பள்ளியில் படித்த அதே பாடங்களை மீண்டும் கற்க ஓடி – மேலதிக திறன்களையோ, நற்பழக்க வழக்கங்களையோ, விளையாட்டுக்கள், போட்டிகளில் பங்குபெறல், உறவினர் வீடு செல்லல்(உறவு பேணல்),பெற்றோருடன் பயணம் செய்தல் ,வாழ்வின் ஏனைய கூறுகளை அறிதல் ஆகியவற்றை செய்யவோ அனுமதிக்காத ஓய்வொழிச்சல் இன்றி மாணவர்களை வரவழைத்து தன் கட்டில் வைத்திருக்கும் அருவருக்கத்தக்க ரியூசன் கலாச்சாரத்தை அதிகம் வெறுப்பவன் நான்.
பாடசாலையில் குறிப்பிட்ட பாடம் நடாத்தும் ஆசிரியர் சரியில்லை என்றாலோ அல்லது குறிப்பிட்ட சில பாடங்கள் மண்டையில் ஏறுவது குறைவாக இருந்தாலோ அதைத் தேடி வெளியில் கற்றுக்கொள்வது தவறில்லை. ஆனால் சமய பாடம் உட்பட,பாடசாலையில் படிப்பிக்கப்படும் அத்தனை பாடங்களுக்கும் - பாடசாலை விட்டு வந்ததும் சாப்பாட்டை அனுபவித்துச் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அள்ளி எறிந்து விட்டு இடைவேளையே இல்லாது ரியூசன் எனப்படும் பெரும்பாலும் போதிய கழிவறை வசதிகள் கூ;ட இல்லாத சுகாதாரமற்ற வெறும் வாங்கு மேசையில் உட்கார்ந்து ஆசிரியர்கள் சொல்வதை லயிப்பின்றி கேட்க மாணவர்களை கட்டாயப்படுத்தும் அமைப்பு மிகவும் மோசமானது.
(2 மணி வரை பாடசாலை 3 மணி முதல் 6 வரை ரியூசன் - பின்னர் ஆறிலிருந்து படுக்கும் வரை பாடசாலை மற்றும் ரியூசன் வீட்டுப்பாடங்கள்)
இவற்றில் பெரும்பாலானவை இன்றும் எமது பிரதேசத்தில் கொட்டில்கசளாக இருந்தாலும் - பாடசாலைக்குச் சமனாக கட்டட வசதிகளோடு -பிறான்டட் ரீ சேர்ட் மாணவர்களுக்கு கட்டாயமாக அணிவித்து – ரியூசன் வந்து செல்ல சொந்தமாக பஸ் சேர்வீசே நடாத்தும் ரியூசன்களும் உண்டு. அதைப் பார்த்து நான் அதிர்ந்திருக்கிறேன். தேவையே இல்லாது சகல பாடங்களையும் மீளவும் கற்க வைத்துக் காசு பார்க்க நவீன முறையில் மேற்கொள்ளும் மார்க்கெட்டிங் உத்தி.