யதார்த்தம் புரியப் புரிய வாழும் ஒவ்வொரு நாளுமே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது. தமிழர் கலாச்சாரத்தின் ஓரு பகுதியாகிய – சடங்குகளில் -இன்று, எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல் நடாத்தப்படும் ஒரு சடங்குதான் பூப்புனித நீராட்டு விழா.
சின்னத்தம்பியில் குஷ்பூ வயதுக்கு வந்தபோது |
தொடர்பாடல் வசதிகள் இல்லாதிருந்த – மருத்துவ விஞ்ஞான அறிவு விருத்தியடையாத அந்த காலத்தில்,அன்றைய வாழ்ககை முறையில், பெண்களிற்கு மேற்படிப்பு என்று ஒன்றே இல்லாத நிலையில் பெண்பிள்ளையின் வாழ்வில் பருவமடைந்ததும் அடுத்த படி திருமணம் என்றுதான் இருந்தது.
அந்தக்காலத்தில் தங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஆயத்தமாக ஒரு பெண் இருப்பதை ஊருக்கு அறிவிக்கும் செயற்பாடாவே இந்தச் சடங்கு உருவாகியிருக்க வேண்டும். அவளது தோற்றப்பொலிவு பெண் வீட்டாரின் வசதி, செல்வாக்கு என்பவை எவ்வாறானது, என்பதை ஆண் பிள்ளைகள் வைத்திருப்போருக்கு பறைசாற்றும் ஒரு சந்தைப்படுத்தல்(மார்க்கட்டிங் )நுட்பமாக இதை வைத்திருந்தார்கள்.
அதனால்தான் தாய் மாமனைத் திருமணம் செய்யும் வழக்கமுள்ள தமிழ்நாட்டின் பெரும் பகுதிக் கிராமங்களிலும் இன்றுவரை தாய்மாமன் ஓலை கட்டுதல் என்றெல்லாம் சடங்குகளை வைத்திருந்தார்கள். (கைப்புள்ள உனக்குரிய பெண் ரெடியாயிட்டாடா !)
ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. ஓலையெல்லாம் கட்டத்தேவையில்லை. வட்ஸ் அப்பும் வைபரும் தகவல்களை ஓசியில் ஊரெல்லாம் பரப்பும்;. அத்துடன் முன்பு போல் கல்யாணம் கட்டி வைப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயமுல்ல(குறிப்பாக யாழ்பாபணத் தமிழர்கள் மத்தியில்)
சாதி,சந்தி,கல்வி,குடும்பம்,உத்தியோகம்-அரசாங்க வேலையா அல்லது கனடாப் பீ.ஆர் வச்சிருக்கிறாரா ? என்றெல்லாம் பார்த்து அப்புறம் சாதகத்தில் இறங்கி கடைசியில் செவ்வாய் கெட்ட கேட்டால் பல கல்யாணப்பேச்சுக்கள் கைவிடப்படும். எனவே சாமத்தியவீடு இன்று கல்யாண வீட்டு மார்க்கெட்டிங்குக்கும் உதவாது(அவ்வளவு சின்ன வயதில் திருமணமும் கிடையாது.)
பின்னர் ? சமூக அவலம்!(Peer pressure), 'ஊரில் எல்லாரும் செய்யிறான்கள் அப்ப நாமும் செய்யோணும்' என்றும், வெட்டி பந்தாவைக் காட்ட சந்தர்ப்பம் கிடைத்ததே என்பதற்காகவும்,நல்ல மொய் வருமானம் பார்க்கலாம் என்பதாலும்(இன்னும் என் சிறு மூளையில் படாத காரணங்களுக்காகவும) ஊருக்கு ஒரு விதமாக அவரவர் கற்பனையில் பட்டமாதிரி எல்லாம் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.(இதற்கெல்லாம் எந்த ஆகம விதிமுறைகளும் கிடையாது)
தனது பெண் பிள்ளையை ஒரு அன்னிய ஆண் முறைத்துப் பார்த்தாலே தாங்காத தாயும் தகப்பனும், கமராக்காரனை வரவழைத்து (அந்தக்கமராக்காற குறூப் பெரும்பாலும் இளம் வயதுப் பையன்களைக்கொண்டது), அதிக பொருட்செலவில் மேக்கப்பும்போட்டு, இந்தியச் சினிமாக்காதாநாயகிகள் பிச்சை வேண்டும் அளவிற்கு , வித விதமான போஸ்களில் புகைப்படங்களையும் வீடியோக்காட்சிகளையும் சுட்டுத்தள்ளுகிறார்கள்.
கெட்ட கேட்டில் இன்டோர் சூட்டிங் முடிய அவுட்டோர் சூட்டிங் என்று கண்டி, நுவரnலியாவிற்கெல்லாம் போய் அந்தப் பெண் பிள்ளையை பல்வேறு சினிமாப்பாடல்ககளிற்கு ஆடவிட்டு,ஓட விட்டு... சீ..!
அதை ஊரே பார்த்துப் பரவசப்படுமளவிற்கு பேஸ்புக்கிலும்,இதர சோசல் மீடியாவிலும் வெளியிட்டு மகிழ்கிறார்கள்.
அந்தப்பெண்பிள்ளைகள் நன்றாக போஸ் குடுக்கிறார்கள், ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க அனுப்புவீர்களா என்று கேட்டுப்பார்த்தால் ' எங்கள் குடும்பம் அப்படிப்பட்டது இல்லை' என்பார்கள். அடோய் அடோய் ஒருக்கா உனது பிள்ளையை வீடியோவில ஆடவிட்டால் என்ன? ஒன்பது தடவை ஆடவிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே ?
சாமத்திய வீட்டுக்காக கனடாவிற்கு எட்டுக் கூட்டம் மேளத்தை இலங்கையிலிருந்து வரவழைத்தது, ஹெலிக்காப்டரில் பெண்ணை அழைத்து வந்திறக்கியதுவரை பல்வேறு நகைப்பிற்கிடமான கூத்துக்களை உலக அளவில் நடத்துகிறார்கள். இரண்டு மூன்று வருடத்துக்கு முந்தி வயசுக்கு வந்த கனடாக் குமருகளை ஊருக்குக்கூட்டிவந்து பிறஷ்ஷாக பல மில்லியன்கள் செலவில் ஒரு சாமத்திய வீடு நடத்திச் செல்வோர் இன்னொரு வகை.
உண்மையில் அறியாமை காரணமாகவும் தம் பவிசைக் காட்டவும் இப்படி இறங்குபவர்களை முழுமையாக கண்டிக்கவும் முடியாது. பல்வேறு காரணங்களால் சமூகத்தில் சற்றுக் குறைவானவர்களாக (பணம்,அந்தஸ்;த்து) முன்பு உணர்ந்தவர்கள், தாம் பெரியவர்கள் என்று சமூகத்திற்குச் சொல்லும் ஒரே சந்தர்ப்பமாக இதைக் காண்கிறார்கள்.
ஆனால் என் கவலை எல்லாம்,படித்தவர்கள் மத்தியிலும் சிலர் இதைக் கடுமையாக கடைப்பிடிக்க முயல்வதுதான்.
வயதிற்கு வருவதென்பது ஒரு சாதாரண இயற்கையான உடல் விருத்திச்செயற்பாடு- பேசுவதற்கு கொஞ்சம் சங்கோஜப்படும்படியான விடயமும் கூட அதைப்போய் ஏதோ பெரிய சாதனை செய்ததைப்போல கொண்டாடுவது அறிவுபூர்வமானதாவோ அல்லது எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதொன்றாகவோ எப்படி எடுக்க முடியும் ?
ஏற்கனவே தனது உடல் மாற்றங்களை கண்டு பயந்து போயிருக்கும் அந்தப் பிஞ்சிற்கு தன்னை எப்படிக் கையாள வேண்டும் என்பதை பக்குவமாக எடுத்துச்சொல்லும் - மற்றும் பாதுகாப்புணர்ச்சியை அந்தப் பெண்ணிற்கு அதிகமாக வழங்கும் காலப்பகுதி இது. அவளது மன உடல் ரீதியான மாற்றங்களை நாமும் புரிந்து கொண்டதை அறிவு பூர்வமாக அவளிற்கு உணர்த்தி அவளது மனதைப் பக்குவப்படுத்துவதை விட்டுவிட்டு பயப்படுத்தும் நிகழ்வாகவே இவை அமைகின்றன.
எனது பள்ளித்தோளன் ஒருவனது மகளது 'சாமத்திய வீடு' அண்மையில வருகிறது. ஆயிரம்பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறான். யாழ்ப்பாணத்தில் பெரும் மண்டபத்தில் சுமார் பத்து இலட்சம் ரூபாய்கள் பண ஒதுக்கீட்டில் செய்யப்போகிறான்.
என்னைக் கட்டாயம் வரும்படி அழைத்திருக்கிறான். இந்த மாதிரியான நிகழ்வுகளிற்கு நேரம் ஒதுக்கிப்போவது என்பதும் அங்கே நம்மவர் போடும் சைவச்சாப்பாட்டை (மட்டக்களப்பு,திருகோணமலை,மலை நாட்டில் கோழி புரியாணி - அற்லீஸ்ற் சாப்பாட்டிற்காகவாவது போகலாம்) மென்று விட்டு போட்டோவிற்குப்போஸ் குடுத்து கைக்குள் சில ஆயிரங்களைக் கவனமாக என்வலப்பில் பேர் எழுதிக் கொடுத்து வரும் சடங்கும் அப்பப்பா நினைத்தாலே கடுப்பாக இருக்கும்(unproductive work)
இயலுமான அளவு இந்தச் சடங்குகளிற்கு போகாமலே இருந்து வந்த என்னை ,வராவிட்டால் கொல்லுவேன் என்கிறான் என் தத்துவத்திற்கு எதிரணியான நண்பன். வேறு வழியே இல்லாமல் பள்ளிக்காலத்தில் லீவு சொல்ல ஆசிரியருக்கு பொய்க்காரணங்களைத் தேடியது போல, என்ன சொல்லித்தப்பலாம் என்று விட்டத்தைப் பார்த்தவாறு, யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
கடைசில என்னயும் வில்லனாக்கிட்டீங்களேடா ! :)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .