புத்தகங்கள் எப்படி நம்மை வளப்படுத்தும் என்பதை புரிகிற வகையில் சொன்னாலாவது அடுத்த தலைமுறைகள் புரிந்த கொள்ளாதா என்ற ஒரு நப்பாசைதான் இது.
இரண்டாம் வகுப்பில் எனது வாசிப்புப்பழக்கம் ஆரம்பித்தது. அப்போது ஆசிரியப்பணியிலிருந்த எனது தாயாருடன் புத்தளத்தில் வசித்துக்கொண்டிருந்தேன். எனது தாயார் ஒரு சிறந்த வாசகி. வீடு முழுவதும் கதைப்புத்தகங்களும் ஆனந்த விகடன் குமுதம் போன்ற சஞ்சிகைகளும் குவிந்து கிடக்கும்.
அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த சிந்தாமணி எனும் பத்திரிகையில் வரும் சிறுவர் பகுதியை எனக்கு அறிமுகப்படுத்தி எழுத்துக்கூட்டி வாசிக்க வைத்தார் எனது அன்னை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அந்த வித்தியாரம்பம் நடைபெற்றது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான். ஏனெனில் அம்மா சற்று ஓய்வாக இருப்பதும் சிறுவர் பகுதி வெளிவரும் ஞாயிறு சிறப்புப் பதிப்பினை சிந்தாமணி வெளியிடுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.
அ்ன்று ஆரம்பித்த வாசிப்பு அப்படியே தீப்பற்றியதுபோல வளரத்தொடங்கியது. அடுத்த ஞாயிறு எப்போது வரும் ,என்று தொடர் கதைகளை படிக்கும் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தேன்.