(நாற்பது வயதிற்கு மேற்பட்ட(அல்லது அப்படி உணர்கின்ற) வாசகர்களிற்கு மாத்திரம்)
புரிந்து விட்டால் ஓடுவதை விட்டுவிடுவோம். புரிந்தாலும் புரியாத மாதிரி இருப்பதில்தான் சலிப்பை குறைத்து வாழும் இரகசியம் இருக்கிறது!. கடைசிவரை புரியாமலே ஓடிக்கொண்டிருப்போர் பாக்கியவான்கள். அவர்கள் சலிப்பின் வெறுமையை தூக்கமின்றி விட்டத்தை வெறித்தபடி அனுபவிப்பதில்லை.
ஓடிய களைப்பில் , அடுத்தநாள் சீக்கிரம் எழுந்து இன்னும் ஓடவேண்டும் எனும் நினைப்பில், படுத்ததும் தூங்கி விடுவார்கள்.
ஓடுவதைக் குறைந்த பின்னர்தான் உலகெங்கிலுமிருந்து பல பந்தயங்களிற்கு வெற்றிலை வைத்து அழைப்பார்கள்.அழைக்கிறார்கள். இது வாழ்க்கையின் முரண்.
இந்த மைதானம் எனக்குரியதல்ல. இங்கே ஓடி முடித்தாயிற்று. அடுத்த மைதானத்தை ஆயத்தப் படுத்து. புதிய விளையாட்டு, புதிய விதிகள், புதிய பரிமாணம்.
காசுப் பெட்டியில் சில்லறை விழும் சத்தத்திற்காய் தேவைகள் தீர்ந்தபின்னரும் ஓடிக்கொண்டே இருப்போர் தம் சவப்பெட்டி அருகே பறைச் சத்தம் கேட்கும்வரையில் நிறுத்துவதில்லை. குறைத்துக் கொள்வதுமில்லை.
.
அதிகம் அரற்றாது, "நீரோட்டத்துடன் செல்வது- Going with the flow" ஒன்றே நிம்மதி என்பது புரியலாம்.(வேறு தெரிவு இல்லை)
எவ்வளவு தான் குத்தி முறிந்தாலும் நடப்பதுதான் நடக்கும் என்பதை இத்தனை காலத்தில் புரிந்துகொள்ளவில்லையா ?
பக்குவமாய் பாத்திகட்டி, நீர்பாய்ச்சி, நிழல்கொடுத்தும் முளைக்காது விட்ட விதைகளையும், சாப்பிட்டு விட்டு வீசிய கொட்டையில், தானாய் முளைத்துக் கனிந்த மரங்களையும் இதுவரை கண்ட நினைவிருக்கும். பயப்பட ஒன்றுமில்லை. எதுதான் வரினும், வகுக்கப்பட்ட பாதையின் வழியே உயிரின் ஓடை நகர்ந்தே செல்லும்.
ச.மணிமாறன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .