இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal behaviour), வாழ்வியல் அனுபவங்கள் என்பன இரங்கல் தெரிவித்தல், துயர் பகிர்தல் பற்றிய பல பாடங்களை கற்றுத்தருகின்றன.
நாட்டிற்கு ஒரு குடும்பம் என உறவுகள் எல்லாம் சிதறி வாழும் இன்றைய நிலையில், செத்தவீட்டுக் கவலையைப் பகிர எமது சமூகங்களில் காணப்பட்ட பல நடைமுறைகளும், பண்புகளும் இல்லாது போய்விட, சாவின் வலியைவிட அதைப் பகிர ஆளில்லாத வலி மிகப்பெரிதாகவே உள்ளதை உணர முடிகிறது.
பிறப்பு, திருமணம் போன்ற ஏனைய வாழ்வின் திருப்புமுனைகள் போலவே, முக்கிய அம்சமான இறப்பின் போது நாம் நடந்துகொள்ள வேண்டியவை பற்றியும் இன்று எமது அடுத்த தலைமுறைகளிற்கு சொல்லிக்கொடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு உறவை இழந்தவர் எதிர்கொள்ளும் வலியும் வேதனையும் அதுபற்றிய புலம்பலும் இழவிரங்கல் (Grieving) என்று அழைக்கப்படுகிறது.
அன்புக்குரிய எவரது இழப்பும் பெரிதே. அதிலும் ஒரு குழந்தைக்கு தன் முதல் ஆறு மாதங்களுக்குள் அடையாளம் கண்டு உணரும், அதன் தேவை தீர்க்கும் அம்மா அப்பா போன்ற உறவுகளோடு உருவாகிவரும் பிணைப்பு என்பது மிகவும் வலிமையானது. அத்தகைய இழப்புக்கள் ஒருவருக்கு தன்னில் ஒரு பகுதியையே இழந்தது போல உணர வைக்கலாம். இறந்தவரின் வயதோ, உடல்நிலையோ அல்லது அந்த உறவை இழந்தவரின் வயதோ இந்த இழவிரங்கல் நிலையின் தீவிரத்தை குறைக்கும் காரணிகள் அல்ல. அடுத்தவரின் துயரின் அளவை நாம் தீர்மானிக்காது இருத்தல் வேண்டும். ஒரு உறவை இழந்த ஒவ்வொரு உயிரும் அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்பை ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்தும். அழுவதும், அன்பானவர்களின் பழைய நல்ல நினைவுகளைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிப்புலம்புவதும் இந்த இழப்புக்களின்போது மனிதர்களில் பெரும்பாலானோர் செய்யும் காரியங்கள். இழப்பிலிருந்து மெல்ல மெல்ல வெளிவர உதவும் இயற்கையான பொறிமுறைகளில் (Bouncing Back/Resilience) இதுவும் ஒன்று.
இந்த இழவிரங்கல் எனும் செயற்பாட்டில் பின்வரும் நிலைகள் உள்ளன என அமெரிக்க உளவியலாளர் குப்லர் றோஸ் என்பவர் தனது “On Death and Dying” என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது பிரபலமான (வாதப் பிரதிவாதங்கள் உள்ள) ஒரு உளவியல் கோட்பாடாகும்.
1. Denial: இழப்பை ஏற்க மறுத்தல். திடீரென ஏற்படும் அந்த அதிர்ச்சியான இழப்பை முதலில் மூளை ஏற்க மறுக்கும்.
2. Anger: கோபம் - தாங்கமுடியாத இழப்பு தன்மீதோ அடுத்தவர் மீதோ கூட பெருங்கோபமாக மாறலாம்.
3. Bargaining: இழப்பை ஏற்க மறுக்கும் மனது ஆண்டவன் போன்ற அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற உயர் சக்தியிடம் இழப்பை பிற்போடும்படி அல்லது இல்லாது செய்து விடும்படி கெஞ்சுதல். அல்லது இது எல்லாம் பொய்யாகி விடக்கூடாதா என்று ஏங்குதல், அல்லது இறந்தவர்களே தம்முடன் ஏதாவது வடிவில் வந்து பேசி ஆற்றுப்படுத்துவார்கள் என எதிர்பார்த்தல்.
4. Depression: மனஅழுத்தநிலை. இது வழமையான மன அழுத்தத்தின் சகல அம்சங்களையும் கொண்டிருக்கும். உச்சக்கட்ட மனவருத்தம் மற்றும் அதன் விளைவுகளான தனித்திருத்தல், பிடிப்பற்று இருத்தல் உட்பட அனைத்து அறிகுறிகளும் வெளிப்படும்.
5. Acceptance: இழப்பை ஏற்றுக்கொண்டு வாழ்வின் அடுத்த நிலைக்கு நகர்ந்து செல்வது. இந்தக் கட்டத்தில் இழப்பு என்பது வாழ்வின் ஒரு அங்கம் என்பது புரிந்திருக்கும்.
எல்லா மனிதர்களும் மேற்குறிப்பிட்ட எல்லா நிலைகளையும் அனுபவிப்பார் என்று சொல்ல முடியாது. அத்துடன் மேற்குறித்த ஒழுங்கில்தான் இந்த இரங்கல் செயற்பாட்டின் படிநிலைகளை கடந்து செல்வர் என்றும் இல்லை. ஆனால் அவற்றில் சிலவற்றிற்கு உள்ளாகக்கூடும்.