Thursday, November 17, 2016

என்னைக் கொன்ற கல்வித்திட்டம்.



என் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை விஞ்ஞானப் புத்தகங்களை வாசித்து அவற்றிலிருந்த பரிசோதனைகளைச் செய்து வருவதாலும்...பழைய ட்றங்குப் பெட்டி ஒன்று நிறைய அப்பாவின் ரேப் ரெக்கோடரிலிருந்து களவாய்க்கழட்டிய சிறிய மோட்டார் முதல் கொண்டு ,மின் குமிழ்கள் , வயர்கள் ,பற்றிகள் ஆணிகள் என்று பல்வேறு இலத்திரனியல் ,பொறியியல் சார்ந்த பொருட்களைச் சேர்த்து வைத்திருந்ததாலும் ஏரியாப்பசங்களால் ”விஞ்ஞானி” என்று சிறிது காலம் அழைக்கபட்டிருந்தேன். நல்லகாலமாக அந்தப்பட்டம் நிலைக்கவில்லை.

படிப்பு எனக்கு வேப்பங்காயாக கசத்தது ,நல்லுார் ஒஸ்லோ ரியூசன் சென்ரறில்  படித்த   எல்லாக் குழப்படிக்காறர்களும் எனது நண்பர்களாக இருந்தார்கள். கண்ட கண்ட சாத்திரிமாரிடமெல்லாம் என் சாதகத்தைக் காட்டிப் ”பெடிக்கு எப்ப புத்தி வரும் ? ”என்று வீட்டில் விசாரித்துக்கொண்டிருந்தனர். ஓ.எல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.

பரீட்சை நெருங்கிய போதுதான் படிப்பின் சுமையை கொஞ்சம் பொறுப்போடு ஏற்றுக்கொண்டேன். உயர்தரம் போவது என்னவோ கம்பஸ் போவது போல் சக நண்பர்களால் பார்க்கப்பட்டது. எனவே விஞ்ஞானப்பிரிவை உயர்தரத்தில் எடுத்தால் பல ஆய்வுகளைச் செய்யலாம் என்றும் , சுயமாக கண்டு பிடிப்புக்கள் போன்றவற்றை நிகழ்த்தவும் வாய்ப்புண்டு என்றும்..என் ஆய்வுப் பசிக்கு  உயர்தர விஞ்ஞானம் இன்னும் தீனிபோடும் என்றும் நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒருவாறாக ஓ.எல் என்ற தடையை தாண்டி உயர்தரம் புகுந்தாயிற்று. நுாலகத்தில் புகுந்து உள்ளதிலேயே பெரிய இரசாயனவியல் ஆங்கிலப் புத்தகத்தை கைப்பற்றினேன். சைக்கிள் கரியரில் அதை  வைத்து வீடு நோக்கி மிதிக்கையில் அடுத்த தொமஸ் அல்லா எடிசன் நானாகத்தான் இருப்பேன் என்று எண்ணிக் கொண்டேன்.

பொதுவாக உயர்தரம் வந்த புதிதில் ஆர்வக்கோளாறிலும் நான் ”டாக்கடராயிடுவேன்” போன்ற பல உன்னத செய்திகளைச் சமூகத்திற்கு சொல்லும் விருப்போடும் பல மாணவர்கள் பெரிய  புத்தகங்களைச் சைக்கிள் கரியரில் மற்றவர் பார்வையில்  படவேண்டும் என்ற நோக்கில் சுமப்பர்(அப்படியான பல நண்பர்கள்  எனக்கிருந்தனர்). ஆனால் நான் அப்போது அந்த வகையில் இருக்கவில்லை.

ரியூசன் என்ற ஒன்றிற்கு போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயக் கலாச்சாரம்(சமூக அவலம்) காரணமாக நானும் மிகப் பிரபல ஆசிரியர்களின் கொட்டில்களிற்கு(ஆம் கோடிக்கணக்கில் உழைக்கும் இந்த இடங்கள் கிடுகால் வேயப்பட்ட கொட்டில்களாகவும் மாணவர்க்கு ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்க போதிய மலசலகூட வசதிகள் கூட இல்லாமலும் இருக்கும்)செல்ல வேண்டி வந்தது.

Monday, November 7, 2016

நாய்ஸ் பொலுாசன் -வடக்கும் சத்த மாசும் !

நாய்ஸ் பொலுாசன் !(நாய்கள் பாவம் ! அவற்றுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.-Noise Pollution )


காது கிழிய சத்தம் போட்டு விழாக்கொண்டாடும் காட்டுக் கலாச்சாரத்தை இவ்வளவு நாகரிகம் அடைந்த பிறகும் நாம் விடுவதாயில்லை . மத்திய சுற்றாடல் அதிகார சபையால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திண்மக் கழிவு வகைப்படுத்தி அகற்றும் நிகழ்வில் (கிட்டு அல்லது சங்கிலியன் பூங்காவில்) குழாய் ஸ்பீக்கர்களையும் கட்டி அலற விட்டபடி இருந்தார்கள். நான் சென்றபோது அந்த  உயர் பதவியிலிருந்த  பெண்மணி உட்பட்ட மற்றவர்கள் சிலர் தங்களுக்குள்ளேயே கலந்துர‌ை‌யாட முடியாது..கத்திக் கத்திப்‌பேசிக்கொண்டிருந்தார்கள். நான்  சொன்னேன்   ” முதலில் சத்தத்தை குறையுங்கள் அப்புறம் உங்களுடன் நான் பேச வேண்டி இருக்கிறது" ." Why why what's wrong?" என்றார்கள். .  சுற்றாடல் அதிகார சபையே குழாய் ஸ்பீக்கர் பயன்படுத்தும் பொறுப்பற்ற செயலைக்குறிப்பிட்டேன் , உடனே சத்தம் நிறுத்தப்பட்டது. பல அரச அலுவலகங்கள் பிறர் குறிப்பிட்டும்  சத்தம் ‌ போடுவதை நிறுத்துவதில்லை. அந்த வகையில் சுற்றாடல் அதிகார சபை பாராட்டப்படத்தக்கது. :) 
சத்த மாசைக் கட்டுப்படுத்த வேண்டிய சுற்றாடல் அதிகார சபையே சத்தத்தை  -சட்டத்தை மீறிப் போட்டது - இலங்கை போன்ற நாடுகளின் பலவீனமான அரச நிறுவனங்களின் செயற்றிறனிற்கும் - நெறிமுறைகளை கடைபிடித்தலில் காணப்படும் குறைபாடுகளிற்கும் தகுதியற்றவர்கள் மற்றும் திறமையற்றவர்கள்  அரச துறையின் உயர் பதவிக்கு வருவதால் ஏற்படும் துயரங்களிற்கும் உதாரணம்.

60  டெசிபல் என்ற அளவுக்கு மேற்பட்ட சத்தம் தொடர்ந்து கேட்கப்படுவதனுாடாக செவிட்டுத்தன்மை முதல் மன ரீதியான பாதிப்புக்கள் வரை  மிகப்பாரதுாரமான பாதிப்புக்களை நீங்கள் எதிர் கொள்ள நேரிடும்.

பக்கத்து வீட்டுக்காரர் குப்பையை  பற்றவைக்கும் போது புகை கண்ணை எரிப்பதாலும் நாற்றம் வருவதாலும் அவர்களுடன் சண்டைக்குச் செல்லும் நாம் , சத்தத்தின் அபாயத்தை அறியாமலே சகித்துக்கொள்ளப்பழகி விட்டோம். 



பெரும்பாலும் வடக்கு மாகாணத்திலே அதுவும் யாழ் பிரதேசத்திலேயே சத்த மாசு மிக அதிகமாக உள்ளதாக நான் அனுபவ ரீதியாக உணர்கிறேன். 70 முதல் 85 வரையான     டெசிபல் அளவில் ஒலிக்கும் சத்தத்தை ஆகக்கூடியது 8 மணி நேரம் ‌தான் சாதாரண காதுகளால் கேட்டுத்தாக்குப்பிடிக்க முடியும். சாதாரணமாக ஒரு நகரப்போக்குவரத்தில் வாகனங்களின் இரைச்சல் 85 டெசிபல் வரை (சராசரியாக ) இருக்கும். 

அலாரம் அடிக்கும் கடிகாரச்சத்தம் 80 டெசிபல் சத்தத்தை உருவாக்கக் கூடியது. மேலும் வெவ்‌வேறு கருவிகள் ஏற்படுத்தும் சத்தத்தின் அளவு எவ்வளவு என இங்கே பல படங்களில் காட்டப்பட்டுள்ளது.


Monday, October 3, 2016

மதன் எனும் மனிதன் - போதிமர நண்பர்கள் 01

ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துவிற்கு நுழைந்த மாணவர்களை மட்டும் கொண்டதாக இருந்தது ஆறாம் வகுப்பு - ஈ பிரிவு. அங்கேதான் நாம் சந்தித்துக்கொண்டோம்.




சற்று மிதந்த பற்களுடன் கண்களில்  ஒளியுடன்  மென்மையாகப் பேசக்கூடியவன் மதன்.  நான் கச்சேரி நல்லுார் வீதியில் எனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலை சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு சிறிய மீன்தொட்டியையும் அதில் கொஞ்சம் மீன்களையும் வைத்திருந்தேன்.

மதனுக்கு அந்த மீன்களில் ஆர்வம். அடிக்கடி அவற்றை வந்து பார்வையிடுவான். மதனுக்கும் எனக்கும் நட்பு ஆரம்பித்து சில வாரங்கள்தான் இருக்கும். ”நீர்”  என்று யாழ்ப்பாணத்துக்கே  உரிய மரியாதைப்பன்மையில் பேசிக்கொள்ளுமளவுக்கு மட்டும்தான் நாம் நெருங்கியிருந்தோம் .

திடீரென்று ஒருநாள் வீட்டு வாசலில் வந்து மணியடித்தான் மதன் .  கையில்  ஒரு நீர் நிரப்பிய பிளாஸ்டிக் பை . அதனுள் ஒரு சோடி அழகிய ஏஞ்சல் மீன்கள். ஏஞ்சல் மீன்கள் என் மனதை மயக்கும் ரம்மியம் மிக்கவை ஆனால் வாங்கக் காசில்லாமல் அம்மா வட்டக்கச்சியிலிருந்து லீவுக்கு வரும்போது கேட்போம் என்று இருந்தேன். 

இவன் கையில் மீன்களுடன் நிற்கிறான். எனக்குப் புரியவில்லை. கதவைத்திறந்து ”என்ன ஐசே ?” (என்ன) என்றேன். ”இது உமக்குத்தான் தொட்டியில விடுவம் வாரும் ”என்று உள்ளே வந்தான். மீன்களைத்தொட்டியில் விட்டு அவை நீந்தும் அழகை இரசித்து விட்டுச் சென்றான். மதன் அவற்றை அப்போது கந்தர்மடம் சந்தியிலிருந்த அம்பிகை அக்கூறியம் என்ற கடையிலிருந்து வாங்கி வந்திருந்தான்.

Friday, September 30, 2016

சிந்தாமணியிடம் சிக்கிய சின்ன மணி ! - எனது வாசிப்பும் யோசிப்பும்.

புத்தகங்கள்  எப்படி நம்மை வளப்படுத்தும் என்பதை புரிகிற வகையில் சொன்னாலாவது அடுத்த தலைமுறைகள் புரிந்த கொள்ளாதா என்ற ஒரு நப்பாசைதான் இது.


இரண்டாம் வகுப்பில் எனது வாசிப்புப்பழக்கம் ஆரம்பித்தது. அப்போது ஆசிரியப்பணியிலிருந்த எனது தாயாருடன் புத்தளத்தில் வசித்துக்கொண்டிருந்தேன்.  எனது தாயார் ஒரு சிறந்த வாசகி. வீடு முழுவதும் கதைப்புத்தகங்களும் ஆனந்த விகடன் குமுதம்  போன்ற சஞ்சிகைகளும் குவிந்து கிடக்கும்.

அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த சிந்தாமணி எனும் பத்திரிகையில் வரும் சிறுவர் பகுதியை எனக்கு அறிமுகப்படுத்தி எழுத்துக்கூட்டி வாசிக்க வைத்தார் எனது அன்னை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அந்த வித்தியாரம்பம் நடைபெற்றது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான். ஏனெனில் அம்மா சற்று ஓய்வாக இருப்பதும் சிறுவர் பகுதி வெளிவரும் ஞாயிறு சிறப்புப் பதிப்பினை சிந்தாமணி வெளியிடுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.

அ்ன்று ஆரம்பித்த வாசிப்பு அப்படியே தீப்பற்றியதுபோல வளரத்தொடங்கியது. அடுத்த ஞாயிறு எப்போது வரும் ,என்று தொடர் கதைகளை படிக்கும் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தேன்.

Friday, September 16, 2016

நெடுங்குளத்து ”சீ” வால் மீன்


மணிவாசகர்    நரிகளைப் பரிகளாக்கிய கதையினை  நானும் அரங்கேற்றினேன் அப்போது எனக்கு வயது 13.

ஏழாம் வகுப்பு படிக்‌கும் போது மீன் வளர்ப்பில் எக்ஸ்பேர்ட் ஆக இருந்தேன் விதம் விதமான மீன்களை வளர்த்து வந்தேன். சில மீன்கள் பெருகும் போது அவற்றை நண்பர்களுடன் பண்டமாற்றுச்செய்து வேறு வகை மீன்களைப் பெறுவேன்.  ஒன்றுக்கும் உதவாத ”கப்பீஸ்” இன மீன்கள்  கேட்பாரின்றி பெருகும். 

அவற்றின் குஞ்சுகளை எனது அழகிய ஸ்பைடர் மீன்களிற்கு அவ்வப்போது உணவாக வழங்கவேண்டியிருக்கும். ரெட்மோறீஸ் ,பிளக் மோறீஸ்,வைட் மோறீஸ் என்ற மீன்களும் எனது வளர்ப்பில் குடும்பம் நடத்தி குஞ்சுகளைப்‌போடும்.

அவற்றில் வால்கள் ஆங்கில ”சீ” எழுத்துப்போல் இருக்கும் மீன்களும் உண்டு . அவை அதிக விலைக்கு விற்கப்படும்.  எனது சக மீன் வளர்க்கும் நண்பர்களிற்கு சீ வால் மீன் என்றால் பைத்தியம்.

 என் உள்ளங்கையளவு தங்க மீன் ஒன்றை என் நண்பன் வைத்திருந்தான். பெரிய மீன்கள் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம். எனவே அவனிடம் பண்டமாற்று  பற்றிப்பேசினேன். அவன் அதற்கு ஈடாக நான்கைந்து சீ வால் பிளக்மோறீஸ் மீன்களாவது வேண்டும். என்றான்.

நான் தருவதாக வாக்குறுதியளித்தேன்.

Sunday, September 11, 2016

அம்மம்மாக் குழாய் அறிவிப்பாளன்- அனுபவச்சிறகுகள் 05

அம்மம்மாக் குழாயும் அறிவிப்பாளனும்.


நான் மூன்றாம் வகுப்பில் செய்த கார்ட்போட் ரோபோ பற்றிய கட்டுரையை சிலர் சாத்தியமற்றது என்று சொல்லாம்.  (என்னுடன் பழகாதவர்கள்)  எனவேதான் இங்கே ஒரு புகைப்பட ஆதாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இது எனது 7 வயதில் எடுக்கப்பட்ட படம். 

வைரவர் கோவில் திருவிழாவில் வாங்கிய   வாங்கிய அம்மம்மாக் குழலை உடைத்து(சிறிய நாதஸ்வரம் போன்றது)அதன் முன் பகுதியில் இருந்த குழாய் ஒலிபெருக்கி போன்ற பகுதியை  தடியில்  வைத்துக்கட்டி பின்னர் சணல் நுால்களை வயர் போல கற்பனை செய்து தொடர்ந்து இணைத்திருக்கிறேன்.

நான் யாருமில்லாத நேரத்தில் இதன் முன்னே நின்று ஏதோ  பேசுகிறேன் ,அதை அவதானித்த எனது தாயார் போல்றோயிட்(உடனடியாகப்படம் கழுவப்பட்டு வரும்)கமெரா மூலம் ஒளிந்திருந்து பிடித்த படம் இது.

மூன்றாம் வகுப்பு விஞ்ஞானி - அனுபவச்சிறகுகள்-04

-பிஞ்சிலே பழுத்தது-


மூன்றாம்    வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் அப்போது தான் தொலைக்காட்சியில் நைட் றைடர் , மற்றும் பல விண்வெளி சம்பந்தமான படங்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றால் கவரப்பட்டு நான் உருவாக்கிய ரோபோ என் வயது நண்பர்களிற்கு கிலியை கொடுத்தது.

கிட்டத்தட்ட இப்படித்தான்


கார்ட்போர்ட் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட பொம்மை அது. (அந்தக்கால திரைப்பட ரோபோர்ட்களின் தலை பெட்டிபோல சதுரமாக இருக்கும்) ‌ கைகள் இருக்க வேண்டிய இடத்தில் எனது இலத்திரனியல் பார்ட்ஸ் சேகரிப்பு பெட்டியில் இருந்து எடுத்த மோர்ட்டார்கள் உள்பக்கமாக குத்தப்பட்டு பொருத்தப்பட்டு , கார்ட்போர்ட்டில் தட்டையாக வெட்டி செய்யப்பட்ட   கைகளை அந்த  மோர்ட்டார்  நுனியில்  பொருத்தியிருப்பேன்.

மின் இணைப்புக்கள் எல்லாம்  ஒழுங்கின்றி ரோபோர்ட்டின் முதுகின் வலப்புறம் உள்ள துளை வழியாக வெளியில் வரும். எங்கள் வீட்டின் பின்புற ஹாலில் ஒரு ஐன்னலிற்கு அருகில் இதை நிறுத்தியிருந்தேன். எனவே அந்த ஐன்னலிற்கு வெளியே  (வீட்டின் வெளிப்புறமாக நின்று கொண்டு)இதை இயக்க முடியும்.

Friday, June 17, 2016

வேர்ச்சுவல் வீரர்கள் ! - ( பேஸ் புக்கும் நம்ம இளைஞர்களும் )



மூஞ்சிக்கு நேராக
முடியாததால்
முகப்புத்தகத்தில் மட்டும்  ”கெத்துக்” காட்டும்
இன்றைய இளைஞர்கள்.


