விடுதலைப்புலிகள் தனியாட்சி செய்திருந்த யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றி , அரசாங்கத்தின் ஆட்சி இரண்டு வருடங்களைக் கடந்து கொண்டிருந்த நேரத்தில் கொழும்பில் பாதுகாப்பாக இருந்த நான் , திருகோணமலையிலிருந்து சரக்குக் கப்பலின் அடித்தட்டில் படுத்து (அப்போதிருந்த ஒரே போக்குவரத்து வழி) 21 வயதில், தமிழ் மேல் தீராத காதலும்,வாசிப்பு வெறியும், பொங்கும் கவிதையும் - இவையெல்லாம் கலந்த கொப்புளிக்கும் கனலாய் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்திருந்தேன்.
1996 – ஆனந்த விகடன் ,குமுதம் என்ற பத்திரிகைகள் எல்லாம் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் , உதயன் செய்திப்பத்திரிகை தவிர வாசிக்க வேறு எதுவுமற்ற நிலையில் , நான் ஆரம்பித்த பல்சுவை வார இதழ் 'திசை முகம்'
அதனாலே நான் பட்ட பாடு உரல் படுமோ உளிபடுமோ நான் அறியேன்.
அப்போது பிரபலமாயிருந்த மறைந்த குமுதம் ஆசிரியர் 'அரசு' போல யாருக்கும் நான் யார் என்று தெரியத்தேவை இல்லை , என் எழுத்துக்களே தெரியவேண்டும் என(பயத்தால அல்ல- பயமா? அது என்ன விலை?) எழுத்தாளர் சுஜாத்தா என்கிற ரங்கராஜன் போல ,'தமயந்தி' எனும் புனை பெயரில் எழுதி வந்தேன்.
21 வயதில் திசைமுக ஆசிரியராய் (அச்சுக்கோர்க்கும் அச்சகத்தில்)அச்சேற்றிய அந்த சஞ்சிகைகளில் நான் எழுதிய கேள்வி பதில் பகுதி இந்தக் கொரோனாக் கால லீவில் தூசிதட்டிப்பார்க்கும் போது மகிழ்வைத் தந்தது(காகத்திற்கும் தன் குஞ்சு.........) நண்பன் வைத்தியர் இராகவன் பாதுகாத்து வைத்துப் பரிசளித்த பிரதிகளில் இருந்து பெறப்பட்டவை இவை.
1995/96 இல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் அந்தக்காலத்திற்குப் பின்சென்றால் பல பூடகமான பதில்கள் புரியும்.
இது ஒரு பதிப்பிலிந்து(23-09-1996) எடுக்கப்பட்டது – மிகுதி நீங்கள் பிரியப்பட்டால் தொடரும். உங்கள் பின்னூட்டல் அவசியம்.
எட்டாவது கேள்வி இப்போதைய காலத்தோடும் பொருந்துவதுதான் கோ-இன்சிடன்ஸ் :)
தமயந்தி பதில்கள். (23-09-1996)
1) கேள்வி: காதல் - காமம் வேறுபடுத்துக ?
பதில்: செடிக்கு நீரூற்றி வளர்த்து மலர் பறிக்க நினைப்பது முன்னையது, பூவை மட்டும் பிடுங்கி முகர நினைப்பது பின்னையது.
2) கேள்வி: நாங்கள் வாழத்தான் வேண்டுமா ? (Note: 1996 இன் கொடிய யுத்த சூழல்)
பதில் : இளமை முழுவதும் சிறையில் வாடிய மண்டேலா , இப்போது கம்பீரமாக ஆபிரிக்காவை ஆளவில்லையா? இரவு என்று ஒன்றிருந்தால் விடியல் என்றும் ஒன்றிருக்கும் காத்திருப்போம்.
3) கேள்வி : தினசரி பேய்களைக் கனவு காண்கிறேன் என்ன செய்யலாம்?
பதில்: காலை எழுந்ததும் தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதைத் தவிர்த்துப் பாருங்கள். கனவு நின்றுவிடும்.
4) கேள்வி : துணிச்சலாய்த் தலையங்கங்கள் தீட்டுகிறீர்களே பிரச்சினையில்லையா ?
பதில்: ' தேடிச் சோறுநிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி......
வேடிக்கை மனிதர்போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? – உபயம் : பாரதியார்.
5) கேள்வி : தாங்கள் ஆணா பெண்ணா அலியா ?
பதில் : எலி. (எங்கும் ஊடுருவுவதால்)
6) கேள்வி: ஒன்றரை ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாகத் தங்கள் பத்திரிகை விலை உயர்ந்திருப்பது அநியாயமில்லையா?
பதில்: 'விலை உயர்ந்த தற்கொலை' என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உலகில் காலூன்றியிருக்கும் எமக்கு தொடர்ந்தும் வீழாமலிருக்க இது அவசியமாகிறது.உங்கள் ஆதரவு உயர இன்னும் அதிக பக்கங்களை இதே விலையில் தருவோம்.
7) கேள்வி : இன்று நாட்டின் தலையாய பிரச்சினை எது ?
பதில்: பதில் சொல்ல முடியாது என்று தெரிந்தும் இப்படியான
கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் .
8) : கேள்வி: ஏறிய விலைகள் இன்னும் இறங்காமலிருப்பது எதைக் காட்டுகிறது ?
பதில்: வியாபாரிகளின் 'உயர்ந்த' மனப்பாங்கை .
Source :
இந்தப் பகுதியின் மூலப்பிரதி கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது.(Click on the image to enlarge)
பத்திரிகை வெளியிட்டமைபற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன்.
ReplyDeleteஅதன் பல்சுவையை இன்றுதான் உணர்ந்தேன்.
மேலும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.
கேள்வி பதில் பல்சுவை.
ReplyDeleteமேலும் வாசிக்க ஆவல்.
தங்கள் பின்னூட்டலுக்கு நன்றி. தங்கள் பெயர் தெரிந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கேள்விபதில் அடுத்த பகுதி - சிலவும் விரைவில் இடுகிறேன்.
Delete