற்றங்கள்.
பளிச்சிட்ட பல இப்போது
கண்களுக்கே தெரிவதில்லை.

நிலையாமை எனும்
உண்மையின் கரங்கள்
நெஞ்சில் அறையும்
ஒவ்வொரு
நொடியும் .
;
நினைப்புகளை வழி
மறித்து
சித்தனாகச் சில கவிதைக்
கோடுகிழித்தாலும்
பஞ்சு முகில்கள் எனப்
பாரம் இல்லாமல் பறந்து
ஒரு
மோன மொழி தெரிந்த
புத்தனாகும் வழி
இன்னும் புரியாமல்
நிற்க்கும்-என்
பித்த மனசு.

Friday, March 9, 2018

கண்டியில் பற்றிய தீ - Burning Kandy - Crisis in the small island !

Kandy problems in Tamil ,Sri Lanka ,Kandy crisis Tamil article


”அப்பா இண்டைக்கு முஸ்லிம் ஆக்கள் எல்லாருக்கும் அடி விழுதாம்....”
”ஏனாம் ?”
”அவை சாப்பாட்டுக்க நஞ்சு போட்டவயாம் அதுதான்....”

எனது 8 வயது மகள் பாடசாலையிலிருந்து வந்ததும் என்னுடன் மேற்கொண்ட உரையாடல் இது.

பிஞ்சு மனங்களில்கூட நஞ்சு விதைக்கப்பட்டாயிற்று. மனங்கள் வளராத  மனிதர்களின் தேசம்  இது.

  ஓரு இனம் பற்றிய மோசமான மனப்பதிவுகள் இன்னொரு இனத்திடம் இப்படித்தான்  அடிப்படையே இல்லாத சொல்லாடல்களால் பரவி வளர்கிறது  .


வரலாறு ஒரு வட்டம்தான் - தமிழர்களாய்ப்பிறந்து இவ்வளவு வேதனைகளையும் அனுபவித்தாயிற்று . இப்போது முஸ்லிம்களின் முறைபோலும்.  


இன-மத-பிரதேச-இன்ன பிற வாதங்கள் என்பன மனிதனுடன் பிறந்தது. எத்தனையோ கெட்ட பழக்கங்களை அடையாளம் கண்டு நம்மிலிருந்து விலக்கிக்கொள்வது போல - அறிவு விருத்திக்கேற்ப மனிதர்கள் இந்த வாதங்களையும் துாக்கிப்போட்டு வாழப்பழகுவர். 

நான் சொல்லும் அறிவு - மெய்யறிவு.

அறிவு என்பது  பள்ளிப் படிப்போ பட்டப்படிப்போ
 அல்ல ”நெஞ்சத்து: நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்: ” என்று நாலடியார் சொன்ன அறிவு.ஒரு பக்கம்  சாயாது நடுவு நிலையாகச் சிந்திக்கத் தெரிந்த கல்வி அறிவு. 

அறிவு நிலை விருத்தி குறைந்தவர்கள்தானே எந்த சமூகத்திலும் பெரும்பான்மை. 

குறை அறிவுள்ள - வெறி முத்திய முட்டாள்கள் சிலர் - ஒரு அப்பாவியைத் தாக்கி கொன்றுவிட - அந்த முட்டாள்களின் செயலை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி அந்த சமூகத்தைக் கருவறுக்க வேண்டும் என்று மிக நீண்டகாலமாகக் காத்திருந்த இனவாத சக்திகள் தம் ஆட்டத்தைத் தொடங்கி விட்டன.

பாவிகளின் கூத்தில் எப்போதும் பலியாவது அப்பாவிகளே !.

இதுவரை 5 இற்கு மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

முதலாம் நாள் மாலையில் கலவர ஆரம்பத்தின் பின் ஊரடங்கு போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ,உட‌னேயே எங்களுக்கு விளங்கிவிட்டது. 

ஊரடங்கு ? ........ பொலீஸ் பாதுகாப்பில் 1983 இல் எங்களுக்கு என்ன நடந்தது என்பது   நமக்குத்  தெரியும்தானே ,எனவே ஊரடங்கு உண்மையில் ஒரு இனத்துக்கு மட்டுமே  என்பதும்  - அவர்களை வெளிக்கிட விடாது ”வச்சு செய்வதற்கான” ஏற்பாடே அது என்பதும் பல நுாறு கிலோமீற்றர் தாண்டி யாழப்பாணத்திலிருந்தாலும் - எங்களுக்குப் புரியக்கூடியதாக இருந்தது.

நினைத்த படியே ஒரு இரவில் 160க் மேற்பட்ட கடைகள் - 25 ற்கு மேற்பட்ட பள்ளி வாயல்கள் சிதைக்கப்பட்டன. 6ம் திகதி காலையில் ஒரு முஸ்லிம் இளைுஞனுடைய உயிர் பறிக்கபட்டது தெரியவந்தது. அந்த விசேட தேவையுடைய இளைஞன் எரிந்த கட்டடத்துள் சிக்கி மரணம் அடைந்திருந்தான். 

நாட்டின் தலைவர் - வழமைபோலவே ”அமைதி காக்க வேண்டினார்” கோடிகளை வெற்றிகரமாகச் சேர்த்து செட்டில் ஆகிவிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் சிலர்  அறிக்கைகளை விட்டு வெறும்வாய் மென்று கொண்டிருந்தார்கள். 

ஐயகோ நேரம் செல்லச் செல்ல..இன்னும் பல உயிர்கள் காவு கொள்ளப்படப்போகின்றனவே ஏதாவது செய்யுங்கள் என்று - இங்கிருந்து இரத்த சம்பந்தமில்லாத   மனம் பதறியது. அரசியல் தலைவர்கள்     கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

7 ஆம் 8 ஆம் திகதிகளில் - அந்த வலிவுள்ள  விடுதலைப்போராளிகள் இயக்கத்தையே அழித்த பலமிக்க - தற்போது வேலை வெட்டி இல்லாதிருக்கும் இராணுவம் சென்றும் நிலையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது,   மேலும்   முஸ்லிம்களின்  நுாற்றுக்கணக்கான கடைகள் ‌கட்டடங்கள் எரித்து அழிக்கப்பட்டன. 

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை