முன்னுரை: இது ஒரு சின்னப்பயலின் காதல் கதை அந்தச் சின்னப்பயலால் 17 வயதில் எழுதப்பட்டது எனவே குறைபாடுகளை பாலமை கண்டு ஒதுக்கவும்.
உயர்தரம் இரண்டாம் வருடம் படிக்கும்போது,ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்ட கவிதைக் காதல் வரலாறு இது. எனது நண்பன் சுவர்ணன் இதை வைத்திருந்து சில மாதங்களின் முன் பிரான்சிலிருந்து வருகை தந்தபோது எதிர்பாராத பரிசாக வழங்கியிருந்தான்.
நண்பன் நாகரூபன் வீட்டு மேல்மாடியில் வைத்து நான் வாசித்துக்காட்டியபோது எங்களுடன் நட்புடன் பழகும் அவனது அம்மாவின் கண்கள் கலங்கியிருந்தது இன்னும் நினைவிருக்கிறது.
அந்தக்காலத்தில் வைரமுத்து எழுதிய கவிதைப்புத்தகங்களை ஒன்றுவிடாது படித்து(சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் முதல் கண்ணீர் தேசம் வரை .. ) – அவரது நீண்ட பாவடிவங்களில் கதை சொல்லும் தன்மையை ஒத்து உருவாக்கப்பட்டது இது. எனவே இவை எல்லாம் 100 வீதம் கவிகைள் அல்ல எனினும் இவற்றில் 100 வீதம் கவிதைகளும் உள்ளன. இதை 'உரையிடையிட்ட செய்யுள்' எனலாம். கதை சொல்வதற்காக சில இடங்களில் வசனங்கள் வந்து உட்கார அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
முன்னைக்கு கவிதையும் தமிழும் என்னுள் வளர்ந்துவிட்ட இந்த வயதில் திருத்தங்கள் தெரிகின்றன எனினும் மாற்றங்களில்லாமல் கையெழுத்துப்பிரதியை தட்டச்சு செய்துள்ளேன். அந்தக் காலத்தை மீளுருவாக்கம் செய்யும் ஒரு முயற்சி. இந்த உண்மைக்கதையின் பல பேசப்படாத பாததிரங்கள் எனது பேஸ்புக்கில் உள்ளனர். அவர்களது கருத்தூட்டல் பற்றிக் கணிக்க முடியவில்லை இப்போது.(Finger crossed and waiting :) ) . கிட்டத்தட்ட நான் காதலித்ததே அந்தப் பெண்ணிற்குத்தெரியாது. பப்பி லவ்.
காதல் ? - இதெல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை என்பது தெளிவாக புரிவதற்குப் பத்துப் பதினைந்து வருடங்களாகிவிட்டன.
XXX
கண்ணீர்த்தேசம் - ச.மணிமாறன்.
செவ்வரி படர்ந்த கன்னங்கள்
கயல் மீனிற்கே கவலை கொடுக்கும் கண்கள்
சிரிப்பிலே சில்லறையை அல்ல,
காந்த அலைகளைக் கவர விடும்
குறும்புக்காறி.
என் கவிதைக்குக் கரு – அவள் கருங்குழல்.
நடமாடும் நந்தவனம்
பூக்குவியலால் புனைந்த கவிதை
அவள்.
பஞ்சுப்பொதிகளைப் பாதங்களாக்கியவள்.
அவள் ,
செவ்விதழ் - இளமையின் சீதனம்,
வெட்கம் - பிறருக்கு வேதனை கொடுக்கும்.
மேகத்தைப் பிடித்து
சற்று மென்மையாக்கி,
இவள் கேசம் எனப் பெயர்வைத்தான் பிரமன்.
அவள் - என் கவிதைக்குக் கருக்கொடுப்பவள்.
பால்மணம் மாறும் பதினாறில்
என்னில்
பனிப்புயல் செய்த பாவை.