முன்னுரை: இது ஒரு சின்னப்பயலின் காதல் கதை அந்தச் சின்னப்பயலால் 17 வயதில் எழுதப்பட்டது எனவே குறைபாடுகளை பாலமை கண்டு ஒதுக்கவும்.
உயர்தரம் இரண்டாம் வருடம் படிக்கும்போது,ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்ட கவிதைக் காதல் வரலாறு இது. எனது நண்பன் சுவர்ணன் இதை வைத்திருந்து சில மாதங்களின் முன் பிரான்சிலிருந்து வருகை தந்தபோது எதிர்பாராத பரிசாக வழங்கியிருந்தான்.
நண்பன் நாகரூபன் வீட்டு மேல்மாடியில் வைத்து நான் வாசித்துக்காட்டியபோது எங்களுடன் நட்புடன் பழகும் அவனது அம்மாவின் கண்கள் கலங்கியிருந்தது இன்னும் நினைவிருக்கிறது.
அந்தக்காலத்தில் வைரமுத்து எழுதிய கவிதைப்புத்தகங்களை ஒன்றுவிடாது படித்து(சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் முதல் கண்ணீர் தேசம் வரை .. ) – அவரது நீண்ட பாவடிவங்களில் கதை சொல்லும் தன்மையை ஒத்து உருவாக்கப்பட்டது இது. எனவே இவை எல்லாம் 100 வீதம் கவிகைள் அல்ல எனினும் இவற்றில் 100 வீதம் கவிதைகளும் உள்ளன. இதை 'உரையிடையிட்ட செய்யுள்' எனலாம். கதை சொல்வதற்காக சில இடங்களில் வசனங்கள் வந்து உட்கார அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
முன்னைக்கு கவிதையும் தமிழும் என்னுள் வளர்ந்துவிட்ட இந்த வயதில் திருத்தங்கள் தெரிகின்றன எனினும் மாற்றங்களில்லாமல் கையெழுத்துப்பிரதியை தட்டச்சு செய்துள்ளேன். அந்தக் காலத்தை மீளுருவாக்கம் செய்யும் ஒரு முயற்சி. இந்த உண்மைக்கதையின் பல பேசப்படாத பாததிரங்கள் எனது பேஸ்புக்கில் உள்ளனர். அவர்களது கருத்தூட்டல் பற்றிக் கணிக்க முடியவில்லை இப்போது.(Finger crossed and waiting :) ) . கிட்டத்தட்ட நான் காதலித்ததே அந்தப் பெண்ணிற்குத்தெரியாது. பப்பி லவ்.
காதல் ? - இதெல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை என்பது தெளிவாக புரிவதற்குப் பத்துப் பதினைந்து வருடங்களாகிவிட்டன.
XXX
கண்ணீர்த்தேசம் - ச.மணிமாறன்.
செவ்வரி படர்ந்த கன்னங்கள்
கயல் மீனிற்கே கவலை கொடுக்கும் கண்கள்
சிரிப்பிலே சில்லறையை அல்ல,
காந்த அலைகளைக் கவர விடும்
குறும்புக்காறி.
என் கவிதைக்குக் கரு – அவள் கருங்குழல்.
நடமாடும் நந்தவனம்
பூக்குவியலால் புனைந்த கவிதை
அவள்.
பஞ்சுப்பொதிகளைப் பாதங்களாக்கியவள்.
அவள் ,
செவ்விதழ் - இளமையின் சீதனம்,
வெட்கம் - பிறருக்கு வேதனை கொடுக்கும்.
மேகத்தைப் பிடித்து
சற்று மென்மையாக்கி,
இவள் கேசம் எனப் பெயர்வைத்தான் பிரமன்.
அவள் - என் கவிதைக்குக் கருக்கொடுப்பவள்.
பால்மணம் மாறும் பதினாறில்
என்னில்
பனிப்புயல் செய்த பாவை.
விஞ்ஞான வகுப்பில் மட்டும் நான் விவேகமானவன்.
ஆம்,
அங்கு அவளும் வருவாள்.
ஆசிரியரின் கேள்விகள் அத்தனைக்கும்
பதில் எனக்கு அத்துப்படி.
காலை வகுப்பு அது
மரங்கள் தமக்குள் மறைத்து வைத்ததை
பனித்துளிகள் படர்ந்து
தேடுதல் செய்யும்
இருண்ட காலை.
இளங்கிளியின் இருப்பிடத்தால் நான் செல்வேன்.
அவள் எதிரே வருவாள்
கண்டதும் கண்கள் காலையில் மலரும்
முதல் பூவாகும்.
இதழ்களின் ஒற்றுமை சிதறடிக்கப்படும்
குயில் ஒன்று கூவப்புறப்படும்
அவள் 'குட்மோர்னிங்'
சொல்வாள்.
பதில் வாழ்த்து சொல்வதற்குள்
படபடப்பால்
மார்கழியில் கூட
வியர்வை
மடை திறந்துவிடும்.
நட்புவிதை நாளாவட்டத்தில்
அன்புச்செடியில்
காதல் பூக்களை
அள்ளி வைத்தது.
வகுப்புகளிற்கு நான் செல்லும் 'ஒழுங்கு'
என் வீட்டில் மிகப்பிரபலம்.
ஆனால் ஆறுமணி விஞ்ஞான வகுப்பிற்கு
ஐந்திற்கே புறப்படும்
என் அவசரம்
அவர்களிற்கு
எட்டாவது
அதிசயம்.
பாடல்கள் வரைகையில்
மனதை அவளிற்குள்
மறைத்து வைப்பதாய்
மகிழ்ந்து போனேன்.
கிறிஸ்மஸ் இப்போது
எனக்கும் கொண்டாட்டம்
கோவில் வாசலில்
கும்புடுவதிலும்
சேர்ச் வாசலில்
சேவிக்கும் நேரம்
அதிகமாயிருந்தது.
வை.எம்.சி.ஏயும்..
வை.எப்.சி ஏயும்
வாசஸ்தலமாகியது.
கல்வியென்பது
கரைந்து போனது,
நண்பர் வட்டம்,
நகர்ந்து போனது.
இதயத்துடிப்புக்களின் இளைவேளையிலும்
அவள்பெயரே அழகாய் ஒலித்தது.
பேப்பரையும் பேனாவையும்
படிப்பிற்காய்த் தேடாத கைகள்
இப்போ
கவி வடிப்பிற்காய்த்
தேடின.
தேதி தெரியாத ஒரு நாளின்
மாலையில்
தாங்க முடியாத காதற்சுமை
என் முதல் கவிதையாகக்
களத்தில் குதித்தது.
புகழேந்திதான் எனக்குப் பிடித்த புலவன்
அவன்தானே தமயந்தியின் அற்புதங்களை
அப்படிப்பாடியவன்.
நளன்-எனது நாசகாரன்.
முகம் தெரியாத முதல் எதிரி.
ஆம்,
கற்பனையிற்கூட கறைபடிய
அனுமதியா அற்புதக் காதல் அது.
சிந்தனைக்குள் சிறகடிக்கும்
பட்டாம் பூச்சியவள்.
நிற்கிறேன்,நடக்கிறேன்
எல்லாம் அவள் நினைவுகளில்தான்
மொத்தத்தில், நான் தொலைந்து,
நாமாகிவிட்டிருந்தோம்.
விமானப்பட்சியின் விஷ முட்டைகளும்
தூசுகலந்த காற்றுமாய்
தேசம் சுகமிழந்த இடைக்காலங்கள்
அவளைத்தொலைத்தன..
மீண்டும், விதிவசத்தால்
வீதியில் என் வெண்ணிலா !
அவசரகால் சேவைக்காய்
சாரணியத்தொண்டனாய் நான்(*)
எனக்குள்ளே தம்புரா சுருதிகூட்டியது
வெண்புறாக்கள் சிறகடித்துப் பறந்தன
மல்லிகை பூத்து மணம்பரப்பியது
பாரதிராஜாவின் தேவதைகள்
கோரஸ் பாடினார்கள்
கண்பனிக்கக் கையசைக்கிறேன்
கண்டுகொள்ளவில்லை என் தேவதை.
ஓ !
பூவிற்கு கூடப் புற்றுநோயா?
முகத்தில் முறைப்பைப் பரிமாறிப்
பறந்தது என் பைங்கிளி.
வெண்புறாக்களின் மார்பில்
இரத்தம் சொட்டியது
தம்புறாத்தந்திகள்
அபசுரத்தில் அழுதன
முதுகெலும்பு சில்லிட,
இதயம் அடிப்பதற்கு என்னிடம்
அனுமதி கேட்டது.
மூளைப்பிரதேசத்தில் யாரோ முள் விதைத்தார்கள்.
என் பிஞ்சு உள்ளம் பிளந்துபோனது.
'உயரவேண்டும்
அவள் நிமிர்ந்து பார்க்க
சிரமப்படும் அளவிற்கு நான் உயர வேண்டும்'
பூமிப்பந்தும் பொழுபோகாமல்
உருண்டோடியது
கால மாற்றம் காயங்களை
வடுக்களாக்கி
கண்மறைத்தது.
மனசுள் மட்டும் மௌனபூகம்பம்.
கிற்றாரைத் தூக்கினால் தந்திகள் தரும்
சோக ரசமாய் அவள் நினைவுகள்.
சினிமாப்பாடல்கள் என்காதில் தேனாய் அல்ல
தேளாய்ப் பாய்ந்தன.
தென்றல் என்மீது
திராவகம் வீசியது.
பாரதியார் பாடல்களைவிட
பட்டினத்தார் பாடல்களே
இப்போது பிடிக்கிறது.
உண்மையில் என் மீசைக்கு
என்காதல்
அணணா முறை.
என் விசும்பல்களை
அவள் முகவரிக்கு
அனுப்பிவைக்கிறேன்.
சாரணிய முகாம் ஒன்றில்
இன்னொரு சந்திப்பபை
ஏற்பாடு செய்தது சந்தர்ப்பம்.
தாமரையின் தயவிற்காய் சூரியன்
தூது விடுகிறது.
மாடியிலிருந்து மனப்புயலுடன்
நான் நோக்கினேன்,
அவன் அவள்முன் வெள்ளைத்தாளை விரித்து
விபரம் சொன்னான்
அணுகுண்டுப் பார்வை ஒன்று
அவனுக்கு வீசப்பட்து
பரிகாரமாகக் கோரிக்கை -பரிசீலனையில்..
{சாரணியக்கலாச்சாரத்திற்காய்
லொக் புக்கில்}
ஏதோ எழுதினாள் போனாள்.
மாடியில் மறைந்திருந்தநான்
முயலுக்கு முட்டாள் பட்டம் கட்டி
கீழே பாய்ந்தேன்.
புத்தகத்தைப் பிடுங்கி
ஆங்கில வாசகங்களை அப்படியோ
மொழி பெயர்க்கிறேன்.
"நடத்தை என்பது
வர்ணங்கள் தொலைத்த
வெள்ளைக் காகிதம்
கறைபட்டால் அதைக் கழுவ முடியாது"
(Character is like a white paper, once it blotted cannot make it white as like as before )
புரியாத துயரில் புதைந்து போகிறேன்.
"உயர வேண்டும
அவள் நிமிர்ந்து பார்க்க முடியாத
உயரத்திற்கு நான் உயர வேண்டும்."
அடியேய்
காதலைச் சொன்னதால் கறைபட்டது
என் நடத்தையா?
தோழி !,
மரியான ஆழி உன் மனதிடம்
மடிப்பிச்சை கேட்கவேண்டும்.
அப்போதுதான் படித்த
திண்மத்தை திரவமாக்கிப்
பின்னர் வாயுவாக்கலாம் என்ற விஞ்ஞானத்தை
என்னிலா பரிசோதிக்க வேண்டும்.
அப்படியானால்,
உன்சபையில் காதல் சங்கீதம்
ஒருபோதுமே ஒலிக்கவில்லையா?
அப்படியானால்,
அந்த வெண்மலர்ச் சிரிப்பு?
கண்கள் காட்டும் கரிசனம்?
அத்தனைக்கும் அர்த்தம் என்னடி
சொல்வாயா?
அமைதிப்படையின் அட்டூளியங்களைவிட
உன்
அமைதிப்புன்னகையின்
அட்டூளியம் அதிகம் தெரியுமா ?
அடியேய்
உயிர் உழத்தி
என் நெஞ்சில்
வேதனையை விதைத்தவளே
வந்துபார் அறுவடையை,
அற்புதமாய் இருக்கிறது.
அடியேய் சுமைதூக்கி
உன் நினைவுகளை என்
நெஞ்சிலிருந்து
சற்று இறக்கிவிடேன்
கொஞ்சம் இளைப்பாற வேண்டும்.
நான் கவிஞனாவதற்காய்
காதலைத் தியாகம்
செய்தாயா?
வைரமானவற்றை வைரத்தால் அறுப்பார்களாம்
வைரத்தை? உன்னால்தானடி அறுக்க முடியும்.
நான் அறிவேன்
இந்தக் காகிதப்பூப் பாடல்கள்
உன் கூந்தலில் ஒருநாளும்
உட்காரப்போவதில்லை என்று
எனினும்
கண்ணீரில் கவிதைகளைக் குளிப்பாட்டுவதும்
சுகமாகத்தான் இருக்கிறது சகியே !.
காதலன் காதலி - ஊடலும்
உயிர்ப்பும் பாட இது ஒன்றும்
வைரமுத்துவின்
'தண்ணீர் தேசமல்ல'
நான் வசிக்கும்
கண்ணீர் தேசம்
கற்பனையில்கூட
காயங்களே தோன்றும்
அற்புதப் பாடல்
சுகமான சோகம்.
* யுத்தகாலத்தில் காயப்பட்டுவரும் பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்காக வீதியில் ஒழுங்குபடுத்தும் பணிகளிற்கு பாடசாலை மாணவர்களும் (சாரணர் முதலிய) பயன்படுத்தப்பட்டனர். நான் ஒரு சாரணன்.
(இதன் மிகுதிப்பகுதி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது.பிறகு ஒரு சமயத்தில் வெளியிடுகிறேன். இந்தக் கவிதைகளை நான் பல்கலைக்கழகத்திலிருந்த காலம் முதல் இரவல் வாங்கி ,என் அனுமதியுடன் சுட்டு தம் காதலிமார்களைக் கவர் பண்ணியவர்கள் பலர் எனக்குப் பயன்படாவிட்டாலும் பல காதலர்களிற்கு ஒட்டுப்போட்ட பசையாகவேனும் இது தொழிற்பட்டதில் மகிழ்ச்சி – சுடுவதில் தடையில்லை ஆனால் எனது பெயர் குறிப்பிட்டுப் பாவித்தால் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும் - கவிஞனும் கலைஞனும் நாடுவது அதுவே.)
எழுதியது : ச.மணிமாறன்.
மிகச்சிறப்பாக இருக்கிறது.
ReplyDelete"என் மீசைக்கு
என் காதல்
அணணா முறை"
"உயிர் உழத்தி
என் நெஞ்சில்
வேதனையை விதைத்தவளே
வந்துபார் அறுவடையை,
அற்புதமாய் இருக்கிறது"
சூப்பர் !
ReplyDelete