என் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை விஞ்ஞானப் புத்தகங்களை வாசித்து அவற்றிலிருந்த பரிசோதனைகளைச் செய்து வருவதாலும்...பழைய ட்றங்குப் பெட்டி ஒன்று நிறைய அப்பாவின் ரேப் ரெக்கோடரிலிருந்து களவாய்க்கழட்டிய சிறிய மோட்டார் முதல் கொண்டு ,மின் குமிழ்கள் , வயர்கள் ,பற்றிகள் ஆணிகள் என்று பல்வேறு இலத்திரனியல் ,பொறியியல் சார்ந்த பொருட்களைச் சேர்த்து வைத்திருந்ததாலும் ஏரியாப்பசங்களால் ”விஞ்ஞானி” என்று சிறிது காலம் அழைக்கபட்டிருந்தேன். நல்லகாலமாக அந்தப்பட்டம் நிலைக்கவில்லை.
படிப்பு எனக்கு வேப்பங்காயாக கசத்தது ,நல்லுார் ஒஸ்லோ ரியூசன் சென்ரறில் படித்த எல்லாக் குழப்படிக்காறர்களும் எனது நண்பர்களாக இருந்தார்கள். கண்ட கண்ட சாத்திரிமாரிடமெல்லாம் என் சாதகத்தைக் காட்டிப் ”பெடிக்கு எப்ப புத்தி வரும் ? ”என்று வீட்டில் விசாரித்துக்கொண்டிருந்தனர். ஓ.எல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.
படிப்பு எனக்கு வேப்பங்காயாக கசத்தது ,நல்லுார் ஒஸ்லோ ரியூசன் சென்ரறில் படித்த எல்லாக் குழப்படிக்காறர்களும் எனது நண்பர்களாக இருந்தார்கள். கண்ட கண்ட சாத்திரிமாரிடமெல்லாம் என் சாதகத்தைக் காட்டிப் ”பெடிக்கு எப்ப புத்தி வரும் ? ”என்று வீட்டில் விசாரித்துக்கொண்டிருந்தனர். ஓ.எல் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.
பரீட்சை நெருங்கிய போதுதான் படிப்பின் சுமையை கொஞ்சம் பொறுப்போடு ஏற்றுக்கொண்டேன். உயர்தரம் போவது என்னவோ கம்பஸ் போவது போல் சக நண்பர்களால் பார்க்கப்பட்டது. எனவே விஞ்ஞானப்பிரிவை உயர்தரத்தில் எடுத்தால் பல ஆய்வுகளைச் செய்யலாம் என்றும் , சுயமாக கண்டு பிடிப்புக்கள் போன்றவற்றை நிகழ்த்தவும் வாய்ப்புண்டு என்றும்..என் ஆய்வுப் பசிக்கு உயர்தர விஞ்ஞானம் இன்னும் தீனிபோடும் என்றும் நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.
ஒருவாறாக ஓ.எல் என்ற தடையை தாண்டி உயர்தரம் புகுந்தாயிற்று. நுாலகத்தில் புகுந்து உள்ளதிலேயே பெரிய இரசாயனவியல் ஆங்கிலப் புத்தகத்தை கைப்பற்றினேன். சைக்கிள் கரியரில் அதை வைத்து வீடு நோக்கி மிதிக்கையில் அடுத்த தொமஸ் அல்லா எடிசன் நானாகத்தான் இருப்பேன் என்று எண்ணிக் கொண்டேன்.
பொதுவாக உயர்தரம் வந்த புதிதில் ஆர்வக்கோளாறிலும் நான் ”டாக்கடராயிடுவேன்” போன்ற பல உன்னத செய்திகளைச் சமூகத்திற்கு சொல்லும் விருப்போடும் பல மாணவர்கள் பெரிய புத்தகங்களைச் சைக்கிள் கரியரில் மற்றவர் பார்வையில் படவேண்டும் என்ற நோக்கில் சுமப்பர்(அப்படியான பல நண்பர்கள் எனக்கிருந்தனர்). ஆனால் நான் அப்போது அந்த வகையில் இருக்கவில்லை.
ரியூசன் என்ற ஒன்றிற்கு போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயக் கலாச்சாரம்(சமூக அவலம்) காரணமாக நானும் மிகப் பிரபல ஆசிரியர்களின் கொட்டில்களிற்கு(ஆம் கோடிக்கணக்கில் உழைக்கும் இந்த இடங்கள் கிடுகால் வேயப்பட்ட கொட்டில்களாகவும் மாணவர்க்கு ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்க போதிய மலசலகூட வசதிகள் கூட இல்லாமலும் இருக்கும்)செல்ல வேண்டி வந்தது.