Monday, April 20, 2020

இராணுவச் சோதனை – மக்கள் மகிழ்ச்சி :எனக்குத் தமிழ் படிப்பித்த என்சினீயர்

என்ஜினீயர் கற்றுத் தந்த தமிழ் 

அண்மையில் பாடசாலைக் காலங்களில் அறிமுகமாகிப் பின்னா பேஸ் புக்கில் கொழுவிக்கொண்ட நபர் ஒருவரை(நண்பர் என்று குறிப்பிடும் அளவு உறவு இல்லை)எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது.அவர் இந்தியாவில் கணிப்பொறியியல் பட்டம் படித்தவர், அவர் சொன்னார் ,
"மச்சான் நீ எழுதும் புளக் போஸ்ட்டுகள் யாருக்கும் விளங்காது - அவ்வளவு கடும் தமிழ் பாவிக்கிறாய், வாசிப்பவர்களுக்கு விளங்கும்படி எல்லோ எழுதோணும்,(கொஞ்சம் கோவமான தொனி) அவன் (இருவருக்கும் நண்பன்)  (ஆஸ்த்திரேலியாவிலிருக்கும் பொறியியலாளனாகிய) சிந்தூரனும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).என்னோட கதைக்கேக்க 'மணி ஏதோ எழுதுது,ஒண்டும் விளங்கிறேல்ல' என்று நீ எழுதிய 'கண்டியில் பற்றிய தீ' என்ற (நாட்டு நிலை சார்ந்த) கட்டுரை பற்றிக் கதைக்கேக்க சொன்னான்" என்றும் இவர் எனக்குச் சொன்னார்.

எனக்குக் கோவம் வரவில்லை. நீங்கள் நினைப்பதுபோல் நான் அதிர்ச்சியடையவும் இல்லை. ஆங்கிலத்தைக் கற்பிப்பதையும் எனது தொழில்களில் ஒன்றாக நான் பொறுப்பேற்ற இந்த ஒன்பது வருடங்களில், தமிழில் இறந்காலத்திற்கு உதாரணம் தெரியாத புவியியல் பட்டதாரி மாணவி உட்பட பலரைச் சந்தித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் புருட்(Fruit) என்ற சொல்லிற்கு எழுத்துக்கூட்டமுடியாத ஆங்கில மொழிமூலத்தில் வர்த்தக முகாமைத்துப் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரி மாணவனைக் கண்டிருக்கிறேன்.("இவை எதுவும் மிகை அல்ல" – வெளிநாட்டிலிருந்து இதை வாசித்து நம்ப மறுக்கும், கதைப்புத்தகம் வாசித்து வளர்ந்த என் நண்பர்களிற்கு)

எந்தக் கவலையும் என்னை உடனே தாக்குவதில்லை. அப்போது தாங்குவதாகக் காட்டிக்கொண்டாலும் ஆழ்மனதின் ஓரத்தில் அது உட்கார்ந்திருக்கும். அதுவாக நினைத்த ஒரு கணத்தில் எரிமலையாக வெடித்தெழும்பும். பல நாட்கள்  'அட, படித்துப் பொறுப்பான தொழில் செய்யும் இவர்களிடம் இவ்வளவு குறைவான மொழி அறிவா?' என்று கவலையாக உணர வைத்தது. 

இருவராலும் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் தொடர்பாடலையும் அன்றாட அலுவல்களையும் செய்ய முடியும், ஆனால் கொஞ்சம் சிக்கலான வடிவங்களில் அழகுணர்ச்சி, சொல் வளம்,குயுக்தியான நகைச்சுவை என்று வரும்போது இவர்களிற்குப் புரியாது.

அதுகூட அவன் பிரச்சினை என்று மறந்து விடலாம். எனது எழுத்தை தன் நிலைக்கு ஏற்ப மாற்றும்படியும் அதுதான் முடிந்த முடிவு என்பது போலவும் பேசிய அந்தத் தன்மை..சகிக்க முடியவில்லை. சற்சதுரமான சந்திரனை வட்ட நிலா என்று ஏன் எழுதினாய் என்று ஒருவன் கேட்கும் முட்டாள்தனத்தைச் சகிப்பது எப்படி. 

அட, இந்தத் தலைமுறையில்தான் வாசிப்பு இல்லாமையால் இலக்கணப்பிழையில்லாமல் தமிழ் எழுதத்தெரியாதவர்கள் உருவாகிவிட்டார்கள் என்று நினைத்திருக்க , தாய்மொழி தெரியாத கல்விமான்கள் காலம் காலமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் , எனது நண்பர்கள் பெரும்பாலும் எனது இரசனை மற்றும் சிந்தனையோடு ஒத்துப்போனவர்களாக இருந்தமையால் இந்தத் தமிழ் வாசிக்கத் தெரியாத சிறுபானன்மையைக் கவனிக்கத் தவறி விட்டோம் என்பதும் புரிந்தது.

மொழியில் கணிசமான அறிவு இன்மை – தாம் நினைத்த கருத்தை முறையாக அடுத்தவர்க்கு சொல்லவோ கற்பிக்கவோ முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும்.

அவரிடம் கேட்டேன், " சரி, அப்படியெனில் எப்படியான தமிழில் எழுதுவது?' அவர் சொன்னார் "உதயன் பேப்பரில் வருவதுபோல எழுது, அது எல்லாருக்கும் விளங்குதுதானே."

இன்றைய ஊடகத்தமிழோ..?. ஐயகோ !

வீடு வந்த பின்னர் மேசை அடுக்கும்போது சில வருடங்கள் பழைய உதயன் பேப்பர் ஒன்று கண்ணில் பட்டது அதிலிருந்த செய்தித் தலைப்பு "இராணுவச் சோதனைகளால் மக்கள் சௌகரியம்" என்றிருந்தது. 

எனக்குக் கொஞ்சம் அசௌகரியமாகப் போய்விட்டது.




குறிப்பு:

1)மேற்படி உதயன் பத்திரிகைச் செய்தி உண்மையில் வந்தது, இப்படியான எண்ணற்ற தமிழ் பிழைகளை உதயனில் மட்டுமல்ல இன்றைய பெரும்பான்மை பாரம்பரிய அச்சு ஊடகங்களில் காணலாம்(தமிழ் அறிவுள்ள செவ்வை நோக்குனர்கள்-Proof readers இல்லை). இந்தச் செய்தியை நான் சுமார் 15 உயர்தர (தமிழைப் பாடமாக எடுக்கும்)வகுப்பு மாணவர் முன் படித்துக்காட்டினேன். ஒருத்தன் கூடப் பிழை கண்டு பிடிக்கவில்லை.. நான் அந்தப் பாடசாலையின் பழைய மாணவன். வாழ்க தமிழ்.

2)தமிழ் அறிவென்பது தொழிற்றுறையோ பட்டப்படிப்புத்துறையோ சார்ந்தது ஒன்றல்ல. அசத்தும் தமிழ் அறிவு,பல விதமாகத் தமிழில் எழுதும் வன்மை, பேச்சுத்திறன்,கவிதை புனையும் ஆற்றல் என்பவற்றால்   அசர வைக்கும் பல பொறியிலாளர்கள் என் நண்பர்கள் வட்டத்திலேயே இருக்கிறார்கள். பலர் அவர்களது துறைகளில் உலகறிந்த நிபுணர்கள். அவர்களைப் பற்றியும் எழுதுகிறேன். காலம் அமையட்டும்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை