நாங்கள் யுத்தகாலக் குழந்தைகள். மூன்று வயதிலிருந்து சுமார் முப்பது வயது வரை துப்பாக்கிகள் வெடிக்கும் ஓசையும்,எறிகணைச் சத்தமும்,விண்ணிலிருந்து இராணுவம் பொம்மர்களில் வந்து போடும் குண்டு பறந்து வரும் ஓசையிலிருந்து பொளேர் என வீழ்ந்து அப்பாவி மக்கள் உயிர் குடிக்கும் ஓசையும் கேட்டு வளர்நதவர்கள்.
யுத்தகாலத்தின் பெரும்பான்மையும் வடக்குப்பகுதி, நாட்டின் தலைநகரம் கொழும்பு உட்பட்ட தெற்குடன் முற்றாகத் தரைவழித் தொடர்பில்லாதிருந்தது. மின்சாரம் நான் ஆறாம் வகுப்புத்தொடங்கிய காலத்திலிருந்து 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை வீடுகளிற்கு மின்சாரமும் இல்லை. தோலைபேசி என்ற ஒன்றை வீட்டுப் பரணில் இருந்து எடுத்து விளையாடிய அனுபவம் உண்டு. தொலைத்தொடர்பை அனுபவித்ததே கிடையாது.
பல்கலைக்கழக அனுமதி கிடைப்பது இந்த வசதிகளற்ற இடத்திலிருந்து தப்பி தலை நகரத்திற்குச் செல்லும் ஓரளவு பாதுகாப்பான வழியாக இருந்தது.
எனக்கும் அப்படி கொழும்பிற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதற்கு முதலும், யாரும் வடக்கிலிருந்து இலகுவில் கொழும்பு செல்ல முடியாதிருந்த நிலையிலும் இலக்கியத்தொடர்புகள் காரணமாக கொழும்பு சென்று சில நாட்களில் ஏக்கத்துடன் திரும்பியிருந்தேன்.
இந்த முறை அதிக காலம் கொழும்பை அனுபவிக்கலாம் என்ற ஆனந்தம்.
போன தடவை ஒரு இலக்கியக் குழுவோடு வந்தபோது "ரொட்டறிக்" சங்கத்தைச் சேர்ந்த ஜானகப் பெரேரா எனும் சிங்களத் தனவந்தர் ஒருவரோடு நல்ல அறிமுகம். எனது வட்டத்தில் ஆங்கிலம் ஓரளவு பேசக்கூடியவன் நான்.அதனால் அவரோடு உரையாடி நல்ல பழக்கம் இருந்தது. கொழும்பு வந்தால் தன்னைத்தொடர்பு கொள்ளச் சொல்லி அவரது தொலைபேசி இலக்கத்தைத் தந்திருந்தார்.
அங்கு சென்றதும் முதல் வேலையாக வெள்ளவத்தையில் தெருவில் உள்ள ஒரு தொலைபேசி பூத்தில் சில்லறைகளைப் போட்டு டயல் செய்தேன்.
தொலைபேசி ஒலித்தது,
ஒரு பெண் எடுத்து "ஹலோ" சொன்னாள்.
நான் ஆங்கிலத்தில் "எனது பெயர் மணிமாறன் நான் திரு.ஜானகவுடன் பேச முடியுமா ? " என்று கேட்டேன்.
அதற்கு அந்தப் பெண் தொலைபேசியை வைக்கும் படி சொன்னாள். (அவளுக்கு என்ன கஸ்டமோ)நானும் அவர் இல்லைப் போல என எண்ண்ணியபடி போனை வைத்து விட்டடேன்.
இரண்டாவது தடைவயாக சில மணி நேரங்கள் கழித்து இன்னொரு பப்ளிக் பூத்திலிருந்து அவரை அழைத்தேன் ,அழைப்புக் கிடைத்ததும்,
"ஜானகவுடன் பேச முடியுமா?" என்றேன். இம்முறையும் அதே பெண் பதிலளித்தாள், "உங்களது பெயர் என்ன?" என்று வேறு கேட்டுவிட்டு "தயவு செய்து போனை வைத்துவிடுங்கள்" என்றாள்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் ஏதோ காரணத்தால் என்னுடன் பேச விரும்பவில்லையோ என்று வேறு சிந்தித்தேன்.
என்றாலும் முயற்சியை கைவிடவில்லை.மாலை இன்னொரு முறை அழைத்தேன் இந்தத் தடைவ அவரே பதிலளித்தார்-அன்பாகப்பேசினார் அத்துடன் கேட்டார் "எனது மனைவி ஒவ்வொரு தடவையும் 'ஹோல்ட த லைன் 'சொன்னபோதும் ஏன் நீர் லைனைக் கட்பண்ணினீர்? "
ஹோல்ட் என்றால் அதுவரை எனது மண்டையில் வைத்தல் என்றுதான் எழுதப்பட்டிருந்தது. ஹோல்ட் த லைன் என்பதை லைனை வை – அதாவது போனை வை என்று அவர் சொலகிறார் என்று புரிந்து கொண்டிருந்தேன்.
XXXX -
இப்போது சிரிப்பாக இருந்தாலும்.
ReplyDeleteஅக்காலத்தில் அந்த நேரத்தில் கசப்பாக இருந்திருக்குமே.
நிச்சயமாக இல்லை. கொழும்பே எங்களுக்கு ஒரு கனவுதேசம் அப்போது. நாங்கள் புதிது புதிதாகக் கற்றுக்கொண்டவை பல. அந்த நிகழ்வு மாலை நண்பர்களுடன் சொல்லிச் சிரிக்க ஒரு சம்பவமாக அமைந்தமையால் 'கண்டன்ற்' கிடைச்சிட்டே என்ற மகிழ்ச்சிதான் இருந்தது. நண்பர்களாகிய நாங்கள் எங்களையே கலாய்த்துக்கொள்வோம்.
Delete