இருட்டு நிறத்தில் உள்ளவனும்
எடிட்டிங் புண்ணியத்தில்
காலைச்சூரியனும்
நாணும்படி
சிவந்து ‌ போகிறான்.

குண்டானவன் மெலிந்தும்
எட்டு நிமிடத்தில் எயிட் பக்ஸ் எடுத்தும்
எத்தனை க‌ோலத்தில் ஏமாற்றுகிறான்.

கற்பனையிற் கயிறு திரிக்கும்
இவர்கள்
எத்தனை லைக்ஸ் எடுக்கிறோம்
என்பதில்தான்
வாழ்வின் வெற்றி இருப்பதாய்
பாவம்..
ஏமாந்து போகிறார்கள்.

கோவில் வாசல்களில்
கையேந்தும் பிச்சைக்காரர் எண்ணிக்கையை
லைக் போடு மச்சான் என்றும் செயார்
 பண்ணு மச்சான் என்றும்
கெஞ்சும்
”பேஸ் புக் பெக்கேர்ஸ் ”
எண்ணிக்கை ஓவர்ரேக் செய்துவிட்டது

பேஸ் புக்கின் ”சுட்ட” ஸ்ரேற்றஸ்களை வைத்து
சுதந்திரப்போர் வீரர்களாகவும்
வைரமுத்துவின் வாரிசுகளாகவும்
தம்மை பில்டப்
செய்துகொள்கிறார்கள்.

Thursday, February 4, 2016

மாதவனின் இறுதிச்சுற்று - பாமரனின் விமர்சனம்.



இறுதிச்சுற்றுத் திரைப்படம் - எதேச்சையாகத்தான் பார்க்க நேர்ந்தது. இப்படி எழுத வேண்டும் என்று துாண்டி விட்டது அதன் வீச்சு.

இப்படம் அழகியல் தேவைப்படுவோர்க்கானது.

ஒரு மீனவப்பெண்ணின்  இயற்கையான திறனை எதேச்சையாகக்க காணும் பொக்சிங் கோச் மாதவன் அவளை  உருவாக்கப்படும் பாடுகளும் - வித்தை தெரிந்த குரு திறமையான சிஸ்யப்பிள்ளையை தேடும் அந்த வேதனையும்- பாடுபட்டு அடையும் வெற்றியின் சுவையும்தான் கதை.

ஒரு வழிகாட்டியாக இருப்பவர் அவர் வழிகாட்டும் துறையில் மேம்பட்டவராக இருக்கலாம் அதற்காக அவர் தனிப்பட்ட வாழ்வில்  சாதாரண மனிதனாகவும்  சில சமயங்களில் சமூகம் எதிர்பார்க்கும்  நெறிகளில் தவறியவனாகவும் இருக்கலாம் என்ற யதார்த்தத்தை மூஞ்சியில் அடித்துச்சொல்லும் யாதார்த்தமான பாத்திரப்படைப்பு மாதவனுடையது.

உலகத்தலைவர்களிலிருந்து சினிமா நடிகர்கள் வ‌ரை அவர்களது தனிப்பட்ட வாழ்வை குறிவைத்து குதறி மகிழ்பவர்களுக்கு இது படிப்பினை. உண்மையில் வாழ்வை ஓரளவு அறிந்து பல்வகை மனிதர்களுடனும் பழகி வெளி உலகை உணர்ந்து உள்ளவர்களிற்குத்தான் இந்தப்படம் நன்கு புரியும்.

கதாநாயகி அப்படி ஒன்றும் பெரிய அழகியல்ல. மிகச்சாதாரணம். ஆனால்  உண்மையில் தேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை அவரது அக்காவாக வருபவரும் குத்துச்சண்டைப் பயிற்சி பெற்றவரே. எனவே கதை உயிருடன் உலா வருகிறது.

மீனவப்பெண்ணாக ,ஒரு சேரிப்பகுதியில் வாழும் கதா நாயகியும் அவரது மரியாதையற்ற மற்றும் துாசண வார்த்தைப்பிரயோகங்களும் உடல் மொழியும் ஆனால் சுத்தமான உள்ளமும் மிக மிக யதார்த்தம் . இதை அப்பகுதி மக்களை படங்களில் மட்டும் பார்க்காது இறங்கிப்பழகுபவர்களுக்கே  நன்றாகப்புரிய முடியும்.

விரசமான காட்சிகள் இல்லை. அதீத காதல் கெஞ்சல்கள் கதறல்கள் இல்லை. போட்டி , வெற்றி ,இலக்கு என்று உயர்ந்த இலட்சியத்தை நோக்கி வேகமாக ஓடும் கதையில் அப்படியே மின்னல் போல கலந்தும் கலக்காதும் வந்துபோகும் காதல்.

Wednesday, January 13, 2016

சாம்பற் குருவியின் வரிமறந்த பாடல்



எனக்கு இருந்தது ஒரு காடு..
முட்களையும் இலைகளையும் முடிந்து..எப்ப‌டியோ..
எனக்கு பிடித்தபடி  அமைத்தேன் கூட்டை.

வரிமறந்த பழைய பாடலை அடிக்கடி
அபஸ்வரத்தில் பாடுவேன்.
நான் மட்டுமே கேட்க.

காலை வி‌டியக் கூவும் கடமை எனக்கில்லை.
எழும்புவேன் எப்பொழுதாயினும்.
சுள்ளெனச்சூரியச்சட்டியின் எண்ணைத்துளி சிந்தியாயினும்.
தினசரி
ஒரு பொழுதில் எழுவேன்.

Tuesday, April 21, 2015

கனவைத் துரத்தும் நாய்கள்.



கனவிலும்
நனவிலும்
எ்னைச் சுற்றி ஊளையிட்டுத்திரியும்
ஒரு கூட்டம் நாய்கள்.

நான் ஒன்றும் மணிவாசகர் இல்லைத்தான்
எனினும..
எனைச்சுற்றி நடப்பது என்னவோ
நரிகளைப் பரிகளாக்கிய கதைதான்.

 இந்த
உயிரின் ஆழம் வரை  செல்லும் ஊளை.
நாய்களுக்குரியதல்ல.
இது நடுக்காட்டில் எங்கோ
பிணம் தின்று கொழுத்த பேய்கள் மொழி.

பேய்களைப்பிடித்து நாய்களாக்கியது யார்.


என் மனசில் இப்போதெல்லாம்  துழாவும் ஒற்றைக் கேள்வி இதுதான்.

பல வேளைகளில்..
நாய்க்கும் நரிக்கும் பிறந்த கலப்பு இனம்போலும் தெரியும்.
அவை ஒன்று, இரண்டல்ல, எண்ணிற் பல.

ஒன்று , எனது  வேகமான நடைகளின் போது காலை இடறி ஓடும்.
இன்னொன்று ,
நடக்கும்  போது கூடவே வரும்.
குறிப்பறிவது போல்   கொள்ளிக் கண்களை  விரித்து
என்மனதை வேவு பார்க்கும்.

 சில வேளை இரண்டு இணைந்து நான் உட்காரும் முன்னே என் ஆசனங்களில் சிறுநீர் கழிக்கும்.

அவற்றில் ஒன்று உடலால் உராய்ந்து என் சுற்றுப்புறங்களை
 சுத்தம் செய்வதாய் பாவ்லா  காட்டுவதும் உண்டு. 

விலகிக் கண்மூடின்
என்
கனவுகளில்
எப்போதும் வரும் அதே ஒற்றைப் பனைக் காட்டில்
ஓலமிட்டு
நான் ஓட
பின்னால்
இவற்றில் சில.

என் நன்மைக்காக இந்த சாத்தான்களை
இங்கே அனுப்பியதாய்
அசரீரி கேட்டது ஒரு நாள்.

நான் நம்பவில்லை
தேவ வசனங்களை எந்த சாத்தான்
எப்படித்தான் ஓதினாலும்
அது
திறக்கப்போவது என்னவோ
நரகத்தின் வாயிலைத்தான்.

அழையாமல் வந்த
இநத அசிங்கப் பிறவிகள்
அடிக்கடி  கடித்ததில்
கிழிந்து தொங்குகிறது

அழுக்குத்துணியாக
என்
தனிமனித வாழ்வு.


Wednesday, February 4, 2015

பிறத்திகளிற்கு என்ன கவலை !




உயிர்போனாலும்
தம்பார்வையில் தம்பிக்கு இதுதான் நல்லது
என்று
வெம்பியவன் மனக்கடலின் துளியளவின்
துளி 
கரிக்குமா ,இனிக்குமா
எனத்தெரியாமலே
சிலாகிக்கும்
ஒரு கூட்டம்.

பக்குவம் செய்வதாய்
சொல்லி
சட்டியில் கிளறி
அடுப்பில் போட்டகதை


எந்த உறவும் இடை
வெளிகளிற்குட்பட்டதே.
 தெரியாமல்
தனிமனித வாழ்வில்
தடியோடு புகுந்தது பிறத்தி.

அடித்த அடியில்
விழுந்த பிணங்கள் மூன்று
நான்கு.

அரைவேக்காடுகளின் அவசரத்திட்டம்
முள்ளில் விழுந்த சீலையை
மூர்க்கமாய்
இளுத்த அணி.

சிகிச்சை வெற்றி
சீக்காளி போய்ச்சேர்ந்தான்.

இந்த பரிசோதனை
முடிவுகளில்
வெற்றியில்லாதது
வேதனையில்லை.

அடுத்த(வன்) சோதனையில் அவை திருத்தப்படும்.

பிறத்திகளிற்கு என்ன கவலை
வீழ்ந்த
பிணங்களைப்பற்றி.

Wednesday, January 21, 2015

சுன்னாகம் கழிவொயில் பிரச்சினை -உண்ணாவிரதப்போர் தேவையா இப்போ ?

என்ன காரணத்துக்காக நிலத்தடி நீர் மாசிற்கெதிரான இப்போராட்டம் மிக மிக அவசியமும் அவசரமும்.






(ஆம் சந்தேகத்திற்கிடமின்றி . மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் தேவை . )

20-01-2015 காலை 8.30 இலிருந்து  பருத்தித்துறை பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் க.செந்துாரன் தலமையிலான வைத்தியர்கள் உள்ளிட் பொதுமக்கள் நிலத்தடி நீரில் கழிவொயில் கலப்பதற்கு எதிரான தொடர் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இது மக்களுக்காக நல்ல நோக்கோடு முன்னெடுக்கப்படும் போர். எனினும் அவசரம் அவசரமாக சொந்த செலவில் ரூம் போட்டு இந்தப்போராட்டத்தினால் இவர்களுக்கு என்ன நன்மை ? யாராவது காசு கொடுத்திருப்பார்களா ? ஏதாவது தண்ணீர்  போத்தல் கம்பனி ‌ ஸ்பொண்சர் பண்ணுகிறதா ? என்று இதில் குறை கண்டுபிக்க - உதவி செய்யவிட்டாலும் உபத்திரவம் செய்யவென்றே வாழும் நம்ம ரிப்பிக்கல் யாழ் தமிழனுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.)


1)இன்னும் பல்லாயிரக்கணக்கான லீட்டர் கழிவொயில் தினசரி சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து விடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

2)வழமையான அரசியல் பாணி நகர்வுகளினால் நத்தை வேகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய காரியம் இதுவல்ல என்பதை இதன் பாதிப்புக்களை கற்றறிந்தவர்கள் உணர்வார்கள்.

3)ஆரம்பத்தில் மின்னிலையத்தின் அயலில் உள்ள கிணறுகளில் தென்பட ஆரம்பித்த கழிவு ஒயில் ,படி்ப்படியாக சுண்ணாகம் பிரதேசம்,சில வாரங்களில் மல்லாகம் ,தெல்லிப்பளை என்று ஒரு திசையில் சென்று ,தற்போது இணுவில் மற்றும் தாவடிப்பகுதிகளில் நுழைந்து விட்டது.

4) யாழ் நகரப்பகுதிகளில் இன்னும் சில வாரங்களில் கழிவு ஒயில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5)வடமாகாண நீர் வடிகாலமைப்புச் சபை நடாத்திய ஆய்வின்படி யாழ்ப்பாணத்தில் மூன்று நிலத்தடி நீர்ப்படுக்கைகள் காணப்படுகின்றன (யாழ்,சாவகச்சேரி,வடமராட்சியை பிரதேசங்களாக கொண்டவை ). அதில் பெரியதும் யாழ் நகரை உள்ளடக்கியதுமான நீர்ப்படுக்கையே தற்போது மாசடைந்துள்ளது. ஒரு குளம் நிலத்தின் கீழ் இருப்பதாக கற்பனை செய்து கொண்டால் அதில் விடப்பட்ட நீர் எப்படி படிப்படியாக அதன் சகல பகுதிகளிற்கும் பரவுகிறதோ அவ்வாறே இந்த நித்தடி கழிவு ஒயில் எமது பிரதான நன்னீர்ப்படுகையில் பரவுகிறது.

6) ஏற்கனவே பல குழுவினரால்  சட்ட நடவடிக்கைள் எடுக்கப்ட்டுள்ளன ,மல்லாகம் நீதிமன்றில் பல வழக்குகள்  நொதேர்ண் பவர் நிறுவன்திற்கு எதிராக போடப்பட்டுத்தான் இருக்கிறது. இலங்கை  போன்ற நாடுகளில் சட்ட ரீதியான தீர்வுகளைப்பெற எடுக்கும் காலம் , இந்த கழிவொயில் யாழ்ப்பாணம் முழுதிற்கும் பரவி பல தலைமுறைகளை அழிக்கும் செறிவில் நிலைத்திட போதுமானதொன்று.(எனவே  தயவு செய்து இன்னும் கொஞ்சக்காலம் உட்கார்ந்து பேசியிருக்கலாம் என்று சொல்லி முயற்சிகளிற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.)


7)பெரும் மக்கள் திரள் கண்டால் உடனடித்தீர்வு வரும். எனவே  கழிவு ஒயில் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ள 2000 கிணறுகளின் உரிமையாளர்களில் பாதிப்பேராவது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு உடன் வருகை தருவதும் மற்வர்களையும் கலந்து கொள்ளச்செய்வதும் இன்றைய காலத்தின் கட்டாயம் . கடமை.


கழிவொயில் பாதிப்புக்கள் - சில முக்கிய உண்மைகள்

1) இதிலுள்ள ஆசனிக் எனும் நச்சுப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும்.

2)இதில் உள்ள ஈயம் இலகுவில் உடலில் கல்நது உறுப்புச்செயற்பாட்டு குறைபாடுகளைய ஏற்படுத்தும் அதே வேளை மூளை வளர்ச்சி குறைந்த பிள்ளைகள் பிறக்க ஏதுவாகும்.

3)இந்த தண்ணீரை குடிக்க மட்டுமன்றி விவசாயத்துக்கோ அல்லது கால்நடைகளிற்கோ கூட கொடுக்கலாகாது. இந்த நீரில் விளை்நத தேங்காயில்,இந்த நீர் குடித்த கோழி முட்டையில்,பசுவின் பாலில் கூட 100 வீதம் உத்தரவாதமாய் இந்த கொடிய நஞ்சுகள் இருக்கும் .
4)குறிப்பாக சொல்லப்போனால் பாரிய விவசாயப்பிரதேசமான சுண்ணாகம்,மல்லாகம்,தெல்லிப்பளை,இணுவில்(தற்போது அங்கும் ஒயில் சென்று விட்டது)போன்ற பகுதிகளில் விளையும் உணவுப்பொருட்கள் எவையுமே பாதுகாப்பற்றவை என்ற நிலை. என்ன கொ:டுமை.
5)இந்நீரில் குளித்தல்கூட தோல்புற்று உட்பட்ட பாரிய நோய்களை தோற்றுவிக்கும்

6)நகர சபை ,நீர் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் விநியோகம் மட்டுமே நடைபெறுகிறது எனவே விவசாயம்,குளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் என்ன செய்வார்கள்.?

7) பொறுத்திருக்கும் ஒவ்வொரு நாளும் மண்ணும் சூழலும் விசமாகிக்கொண்டே செல்கிறது.

Wednesday, January 7, 2015

பொருந்துவன போவென்றாலும் போகா ! - விதி பற்றிய எனது புரிதல்





நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவராக பிறந்தாலும்,சகல ‌சுக போகங்களுடனும் வளர்ந்தாலும் ,உங்களைச்சுற்றி பல நல்லவர்கள் உங்களில் அக்கறையுடன் இருந்தாலும், தொழில் துறையில் பல சாதனைகளைப்புரிந்து மற்றோர் கணிப்பில் வெற்றியாளனாகத் திகழ்ந்தாலும். ... இன்னும் நெஞ்சை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு வேதனை அல்லது தேடல் அல்லது திருப்தியின்மை இருக்கிறதென்றால் (அதை நிறைவே்ற்றும் வழி தெரிந்திருந்தும்)  நீங்கள் நிச்சயமாய் விதியின் அதிக அக்கறைக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களிற்கு சில பூட்டுக்களின் சாவிகள் கிடைக்க காத்திருக்கின்றன என்று பொருள்.

படித்தால் நல்லது ,வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பது ஒரு இளைஞனுக்கு தெரிந்த விடையம்தான். ஆனால் அவன் நண்பர்களுடன் கிறிக்கெட் விளையாடும் பொழுது தந்தை திடீரென காதைப்பிடித்து இழுத்து வந்து படிக்கும் மேசையில் விட்டு கவனமாய் படி என்றால்...அவனது மனம் அந்த விளையாட்டு பூர்த்தியடையாமை குறித்து எவ்வளவு வருந்தும் . அவனது நரம்பு நாடிகளில் அவை புடைக்கிற அளவிற்கு கூட அந்த இழப்பின் வலி தோன்றலாம்.

இந்த படிப்பிற்காய்தான் என் விளையாட்டு கலைக்கப்பட்டது என்பது   தெரிந்தும் படி்ப்பை வெறுக்க முடியாமலும் விளையாட்டைத் தொடர முடியாமலும் - விளையாடி முடித்து வந்திருக்கலாமே என்று அங்கலாய்க்கும் மன நிலை உங்களுக்கு தொன்றியிருக்கிறது என்றால்...அது விதி. முற்கூட்டிய ஏற்பாடு.

உங்கள் ஆசைகள் எவ்வளவு நியாயபபூர்வமாக இருந்த போதிலும் அந்த அனுபவத்திற்கு உரிய காலமோ ,விதியோ இல்லாவிடின் அது கிடைப்பதில்லை. வெறும் புத்திக்கும் ,திட்டமிடலுக்கும் மட்டுமே வெற்றிகள் கிடைப்பதாகக்கொண்டால், படிப்பிலும், வாழ்திறன்களிலும் மிகுந்த புத்திசாலிகள் மட்டுமே வாழ்வில் பொருளாதார , குடும்ப நிலை அடிப்படைகளில் பெரும் உயர்வில் இருக்க வேண்டும் . . ஆனால் முப்பதிற்கு மேல் வாழ்ந்த நம்மில் பலருக்கு எப்போதும் கெட்டிக்காரர்களே வெல்வதில்லை என்பது அனுபவ ரீதியாகத்தெரியும்.

வியாபாரம் செய்யத்தெரியாத பலர் அந்த துறைகளில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். மிகத்திட்டமிட்டு வியாபாரம் செய்தும் கவிழ்ந்து போகிறார்கள் சிலர். உப்பு விற்பதை நீங்கள் திட்டமிடலாம்.ஆனால் அந்த இடத்தில் மழைகொட்டி நாசமாக்குவதையோ வெயிலடித்து தொந்தரவற்று இருப்பதையோ  உங்களால் தீர்மானிக்க முடியுமா ? . கடற்கரையில் கோடிக்கணக்கான முதலீட்டில் காற்றாலைகளை ஒரு நிறுவனம் நிறுவி அடுத்த வாரமே சுனாமியில் அந்த இடமே அடையாளம் தெரியமால் அழியும் போது வென்றது அவர்களது திட்டமிடலா அல்லது விதியா ?.எதுவென்பது ?

எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருக்கிறார் ,அவரது தந்தை விட்டுச்சென்ற வர்த்தகத்தொழிலை அவர் செய்கிறார். பெரும் கோடீஸ்வரன்.  அவரிடம் வேலை செய்யும் பெரும்பாலான உதவியாளர்கள் அவ்வப்போது 50 லட்சம் 10 லட்சம் என்று காசை சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டுவதுண்டு. அந்தளவிற்கு இலகுவில் மற்றவர்களை நம்பும் குணமும் ,இறுக்கமான நிர்வாகக்கட்டமைப்பு இல்லாமையும் உள்ளவர் அவர். ஆனாலும் அவர் வீழ்நது போய்விடவில்லை வளர்ந்து கொண்டே இருக்கிறார். பல தமிழ் விழாக்களிலும் அவரைக்காணலாம். எப்போதும் சிரித்த முகம். வியாபரம் எப்படிச்செய்வது என்று தெரியாமலே கோடிகளைக்   குவிக்கிறார்.   இத்தனைக்கும் இவர் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்காதவர். எனது நண்பர்கள் பலர் நன்றாகப்படித்து ,சந்தை ஆய்வு,கள ஆய்வு செய்து,திட்டமிட்டு செய்த பல வியாபார நடவடிக்கைகள்  அவர்களை பெரும் கடனாளிகளாய் மட்டுமே ஆக்கியுள்ளது.  

முயற்சி மட்டுமே நம்முடையதாகிறது. கூலியின் அளவைத்தீர்மானிப்பதும் வழங்குவதும் வழங்காது விடுவதும் வேறு யாருடையதோ கைவசம் இருப்பதாய் படுகிறது.

இந்த அனுபவம் நம்மில் அனைவருக்கும் உண்டு. சிலர் அதனை கவனிக்காது விடுகிறார்கள் .அவ்வளவே.

"கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே" என்ற பகவத் கீதையின்  வரிகள் இவ்வாறான சில அனுபவங்களின் பின்னரே புரிய ஆரம்பிக்கிறது. ஒரு மாணவனின் கடமை படிப்பது. பரீட்சைக்காலத்தில் அதற்குரிய பாடத்திட்டத்திற்கமையப் படிப்பது. விழங்கிய அளவில் படிப்பது. விழங்காததை விழங்க முயற்சிப்பது . பரீட்சை எழுதுவது. அவ்வளவே.  பெறுபேறு 10 புள்ளிகள் என்றாலும் 90 புள்ளிகள் என்றாலும் அதைப்பற்றி கலங்க ஒன்றுமில்லை. அவன் எல்லா முயற்சியும் செய்தும் இந்தப்புள்ளிதான் வந்ததென்றால் அவ்வளவு தான். 

ஒவ்வொரு தொழிலுக்கும் , முயற்சிக்கும் என்றிருக்கும்  கடமைகளை செய்வோம் . தலைகீழாய் முயற்சி செய்கிறேன் என்ற அளவிற்கு சென்று முயற்சிப்பதும் சரியே ஆனால் பெறுபேற்றில் உங்கள் மனம் முழுவதையும் விட்டு விடாதீர்கள்.

இதனை காதலை வைத்துக்கூட அருமையாக வி‌ழங்க முடியும். நான் பதினாறுகளில் ஆரம்பித்து 19 வரை  ஒரு தலைப்பட்சமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். பல்கலைக்கழக அனுமதி பெற்றதும் கொஞ்சம் தைரியம் வந்து இன்னொரு நபர் மூலம் துாது விட்டேன் ” அவன் அவளிடம் சென்று கேட்டான் ” ” நீங்கள் மணிமாறனைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”  ,அவள் சொனனாள் ”ஒன்றும் நினைக்கவில்லை”  . முடிந்தது என் மூன்று வருடக் காதல். நேரில் கேட்க தைரியமில்லை ஏனென்றால் முடிவு என்னாகுமோ எனற பயம். முடிவு பற்றியே கவலை. காதலை முறைப்படி சொல்வதைப்பற்றி சிந்திக்கவில்லை.

மாணவர்களிற்கு ஆங்கிலம் கற்பிக்கும்போது ஓர் கதை வரும். அதில் ஒரு நண்பன்  ஒரு இரவு விடுதியில் வைத்து பெண்கள் என்றாலே அணுகப்பயப்படும் தன் நண்பனிடம் சொல்லுவான். ”அதோ அந்தப்பெண்ணிடம் போய் அவள் உண்ணும் கோழி இறைச்சி துண்டில் ஒன்றை எடுத்து உண்ணு...அவள் உன்னை ஆச்சரியமாகப்பார்ப்பாள் உடனே .”நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் அதுதான் இந்த கோழி இறைச்சி நீங்கள் உண்ணும் அளவு பாதுகாப்பானதுதானா என்று  ‌சோதித்துப்பார்த்தேன்  ” எனச்சொல்லு..உன் நகைச்சுவை அவளிற்கு பிடிக்கும் அவள் உன்னுடன் உரையாட ஆரம்பிப்பாள். மாறாக அப்படி நடக்கவில்லை அவள் கோபமடைந்துவிட்டாள் என்றால் ” ஆம் இந்த செயற்பாடு தவறுதான் என்று சொல்லிவிட்டு வந்து விடு . இதை விட வேறு என்ன மோசமாக நடந்துவிடக்கூடும்.  நம் விதி என்ன என்று தெரியாதபோது கடமையை         ஆற்ற மட்டும்தானே எமக்கு அதிகாரம் இருக்கிறது ? முடிவில் இல்லை அல்லவா ? எனவே வருந்த எதுவுமே இல்ல‌ை‌.

இதை முதன் முதல் படிப்பிக்கும்‌போதுதான் என் மூளையில் பளிச்சிட்டது ” அட, காதலிப்பதை தயங்காமல் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கலாம்  பிடித்திருந்தால ஆம் என்கிறாள் இல்‌லை    என்றால்  மறுக்கப்போகிறாள் வேறு என்னதான் நடந்து விடும். இது ரொம்ப இலகுவான அணுகுமுறை. காதல் வந்தால் அதைச்சொல்லுவது கடமை பலன் என்னவாகவும் இருக்கலாம்.  எனக்கு   இது காலம் பிந்திய ஞானம் . ஆனால் இதை வாசிக்கும் பலருக்கு பயனளிக்கலாம்.

ஆக, கன்மவிதி என்பது எமது செயல்களால் (இந்தப்பிறவி மற்றும் போன பிறவிகள்)எமக்கு ஏற்றப்படும் சுமை. ஏற்கனவே ஏற்றிய சுமையுடன் இன்னும் இன்னும் ஏற்றிக்கொண்டே செல்கிறோம். பொன்னாக இருந்தாலென்ன குப்பையாக இருந்தாலேன்ன தோளில் ஏற்றப்பட ஏற்றப்பட சுமைதானே அதிகரிக்கும் . நல்வினை தீவினை இரண்டுமே பாரங்கள்தான். பாரம் குறைக்க பெரியவர்கள் கூறும் வழி  எதைச்செய்தாலும் விருப்பு வெறுப்பின்றி செய்க அவ்வாறு செய்யின் அதனால் வரும் கர்ம வினை வராது(கீதை) இதை பூரணமாக முடியாவிட்டாலும் படிப்படியாகவேனும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கலாம்.

சுக போகங்களை அனுபவிக்கத்துடிக்கும் மனசுடைய நாம் அனைத்துக்கருமங்களையும் எதிர்பார்ப்பற்று செய்வது மிகச்சிரமம்.  முடியுமான தருணங்களில் பற்றற்று காரியமாற்றிப் பழகுவோம். காலம் செல்லச்செல்ல அதுவே ஒரு வழிபாடாகிவிடும்.

விதியை மதியால் வெல்லலாமா ?.வித‌ியை தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சிதான் சோதிடக்கலை. பரிகாரங்களும் சில முற்கூட்டிய ஏற்பாடுகளும் நம் விதியை மாற்றப்பயன்படுமா ?  கிரியைகள் உண்மையா ? மந்திரங்கள் ஏன் ? கோவில் ஏன் ,விக்கிரகங்களால் பயன் உண்டா ?  

இவை பற்றிய சிந்தனைகளும் சில பற்றிய ஓரளவு தெளிவும்தான் எனது தற்போதைய மனநிலை , விதி ஏவின் விரைவில் எழுதுவேன்.

விதியில் கூட எமக்கு தெரிவு செய்யும் வசதி இருக்கிறது என்று ஓஷோ சொன்னதைப்படித்தபோது மிக வியப்பாய் இருந்தது , அந்த உதாரண அழகு.(அடுத்த பகுதியில்)





Tuesday, December 23, 2014

மாறும் நம்பிக்கைகள் - மறுபிறவி,ஜோதிடம் மற்றும் ஆன்ம இரகசியம்.


சத்தியமாய் இது நானேதான்.


தலை்ப்பின் காரம் என்னவோ கொஞ்சம் கூடித்தான் போயிற்று.ஆனால் என் வாழ்வில் இருந்தே இவை பற்றிய பல அனுபவ  உதாரணங்களை அடுத்த பதிவுகளில் தரலாம். வாசிப்பவர்களின் எதிர்பார்ப்பை பொறுத்து. 

வாழ்வில் நிறைய குழப்பங்கள் நிறைந்த காலப்பகுதியாக இது இருந்து வருகிறது. நாற்பதை எட்டும்போது இப்படித்தான் தத்துவ சிந்தனைகள் வருமோ என்னவோ. ஆனால் எல்லோருக்கும் இதே வகையான குழப்பங்கள் வராது என்பது மட்டும் நிச்சயமாகத்தெரிகிறது. 

மறுபிறவி இருக்கிறதா(ஆம்)அப்படியாயின் எனது முற்பிறவி என்ன...யார் எல்லாம் பழந்தொடர்பால் இப்போதும் என்னுடன் பிறந்திருக்கிறார்கள் ?

இறைசக்தி பற்றி எனக்கு இரண்டாம் கருத்து இருந்தததில்லை ஆனால் கிரியைகளை ஏற்றதில்லை நான். இப்போது அவைபற்றிய மீள்பரிசீலனைகள் எழுகின்றன என் மனதில்.

ஜாதகம் என்பது நமது முற்பிறவிப்பாவ புண்ணியக்கணக்கு என்பது நம்பும் அளவிற்கு புரிய ஆரம்பிக்கிறது.

பச்சைத்துரோகிகளை மன்னிக் முடியாத மனம் இப்போது அவர்களது பாவ நட்டக்கணக்கை அவர்கள் விரைவில் சீர்செய்யவேண்டி வரும் என்ற நம்பிக்கை இருப்பதால். பிழைத்துப்போகட்டும் என்று மன்னிக்க முடிகிறது.

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது பற்றிய எனது தேடல்களின் முடிவுகள்(மற்றவர்களது ஆய்வுகள் மூலமாக)தற்போது வலுவாகியிருக்கும் சோதிடம் ,மறுபிறவி பற்றிய நம்பிக்கைகள் என இணைந்து மிகப்புது தினுசான மனவோட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

கன்ம வினையை அனுபவிக்கவேண்டி இருப்பதை அவ்வப்போதைய சடுதியான தோல்விகளும் எதிர்பாராத வெற்றிகளும் புரிய வைக்கின்றன. கல்வியும் ஞானமும் பிறவிகள் தோறும்  தொடர்ந்து வருவது என்பதும் அது ‌ தொடர்பிறவிகள் மூலம் மேம்பட்டுச்செல்லும் என்பதும் புரிகிறது.

மனதின் சக்தி ,நம்புவதை அடையலாம் என்பன சிறுவயது முதல் அனுபவமாக இரு்ந்து வந்த விடையங்கள்.

கோடானு கோடி அண்டங்களில் நாம் மட்டும் தனியே இல்லை. சாவைப்பற்றி வருந்த எதுவுமே இல்லை. இந்த பழைய உடம்பை விட்டு இன்னும் புதிய ஒன்றை பெறலாம். புதிய உடல்,புதிய உலகம்...கன்மத்திற்கு ஏற்ற வாழ்க்கை,அறிவு பிறவிகள் தோறும் தொடரும் பெரும் சொத்து.வருந்த எதுவும் இல்லை.

 ஆன்ம தேடலும்  சிந்தனையும் காலம் காலமாக என்னுள் இரண்டறக்கலந்திருந்த ஒன்று என்றாலும் ஒரு சம்பவத்தை வெடிவைத்ததுபோல் என் வாழ்வில் உருவாக்கி  பணத்தை மட்டும் தேடி ஓட ஆரம்பித்த என்னை வாழ்வில் இடை நடுவே நான் கைவிட்ட தேடல்களின் பாதையில் திரும்ப வைத்த அந்த ஆத்மாக்களுக்கு என் வந்தனங்கள். ”எந்தரோ மஹானு பாவுலு அந்தரிகி வந்தனமுவுலு”(எந்த திசையில் மகான்கள் இருக்கிறார்களோ அந்த திசைக்கு வந்தனம்)

Wednesday, December 3, 2014

மின்னியில் சுற்றிய மரணம்.

நாற்புறமும்
நகர இடமின்றி
நம்பிக்கையின் வெளி குறுகிய
பாதையில்
நான் பரிதவிக்கும்
இந்தப்பொழுதில்....
பருவங்கள் மாறும்போதெல்லாம்
என் பசிகளுக்கு பந்திவைத்துப்பரிமாறிய
உன்னிடம்,
சரக்கு முடிந்து,
திடீரென
வெறுங்கோப்பையான என் வாழ்வில்
இனி ஊற்ற 
மதுவின்
ஒரு துளியேனும்
இல்லையென்றால்..
வருந்தாதே......
எனக்கு பரிசளிக்க
மரணத்தை
அழகிய மின்னியில்
சுற்றி அனுப்பி வை.
ஒரு குழந்தையின்
ஆர்வத்துடன் அதைப்பிரித்து
அனுபவிக்க  காத்திருக்கிறேன்.

- ச.மணிமாறன்-



****


மின்னி- மின்னிடும் பொதியிடும் காகிதம்
 

Monday, November 17, 2014

அனுபவச்சிறகுகள். 02 - எனது வேலை.

நீங்க  என்னவா   இருக்கிறீங்கள் ? இப்படித்தான் பெரும்பாலான சந்திப்புக்களின் முதல் பகுதி ஆரம்பிக்கிறது.

( படம்- நன்றி -தினமலர்-தமிழ்நாடு)


இந்த தொழில்தான் சிறந்தது என்று ஏதாவது இருக்கிறதா ? . அப்படிச்சொல்லும் அப்பாவிகள் பலரைக்கொண்டதுதான் நாம் வாழும் சமூகம். உடம்பின் சிறந்த பாகம் எது என்று கேட்டால் ,கண் என்பீர்களா ? கால் என்பீர்களா ? காது என்பீர்களா ?. உங்கள் பதில் காது என்றால் , நான் உங்கள் கண்களை பிடுங்கியெடுக்கலாமா ? வருந்த மாட்டீர்களா ? .


சமூகம் என்பது தானாகவே ஒரு வட்டத்தை அதனது சமூக அறிவை வைத்துக்கொண்டு போட்டு அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் அந்த வட்டத்துக்குள்ளேயே வாழ வேண்டும் என்று நினைப்பது. இங்கே காலம் காலமாக மிக மெதுவாக வளர்ந்து வந்த குழு அறிவுக்கும் நம்பிக்கைகளுக்குமே முதலிடம் . தனிப்பட்ட உறுப்பினர்களின் புதிய சிநதனைகள் கேள்விகளின்றி துாக்கி வீசப்படும்.


யாழ்ப்பாணச் சமூகமும் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை கோட்பாடாக கொண்டு இருப்பது. சில வகையான விதிகளை மீறலாம் - நீங்கள் புறக்கணிக்கப்டுவீாகள். சில வகையான விதிகளை மீறினால் நீங்கள் தண்டிக்கப்டுவீர்கள்.

அவற்றில் ஒன்று அவர்கள் வகுத்துள்ள சட்டக்கோவைகளின் பிரகாரமான தொழில் துறைகளை ஒரு நபர் தேர்ந்தெடுப்பது.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ‌ தொழில் பின்வரும் விதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

1) சாகும் வரை அல்லது ஓய்வு காலம் என்று ஒன்று வரும் வரை நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.
(ஆகவே அரசாங்கவேலைதான் ஒரே ஒரு உத்தம வேலை.)

2)இடமாற்றம் இல்லாதிருப்பது நல்லது.

3)இடையிடையே வீடு வந்து மனைவிக்கு மீன் வாங்கிக்கொடுப்பது போன்ற பணிவிடைகள் செய்யுமளவு நீக்குப்போக்கான வேலை நேரம் 
இருக்கவேண்டும்.

4)வேலையில் புதிய மாற்றங்கள் எவையும் வராது சாகும் வரை ஒரே வேலையை திரும்பத் திரும்பசச் செய்யும் படி இருக்க வேண்டும்.

5)ஓய்வூதியம் வரவேண்டும்.

6)அல்லது அவர்களுக்கு தெரிந்த ஒரு லிஸ்ட்டில் இருக்கக்கூடிய வேலையாக இருக்க வேண்டும்.[Engineer,Doctor ,Teacher,Principal ,peon ,clerk ,office boy, director of education ,asst director of education ,ISA,manager (முன்பு சங்கக்கடை முகாமையாளர்கள் இப்போதெல்லாம் வங்கி முகாமையாளர்கள் etc)

7) வெளிநாட்டு வேலை-ஒரு வருடகாலத்திலேயே பலரும் மாடி வீடுகள் கட்டிய வரலாறு இருப்பதனால் வெளிநாட்டில்  வேலை  செய்ய வேண்டும் - அங்கு என்ன வேலை செய்தாலும் சரி..யாழ்ப்பாணத்தில் இவர்கள் முகம் சுழிக்கும் வேலையையைும் வெளிநாட்டில் செய்யலாம் . அதற்காக அற மீறல்களாகிய கள்ளப்பாஸபோர்ட் , தலை மாற்றுதல் ,ஏஜன்சியுடன்  பெண்களை -குறிப்பாக மணப்பெண்களை அனுப்புதல் ..பொய்க்கு வெளிநாட்டு குடியுரிமையுள்ள நபரை இங்குள்ள ஒருவருக்குத்திருமணம் செய்து வைத்து அனுப்புதல் போன்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம்.(அந்த சேவைக்கு அந்த வெளிநாட்டு நபருக்கு இருபது இலட்சம் ரூபா வரை வழங்கப்படும்)

எப்ப‌டியோ வெளிநாடு போனால் அந்த நாட்டின் பெயரையே உத்தியோகத்தின் பெயராக்கிவிடுவார்கள். திருமண ‌அழைப்பிதழ்கள் மரண அறிவித்தல்களி்ல குமாரவேல்(ஆசிரியர் ) என்று போடுவது போல் , லக்ஸ்மன்(கனடா),சீராளன் (சுவிஸ்) என்று போடுவார்கள்.

இவையெல்லாம் யாழ்ப்பாண   சமுதாயத்தில் ஒரு ஆணுக்குரிய நல்ல வேலைகள்.(2014 )

மேற்குறித்த எந்த ஒரு வேலையும் செய்யாது
சுயதொழில் செய்து வாழும் என்னை பல பெரியவர்கள்..தம்பி டிகிறி முடித்து இவ்வளவு காலமாகியும் இன்னும் ஒரு வேலை கிடைக்கவில்லை த்தானே என கேட்டதுண்டு. 

இன்று வரை ஏதாவது ஒரு பெரிய கம்பனியில் வேலைக்குப்போ அல்லது கம்பஸில் படிப்பிக்கப்போ என்று அறிவுரை ‌(கேக்காமலே) சொல்லும்  நான் பல வகையிலும் மதிக்கும் அறிஞர்களும் உண்டு..

உண்மையில் வேலை என்பது என்ன ? அது உங்களுக்கு தரவேண்டியது எதை ?  எது உங்கள் வெற்றிகரமான வேலைக்கு அளவுகோல் ? நான் பார்க்கும் வேலை என்ன ?அடுத்த பகுதியில்...

Monday, November 10, 2014

அனுபவச்சிறகுகள் ! -01

முன்னுரை

அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை எனக்கு வாழ்க்கை முடிந்தது என்று நினைக்கவும் .அனுபவங்களை பகிரவும்..  ஆனால் வாழவு என்ன வயசு பார்த்தா முடிகிறது எப்போதுமே ? .எதையுமே சாதித்து கிழித்து விடவுமில்லை மற்றவர்களை எம்பி நிமிர்த்த.ஆனாலும் ஏன் இந்த அனுபவச்சிறகுகள் ? என்கிறீர்களா?

உங்கள் தினசரி வாழ்வில் கூடப்பயணிக்கும் ஒரு சாமான்ய சக பயணி என்ற அடிப்படையில்  (உங்கள் பலரைப் போல் இப்படி குந்தியிருந்து எழுத நேரம் கிடைக்காத ஆள் அல்லவென்பதாலும்-......”வெட்டி என்பதைத்தான் இவ்வளவு நாசூக்காய் சொல்ல முயன்றேன்”)இந்த  வகையாக என் அனுபவங்களை பதிவு செய்ய முயல்கிறேன்.

 எப்போதெல்லாம் என்னை வெறுமை சூழ்கிறதோ அப்போதெல்லாம் எழுத்தென்ற பெயரில் பிதற்றுவது கொஞசம் தன்னம்பிக்கை மதுவை  என் முன்னே ஊற்றி வைக்கிறது.  யார் வாசித்தாலென்ன வாசிக்க விட்டாலென்ன என்து பேனா...மன்னிக்கவும் எனது விசைப்பலகையில் நான் விளாசிக்கொண்டே இருப்பேன். 


இந்த வலைமனை முழுதுமே நான் எப்படி வித்தியாசமான நபாராக என்னைப்பார்க்கிறேன். என் வாழ்வில் மற்றவர்களிடமிருந்து நான் எங்கெங்கு வேறுபட்டேன் அவற்றில் பெற்ற நன்மையும் தீமையும் என்ன? என்பது பற்றியே  குறிப்பிடப்படுகிறது.
இது இன்றுள்ள வழிகாட்டல் தேடும் ..அரிதாக.. வாசிப்பு பழக்கத்தை இன்னும் கடைப்பிடிக்கும் இளைஞர்களுக்கானது.(அப்படி யாராவது இருப்பின்.)   

Thursday, October 30, 2014

என் காலடியில் இடறிய சிப்பி


தலையில் கொஞ்சம் முடி இருந்த நாட்களில் எழுதிய கவிதை இது.. ஆயிரம் அர்த்தம் செய்து கொள்ளுங்கள். எனக்கு என்ன.:)  தமிழ்தானே  வாழ்கிறது..:)




நீ எந்த அலையில்
கரையாெதுங்கிய சிப்பியோ தெரியாது ..
எனக்காக உனக்குள் ஒரு முத்துப்பெட்டகத்தையே
 ஒளித்து வைத்திருந்தாய்.

அடுத்த அலைக்கு முன்னர்
உ்ன்னை
அவசரமாய் பொறுக்கிய
ஒருவன் நான்.

நீ நத்தை ஜாதி என்கிறாய்... உன்னை.
உன்
முக ஜோதியை
‌விளக்கிலே பிறந்தது என்கிறாய்.

உனக்கே தெரிவதில்லை
என் வானம் முழுவதும்
வியாபித்திருக்கும்
ஒரே
வெண்ணிலா
நீ
என்று.

ச.மணிமாறன்.
( தயவு செய்து சுடுவதானால் என் பெயரையும்  சேர்த்தேு சுடுங்கள் )

Monday, October 27, 2014

யாழ்ப்பாண-ஐஸ்


சமீப காலமாக யாழ்ப்பாணத்தில்  துரித அபிவிருத்தி நடவடிக்கைள்  பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார வைத்திய அதிகாரிகள் பலரும் சேர்ந்து ஒரு அதிரடி ஆய்வு நடவடிக்கை மூலம் ‌ஐஸ் கிறீம் கடைகள் பலவற்றிற்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்.

இலங்கையிலேயே அதிக அளவில் ‌ஐஸ் கிறீம் உண்ணும் பழக்கம் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன். எண்பது ரூபாய்கு கிடைக்கும்  ஸ்பெசல் ஐஸ் கிறீம்  நண்பர் வட்டத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு குறைந்த செலவில் அதிக மகிழ்ச்சி தரும். பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வந்து சிறப்பு நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் இந்த ஐஸ் கிறீம் கடைகளில்தான் கொண்டாடி மகிழ்வர்.

முன்புறமாக மிக அழகாகவும் சுத்தமாகவும் தெரியும் இந்த ஐஸ் கிரீம் தயாரிப்பு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அதி பயங்கர சுகாதாரக்கேடான நிலையில் இருப்பதை திடீர்  சோதனை மூலம் கண்டறிந்தது சுகாதார (
வைத்திய)அதிகாரிகள் குழு. யாழ்ப்பாணத்தின் முன்னணி நிறுவனங்கள் கூட விதி விலக்கல்ல.

சுத்தமில்லாத நீரையே பெரும்பாலான ஜஸ் கிறீம் தயாரிப்புகளில் பயன்படுத்தியிருந்தனர். இதில் மலத்தில் காணப்படும் ஈக் கோலி எனப்படும்  வயிற்றோட்டம்  முதல் பல வகையான நோய்களை உண்டு பண்ணக்கூடிய பக்டீரியாக்கள் காணப்பட்டதை ஆய்வுகூடப்பரிசோதனைகள் உறுதிப்படுத்தின.

சில சுவையான(?) சுகாதாரச் சீர்‌கேட்டு உதாரணங்கள்(பிடி பட்டவை)


1) ஐஸ் பழம் ஒரு தொகுதி அச்சுக்களில் வார்க்கப்பட்டு குளிராக்கப்படும். பின்னர் அதை அந்த அச்சை விட்டு கழற்றி எடுக்க வெறும் கரங்கள் மூலம் நேரடியாக அந்த  அச்சை எடுத்து ஒரு நீர்த்தொட்டியில் முக்குவார்கள். அதன் பின்னரே அவை கொஞ்சம் இழகும். சோதனையிடப்பட்ட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இவ்வாறு முக்குவதற்கு பய்னபடுத்தப்பட்ட நீர் சாக்கடை நிறத்தில் பல மாதங்களாக மாற்றப்படாது பாவிக்கப்படிட்டிருந்தது. சோதனைக்குச் சென்ற வைத்தியர்களுக்கே குமட்டியிருக்கிறது. (இப்பாது தெரிகிறதா ஏன் ஐஸ் பழம் இவ்வளவு சுவை என்று :) )

2)ஒரு இரண்டாம் நிலை பிரபல நிறுவனத்தில்  ‌ஐஸ் கிறீம் தயாரிப்பு பழைய இரும்புக்குவியலிற்கு அருகாமையில் உள்ள கராஜ் போன்ற ஒரு இடத்தின் வெறுந்தரையில் நடைபெற்றிருக்கிறது.(இரும்புச்சத்து..!)

3)இன்னுமொரு பிரபல நிறுவனத்தில் சிதைவடைந்த ஐஸ் சொக் டீப் பிரீசரில்(குளிரூட்டி)குவிக்கப்பட்டிருந்தது.
 சுகாதார அதிகாரி - ” அவை எல்லாம் என்ன ?”
கடைக்காரர் - ”பழுதடைந்தவை”
சுகாதார அதிகாரி” பழுதடைந்தவற்றை ஏன் வீசாது வைத்திருக்கிறீர்கள் ? கடைக்காரர்-........3#33@!......................(மனதில்-அவை றீ சைக்கிளுக்காக காத்திருக்கின்றன Sir - மறுபிறப்பு)

4)அனைத்து ஐஸ் கிறீம் தயாரிப்பு நிறுவனங்களிலுமே பணியாளர்கள்  வைத்திய சான்றிதழ் இல்லாமல்தான் பணியாற்றியிருக்கிறார்கள். (உணவு கையாளும் நிறுவனங்களில் சுகாதார பரிசோதனையின் பின்னரே பணியாற்ற முடியும்.)

5)குடிசைக் கைத்தொழிலாக ஐஸ் கிறீம்- அம்மாவும் பிள்ளையுமாக ஒரு சிறு குடில் போன்ற வீட்டில் வைத்து எந்த வர்த்தக பதிவுகளும் நாமமும் இன்றி 30 வருடங்களாக ஐஸ் கிறீம் தயாரித்து வினியோக வண்டிகளிற்கு கொடுத்து வத்திருக்கிறார்கள்(OEM - Unbranded product).தரையிலேயே அனைத்து உற்பத்திப்பொருட்களும்...சுகாதாரம் கெட்ட நீர்...அனைத்துமே நகம் கூட ஒழுங்காக வெட்டாத கைகளால் தான். வண்ணார் பண்ணையில் அமைந்துள்ள இந்த வீட்டை அதிகாரிகள் கைப்பற்றிய போது அவர்கள் கேட்ட கேள்வி” எப்பிடி சேர் இந்த இடத்தை கண்டு பிடித்தீர்கள் முப்பது வருடமாக  யாருமே  வரலையே...”  

6)இன்னுமொரு ஐஸ்கிறீம் நிறுவனம் பயன்படுத்தாத குளியலறைகயில்  இயங்கி வந்திருக்கிறது. எந்தவித சுகாதார விதியும் இன்றி.  ஆச்சரியாமான விடையம் என்னவெனில் அதை நடத்தியவர்  அரச சுகாதார சேவை சம்பந்தப்பட்டவர். 


மனதில் பட்டவை:

யாழ்ப்பாணத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும்பணக்காரர் பலர் ஐஸ கிறீம் நிறுவன உரிமையாளர்களே. உற்பத்திச்செலவாக சுமார் இரண்டு ரூபாய் முடியும் ஐஸ் பழம் ஒன்று பன்னிரண்டு ரூபாய்க்கு விற்கப்படு அதிக இலாபமீட்டும் தொழிலாக உள்ளது. நான்கைந்து ஆடம்பர சொகுசு வாகனங்கள் ,மாளிகைகள்,கல்யாண மண்டபங்கள் என சொத்துக்களின் குவியல்களே பலரிடம் இருக்கிறது. இருக்கட்டும் நன்றாக வாழுங்கள் ,அதே நேரம் மக்ககுள்ளு நல்லது செய்யாவிட்டாலும் தீயதை செய்யாதிருக்க அக்கறையெடுங்கள்.

இவர்கள் யாருமே வேண்டுமென்று இவற்றை செய்யவில்லை . பெரும்பாலும் அவர்கள் பணக்காரர்களே தவிர(இப்போது) படித்தவர்கள் அல்ல. ஒரு கால யாழ்ப்பாணத்தில் படிக்காதவனுக்குரிய துறையாகவே வியாபாரம் காணப்பட்டது. அப்போது உள் நுழைந்து ஐஸ்பழம் காவித்திரிந்து விற்று..படிப்படியாக முன்னேறி பெரும் செல்வந்தர் களாகிய பலரும் இதனுள் அடக்கம்.

பணம் செய்யத்தெரிந்த இவர்களுக்கு வர்த்தக கோட்பாடுகள் பற்றி  தெரிந்திருக்கவில்லை.  தற்போது அவர்களது நிறுவனங்கள் பல வாரங்களுக்கு கோர்ட் உத்தரவால் மூடப்பட்டு  புத்தி புகட்டப்பட்ட பின்னர் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து உயர் ரக நீர் வடிகட்டும் வசதியை உருவாக்கியுள்ளனர்.

இதிலிருந்து இவர்கள் முறையான அறிவுறுத்தல் அல்லது கல்வி இல்லாமையாலேயே இவ்வாறு நடந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.(விதிவிலக்குகள் இருக்கலாம்)

எனது வழமைாயன கருத்தாக உணவு கையாளும் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு உணவுச் சுகாதாரம் பற்றி கட்டாய குறுகிய கால பயிற்சி நெறி வழங்கி சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்பதையும் அச்சானறிதழ் இல்லாதோர் பணி புரியும் நிறுவனங்களுக்கு தண்டம் முதலிய சட்ட நடவடிக்கைள் தேவை என்றும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த பயிற்நி நெறி 2 அல்லது 3 நாட்கள் ஏன் ஒரு நாள் கொண்டதாகக் கூட அமையலாம்.

A Great Salute !


எனக்கு நிச்சயமாகத்தெரியும் ,இதில் ஈடுபட்டு சிறப்பாக செயற்பட்ட முதுகெலும்புள்ள பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு அரசியல் ரீதியாவும் பணபல ரீதியாகவும் பல அழுத்தங்கள் வந்திருக்கும்.(யாழ்ப்பாணத்தின் முப்‌பெரும் ‌ஐஸ் கிறீம் நிறுவனங்களையும் மூடுவதென்பது மிகப்பெரிய சவால்) அவர்களுக்குள்ளேயே காக்கை வன்னியன்கள் இருந்திருக்கலாம் ..எனினும் துணிந்து நின்று நிதானத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செயற்பட்ட அந்த நல்ல மனிதர்களுக்கு ஒரு சலுாட்...

மணிமாறன் எனும் பாமரனின் பதிவுகள்.

இந்து சமுத்திரத்தின் ஒரு துளிக் கண்ணீர் போல் இருக்கும்  இரத்தம்  சிந்திய இலங்கைத்தீவின் யாழ்ப்பாண நகரத்தில்   பிறந்தவன் மணிமாறன் எனும் நான். தமிழில் இளநிலைப்பட்டப்படிப்பையும் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப்பட்டப்படிப்பையும்  விரும்பிப்ப படித்தவன். கணினியும்  கணினி போன்ற கைப்பேசி தொழில் நுட்பங்களும் என்னை அதிகம் கவர்பவை . கவிதை இலக்கியம் என்றும் நாட்டம் அதிகம்  .

இசை,நாடகம்,குறும்படம் என்று என் விருப்பங்களும் தேடல்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. என்னை ஒரே ஒரு துறைக்குள்  சிறைப்பிடிக்க வேண்டாம்.

அமரிக்காவின் சிலிக்கன் வலி (Silicon Valley) புதினங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.  கல்கியின் பொன்னியின் செல்வனும்தான். சிலப்பதிகாரமும்  மணிவாசகனின் திருவாசகமும் பெரும்பாலும் மனப்பாடம்.  எனது நண்பன் ஸரீபன் ஜெயசீலன் பேஸ் புக்கில் சொன்னது போல ”கற்றலும் கற்பித்தலும் தவிர வேறு என்ன இருக்கிறது வாழ்வில்”  என்பதை நடைமுறையாகக்கொள்பவன் நான். எ்ன்னுள் இருக்கும் துக்கத்தை பகிர்ந்து கொள்வதைப்போலவே என்னுள் பொங்கும் சந்தோசங்களையும் மற்றவர்க்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பகிர இந்த அரங்கில் ஏறியுள்ளேன்.

தொடர்புகளிற்கு - 0094777302882  / manimaran101(at)gmail.com

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை