இறைவன் கேட்டானாம்,
"பூலோகத்திலிருக்கிற பெருமைமிகு மனிதர்களே உங்களுக்கு வணக்கம், நீங்கள் தகவல்தொழில்நுட்பத்திலும் ,விண்வெளியை அலசும் விஞ்ஞானத்திலும் இன்னும் ஏகப்பட்ட துறைகளிலும் பெரியவர்கள் , தயவு செய்து உங்கள் மதக் கடவுளாகிய என்னை அடுத்த மதத்தவர் இழிவு செய்துவிடாது நீங்கள் பர்ர்த்துக்கொள்ளுங்கள் அதே நேரத்தில் , என்னை வழிபடும் இடத்தில் எவனும் குண்டு போடாதவண்ணம் சி.சி.ரி.வி கமெராக்களையும் ஆட்களையும் போட்டு என்னைப் பாதுகாப்பீர்களாக , அப்படி பாதுகாப்பின் நீங்கள் இறந்த பின்னர் உங்களை சொர்க்கத்திற்கு எடுத்து நீங்கள் எனக்குச் செய்த உதவிக்கு வட்டியும் முதலுமாக நீங்கள் இந்த உலகில் விரும்பிய பலான பலான இன்பங்கள் எல்லாவாற்றையும் உங்களிற்கு நான் தருவேன். டீலா ? , நோ டீ லா ? "
பாவம்!, இந்த அற்பப் பூவுலகில் தன் ஆலயத்தையோ, சிலையையோ, தன்னைப்பற்றிய புத்தகத்தையோ அல்லது தன் பக்தனையோ கூடக் காப்பாற்ற முடியாத அந்த வக்கற்ற சாமி , சுவர்க்கத்தில் உனக்குத் துணி போட்டு சீட் பிடித்து வைத்திருக்கிறது என்று நம்பி, நீ வாழும்போது சக மனிதனை மனிதனாக மதிக்காது - ஏன் தன்னைக்கூட மதிக்காது முட்டாள் நம்பிக்கைகளை மட்டும் வைத்து அடுத்தவன் இருப்பைக் கேள்விக்குறி ஆக்குகிறாய் !
எல்லாம் அவன் நாட்டம் ! எல்லாம் அவன் செயல் ! எல்லாம் அவன் முன்கூட்டியே முடிவு செய்தது! என்று அடிக்கடி சொல்லும் ஆத்திகனே அதை நீ உண்மையில் நம்பினால் - உனக்கு அடி விழுவதும் அவன் விருப்பம் என்று மூடிக்கொண்டு இருக்கலாம்தானே ? - இருக்க மாட்டாய் - உன்னால் எதுவும் செய்ய இயலாத சூழலில் ஆண்டவன் நாட்டம் அதுதான் என்று பம்முவாய் -உனக்கு சக்தி இருக்கும் இடத்தில் ஆண்டவனுக்காக நீ சண்டை புரிவாய்.
உனக்கு செலக்டிவ் அம்னீசியா - தேவையான இடத்தில் ஆண்டவன் நாடியது என்பாய் ,தேவையான இடத்தில் ஆண்டவனைக் காப்பாற்றப் போர் செய்ய வேண்டும் என்பாய் - முட்டாள்களின் அடி முட்டாள் நீ. தன்னைத்தான் காப்பாற்ற முடியாத அந்த ஆண்டவன்தான் உன்னையும் இந்த அண்ட சராசரங்கள் உள்ளிட்ட சர்வத்தையும் படைத்துக் காக்கிறானா ? ஈனப்பிறவியாகிய நீ உனது சக மனிதன்மேல் வெறிக்கூத்தாடித்தான் உன் ஆண்டவன் மனம் குளிர்விக்க வேண்டுமா ?
எல்லா மதப்புத்தகத்திலும் போரைப் பற்றிப்பேசியிருக்கிறார்களோ என்னவோ தெரியாது - ஆனால் நிச்சயம் அன்பைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள் - அன்பைப் போதிக்காத மார்க்கம் என்ன மார்க்கமடா ?
கொலையைப் போதிப்பது யுத்த சாத்திரமாக மட்டும்தான் இருக்க முடியும்.
உன் மார்க்கத்திலும் அன்பைப் பற்றி எவ்வளவு பேசுகிறார்கள் - அது எல்லாம் உன் ஈனக் கண்ணிற்கு எப்படித்தெரியாமல் போயிற்று.
ஆண்டவன் சொன்ன அன்பை - ஆதரவற்றவர்க்கு உதவல், பிறர் கண்ணீர் துடைத்தல் , பிற மதத்தவரைக்கூட மதித்து நடத்தல் என்ற நூறு விடயங்களில் ஒரு சிலவற்றையாவது உன்வாழ்வில் ; கடைப்பிடித்து அடுத்தவர் துயர் துடைக்கும் போது கிடைக்கும் மகிழ்வை அனுபவித்திருப்பாயா ? இல்லை அதை விடுத்து சாத்தானிய வேதப் பகுதிகளை எங்கேயோ நீயாகக் கண்டுபிடித்து அதை உனக்குவசதியாக மொழிபெயர்த்து விழங்கி - அப்பாவிகள் எல்லாரையும் அழிப்பதுதான் உன் ஆண்டவனுக்குச் சந்தோசம் என்கிறாய் ! என்னவகையான பிறப்படா நீ ?
"அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் -அன்பே சிவமாவதை யாரும் அறிகிலார் -அன்பே சிவமாவதை அறிந்தபின் - அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே " - இந்துக்களின் நூல்களில் ஒன்றாகிய திருமந்திரம்.
"ஒரு அப்பாவியான சக மனிதனைக்கொல்வது முழு மனித குலத்தையும் கொன்றதற்குச் சமனாகும் " திருக் குர் ஆன்.
"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" -இயேசு பிரான்.
காடு மேடுகளில் விலங்குகளாகத்திரிந்த உங்கள் உள்ளங்களில் மனித அன்பை விதைப்பதற்குத்தானே இந்த சமய நூல்கள் உருவாகின. சமய நூல்கள் எல்லாம் மனிதன் உருவாக்கியவை. கடவுள் என்றால் இப்படிப்பட்டவன் என்று குணம் குறிகளோடு உருவாக்கப்பட்ட ஆண்டவன்களும் மனிதனின் மஹா படைப்புத்தான். கண்ணால் காண முடியாது - அவன் விருப்பம் இதுதான் என்று நிறுவ முடியாது - அவன் ஒருபோதும் பேசவே மாட்டான் என்ற தைரியத்தில்தான் ஆண்டவன் பெயரை வைத்து அனத்து மதங்களிலும் இத்தனை வன்மம்.
பகுத்தறிவும் நல்ல வாசிப்பும் பிறந்த சமயத்தை புறந்தள்ளிச் சிந்திக்கத்தெரிந்த ஆண்மையும் நேர்மையும் இருப்பின் எந்த மார்க்கமும் எவனுக்கும்; பூரணமாகப் புரிவதில்லை என்பது புரியும்.
படைத்தவனின் சாயல் படைப்பில் இருக்கும். குறைபாடுள்ள மனிதன் படைத்த சமயங்களும் குறைபாடுகளைக்கொண்டிருக்கும்தானே.
உங்களை வழிப்படுத்தத்தோன்றிய வேதங்கள் எல்லாம் காலம்கடந்து எல்லாக்காலத்திலும் எல்லோருக்கும் சரியாக விழங்கங்கூடிய நிலையில் நிற்க அது ஓன்றும் மந்திர சக்தி பெற்ற புத்தகங்கள் அல்ல. வெறும் எழுத்துத்தொகுதிகள்.
அவ்வவ் காலத்து அறிஞர்களால் அவ்வவ் காலத்தில் அவ்வவ் காலத்து மொழிகளில் வழங்கப்பட்டதுஃஎழுதப்பெற்றது.
சந்தேகமே ஏற்படாத வண்ணம் அது மொழிபெயர்க்கப்படக்கூடியது என்றால் - ஏன் அப்பா உங்கள் நூல்களிற்கு இத்தனை விழக்கங்கள்? உங்களில் இந்தனை சமயப்பிரிவுகள் ?. கேட்டால் 'என்ன இருந்தாலும் எங்கள் அடிப்படைகள் ஒன்று என்பதால் நாங்கள் எல்லாம் ஒரு சமயமே என்பார்கள் !
அப்படி என்றால் இந்துக்களே ! இந்தியாவில் மாட்டுக்கறி தின்றதற்காக சக மனிதனைக்கொன்றார்களே இந்து சமய காவலர்கள் என தம்மைத்தாமே அறிவித்துக்கொண்ட ஆர்.எஸ.எஸ் காரர்கள் அவர்களும் உங்கள் இந்து மதம் சார்ந்தவர்களா ? (மாடு சாப்பிட்டால் கொல்லச்சொல்லி எந்த இந்து வேதமும் இல்லை)
அல்லாவைத்தவிர வேறு இறைவன் இல்லை என்றும் ,முகம்மது நபி அவர்கள்தான் அவரது இறுதித்தூதர் என்றும் கலிமாவை ஏற்றதனால் அடிப்படை நம்பிக்கையில் ஒன்றுதானே என்பீர்களாயின் இன்ஷா அல்லாஹ் என்று(ஆண்டவன் நாடினால்)அடிக்கொருதடவை சத்தமிட்டு வெடித்துச் சிதறிய சாய்ந்தமருதுப் பயங்கரவாதிகளும் உங்கள் இஸ்லாமிய மார்க்கம்தான் என்பீர்களா ?
யாழ்ப்பாணம் நவாலியில் யுத்தகாலத்தில் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தில் விமானம் மூலம் குண்டு போட்டு குழந்தை குட்டிகளைக்கூண்டோடு அழித்த சிங்களவன் முதற்கொண்டு செஞ்சோலை அனாதை இல்லத்தில் பாலகர்களை வான்தாக்குதலில் கொன்ற பேடிகள் வரை - அவர்கள் சிங்களவர்கள் என்பதால் அன்பைப்போதிக்கும் பௌத்த மதத்தவர்கள்; என்று சொல்ல முடியுமா ?
என்னதான் வெளித்தோற்றத்தைப் போட்டு நாடகமாடினாலும் எந்த சமயத்திலும் அடிப்படைகளை முழுமையாகப் பின்பற்றுபவர்கள் 20 வீதம் கூட இன்று இல்லை என்பது என் கருத்து.
குறை இல்லாத முஸ்லிம், குறை இல்லாத இந்து, குறை இல்லாத கிறிஸ்தவன், குறை இல்லாத பௌத்தன் என்று எவனுமே இல்லை. அன்பான மத விசுவாசிகளே உங்கள் மதப்புத்தகங்கள் குறையுள்ளன. அதனாற்தான் விவாதத்திற்குரியன. மொழிபெயர்ப்பில் பல இடங்களில் மயக்கம் தருவன , கால தேய வர்த்தமானத்தைப் பொறுத்து கருத்துக்களை உய்த்துணர வேண்டியன. (இல்லை என்றால் உங்களில் நூறு கூட்டங்களும் - பிரிவுகளும் எப்படியப்பா தோன்றும் ? )
3+3=6 என்பதுபோன்ற தெளிவான விடை உடையதல்ல சமயம். அதுதான் சமயம் என்பது அவரவர் உளம் சார்ந்தது என்று - சமய வாழ்வை இறுகப்போதிக்காது விட்டுள்ளன பெரும்பாலான சமயங்கள்.
குர் ஆனில்தான் சொல்லப்பட்டுள்ளது "லக்கும் தீனுக்கும் வலியதீன்"( அவரவர் மார்க்கம் அவரவர்க்கு- )என்ற வசனமும். இதைப்படித்த பின்னரும் - உலகில் உள்ளவன் எல்லாம் முஸ்லிமாகத்தான் வேண்டும் என்று ஒரு கூட்டம் நினைத்து தானாக வெறிபிடித்து தன்னையும் கொன்று நாட்டையும் நாசமாக்கும் எனில் இது எவ்வளவு கொடிய மன நோய். இஸ்லாத்தில் உள்ள நல்ல விடயங்களை விட்டு விட்டுத் தீய விடயங்களை அல்லது தீயதாகப் புரிந்து கொள்ளக்கூடிய இடங்களை மட்டும் இந்த விமானப் பொறியியலாளர்கள் உள்ளிட்ட நன்கு கற்ற புத்திஜீவிகள் புரிந்துகொண்டு - கற்று - தற்கொலை வரை செல்வார்கள் எனின் இது எத்தகைய நோய்.?
மனிதனைக் காப்பாற்ற ஆண்டவனா ? அல்லது தன் மதத்தில் பிறக்காத மனிதனை எல்லாம்; கொன்று குவிப்பதற்கு ஆண்டவனா ? கொல்பவன் ஆண்டவனாக இருக்க முடியாது, அப்படி கொல்லச் சொன்னவன் நிச்சயம் சைத்தானுக்கெல்லாம் பெரிய சைத்தானாகத்தானிருக்க முடியும். சைத்தானைப் பின்பற்றுபவன் வேறு யாராக இருக்க முடியும் ?
"நாஸ்த்திகர்கள் அமைதியான வழியில் இறைவன்; இல்லை என்று நிரூபிக்கப் போராட, ஆஸ்த்திகர்களோ குண்டுகளை வைத்தும் கொலைகளைச் செய்தும் கடவுள் என்று எதுவும் இல்லவே இல்லை என விஞ்ஞான ரீதியாக நிறுவுகிறார்கள்" (எங்கோ வாசித்தது)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .